சாதியும் வர்க்கமும்
ப.கு.ராஜன்
இந்திய மார்க்சியத்திற்கான சவால்:
சீன குணாம்சங்களுடன் கூடிய சோசலிசம் என்று, தான் சீனாவில் கட்ட முனையும் சோசலிசத்தை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி வரையறுக்கின்றது. பல்லாண்டுகளாக கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆஃப் சௌத் ஆப்பிரிக்கா (Communist party of South Africa) என்ற பெயரில் இயங்கிய கட்சி, ஒரு கட்டத்தில் தென்னாப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியாக (South African communist party - SACP) தன்னை மாற்றிக்கொண்டது. வளர்ச்சியடைந்த பெருமுதலாளித்துவ நாடுகளில் இருப்பதிலேயே மிகவும் பலமானதாகவும் மிகவும் சுதந்திரமானதாகவும் இயங்கியது ஜப்பானியக் கம்யூனிஸ்ட் கட்சி. சோவியத் வீழ்ச்சிக்குப் பிறகும் தனது பலத்துடன் தொடரக் கூடிய இக்கட்சி மிகவும் கறாராகத் தன்னை அப்படியே அழைத்துக்கொள்கின்றது. (Japanese communist party - JCP - not Communist party of Japan).
தமது நாட்டிற்கான மார்க்சியம் அல்லது தமது நாட்டில் காண வேண்டிய சோசலிச சமூகத்தின் கட்டுமான முறை, ஐரோப்பிய மார்க்சியம் மற்றும் ஐரோப்பிய சோசலிசக் கட்டுமான முறையிலிருந்து மாறுபட்டது என்பதை உணர்ந்துள்ளதின் வெளிப்பாடாகவே இக்கட்சிகள் இம்மாற்றங்களைச் செய்தன எனலாம். இப்படி பெயர் மாற்றிய ஒரே காரணத்திலேயே அவை சர்வதேச இயக்கத்தின் பகுதிகளாக இல்லாது போய்விடவில்லை. இப்படி பெயரை மாற்றித்தான் இதனைச் செய்ய வேண்டும் என்ற கட்டாயமுமில்லை. அது அவர்களது முடிவு. இதுபோல இந்தியாவின் மார்க்சியம் எதிர்கொள்ளும் - இந்திய மார்க்சியத்திற்கு மட்டுமே உரித்தான சவால்கள் சில உள்ளன. இவற்றைச் சமாளிப்பதற்கு முன்னுதாரணங்கள் ஏதும் கிடையாது. அறிந்த மார்க்சிய அடிப்படைகளை, மார்க்சியம் கற்றுத் தந்துள்ள அறிவியல் பூர்வமான அணுகுமுறை மூலம், இந்தியாவின் பிரத்யேக சூழலுக்கு ஏற்ற வகையில் பொருத்தி சுயமாகத்தான் வழியைக் கண்டறிய வேண்டும்.
இந்திய மார்க்சிஸ்டுகள் எதிர் கொள்ளும் முக்கியமான சவால்களில் ஒன்று சாதி. வேறு மார்க்சிஸ்டுகளுக்கு இல்லாத மிகப் பெரும் சவால் அதுதான் எனக் கூறினாலும் தவறில்லை. இது குறித்த விவாதம் கடந்த 80,85 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்துவரும் ஒன்றே. நான் எடுத்துக்கொண்டுள்ள பொருளின் சிக்கலான தன்மையை உங்களுக்கு நினைவுபடுத்தவேண்டிய அவசியம் இல்லை. எனது உள்ளத்தைக் காட்டிலும் நுட்பமான உள்ளம் கொண்டோரும் எனது பேனாவைக் காட்டிலும் திறன்வாய்ந்த பேனாவைக் கைக்கொண்டோரும் சாதி எனும் மர்மத்தை அவிழ்ப்பதற்கு கடுமையாய் முயன்றிருக்கின்றனர். ஆனால் துரதிஷ்டவசமாக இன்றுவரை இது விளக்கப்படாததாக விளங்கிக் கொள்ளப்படாததாகவே உள்ளது. மிகவும் அடக்கமான இவ்வரிகள் என்னுடையதல்ல. கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தனது உரையை இப்படித் துவக்கியவர் அம்பேத்கர். (CASTES IN INDIA - Their Mechanism, Genesis and Development – Anthropology Seminar of Dr.A.A.Goldenweizer at The Columbia University, New York, U.S.A. on 9th May 1916 Source:Indian Antiquary, May 1917, Vol. XLI )
ஆனால் இந்திய வரலாறு, சமூகவியல், பொருளாதாரம் அனைத்தையும் கணக்கிலெடுத்துக் கொண்டு அலசி ஆய்ந்த அறுதித் தீர்வு தம்மிடமுள்ளதாகவும், புதிதாக எவரிடமும்- குறிப்பாக, கட்சிக்கு அல்லது கட்சிக் கமிட்டிக்கு வெளியே இருப்பவர்களிடமிருந்து- கற்பதற்கும், உட்கவர்வதற்கும் ஏதுமில்லை என்ற தொனியிலும் கருத்துகள் ஒலிப்பதை பலரும் கேட்டிருப்பர். பெரியாரும் அம்பேத்கரும் நமது மகாதிட்டத்தின் ஒரு சிறு ஓரப்பகுதியை ஓரளவு திறம்பட செய்த சீர்திருத்தவாதிகள்; நாமெல்லாம் புரட்சிக்காரர்கள்; இருந்தாலும் வயதில் மூத்த கிழவர்களுக்கு கொஞ்சம் மரியாதைக் கொடுத்து தொலைத்துவிடுவோம் என்பதே சாதி குறித்தும் இவர்களது பணி குறித்தும் 40 ஆண்டுகளுக்கு முன்பிருந்த மார்க்சியப் புரிதல்.
இக்காலகட்டத்தில் இந்திய சமூகத்திலும் அரசியலிலும் நிகழ்ந்துள்ள மாற்றங்களும், தேக்கங்களும் சாதி, வர்க்கம் ஆகிய இரண்டையும் கூர்ந்து நோக்கி உடனடி மற்றும் தொலைநோக்கு யுத்தத் தந்திரங்களை தகவமைக்கக் கோருகின்றன. இந்த எத்தனத்தின் வெளிப்பாடாக மாற்றுக் கருத்துகளைக் கண்டு விவாதிப்பது அவசியமாகியுள்ளது. அப்படியல்லாது ஒழுங்காக நடந்து கொண்டிருக்கின்ற இசை நிகழ்ச்சியின் நடுவில் அபசுரத்தைக் கேட்டது போல் பாவித்து விமர்சித்தால் தேக்கம் உடைபடுவதற்கான வழியைக் காணப் போவதில்லை. இதுகாறும் சாதி எனும் கட்டமைப்பு குறித்து யார் கொண்டிருந்த புரிதலும் போதவில்லை; அதன்மீது யார் தொடுத்த தாக்குதலும் போதவில்லை என்பதை இன்றைய சமூக அரசியல் நிலை மீண்டும் மீண்டும் நிரூபித்த வண்ணமுள்ளது. வர்க்கரீதியாக சுரண்டப்படும் வர்க்கமாகவும், சாதிரீதியாக தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சாதிகளாகவும் இருக்கும் பெரும்பான்மையான மக்களை இடதுசாரிகள் வென்றெடுக்க முடியவில்லை. இடதுசாரிகளோடு இருக்க வேண்டிய இம்மக்கள் பிராந்திய குட்டி பூர்ஷ்வாக் கட்சிகளின் பின்னால் இருக்கின்றனர்; அல்லது வர்க்கரீதியாக ஆளும் வர்க்கமாகவும் சாதிரீதியாக பார்ப்பன, பனியா, தாக்கூர் (வெள்ளாள) சாதியாகவும் இருக்கும் ஒரு சிறு ஆதிக்கக் கூட்டத்திற்கு சேவை செய்வதையே தனது நோக்கமாக கொண்டுள்ள காங்கிரஸ், பி.ஜே.பி பின்னால் உள்ளனர். இது மறுக்க முடியாத எதார்த்தம்.
