 |
வா.மு.கோமு கவிதைகள்
நீண்ட கை வித்தைக்காரன்
ஒவ்வொரு அரசுப் பேருந்துகளின்
கடைசி இருக்கையில்
எப்போதும் அவன்
மிக சாதுவாய் அமர்ந்திருக்கிறான்.
பரிசோதகருக்கோ...
நடத்துனருக்கோ...
ஏன் ஏனையோருக்குமே கூட
அவன் அமர்ந்திருப்பது தெரிவதில்லை.
தப்பித்தவறி தன்மீதே அமரும்
ஒரு பெரியவரையோ, அல்லதாக
ஒரு வாலிபனையோ புன்னகையோடு
மடியில் அமர்த்திக் கொள்கிறான்
பின்புறமாகவோ, முன்புறமாகவோ
தன் கைகளை கட்டிக் கொண்டு
புன்முறுவலுடன் அமர்ந்திருப்பவன்
சில சமயங்களில் தான் தன் கைகளை
பின் இருக்கையில் அமர்ந்தவாறிருந்த
ஓட்டுனரை நோக்கி நீட்டி
அவரது ஸ்டேரிங்கை ஒரு டீக்கடை
நோக்கியோ அல்லதாக எதிர்வரும்
வாகனத்தை நோக்கியோ திருப்பிவிட்டு
மோதலை ஏற்படுத்தி விடுகிறான்.
ஏராளமான ஐயோ அம்மா
கூக்குரல்களுக்கிடையே புன்னகையோடு
சன்னமாய் இறங்கி எதிர்வரும்
வேறு பேருந்தில் ஏறி கடைசி இருக்கையில்
சாதுவாய் அமர்ந்து கொள்கிறான்.
விருந்து
அன்று காலையில்தான்
அது நடந்திருந்தது!
குமரமலை கிலுவை மரங்களுக்குள்ளும்
திருகு கள்ளிகளுக்குள்ளும்
நாயுருவி, கருவேல மரங்களுக்குள்ளுமாக
வேட்டையாடி வயிற்றுப் பாட்டை
பார்த்து வந்த காட்டுப் பூனை ஒன்று
கிராமத்தினுள் நுழைந்து
அப்புக்குட்டி நாசுவனின்
கடையிலிருந்த நாற்காலியில் அமர்ந்து
எதிரே கண்ணாடியில் தெரியும்
தன்கரடு முரடான முகம் கண்டு
பதைபதைத்து அப்புக்குட்டியிடம்
நைச்சியமாய்பேசி கட்டிங், சேவிங்
செய்து மீசையை அழகாக நறுக்கி
கிளம்பிச் சென்றதை
ஊர் வேடிக்கை பார்த்தது
அன்றிரவு அப்புக்குட்டி வீட்டில்
கோழிக்கறி வாசம் அடித்தது!
விருந்திற்கு
காட்டுப் பூனையும் வந்துபோனது!
பூச்சாண்டிகளுக்கான பகுதி
இவனுக்காகவே
காத்திருந்த பூச்சாண்டி ஒன்று
எல்லமேட்டு புளியமரத்தடியில்
இருப்பது தெரியாமல்
திருட்டுப்புளி அடிக்கச் சென்ற
இவன் அகப்பட்டுக் கொண்டான்.
பூச்சாண்டி இவன் மீது
குதித்து அமுக்கிக் கொண்டது.
அன்றிலிருந்துதான் இவன்
போக்கு சரியில்லை
என்கிறார்கள் வீட்டினுள்!
ஒவ்வொரு வீட்டினுள்ளும்
ஒவ்வொரு பூச்சாண்டி
உட்கார்ந்திருக்கிறது
இரண்டு முலைகளோடும்
ஒரு யோனியோடும்!
இவன் வீட்டிலிருந்து வெளியே
கிளம்புகையில் சகுனம் சவருவதில்லை.
செம்பூத்து கடக்கிறது.
விறகு கட்டை போகிறது.
பூனை கடக்கிறது...
பூச்சாண்டியும் வருகிறது.
இவனது எல்லா
தோல்விகளுக்கு பின்னாலும்
ஒரு பூச்சாண்டி இருக்கிறது!
எழுதி முடிக்கப்படாத இந்த கவிதைபற்றி
இப்போது சொல்வதற்கு ஒன்றுமில்லை.
கட்டுக் கடங்காமல் நீண்டு போய்க்கொண்டிருக்கும்
இதன் வாலின் நுனி யாருமே வாசித்திராத
புத்தகத்தின் பக்கங்களில் பூச்சாண்டியிடம்
சுருண்டு கிடக்கிறது!
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|