 |
மொழிபெயர்ப்புக் கவிதைகள்
தமிழில்- இரா.நடராசன்
வளர்சிதை மாற்றம்
ஆங்கிலக் கவிதை - கிம். க்யூ.ஹா. கொரியா.
கழுகு வேடங்களிட்டு ஆர்பரிக்கின்றன யானைகள்.
அளவுக்கு அதிகமாய் வளர்ச்சி அடைந்து விட்டது நாடு.
பலி பீடத்தில் நிற்கும் ஆடாக நான் இருப்பின்
அக்கணத்தின் கனத்தால்
லேசாகுமா என் இதயம்?
பளபளக்கும் வீதிகளில் குறுதி ஆறு மூடப்பட்டது.
ஒளித்து வைக்கிறோம் பிச்சைக்காரர்களை.
கோதுமை தானியங்களின் கொத்தில்
ஒரே ஒரு மணியாக நான் இருப்பின்
பளபளத்த அந்த தோலால்
லேசாகுமா என் இதயம்?
நவீன நியான் விளக்கு வளைவுகள்
எங்கள் வழிபாட்டு இடங்களின் பழமையை
மறைத்தன... இறந்த கால வடுக்களையும் சேர்த்து.
அந்நாந்து கூட யோசிக்கிறோம்
பெரும்பாலானவற்றின் புண்களை மறைத்து
வசதி பண்ணி கொடுக்கிறது கருப்புக் கண்ணாடி.
மாடாய் உழைக்கிறோம் வளர்ச்சிக்காக
வயல் வெளிகளுக்கு மிஷிளி முத்திரை.
வெறுங்கை காலோடு வீடு திரும்புகிறோம்
குளிர் சாதனப்பெட்டி, தொலைக்காட்சிப் பெட்டி
சமைக்கும் மின்சாரப்பெட்டி
கழுகு வேடங்களுக்குள்ளிருந்த படி துழாவுகிறோம்
எல்லாமே இருக்கும் அப்பார்ட்மெண்ட்டில்
எங்களைத்தான் காணவில்லை.
இன்னும் பெயரிடப்படவில்லை
ஆங்கில கவிதை-எரிக்வியோ போர்ச்சுக்கல்.
குரல்களின் நதியில் மிதந்தபடி பரிதவிக்கிறது காலம்
வெறிச்சோடி போயிருப்பது மனம் மட்டுமே
சூன்யங்களிடம் பாடம் கற்று இப்படி
புனித ஆன்மாக்களை ஆடவிடுவதற்கு
இன்னும் பெயரிடப்படவில்லை.
தென்படுகிறாள்.
நாக்குகளில் வழிந்தோடும் காழுகம் குருதியாய்
ஊறுகிறது நனைந்தபடி. நீளுகின்றன
ஆயிரக்கணக்கான இச்சைக் கை விரல்கள்.
கூட்டை மொய்க்கும் பார்வைகள்
தேனீக்களைப் போல கொட்டித் தீர்க்கின்றன.
அப்படிப் போகிறது. இப்படிப் போகிறது.
போகிற பக்கமெல்லாம் போகிறது நிழல்.
பீறிட்டு அழும் இருளின் குழந்தை
ஒரு மனிதன் கூட இல்லாத பறிதவிக்கிறது காலம்
குரல்களின் நதியில் மிதந்தபடி
அழுகை வெளியே கேட்காமலிருக்கும் படி மேலும்
வேகம் கூட்டிக் கொள்ளும் இசை
அப்படிப் போகிறது இப்படிப் போகிறது.
ஒளிபோகும் திசையெல்லாம் போகும் அழுகை.
அலறலின் மழலைக்கு ஆடும் வயதில்லை
ஆடுகிறவளுக்கு வேறு வழிகள் இல்லை.
சூன்யங்களிடம் கற்றுக் கொண்டு
புனித ஆன்மாக்களை ஆடவிடுவதற்கு...
அலறலின் குழந்தைக்கு... இரண்டுக்குமே
இன்னும் பெயரிடப் படவில்லை.
நான் கற்பழிக்கப்பட்ட இரவு...
ஆங்கிலக் கவிதை- சுதாஹ் எம்.ராய் நோபாளம்.
என் வயிறு உப்பிக்கொண்டு வருவதை மனப்போராட்டத்தோடு
உணர்ந்தபடி இப்போதெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறேன்
அடிவானத்தையே.
நான் கற்பழிக்கப்பட்ட இரவில்
ஆமாம் அந்த இரவில்
இடுப்பில் குழந்தையோடு வாயடைத்து அழுதாள்
அவனது மனைவி.