ஒடுக்குமுறையின் ஊற்றுக்கண் உற்பத்தி சாதனங்களின் மீதான உடமைதான். இச்சக்திகளின் பெரும்பகுதி ஒடுக்கும் சாதிகளாக இருப்பது வர்க்க ஒடுக்குமுறைக்கு வலு சேர்ப்பதாக உள்ளது என்பதும் பலரும் சொல்லக்கூடியதாகவே உள்ளது. ஆனால் இந்த மேம்போக்கான கருத்து, ஒரு அரை உண்மையாக அமைந்து உண்மையின் மீது மூடுபனியாக பரவியுள்ளது. நேரு விருந்திற்கு சென்ற கதை ஒன்று உண்டு. விருந்திற்கு அழைத்தவர் நேருவிற்கு ஏதோ பதார்த்தத்தைப் பரிமாறியிருக்கிறார். தேர்ந்த உணவு ரசிகரான நேருவுக்கு அதன் தோற்றமே சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது. இது என்ன வென்று வினவ, கோழிக்கறி என்று பதில் கிடைத்துள்ளது. கொஞ்சம் ருசித்துப் பார்த்த நேருவால் அது கோழிக்கறி என்பதை நம்ப முடியவில்லை. கோழிக்கறி போல இல்லையே எனக் கூறியுள்ளார். ஆமாமாம் கோழிக்கறி போதாததால் கொஞ்சம் குதிரைக்கறியும் சேர்த்துள்ளோம் என்ற பதிலை கேட்டுவிட்டு உண்பதைத் தொடர்ந்துள்ளார் நேரு. சுத்தமாகக் கோழிக்கறி போலவே இல்லை. எவ்வளவு கோழிக்கறியோடு எவ்வளவு குதிரைக்கறியைச் சேர்த்தீர்கள் என வினவியுள்ளார். 1:1 என்ற விகிதத்தில் சேர்த்துள்ளோம். அப்படியா? ஒரு கிலோ கோழிக்கறியோடு ஒரு கிலோ குதிரைக்கறியா என்று கேட்டார் நேரு. இல்லை ஒரு கோழியின் கறியோடு ஒரு குதிரையின் கறியைச் சேர்த்துள்ளோம் என பதில் வந்ததாம். ஒடுக்கும் சாதியும் மற்றவர்களும் ஆளும் வர்க்கத்தில் ஏதோ 60:40 என்ற விகிதத்தில் உள்ளனர் என்பதுபோல, பெரும் பகுதி ஒடுக்கும் சாதிகளாக இருப்பது... என பலரும் கூறுவது நேருவின் கோழிக்கறி கதையாகத்தான் உள்ளது.
டாலர் பில்லியனர்கள்:
இந்தியப் பெருமுதலாளித்துவத்தின் உச்சியில் உள்ள டாலர் பில்லியனர்களை (இந்திய ரூபாயில் 4000 கோடிக்கு மேல் சொத்துள்ளவர்கள்) அமெரிக்க வர்த்தக சஞ்சிகையான ஃபோர்ப்ஸ் (Forbes) பட்டியலிட்டுள்ளது. டாலர் பில்லியனர் பட்டியலில் இவர்களது பெயர் இடம் பெற்றதற்காக கீழ்கண்டவர்களுக்கு நன்றி சொல்லாம்: 1. ஃபோர்ப்ஸ் 2. நரசிம்மராவ்-மன்மோகன்சிங்-ப.சிதம்பரம் அலுவாலியா & சிளி. 3. திருவாளர். மநு மற்றும் அவரது பந்து மித்திரர்கள்.
பட்டியல் 1ல் நாம் காண்பது என்ன? தமிழகத்தின் இரு பிற்படுத்தப்பட்ட பெருமுதலாளிகள் தவிர, இரண்டு மூன்று முஸ்லிம் , கிருஸ்தவர்கள் உள்ளனர். இவர்களைத் தவிர ஏனைய அனைவரும் பார்ப்பன, பனியா, தாக்கூர் சாதியினர். இப்படி சுரண்டும் வர்க்கங்களைச் சேர்ந்தோர் உயர்சாதியாகவும் இருப்பது எதேச்சையான விபத்து அல்ல. அதுதான் இந்தியாவின் வர்க்கப் பிரிவினை உருவாகி, வளர்ந்து முதிர்ச்சியுற்றப் பாதை. டி.டி.கோசாம்பி, ஆர்.எஸ்.சர்மா, இர்ஃபான் ஹபீப், ரோமிலா தப்பார் போன்றோர் இந்நிகழ்வுப்போக்கின் பல்வேறு காலகட்டங்கள் குறித்து விரிவாக எழுதியுள்ளனர். உள்ளூர் சிறு வியாபாரிகளையும், பட்டறை, பேக்கரி முதலாளிகளையும் பூர்ஷ்வாக்களாகக் காணும் கிட்டப்பார்வை காரணமாக எல்லா சாதிகளிலும் எல்லா வர்க்கத்தினரும் இருக்கின்றனர், எல்லா வர்க்கத்திலும் எல்லா சாதிகளும் இருக்கின்றனர் என்ற தவறான மனப்பதிவு கொண்டவர்கள். இந்தத் தவறான மனப்பதிவின் அடிப்படையில்-வர்க்கம், சாதி என்ற கட்டுமானங்களைக் குறித்து வரும் மாறுபட்ட கருத்துகளை போதுமான கவனத்துடன் பரிசீலிப்பதில்லை.
உலகும் இந்தியாவும் நாம் நமது சொந்தக் கண்ணால் கண்டது, காண்பதைக் காட்டிலும் மிகவும் பெரியது. சொந்த அனுபவங்கள், நாம் பழகிய, புழங்கிய, வளைய வந்த சமூகப்பரப்பு என்பதெல்லாம் கடுகளவுதான். இதனைக் கொண்டு மட்டும் ஒரு தீர்மானத்திற்கு வருவது அறிவுடமையல்ல. சரி நமது அனுபவங்களை அடிப்படையாய்க் கொள்ளக்கூடாதென்றால் பிறகு யாருடய அனுபவங்களை அடிப்படையாய்க் கொள்வது? இல்லை, எந்தவொரு தனிநபருக்கும் அந்த தகுதியை தந்துவிட முடியாது. புள்ளிவிவரங்களைப் பாருங்கள். இந்தியாவின் டாலர் பில்லியனர்களில் 5 அல்லது 6 பேரைத்தவிர ஏனைய அனைவரும் பார்ப்பன, பனியா, தாக்கூர் சாதியினர். அதாவது மக்கட்தொகையில் 10%க்கும் குறைவாகவுள்ள பார்ப்பன, பனியா, தாக்கூர் இந்திய ஆளும் வர்க்கத்தின் 90%. மக்கட் தொகையில் 90% ஆன தலித்துகளும், பிற்படுத்தப்பட்ட சாதியினரும் மதச் சிறுபான்மையினரும் 10%க்கும் குறைவு.
