 |
தேவேந்திர பூபதி கவிதைகள்
ஒரு பேருந்து ஓட்டுநர் கைகாட்டிய வீடு
எனது வீடுகள் நடமாடிக் கொண்டிருக்கின்றன
அதன் முகவரியை ஒரு குன்றினைப் போல்
என்னால் பிடித்து வைக்க முடியவில்லை
நகர்ந்து கொண்டிருக்கும் என் வீட்டினை
ஒரு பேருந்து ஓட்டுநர்
உங்களுக்கு கைகாட்டும்படி நேரலாம்
நான் உங்களிடம் கொடுத்த
அதன் வரைபடம் தற்காலிகமானது
அதன் முகவரி
உலகின் எந்த மூலையிலிருந்தாவது வரும்
ஒருவருக்கு எத்தனை உத்தரவாதமானது
எனக்குத் தெரியவில்லை
தற்காலிகத்தின் நட்புவெளிகளில்
அதன் முகவரி அட்டையை அவர் ஏன்
பெற்றுக் கொள்கிறார்
ஒரு நாளில் நகர்ந்து போய்விடும்
என் வீட்டின் முன்பு அவர் என்ன செய்வார்
ஆனாலும் என் முகவரியை
உங்களுக்கு தெரிவிக்க வேண்டிய
கடமை எனக்கிருக்கிறது
ஒரு நகரத்தின் மையத்தில்
அதை கண்டுபிடித்துவிட முடியும்
என அறிந்திருக்கும் உங்களுக்கு
அதன் தற்காலிகத் தன்மையும்
தெரிந்துதான் இருக்கும்
எப்படி நகர்ந்தாலும் ஏதேனும் ஒன்று
மையத்தில் நிற்கும்போது நிகழ்வது தானே
தற்காலிகமாகிறது.
அன்பின் தலை குனிவு
நான் அதிகபட்சமாய் விரும்புமொன்று
பிடிக்காமல் போனதால் மட்டுமே
நீ எனக்கு பிரியமானவனாய் இருக்கிறாய்
நீ அதிகபட்சமாய் வெறுக்குமொன்று
பிடித்துப் போனதால் மட்டுமே
நான் உனக்கு அன்பிற்குரியவனாயும் இருக்கலாம்
பிறகு ஏன் தேவையற்றதை
வாசிக்கக் கொடுக்கிறாய்
உனது மேதமை என்னை வசீகரிக்கப் போவதில்லை
நான் அதிகபட்சம் விரும்பியதை
நீயும் விரும்பவும்
நீ அதிகபட்சம் வெறுத்ததை
நானும் வெறுக்கவும்
நமது குறைந்தபட்ச செயல்திட்டத்தில்
சாத்தியமாகும் போது
அந்நியமான மற்றொருவனின் முன்
நிபந்தனையற்று நான்
தலைகுனிந்து நிற்க முடியாது
நீ அதிகபட்சம் விரும்பியதும்
நான் குறைந்தபட்சம் வெறுப்பதும் அதைத்தான்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|