 |
கவிதை
எல்லோருக்குமாய்
என்.விநாயக முருகன்
சற்றுமுன்
தொலைபேசியவள்
தான் யாரென்று
இறுதிவரை சொல்லவேயில்லை.
எனக்கு தேவையுமில்லை.
புகழ்பெற்ற வங்கியின்
கிளைநிறுவனம் சொல்லி
தனிநபர் கடன்
வாங்கச் சொன்னாள்.
தனிநபர் கடன்களின்
சாதகங்களைப் பட்டியலிட்டாள்.
தனிநபர் மேம்பாடு
நாட்டின் மேம்பாடு என்றாள்.
என் பதிலுக்கும்
காத்திராமல்
துண்டிக்கப்பட்டது
புன்னகைத்த குரலொன்று.
பிடித்தப் பாடலை
பதிவு செய்யும்படி
பல குரல்களில்
பாடிக் காட்டியது
நட்புக் குரலொன்று.
நலமாவென்று
தொடங்கிய குரலொன்று
கட்டணச் சலுகைகளை
பட்டியலிட்டது.
சில வந்தனங்கள்
சில வாழ்த்துகள்
சில புன்முறுவல்கள்
சில நலம்விசாரிப்புகள்
சில நட்புக்குரல்கள்
எங்கோ எப்போதோ
யாரோ யாருக்கோ
பதிவுச் செய்யப்பட்ட
குரல்கள்
பொதுவிதியாக
பொருந்திவிடுகின்றன.
சில நேரங்களில்
எல்லோருக்குமாய்.
எனக்கானவை அல்ல இவையென்று
கடந்துச்செல்லவும் இயலவில்லை.
- என்.விநாயக முருகன் ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|