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் டாடா சமூக அறிவியல் கழகம் (TATA Institute Of Social Studies), இந்தியாவின் முதல் 100 தனியார் நிறுவனங்களில் இயக்குனர் பதவிகளில் (Company Directors) இருப்போரின் சாதிப் பின்னணியை ஆய்வு செய்தது. இவர்களில் 75%க்கும் அதிகமானோர் இரண்டு சாதிகளைச் சேர்ந்தவர்கள் என ஆய்வு முடிவு தெரிவித்தது. அந்த இரண்டு சாதிகள் எவை என அவர்கள் கூற வில்லை. அவர்களது சமூக அக்கறை அவ்வளவுதான் என எடுத்துக் கொள்வதா அல்லது இதில் என்ன சந்தேகம் என நினைத்தார்களா தெரியவில்லை. ஆனால் அத்தகைய சந்தேகங்களுக்கு இடமளிக்க வேண்டாமென்றோ என்னவோ திருமதி. (Dr.) சந்தோஷ் கோயல் என்ற ஆய்வாளர் இதுகுறித்து தெளிவான புள்ளிவிவரங்களை தனது ஆய்வின் அடிப்படையில் வெளியிட்டுள்ளார். இவர் ஒரு சமூகவியல் பேராசிரியர்; ஹரியானாவின் ரோத்தக்கில் சோட்டுராம் கல்விக் கல்லூரியில் பேராசிரியர். டெல்லியிலுள்ள இந்திய தொழில் வளர்ச்சி ஆய்வுக் கழகத்திலும் (Institute for Studies in Industrial Development - ISID) பணியாற்றியவர். அவரது ஆய்வு இந்திய பெருவணிக நிறுவனங்களின் இயக்குனர்களின் சமூகப் பின்புலம் என்ற பெயரில் ISIDயில் சமர்ப்பிக்கப்பட்டது. பின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத் தொகுப்பாக (Dominance and State power in Modern India : Decline of A Social Order OUP - 1992; Edited by Francis Frankel & MSA Rao) வெளிவந்தது. அவர் வரைந்துகாட்டும் சித்திரத்தைப் பார்ப்போம்.
பெரு நிறுவனங்களின் தலைமை:
புதுடெல்லியிலுள்ள இந்திய பொது நிர்வாக கல்விக் கழகம் (Indian Institute of Public Administration) பெருங்குழும ஆய்வுக்குழு (Corporate Studies Group) இந்தியாவின் பெருநிறுவனங்களின் உயர்பதவிகளில் இருப்போரின் விவரங்களைப் பல ஆண்டுகளாகச் சேகரித்து வைத்துள்ளது. இந்த தரவுகளைப் பயன்படுத்தி தனது ஆய்வு முடிவுகளை Dr. சந்தோஷ் கோயல் அளித்துள்ளார். 16 ஆண்டுகளுக்கு முந்திய புள்ளிவிவரம்தான். 16 ஆண்டுகளில் இந்தியாவில் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது எனக் கருதுபவர்கள் மாற்றுப் புள்ளிவிவரங்களைத் தரட்டும். பெருந்தலைவர் (Chairman) அதிபர் (President) நிர்வாக இயக்குனர் (Managing Director) மற்றும் ஏனைய இயக்குநர்கள் இந்த கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்தியாவின் முதல் 1100 நிறுவனங்களின் தலைமை யாரிடம் உள்ளது என்பதை இது காட்டுகின்றது. (பட்டியல்-2)

சூத்திரன் என்பதை தான் வழக்கமான பொருளில் பயன்படுத்தவில்லை என்பதை Dr.கோயல் தெளிவுபடுத்தியுள்ளார். இங்கு சூத்திரன் என்பது தலித், பிற்படுத்தப்பட்டோரைக் குறிக்கின்றது. தமிழகத்தின் செட்டியார், முதலியார், பிள்ளைமார் எல்லாம் ஆர் விகுதியோடு மற்றவர்களை மேலும்கீழுமாகப் பார்த்தாலும் எல்லாப் பயல்களும் சூத்திரப் பயல்கள் தாம் என்பது Dr.கோயலுக்குத் தெரிந்துள்ளது. ஆனால் அவர்கள் முற்பட்ட வகுப்பினர் என்பதால் இந்த பட்டியலின் சூத்திரர் பகுதிக்குள் சேர்க்கவில்லை. லிங்காயத், கத்ரி, காயஸ்தா, சிங் எல்லாம் தமிழக வெள்ளாள சாதிகளைப் போன்றவை. இந்த பட்டியலில் மதச் சிறு பான்மையினர் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. இந்துக்கள் தாம் 88%. மீதமுள்ளோரில் பார்சி, ஜெயின், சிந்தி போன்ற உயர்சாதியாய்க் கொள்ளப்படுவோரைத் தவிர்த்துப் பார்த்தால் கிருஸ்தவர்கள் 5.4%, முஸ்லீம்கள் 1.12% தான் உள்ளனர். மொத்தத்தில் இந்த நாட்டின் மக்கட் தொகையில் சுமார் 90% ஆக இருக்கும் தலித், பிற்படுத்தப்பட்டோர், முஸ்லீம்கள் ஆகியோரின் பிரதிநிதித்துவம் வெறும் 5% தான். இந்திய பெரு முதலாளித்துவத்தின் 95% உயர் சாதியால் ஆனதே.
நில உடமையும் சாதியும்:
சரி இந்த ஆளும் வர்க்கத்தின் கூட்டாளி வர்க்கமான நிலப் பிரபுத்துவம் என்பது யாரால் ஆனது? திரும்பத் திரும்ப முதலாளித்துவ வர்க்கம் நிலப்பிரபுத்துவ வர்க்கம் என மொட்டையாக இவையெல்லாம் ஏதோ மனிதர்களால் ஆனதே இல்லை என்பதுபோல, அல்லது சாதிகளுக்கு அப்பாற்பட்ட மனிதர்களால் ஆனது போல பேசுவதன் காரணம் புரியவில்லை. இங்கும் முதலாளித்துவத்தின் அதே சாதிகள்தான். டாலர் பில்லியனர் என்றால் பனியா, பார்ப்பனர், தாகூர் என்பது வரிசை; நிறுவனத் தலைமை என்றால் பார்ப்பனர், பனியா, தாகூர் என்பது வரிசை ; நிலப்பிரபுத்துவம் என்றால் தாகூர் (வெள்ளாளன்), பனியா, பார்ப்பனர் என்பது வரிசை. கிராமப்புறங்களில் எல்லாம் பிற்படுத்தப்பட்டோரின் ராஜியம்தான் நடக்கிறதாக்கும் என்ற விதத்தில் பெருமுதலாளித்துவ பார்ப்பன, பனியா சாதி உணர்வாளர்களால் நிரம்பி வழியும் இந்திய ஊடகங்கள் ஓயாமல் பிரச்சாரம் செய்வதைப் புரிந்து கொள்ளலாம். Dr.சதீஷ் தேஷ்பாண்டே டெல்லி பொருளாதாரப் பள்ளியின் ( Dehli School of Economics) சமூகவியல் பேராசிரியர். பொருளாதாரம், சமூகவியல் இரண்டிலும் உயர் கல்வி முடித்த ஆய்வாளர். இந்து நாளிதழில் (டிசம்பர் 06,07, 2001) இதுகுறித்து நீண்ட கட்டுரை எழுதியுள்ளார்.