கிராமங்களும் நகரங்களும் வெறிச்சோடிட
கலவரங்கள் வீட்டு ஜன்னல்களை அடைத்திட்ட
இரவின் பிரதான சாலையில்
அந்த வெட்ட வெளியில் பசித்து வெறிபிடித்த
சிங்கம்போல என் உடலை அவன்
சுக்கு சுக்காய் கிழித்துப் புசித்தான்...
யாருக்கு எப்படி காட்டுவது இனி
உடலிலும் மனதிலும் இழிந்த நீல ரண வடுக்களை?
அனுதாபம் கொண்ட இளகிய
நலம் விரும்பிகள் இருந்தார்கள்
என்பக்கம் நேற்று வரை
அந்த இரவில் நினைவு தப்பி
உதவியற்று கிடந்து நாறிய
என் உடலை முகர்ந்தபடி தங்கள் இரவை
கழித்தன வீதி நாய்கள்.
‘‘மனிதர்களுக்கு பதிலாக விலங்குகளை செல்லமாய்
வளர்ப்பது ஏன்?’’ எனக்குள்ளிருந்து அழிந்தொழிந்தன
இக்கேள்வியின் சந்தேகங்கள்.
இந்தச் சூழல். இந்த நிலமை. இந்த வலி
உப்பிய என் வயிறு.
என் வயிற்றில் கருவாய் வளர்ந்து தொடர்கிறது
முற்றிலும் நச்சாகிய சுற்றுச்சூழல்
மேசும் நச்சாகும் கதை.
வருங்கால சந்ததியினருக்கு பரிசு இது
என்று எப்படி சொல்வேன் நான்?
ஒன்றும் பிடிபடுவதாய் இல்லை.
இப்படித்தான் என்வயிறு உப்பிக்கொண்டு வருவதை
மனப்போராட்டத்தோடு உணர்ந்தபடி
பார்த்துக்கொண்டிருக்கிறேன் அடிவானத்தையே.
குழந்தை ஒன்றை பிரசவிக்கப் போகிறேன்
எனும் பாவத்தின் பிரதிபலிப்பை
சுமக்கும் இந்தக் கணம்
என் விழிகளில் தலைவிரித்தாடுகிறது.
நடுங்குகிறேன் நான்
நடுங்கிப் பதறுகிறது என் நெஞ்சு.
நிலைகுலைந்து கொண்டிருக்கிறது
நான் நிற்கும் இந்த இடமும்.
கடவுள் வருவாரேயானால்...
ஆங்கில கவிதை - நிக்கோலஸ் எப்ஸ்டின் புளோரிடா
மேற்கூரை மீது உட்கார்ந்து கடவுளுக்காக
காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு கூறுகிறேன்
நமது புளோரிடா எஸ்கேயும் இல்லை,
தேவிடியாள் மகன்களிடமும் கருப்பன்களிடமும்
கூச்சமின்றி உரையாடுவானா கடவுள்?
வேறு உலகத்தில் வேண்டுமானால் வைத்துக்கொள்வோம்
சூறாவளியால் மரணம் எதுவும் கிடையாது.
என்று சொல்லி விடுவான் கடவுள்
மனித உயிர்கள் ஒன்றுவிடாமல் மீட்கப்பட்டன
நாறுவது கருப்பன் பிணமாக வேண்டுமானால் இருக்கலாம்.
ஆடுமாடு மற்றும் செல்ல பிராணிகூட செத்திருக்கலாம்.
கடவுளுக்கு சம்பந்தமில்லை
உலக வெப்பப் போக்கு மனிதன் பரிசு
விரைவில் இயல்பு வாழ்க்கை இதுதான்
விஞ்ஞானிகளிடம் முறையிடுகிறோம்.
நம் புளோரிடா ஆராய்ச்சிக்கூடம்
எலியாகி நாட்டுக்காக உயிர் விடுவானா கடவுள்.
அந்த ஆளால் முடியுமானால்
ஒன்று செய்யலாம்
மேலும் ஒரே ஒரு சூறாவளி
ஒரே ஒரு சூறாவளி...
மேலும் மேலும் கருப்பர் உடல்கள்
அந்த ஆள் கடவுளின் முகமுடியும் கிழியும்
கூறையின் மீது உட்கார்ந்து கடவுளுக்காக
காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு
கூறிக்கொள்கிறேன்
பொறுப்பேற்க மாட்டான் எந்த கடவுளும்
பட்டினி சாவுகளுக்கு.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|