 |
தலையங்கம்
.
எறும்பை யானையாக்கிக் காட்டும் குதிரை பேரங்களால் இந்த நாட்டில் இருப்பதாய் சொல்லப்பட்டு வரும் நாடாளுமன்ற ஜனநாயகம் மீண்டுமொரு முறை அவமதிக்கப்பட்டது. எதைத் திணித்தாலும் எப்படி வளைத்தாலும் ஏற்றுக் கொள்ளுமளவுக்கு அது எவ்வளவு உள்ளீடற்றுக் கிடக்கிறது என்பதும்கூட மறுபடி ஒருமுறை அம்பலமானது. விலைக்கு வாங்கிய சரக்குகளை அடுக்கிவைத்து அவற்றின் மீது ஏறி நின்று உயரமாக தன்னை காட்டிக் கொள்கிற ஒரு வியாபாரியைப் போல ஆளுங்கட்சி வெட்கமற்று நடந்து கொண்டது. நாட்டு மக்களின் வாழ்வை பணயம் வைத்து நடந்த இந்த சூதாட்டத்தில் எல்லாக் காய்களையும் வெட்டியதென்னவோ அமெரிக்காதான்.
இந்துத்துவ வெறியர்களை அதிகாரத்திலிருந்து அப்புறப்படுத்தவும், மக்கள் நலன் சார்ந்த ஒரு குறைந்த பட்ச செயல்திட்டத்தை நிறைவேற்றவும் இடதுசாரிகள் வழங்கிய ஆதரவை பயன்படுத்திக் கொண்டு காங்கிரஸ் தன் சொந்த நிகழ்ச்சிநிரல்களை செயல்படுத்துவதிலேயே ஆர்வம் காட்டியது. கூடவே சொந்த நாட்டு மக்களின் முகத்தில் விழிப்பதைவிட ஜார்ஜ் புஷ் முகத்தில் விழிப்பது குறித்தே அது கவலை கொண்டிருந்தது.
இடதுசாரிகளின் முட்டுக்கட்டையால் கிடப்பிலிருந்த பொருளாதார சீர்திருத்தங்கள் அனைத்தையும் இனி மளமளவென்று நிறைவேற்றுவதில் தடையேதும் இல்லை என்று இடதுசாரிகள் ஆதரவை விலக்கிக் கொண்டதும் அறிவித்தார் ப.சிதம்பரம். இடதுசாரிகள் நான்காண்டுகளாய் என்ன செய்தார்கள் மக்களுக்காக என்ற கேள்விக்கு இதுதான் சரியான பதிலாக இருக்கும். அவர்களது கடிவாளம் இல்லாமல் போயிருந்தால் நாட்டை என்ன பாடு படுத்தியிருப்பார்களோ? பெங்களூரு, அகமதாபாத்தில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்புகள் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் ஒரு சேர உதவிபுரிவதாய் அமைந்துவிட்டன. குண்டுவெடிப்பு, உள்நாட்டுப் பாதுகாப்பு, அயல்நாட்டுச் சதி என்ற பீதிக்குள் ஒளிந்துகொண்டு, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை காட்ட, தான் நடத்திய தகிடுதத்தங்களை பின்னுக்குத் தள்ளப் பார்க்கிறது ஆளுங்கட்சி. குண்டுவெடிப்பு என்றதுமே ஒட்டுமொத்த இஸ்லாமியரையும் சந்தேகத்தோடு பார்க்கும் பொதுப்புத்தி மங்காமல் விசிறிவிடவும், தடா, பொடா, எல்லை தாண்டிய பயங்கரவாதம் என்ற தமது ஊத்தை வாதங்களைப் பேசவும் இந்துத்வாவினருக்கு மறுபடி ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
என்னமும் நடக்கட்டும், நாம் நமது வேலையில் கருத்தாய் இருப்போம் என்று யு.பி.எஸ்.சி.யில் உள்ள மெரீட்வாலாக்கள் சந்திலே சிந்துபாடிக் கொண்டிருக்கிறார்கள். பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் பொதுப்போட்டியில் முதலிடத்தில் தேர்ச்சி பெற்றாலும் அவர்களை அந்தந்த சாதிக்கான கோட்டாவுக்குள் தள்ளி பூர்த்தி செய்துவிடுகிற மோசடியில் அவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். தகுதி, திறமை என்று சொல்லிக்கொள்கிற இவர்களின் டகால்டி வேலைகள் பற்றிய விவாதமும் எதிர்ப்பு நடவடிக்கையும் உடனடித் தேவையாகிறது.
- ஆசிரியர் குழு
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|