மேலும் எக்கனாமிக் அண்டு பொலிட்டிகல் வீக்லி (EPW) ஜூன் 17, 2006ல் ஒரு நீண்ட கட்டுரை எழுதியுள்ளார். Dr.மிருத்தெஞ் செய் மொஹந்தி, கல்கத்தாவின் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்டில் பேராசிரியர். அவர் EPW செப்டம்பர் 2, 2006 இல் இது குறித்து ஒரு நீண்ட கட்டுரை எழுதியுள்ளார். இவையெல்லாம் இணையத்தில் கிடைக்கின்றன. படித்துப் பாருங்கள். NSSO எனப்படும் தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு நிறுவனம் 1999-2000 ஆம் ஆண்டில் ஒரு கணக்கெடுப்பை நடத்தியுள்ளது. அதுவரையில் பிற்படுத்தப்பட்டோரின் பொருளாதார நிலை குறித்து எந்தவொரு கணக்கெடுப்பும் நடத்தப்பட்டதில்லை. கணக்கும் எடுக்கமாட்டார்கள்; யாராவது அவர்கள் நிலை பற்றி பேசினால் அறிவியல் அடிப்படையற்று சாதியம் பேசுவதாக அவர்களுக்கு சாதி முத்திரையும் குத்திவிடுவார்கள். இந்த சாதி முத்திரையெல்லாம் பிற்படுத்தப்பட்டோர், தலித் நலன் பற்றி பேசும் சமஜ்வாதி, ஆர்ஜேடி, பிஎஸ்பி போன்ற கட்சிகளுக்குத்தான். பார்ப்பன பனியா நலனுக்காவே நடத்தப்படும் பிஜேபி கட்சிக்குகூட இந்த முத்திரை கிடையாது. அவர்களைச் சுட்டும்போது அவர்களே விரும்பும் மதவாதி முத்திரைதான். அவர்களும் அதனை மகிழ்ச்சியோடு ஏற்று பதக்கம் போல அணிந்து கொள்வார்கள்.
இப்படி செய்பவர்கள் காங்கிரஸ், பிஜேபி கட்சியினராக மட்டும் இருந்தால் நமக்கு வியப்பளிக்கப் போவதில்லை. இந்த 2000 ஆண்டின் கணக்கெடுப்பு பல முந்தைய கற்பிதங்களை பொய்யாக்கியது என்பதுதான் மேலே சொன்ன பேராசிரியர்களின் கட்டுரைகளின் சாரம். இக்கணக்கெடுப்பில் சில பலகீனங்கள் உள்ளன. கணக்கெடுப்பிற்கு உள்ளான மக்களை, அவர்களே தாங்கள் OBC இல்லையா என்பதைத் தீர்மானிக்கக் கோரியுள்ளனர். கல்லூரி நுழைவுக்கோ, வேலைக்கு விண்ணப்பம்போடும் போதோ பிற்படுத்தப்பட்டோரா எனக் கேட்டால் கிடைக்கும் பதில் வேறு. ஆனால் அதுவல்லாது நீங்கள் மேல்சாதியா, கீழ்சாதியா எனக் கேட்டால் எத்தனை பேர் ஆம் நான் கீழ்சாதி என்று பதில் சொல்வார்கள்? இது ஒரு பலகீனம். மற்றொன்று, தலித், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் (OBC) தவிர ஏனையோர் அனைவரையும் இதரர் (Others) என்ற பகுப்பிற்குள் அடக்கிவிட்டனர்.
இதில் பார்ப்பனர், பனியா, தாகூர், ஜாட், காயஸ்தா போன்ற இந்து மேல்சாதிகள், சீக்கியர், ஜெயின், பார்சி, சிந்தி, கிருஸ்தவர் போன்ற வசதி படைத்தவர்களோடு பௌத்தர், முஸ்லீம் ஆகிய அடிமட்ட மக்களையும் சேர்த்துவிட்டனர். இந்த பலகீனங்களால் புள்ளிவிவரங்கள் பிற்படுத்தப்பட்டோரின் உண்மை நிலையினை கொஞ்சம் மறைக்கிறது. ஆனாலும் இதனையும் மீறி அவை காட்டும் சித்திரம் உயர் சாதி ஊடகங்களும் கட்சிகளும் புனைந்து வைத்திருக்கும் கற்பிதங்களை உடைக்கின்றது. இந்திய கிராமப்புறங்களில் 37%, நகர்ப்புறங்களில் 31% என்ற அளவில் பிற்படுத்தப்பட்டோர் இருப்பதாக இக்கணக்கெடுப்பு கூறுகின்றது. இது மண்டல் கமிசன் கூறுவதைக் காட்டிலும் (52%) மிகக் குறைவு. கணக்கெடுப்பின் பலகீனம் இந்த குறைவான எண்ணிக்கையைக் காட்டுகின்றது.

மேலேயுள்ள பட்டியல் ஒருநபருக்கு மாதாந்திர நுகர்வுச் செலவு என்னவென்பதைப் பொறுத்து வெவ்வேறு வகுப்பைச் சேர்ந்த குடும்பங்கள் வகை பிரிக்கப்பட்டுள்ளன. நகர்ப்புறத்தில் ஒருதலைக்கு ஒருமாதத்திற்கு ரூ.225க்கும் குறைவாக செலவு செய்பவர்கள் (Consumption Expenditure) 1000 தலித்துகளில் 108 பேர், பழங்குடியினரில் 171 பேர்; பிற்படுத்தப்பட்டோரில் 66 பேர்; உயர்சாதியினர் உட்பட இதரர் 42 பேர். இதேபோல வெவ்வேறு அளவுகளில் செலவு செய்பவர்களின் பட்டியல் இது. அதிகபட்சமாக தலைக்கு மாதத்திற்கு ரூ.950க்கு மேல் செலவு செய்பவர்கள் எத்தனை பேர் எனப் பாருங்கள். பழங்குடியினர் 12 பேர்; தலித் 13 பேர்; பிற்படுத்தப்பட்டோர் 28 பேர்; ஆனால் இதரர் 64 பேர். தலித்துகளைக் காட்டிலும் பிற்படுத்தப்பட்டோர் நிலை சற்றே மேல் என்பதில் சந்தேகமில்லை; ஆனால் அவர்களை ஒட்டிய நிலையில்தான் உள்ளனர்; அவர்களுக்கும் உயர் சாதியினருக்குமான வேறுபாடு கணிசமானது என்பதையே இவை கூறுகின்றன. இதுபோன்ற பல புள்ளிவிவரங்களை இந்த அறிக்கை கூறுகின்றது.
