 |
தலையங்கம்
.
மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றுவிட்டு கொலைப்பழியை இஸ்லாமியர்மீது சுமத்திவிட்டால் நாடெங்கும் மதக்கலவரம் மூண்டு இஸ்லாமியரை கொண்று குவிக்கலாம் - இந்துமத நம்பிக்கையாளர்களை இந்துவெறியர்களாக மாற்றலாம் - என்பதற்காக கோட்சே தன் கையில் ‘இஸ்மாயில்’ என்று பச்சை குத்திக்கொண்டு போனான் என்பது அம்பலமான பழைய வரலாறு. கோட்சேயின் கொடிக்காலில் வந்த கொலைபாதகர்களான இன்றைய இந்துத்வாவினரும் அதே சூழ்ச்சியை அரங்கேற்றியுள்ளனர்.
தென்காசியில் ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் மீது இதே ஆர்.எஸ்.எஸ்சின் அனந்தமுகங்களில் ஒன்றான இந்து முன்னணியினரைக் கொண்டே குண்டு வீச வைத்துவிட்டு அதைச் சாக்காகக் கொண்டு அப்பகுதியில் இஸ்லாமியருக்கெதிராக துவேஷத்தையும் கலவரத்தையும் கட்டவிழ்த்துவிட்டனர் இந்து தீவிரவாதிகள். தாக்குதலுக்குள்ளான அலுவலகத்தின் அருகில் இஸ்லாமியர் அணிகிற தொப்பிகள் இரண்டை வீசி போலியான தடயங்களை உருவாக்கிய சதி இப்போது அம்பலமாகி குண்டு வீசிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெடிகுண்டு என்றதும் இஸ்லாமியத் தீவிரவாதிகளின் கைவரிசை என்ற குருட்டாம்போக்கான முன்முடிவோடு இல்லாமல் தென்காசி சதியை அம்பலப்படுத்தியுள்ளது காவல்துறை. தென்காசி சதி உணர்த்தும் உண்மையை அடிப்படையாகக் கொண்டு இந்து தீவிரவாதிகள் இதுவரை எங்கெங்கெல்லாம் இப்படியான செட்டப் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியிருக்கிறார்கள் என்பதை - அத்வானியைக் கொல்ல நடந்ததாக சொல்லப்பட்ட கோவை குண்டுவெடிப்பு உள்ளிட்ட அனைத்தையும் - மறுவிசாரணைக்கு உட்படுத்த அரசு முன்வரவேண்டும். மக்களிடையே மதநல்லிணக்கத்தைப் பேணவும் இந்துத்வாவினரை தனிமைப்படுத்தவும் பணியாற்றி வருகின்ற மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் இக்கோரிக்கையை எழுப்பிட வேண்டுமென புதுவிசை கேட்டுக்கொள்கிறது.
- ஆசிரியர் குழு
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|