 |
மா.காளிதாஸ் கவிதைகள்
கால வரையற்று நிகழ்பவற்றுள்
கரிக் கோடிட்டிருக்கிறாள் ஒருத்தி.
வென்றெடுக்கப்பட்டு விட்டது
வெல்லவும் மெல்லவும்
முடியாதவற்றுக்கான விளக்கம்.
எந்த காட்டில்
எந்த வண்டுகள்
எந்த மூங்கிலில் துளையிடும் இனி?
கர்ஜனைகள் கேட்ட குகைகளில்
சைவப் பூனைகளின் நடமாட்டம்.
நாலுகால் பாய்ச்சலை மறந்து
ஒரு பிரம்புக்குக் கட்டுப்பட்டு நிற்கும்
சிங்கங்களின் பசிக்கு வீசப்படுகின்றன
எகத்தாள எலும்புகள்.
புடலங்காய்களின் பக்கம்
சாய்ந்து நிற்கின்றன தராசு முட்கள்.
இமை திறக்கக் காத்திருக்கிறது
ஒரு சிவக்கொழுந்து.
கண்ணீரால் நிரப்பப்பட்ட அறைக்கு
தூக்கமற்ற இரவில்
தலையணையைக் கொண்டு வந்தது
ஒரு அலை.
தலையணையின்
மறுபுறத்திலிருந்து கசிந்த
உப்புக் காற்றால்
நீலம் பாரிக்கத் தொடங்கியது ஊர்.
உயிர்ச்சேதத்தை மதிப்பிட
குதிரையிடம் வந்த கன்னி
பிறிதொரு நாளில்
மண்டியிட்டுக் கதறினாள்
தன் பாவச் செயலுக்காய்.
காறித் துப்பியது
கலங்கரை விளக்கு.
உலர உலர உருமாறுவது
இன்றைய பிம்பத்தை அடுத்து.
காட்சி படிமத்தை
கலைத்துப் போட்டிருக்கும் கரைசலை
முகர்ந்து நகர்கிறது
அடிப்பட்ட நாயொன்று.
பூமியின் மீது
ஆணியின்றி அறையப்பட்டிருக்கும்
புகைப்படத்தைக் கவிழ்த்துப் போட
வேகமெடுக்கிறது ஒரு ஈனக்காற்று.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|