நில உடமை என்பதில் ஏதோ பிற்படுத்தப்பட்டோர் உயர் சாதியினரையும் மிஞ்சிவிட்டனர் என்ற தோற்றம் வலிந்து ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. பிற்படுத்தப்பட்டோர் நகர்ப் புறங்களைக் காட்டிலும் கிராமப்புறங்களில் சற்றே மேலான நிலையில் இருக்கின்றனர் என்பது உண்மை. ஆனால் பல தரவுகளில் தலித்துகளை அடுத்துதான் உள்ளனர். அவர்களுக்கும் உயர்சாதியினருக்குமான வேறுபாடு அவர்களுக்கும் தலித்துகளுக்குமான வேறுபாட்டைக் காட்டிலும் அதிகம். அவர்களுக்கும் தலித்துகளுக்கும் இருக்கும் மிகப்பெரும் வேறுபாடு தீண்டாமை தான். அது ஒன்று போதும் அவர்கள் இருவரையும் ஒன்றுபோல் பாவிக்கக்கூடாது என்பதற்கு. ஆனால் பிற்படுத்தப்பட்டோரில் ஒருபகுதி எவ்வித இடஒதுக்கீட்டுக்கும் அவசிய மற்றவர்கள் என்பது முழுக்கவும் பொய்யான புனைவு.
1000 பிற்படுத்தப்பட்ட குடும்பங்களில் 38 குடும்பங்கள் தாம் 4 ஹெக்டேருக்கு மேல் நிலமுள்ளவர்கள். 1000 இதரர் குடும்பங்களில் 4 ஹெக்டேருக்கு மேல் நிலமுள்ளவர்கள் 67 பேர். நினைவில் கொள்ளவும் - பௌத்தர்களும் , முஸ்லிம்களும் உயர்சாதியினரோடு இந்த இதரர் பிரிவில் உள்ளனர். அவர்களை தவிர்த்து உயர்சாதியினரை மட்டும் கணக்கில் கொண்டால் வேறுபாடு இன்னும் அதிகமாக இருக்கும். இதில் 5 ஹெக்டேர் இருப்பவர்கள் முதல் 1000 ஹெக்டர் இருப்பவர்கள் எல்லோரையும் ஒரு பிரிவுக்குள் அடக்கியுள்ளனர். இதுவும் கூட பிற்படுத்தப்பட்டோரின் உண்மை நிலையைக் கொஞ்சம் மறைக்கின்றது.
அரசும் சாதியும்
இந்த வர்க்கங்களின் கைப்பாவையாக இருக்கும் அரசு இயந்திரத்தில் தலித், ஓபிசி பங்கு மிகவும் குறைவு என்பது தெரியும். ஆனால் உயர்கல்வியில் ஓபிசிக்கான ஒதுக்கீடு மற்றும் கிரீமி லேயர் பிரச்சினை குறித்துப் பேசும்போது சரத் யாதவ், மத்திய அரசு அலுவலர் மத்தியில் ஓபிசி பங்கு என மிகவும் குறைவானதொரு சதவீதத்தைக் கூறினார். 'நம்ப முடியவில்லை. இருக்காது; மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் இருக்கின்றன; நிலைமை இந்தளவு மோசமாக இருந்தால் சொல்லப்பட்டிருக்குமே' என்றெல்லாம் நம்மிடையே பேச்சிருந்தது. ஆனால் இப்போது தெரிகின்றது எந்தளவு அப்பாவிகளாக - இல்லை - அடிமுட்டாள்களாக இருந்துள்ளோம் என்று. ஊழியர் சங்கத்தவர்க்கு 'என்னடா எல்லாம் நம்மவாளா இருக்காளே' எனத் தோன்றவே இல்லை என்பது மிகவும் ஏமாற்றமாக உள்ளது. சாதி பேதமற்ற வர்க்க போதம் பெற்ற தோழர்கள் வாய்மூடி மௌனித்திருந்தது எப்படி என விளக்கக் கடமைப்பட்டுள்ளார்கள். கீழேயுள்ள புள்ளிவிபரங்களைப் பாருங்கள்.
இந்த பட்டியல்களும் Dr.சந்தோஷ் கோயல் கட்டுரை ஒன்றி லிருந்து எடுக்கப்பட்டதுதான். இது 1985 ஆம் ஆண்டு நில வரம். இல்லையில்லை இப்போதெல்லாம் காலம் மாறிவிட்டது என்பவர்கள் மாற்றுப் புள்ளி விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். எப்போது பார்த்தாலும் ஒரு பக்கத்தில் புள்ளிவிவரங்களைத் திரட்ட அனுமதிப்பதில்லை, மறுபுறத்தில் புள்ளிவிவரங்களில் நொள்ளை நொட்டை காரணம்காட்டி இட ஒதுக்கீடு போன்றவற்றை மறுப்பதே ஆதிக்க சாதிகளின் வாடிக்கையாயுள்ளது. சந்தோஷ் கோயல் மற்றுமொரு குண்டையும் போடுகிறார். சூத்திரர் பங்கு வெறும் 2% என்பது ஒருபுறமிருக்க, இவர்களில் பெரும்பாலோர் ஆந்திர மாநில சூத்திரர்கள்; அவர்களைத் தவிர்த்துப் பார்த்தால் சூத்திரர்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பம் என்கிறார். அதிகாரிகள் மட்டத்தில் இப்படி. அவர்களுக்கு அடுத்த மட்டங்களில் நிலமை எப்படியுள்ளது?
இது 1.1.2000 இல் மத்திய அரசுப் பணியில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் இருக்கும் நிலை பற்றி மத்திய பணியாளர் அமைச்சகத்தின் பொதுமக்கள் துயர் துடைப்பு மற்றும் ஓய்வூதியத் துறை ஆண்டு அறிக்கை 2001-2002 தெரிவிக்கிறது. மேலேயுள்ள பட்டியலும் கீழேயுள்ள பட்டியலும் இடம் பெற்றுள்ள அறிக்கை: தெற்காசியாவில் சாதி, இனக்குழு மற்றும் புறக்கணிப்பு : அரவணைப்போடு கூடிய சமூகத்தை கட்டமைப்பதில் துயர் துடைப்பு நடவடிக்கைக ளின் பங்கு. மனித வளர்ச்சி அறிக்கை அலுவலகம், சிறப்புக் கட்டுரைகள் 2004 அறிக்கைக்காக- ஐக்கிய நாடுகள் சபை வளர்சித் திட்டம். (Caste Ethnicity and Exclusion in South Asia : The role of affirmative action policies in building inclusive societies. Human development report office, Occasional Paper for HDR 2004, United Nation Development Programme.)
