 |
தலையங்கம்
குற்றவாளிகள் தீர்ப்பளிக்கும்போது முதலில் நீதியே காவு கொள்ளப்படுகிறது. கொல்லப்பட்ட நீதியின் தலைமாட்டில் வெறுங்கூடாய் நின்று தேம்புகின்றன உயிர்கள். சொல்லியழ வார்த்தை களுமற்று வெறுமைக்குள் மூழ்கடிக்கப்பட்ட மனதில் நீதியின் பிம்பம் அழுகிய பிணமாய் நைந்து மிதக்கிறது. கை பிசைந்து நிற்பதன்றி வேறென்ன கதியென்று தலைகுனிந்து நிற்கிறது நாகரீகத்தின் மாண்புகள்.
அமெரிக்காவின் கருணையினால்தான் உலகத்தின் எவ்வுயிரும் பிழைத்திருக்க முடியும் என்கிற குரூரம் தொடர்ந்து நிரூபணமாகிக் கொண்டேயிருக்கிறது. அந்த உலகளாவிய பயங்கரவாதியின் கணக்குத் தீர்க்கும் பட்டியல் மிகவும் வெளிப்படையானது. அதன் பொறுக்கித்தனத்திற்கும் கொள்ளைக்கும் துணைபோகாத எவரொருவரையும் பகிரங்கமாக வெட்டவெளியில் உலகமே பார்த்திருக்கக் கொன்று வீசுகிறது. அந்த கொலைகளை அந்தந்த கணத்தின் தலைப்புச் செய்திகளாக்கி அடுத்த பரபரப்புக்குள் உலகத்தை இழுத்துச் செல்கின்றன ஊடகங்கள். காற்றடித்தால் கிளைகளையும் இலைகளையும் அசைத்து தன் இருப்பைத் தெரிவிக்கும் மரத்தின் உயிர்ப்புகூட இல்லாமல் பிழைத்திருப்பவர்களுக்கு கொல்லப்பட்ட சதாம் இன்னொரு பிணமாகவே காட்சியளிக்கக்கூடும். ஆனால் தன்காலத்தின் நிகழ்வுகளை பொருட்படுத்தும் எவரொருவருக்கும் இது மிகுந்த மனஉளைச்சலைத் தரக்கூடியது.
இலட்சக்கணக்கான ஈராக்கியரை தங்கள் நாட்டுப் படை கொன்றுகுவித்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உடனடியாக துருப்புகள் நாடு திரும்பவேண்டும் என்று கோரவில்லை அமெரிக்கர்கள். இதுவரை 2978 அமெரிக்கப் போர்வீரர்கள் ஈராக்கில் கொல்லப்பட்டிருப்பதனாலும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்பதானாலும் தான் துருப்புகள் திரும்ப வேண்டும் என்று கோருகின்றனர். சாவதற்குள் ஒரேயொருமுறையாவது தானோ தன் பிள்ளையோ டாலரில் சம்பளம் வாங்கிப் பார்த்துவிட வேண்டும் என்ற ரகசியவியாதியால் பீடிக்கப்பட்டவர்கள், அமெரிக்க ஆட்சியாளர்களின் போக்கைத்தான் நாம் வெறுக்கவேண்டுமேயொழிய அமெரிக்காவையோ அமெரிக்கர்களையோ அல்ல என்று நூதன வியாக்கியானங்களைச் சொல்லித் திரிகின்றனர். ஒருநாட்டின் மக்கள் எவ்வாறிருக்கிறார்களோ அதற்கேற்ற ஆட்சியாளர்கள் அவர்களுக்குள்ளே இருந்துதான் உருவாகிவருகின்றனர்.
நோம்சாம்ஸ்கி போன்று விதிவிலக்கான சிலரைத் தவிர்த்து அந்தநாடே உலகாளும் மமதையில் அமிழ்ந்துகிடக்கிறது. சதாம் படத்தின் மீது ஒரு அமெரிக்க ராணுவவீரன் பெய்யும் மூத்திரத்தின் வழியே பெருக்கெடுத்து ஓடிவரும் ஜனநாயகம் உலகத்தையே மூழ்கடித்துவிடக்கூடாது என்னும் சுயமரியாதை கொண்டிருக்கும் ஒரே ஒருவராவது தன் அமெரிக்கக் குடியுரிமையை கிழித்தெறிவாரேயானால் அது இந்த உலகமே திரண்டு ஜார்ஜ் புஷ்ஷை கண்டித்ததற்கு நிகராகும்.
ஆசிரியர் குழு
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|