 |
நரிகளிடம் எச்சரிக்கையாயிருங்கள்
கோசின்ரா
நீங்கள்
சிங்கத்துடன் பழகலாம்
அதன் வாய்க்குள்
தலையை நுழைக்கலாம்
சிறிய நாற்காலி மீது
ஏறி நிற்கச் சொல்லலாம்
பின்னங்கால்கள் தூக்கி
முன்னங்கால்களால் நிற்கும் சிங்கம்
புலியின் குகையிலிருந்தும்
நீங்கள்
உங்கள் பயிற்சியை தொடங்கலாம்
அதன் வேட்டைக் குணத்தை
மாற்றச் செய்யலாம்
அதன் கால் நகங்களுக்கு
அழுக்கெடுக்கலாம்
ஒரு நாயுடனோ
ஒரு பூனையுடனோ
ஒரே கூண்டில் அடைக்கலாம்
சிறுத்தைகளும்
யானைகளும் அப்படித்தான்
நீங்கள் எப்படியும் பழகலாம்
ஆனால்
நரிகளுடன் பழகும்போது
எச்சரிக்கையாயிருங்கள்
நரிகள்
உங்கள் குகையில் வந்து படுக்கும்
உங்கள் குட்டிகளை கண்காணிக்கும்
தோழரென்றும்
சகோதரனென்றும் பேசும்
ஒரு நாள்
உங்கள் குட்டிகளை கவ்வும்
பிறகு எல்லோரையும் போல்
தேடத் துவங்கும்
நரிகள் நேரடியாக யாரையும்
எதிர்த்து நின்றதில்லை
அதன் சாணக்கியத்தனம்
வீழ்த்த காத்துக்கொண்டிருக்கும்
நரிகளை
அவ்வளவு எளிதில் புரிந்துகொள்ள முடியாது
தேர்தல் காலங்களில்
நரிகள் தன் குகைகளை விட்டு
தெருக்களில் நடமாடுவதை பார்க்கலாம்
இன்றைக்கும்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|