உயர்கல்வியும் சாதியும்:
சரி, அரசு இயந்திர நிலைதான் இப்படி, இப்போது முன் வந்துள்ள கல்வி குறிப்பாக உயர் கல்வியில் நிலை எப்படி உள்ளது? EPW சூன்- 17, 2006 இதழில் NSSO தரவுகளிலிருந்து பேரா.சதீஷ் தேஷ்பாண்டே காட்டும் சித்திரத்தைப் பாருங்கள். இந்தப் பட்டியல் ஒரு நகர்ப்புற மாதிரி கணக்கெடுப்பின் (Urban Sample Survey) அடிப்படையில் உருவாக்கப்பட்டதுதான். நகர்ப்புறங்களில் ஆதிக்கசாதி மக்கள் தொகை ஒப்பீட்டளவில் அதிகம். மொத்த மக்கட்தொகையில் 10 % தான் அவர்கள். ஆனால் இந்த கணக்கெடுப்பில் அவர்கள் 36.9 % இருப்பதைக் கவனத்தில் கொள்ளவும். நகர்ப்புறங்களிலேயே பிற்படுத்தப்பட்டோர் பட்டதாரிகளாய் இருப்பது 10-15% தான். கிராமப்புறங்களையும் கணக்கில் கொண்டால் மொத்த பட்டதாரிகளில் இவர்கள் 5 அல்லது 6% தான். அதாவது மக்கள் தொகையில் 52% இருக்கும் (மண்டல் கமிசன் கணக்குப்படி) மக்களில் பட்டதாரிகள் 5 அல்லது 6 %தான். இதுகூட கடந்த 80 ஆண்டுகால இட ஒதுக்கீட்டின் பயனாக அதிகரித்துள்ள தென்னக பட்டதாரிகளையும் கணக்கில் கொண்டால்தான். இந்தி பேசும் மக்கட்பகுதியில் நிலை என்னவென்று எளிதில் யூகித்துவிடலாம். நிலை இப்படியிருக்க இவர்களில் ஒரு பகுதியை கிரீமிலேயர் என கூறுவது எப்படி?

ஆளும் வர்க்கங்கள் ஆதிக்கசாதிகள் வேறுவேறல்ல:
ஆக இந்தப் புள்ளிவிவரங்கள் காட்டுவதென்ன? இந்தியாவின் பெரு முதலாளித்துவம் என்றாலும், நிலப் பிரபுத்துவம் என்றாலும், பெரு முதலாளித்துவ நிறுவனங்களின் நிர்வாகம் என்றாலும் அரசு இயந்திரம் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் நிர்வாகம் என்றாலும் அவற்றில் உள்ள பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சாதியினர் கைகளில் ஆறுவிரல் ஏழுவிரல் கொண்டோர் போல விதிவிலக்குகள் தாம். அது கிட்டத்தட்ட முழுமையாக பார்ப்பன, பனியா, தாகூர் சாதிகளால் ஆனதே. இவர்களது வரிசையில் மாறுதல் உண்டே தவிர தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரான பெரும்பான்மை என்பது இந்த வரிசைக்கு புறத்தேதான். தேவர் காலடி மண்ணே என்றோ கண்ணு பட போகுதய்யா சின்ன கவுண்டரே என்றோ இளையராஜா இசையில் பாட்டைக் கேட்டு புளகாங்கிதம் அடையலாம் அல்லது வடிவேலு போல ஏய்ய்.. நாங்க யாரு தெரியுமுல்ல சிங்கம்டா என நிலை தெரியாது அபத்தமாக மமதை கொள்ளலாம். அவர்கள் தாமாக தம்மைக் குறித்து ஏதோ நினைத்துக் கொண்டு தாழ்த்தப்பட்ட மக்கள் மீது வன்கொடுமைகளை கட்ட விழ்த்துவிட்டால் அதனை எப்படி எதிர்கொள்ள வேண்டுமோ அப்படித்தான் எதிர் கொள்ளமுடியும்.
அதிருக்கட்டும் சாதிரீதியாக அவர்களது நிலை இதுதான் என்பதை அவர்களுக்கு எடுத்துக் கூறி அவர்கள் சாதிரீதியாகக் கொண்டுள்ள மாயை அகல எடுத்த முயற்சிகள் என்ன என்பதை அக்கறையுள்ள அனைவருமே சிந்திக்க வேண்டும். தந்தைப் பெரியார் அந்த வேலையைச் (வேலையையும்..) செய்தார். இவர்களுக்கு கொம்பு சீவி விட்டு சாதிய மேலாதிக்க உணர்வை வளர்த்தவர்களோடு கடைசிவரையில் அவர் முரண்பட்டு மோதினார். இன்றய தலைவர்கள் குறைந்தபட்சம் இந்த சாதிய மேலாதிக்க உணர்வின் குவிமையமாக விளங்குபவரின் சமாதிக்குச் சென்று சாதிய மேலாதிக்க சக்திகளோடும் மதவாதிகளோடும் தோளோடு தோளுரச குருபூஜை செய்யாது இருக்கலாம்.
இந்த புள்ளிவிவரங்களைத் தொடரலாம்; காவல் துறை, நீதி மன்றங்கள், ஊடகங்கள், உயர் கல்வி ஆசிரியர்கள் என எல்லாவற்றிலும் இதுதான் நிலை. இத்தோடு மதம் மற்றும் மதத்தலைமை என்பதையும் கணக்கில் கொண்டால் சித்திரம் முழுமையடையும். அது என்ன ? இந்தியாவின் ஆளும் வர்க்கமும் ஆதிக்க சாதியும் ஒன்றுதான் வேறு வேறு அல்ல. ஒரே கட்டமைப்பின் இருவேறு பக்கவாட்டுத் தோற்றம்தான். ஒன்றுக்கெதிரான போராட்டம் தவிர்க்கவொண்ணாத வகையில் மற்றதற்கும் எதிரான போராட்டம்தான். உயர்சாதியைச் சேர்ந்தவர்களும் இந்தப் போராட்டத்தில் வருகிறார்களே, அவர்களுக்கு என்ன பதில்? அவர்கள் புரிந்துகொள்வார்கள். பாட்டாளி வர்க்க விடுதலைக்கு மார்க்சும் ஏங்கல்சும் லெனினும் போராடியது அவர்கள் பால் கொண்ட அனுதாபத்தால் அல்ல. பாட்டாளி வர்க்க விடுதலையில்தான் சகல பிற வர்க்கங்களின் விடுதலையும் அடங்கியுள்ளது என்பதால்தான். இதனைப் புரிந்து கொண்டு நம்மோடு இருந்து பணிபுரியும் பிற வர்க்கத்து தோழர்கள் இல்லையா? அதேபோல எல்லா சாதிகளையும் சேர்ந்த எல்லா மக்களின் விடுதலையும் சாதி அடுக்கின் அடி மட்டத்தில் உள்ள தலித்களின் விடுதலையில்தான் உள்ளது என்பதை அவர்களில் பெரும் பகுதி புரிந்து கொள்வார்கள். பிற்படுத்தப்பட்ட மக்கள் பகுதியிலும் பெரும்பகுதி புரிந்து கொள்வார்கள். புரியச் செய்யவேண்டியது பெரும் பணி தான்.
ஆனால் ஒரு சிறுபகுதி புரிந்து கொள்ளவில்லை என்றால் கவலைப்பட வேண்டியதில்லை. இவர்களை உத்தேசித்து சொல்ல வேண்டியதைச் சொல்லாதுமென்று விழுங்கினால் பெரும் பகுதி தலித், பிற்படுத்தப்பட்ட மக்களின் நம்பிக்கையைப் பெறுவது இயலாது. எல்லா சாதியிலும் எல்லா வர்க்கத்தினரும் இருக்கின்றனர் எல்லா வர்க்கத்திலும் எல்லா சாதியினரும் இருக்கின்றனர் என்ற எதார்த்தத்திற்குப் புறம்பான மாயைதனைக் கைவிடாமல் இது சாத்தியமல்ல. இதனைக் கைவிடாமல் நேருவிற்கு குதிரை மாமிசத்தைப் புகட்ட முனைந்தது போன்ற முயற்சி வெற்றி பெறப்போவதில்லை. அப்படியென்றால் தலித் ஒற்றுமை அல்லது தலித்-ஓபிசி ஒற்றுமையைக் கட்டி அதன் மூலம் கதி மோட்சம் பெற்றிடலாம் என்று எடுத்துக் கொள்ளலாமா? பிற்படுத்தப்பட்டோரும் தலித்துக்களும் ஒற்றுமைப்பட வேண்டும் என்பதில் ஐயமில்லை. ஒற்றுமை இல்லாது எவர் பிரச்சினைக்கும் தீர்வில்லை. இவ்விருவரது பிரச்சினைகளையும் நேர்மையாகக் கையாளும் ஒரு அமைப்பால்தான் இவர்களை ஒற்றுமைப் படுத்த இயலும். இவர்களது பிரத்யேகப் பிரச்சினைகளை நேர்மையோடு கையாள்வது என்பதில் வர்க்கரீதியாகவும் சாதிரீதியாகவும் ஆளும் தரப்பாக உள்ள சிறுபகுதியினை சகல முனைகளிலும் எதிர்த்து நிற்பது என்பது முதல் நிபந்தனை. இது ஒரு கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டுமே சாத்தியம். உலகம் இந்தியாவைவிடப் பெரியது. இந்தியாவின் பிரச்சினை சாதி மட்டுமல்ல. ஏகாதிபத்தியத்தில் ஆரம்பித்து, அணு ஒப்பந்தம், உலகமயம் முதல் ஹொகேனக்கல், முல்லைப் பெரியார் வரை எத்தனையோ பிரச்சினைகள் உள்ளன. சாதி மிகப் பெரிய பிரச்சினை என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. சாதியும் வர்க்கமும் இரு வேறு பிரச்சினைகள் எனக் காண்பதில்தான் தவறு உள்ளது.
சோசலிசமும் சாதியும்
வர்க்கப் பிரிவினை ஒழிக்கப்படும்வரை சாதிய ஏற்றத் தாழ்வுகளை ஒழிக்க முடியாது என்பது உண்மையே. வர்க்கப் பிரிவினை ஒழிக்கப்படுவது எப்போது சாத்தியமாகும்? அது ஒரு முதிர்ச்சியடைந்த சோசலிச சமூகத்தில் தான் சாத்தியம். அது என்று சாத்தியமாகும்? அன்று லெனின் சொல்லியதுபோல அல்லது சமீபத்தில் டெங் சியோ பிங் சொல்லியதுபோல பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான அரசு அமைந்து பல நூறு ஆண்டுகள் இடைவிடாத முயற்சியாக சோசலிசக் கட்டுமானம் சரியாக-வலதுசாரி இடதுசாரி பிறழ்வுகள் இல்லாது - நடை பெற்றால்தான் சாத்தியம். சீனா இப்போது சோசலிச கட்டுமானத்தின் மிகவும் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் நாடு என்பதுதான் அவர்களது துணிபு. அதுதான் சரியான நிர்ணயிப்பு என்று தெரிகின்றது. அப்படியெனில் இன்னுமொரு 3 நூற்றாண்டுகளுக்கு கோயில் கருவறை நுழைவு, தமிழில் அர்ச்சனை, ரெட்டைத் தம்ளர், உத்தபுரம் சுவர், சுடுகாட்டுப் பாதை எல்லாவற்றையும் ஒத்திவைத்து மறந்துவிடலாமா?
அப்படி யார் சொன்னது என்ற கேள்வி எளிதில் எழுந்துவிடும். இதையெல்லாம் சொல்வதை வைத்து தீர்மானிக்க முடியாது; செய்வதை வைத்துத்தான் தீர்மானிக்க முடியும். சொல்வதை வைத்துத் தீர்மானித்தால் இந்தியாவில் எல்லோரும் சோசலிஸ்டுகள்தாம். தோழர்.வாஜ்பாய் காந்திய சோசலிஸ்டு, தோழர்.மன்மோகன் சிங்- தோழர். ப. சிதம்பரம்&கோ. மார்க்கெட் சோசலிஸ்டுகள், தோழர். ஜி.கே.வாசன், தோழர்.மணிசங்கர் அய்யர் நேருவிய சோச லிஸ்டுகள், தோழர்.அமர்சிங்-லோஹியா சோசலிஸ்ட், தோழர்.ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் சந்தர்ப்பவாத சோச லிஸ்ட், தோழர். மு.கருணாநிதி குடும்ப சோசலிஸ்ட். இன்னும் தைலாபுர சோசலிஸ்டுகள், தலித்திய பின் நவீனத்துவ சோசலிஸ்டுகள் என எங்கெங்கு காணினும் சோசலிஸ்டுகள்தாம். நடைமுறையில் யார் எதில் முன்னணி வகிக்கிறார்கள் என்பதுதான் கேள்வி.
சாதிய ஒடுக்குமுறைக்கு சோசலிசம் இல்லாது முழுமையான தீர்வு இல்லை. உண்மைதான். சீன குணாம்சங்களுடன் கூடிய சோசலிசம் என்று சீனக் கட்சி சொல்வதுபோல இந்திய குணாம்சங்களுடன் கூடிய சோசலிசம்தான் இந்த ஒடுக்குமுறைக்கு முடிவு கட்ட முடியும். அது சாதிய ஒடுக்குமுறைக்கு மட்டுமான தீர்வா? இல்லை. இதுதான் சகல ஒடுக்குமுறைகளுக்கும் உண்டான தீர்வு. அல்லது தீர்வுகளுக்கான முதற்படி. வர்க்க ஒடுக்குமுறை, ஏற்றத் தாழ்வான பொருளாதார வளர்ச்சி, தேசங்களுக்கிடையேயான சமனின்மை, தேசங்களின் பொருளாதார அடிமைத் தனம், கல்வியின்மை, வேலையின்மை, பசி, பஞ்சம், பட்டினி, நோய், பெண்ணடிமைத்தனம், விபச்சாரம், குழந்தை உழைப்பு எல்லாவற்றுக்கும் சோசலிசம் அல்லாது தீர்வு இல்லை. உண்மை. மானுட விடுதலையின் முதற்படி சோசலிசம். கூலி உயர்வு, பஞ்சப்படி, போனஸ் இவற்றால் எல்லாம் பிரச்சினை தீர்ந்துவிடுமா? 33% ஒதுக்கீடு கிடைத்ததும் பெண்விடுதலை வந்துவிடுமா? இல்லை. ஆனாலும் கூலிஉயர்வுக்கும் பஞ்சப்படிக்கும் போனசுக்கும் போராடத்தான் வேண்டும். ஒற்றுமையைக் கட்ட வேண்டும். ஏனென்றால் இவையெல்லாம்தான் புரட்சியின் மூலக்கூற்று நிகழ்வுகள் (Molecular process of revolution). இவற்றின் மூலம்தான் சோசலிசத்தின் இன்றியமையாமை புரிந்து கொள்ளப்படும். சோசலிசத்திற்கான போராட்டத்தை எப்படி நடத்துவது என்பது தெரிந்து கொள்ளப்படும்.
அதுமட்டுமல்ல சோசலிசம் கட்டப்படும்வரை எல்லாப் பிரச்சினைகளையும் ஒத்திப் போடுவது என்பது சாத்தியமுமல்ல; தேவையுமல்ல. எல்லாப் பிரச்சினைகளுக்கும் மூல வேர் வர்க்கப் பிரிவினையாக இருக்கலாம். ஆனால் முன்னுக்கு வரும் பிரச்சினைகள் பொருளாதார வடிவம் கொண்டுதான் வரும் என்பதற்கு உத்திரவாதமில்லை. பிரச்சினைகள் நாம் எதிர்பார்த்த-நாம் விரும்பும் வரிசை யில்தான் வரும் என்பதற்கும் உத்திரவாதமில்லை. வருகின்ற பிரச்சினையைச் சீர்தூக்கிப் பார்த்து நியாயம் எதுவோ அதைச் செய்யவேண்டும். இது போலந்தின் தேசிய இனப் பிரச்சினை முன்னுக்கு வந்தபோது லெனின் கூறியதுதான். தேசிய இனப் பிரச்சினையை எழுப்புவது தொழிலாளர் வர்க்க ஒற்றுமையைப் பாதிக்கும் என ஒருசாரார் கூறியபோது, அதனை மறுத்து லெனின் கூறியது. ஆளும் வர்க்கங்கள் பாட்டாளி வர்க்கத்தோடு எந்த சமரசமும் செய்து கொள்ளாமலா இருக்கின்றன. எட்டு மணி நேர வேலை, சங்கம் வைப்பதற்கான உரிமை, கூட்டு பேரம் என எத்தனையோ சமரசங்களுக்கு ஆளும் வர்க்கங்கள் தள்ளப்பட்டுள்ளன. வைக்கமும், கீழத்தஞ்சையும், இட ஒதுக்கீடும் இவ்வகையைச் சேர்ந்தவையே.
பொருளாதாரம், சமூகம், அரசியல், கலை, இலக்கியம், பண்பாடு மதம், தத்துவம் என பல்வேறு முனைகளிலும் முரண்பாடுகளும் மோதல்களும் வெவ்வேறு வடிவுகளில் நடந்து கொண்டேதான் உள்ளன. இவற்றைத் திறமையாய்த் தன்வயமாக்கி, ஒருங்கிணைக்கும் போதுதான் ஒரு இயக்கம் புரட்சிகர வெகுஜன இயக்கமாக உருவெடுக்க முடியும். தமிழ் மொழிக்கு உரிய இடம், தமிழன் என்ற தேசிய இனத்தின் அடையாளத்திற்கு அங்கீகாரம், பிற்படுத்தப்பட்ட, தலித் மக்களுக்கு கல்வி, வேலையில் உரிய பங்கும் இடஒதுக்கீடும் என்பவை ஜன நாயகப்பூர்வமான கோரிக்கைகள். இந்த வெகுமக்கள் கோரிக்கைகளைக் கையிலெடுத்தமையால் தான் திராவிட இயக்கங்கள் இன்றுவரை பலவகையான சீரழிவுகளுக்கு பின்னர்கூட தமிழகத்தில் செல்வாக்குடன் இருக்கின்றன. அவர்களுக்கு பிராந்திய குட்டி பூர்ஷ்வாக்களின் ஆதரவு இருந்தது என்பது உண்மைதான்.
இந்திய பெருமுதலாளித்துவத்தின் கட்சியான காங்கிரசை, குட்டி பூர்ஷ்வாக்களின் ஆதரவால் மட்டும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தள்ளி நிறுத்த முடியும் என்று கூறுபவர்கள் சாதியை மட்டுமல்ல வர்க்கங்களையும் புரிந்து கொள்ளவில்லை என்பதுதான் பொருள். நாங்களும் தானே இவற்றையெல்லாம் ஆதரித்தோம் எனக் கூறுவதில் அர்த்தமில்லை. ரஜினி, கமல் படங்களில் மற்றும் பலர் நடிப்பது போலத்தான் அந்தப் பங்கு. முன்கை எடுக்கவில்லை என்பதுதான் வரலாறு. இந்த அம்சங்களில் இடதுசாரிகள் முன்கையெடுக்க வேண்டும். எடுத்தால் என்ன விளைவு இருக்கும் என்பதை உத்தபுரம் காட்டுகின்றது. தலித் கட்சிகள் மனம் கோணியது ஏன்? மற்ற கட்சிகள் மௌனம் சாதித்தது ஏன்? ஏனென்றால் இடதுசாரிகளின் தடுக்க முடியாத வளர்ச்சியின் வழி இதில் உள்ளது. சம்பள உயர்வுக்கும், போனசுக்கும் அலுவலகத்தின் கூட்டுறவு பண்டக சாலைக்கும் இடதுசாரிகள், மற்றவற்றுக்கு பிற இடம் என்னும் நிலை மாறுவதற்கு வழி இதில் உள்ளது. ஆண்டாண்டு காலமாக ஒரு அழுத்தக் குழு (Pressure - Ginger group) என்பதைத் தாண்டி தமிழக மக்களின் இந்திய மக்களின் அரசியல் சமூகப் போக்கைத் தீர்மானிக்கும் சக்தியாக மாறும் வழி இதிலுள்ளது.
இந்த பட்டியல்களும் Dr.சந்தோஷ் கோயல் கட்டுரை ஒன்றி லிருந்து எடுக்கப்பட்டதுதான். இது 1985 ஆம் ஆண்டு நில வரம். இல்லையில்லை இப்போதெல்லாம் காலம் மாறிவிட்டது என்பவர்கள் மாற்றுப் புள்ளி விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். எப்போது பார்த்தாலும் ஒரு பக்கத்தில் புள்ளிவிவரங்களைத் திரட்ட அனுமதிப்பதில்லை, மறுபுறத்தில் புள்ளிவிவரங்களில் நொள்ளை நொட்டை காரணம்காட்டி இட ஒதுக்கீடு போன்றவற்றை மறுப்பதே ஆதிக்க சாதிகளின் வாடிக்கையாயுள்ளது. சந்தோஷ் கோயல் மற்றுமொரு குண்டையும் போடுகிறார். சூத்திரர் பங்கு வெறும் 2% என்பது ஒருபுறமிருக்க, இவர்களில் பெரும்பாலோர் ஆந்திர மாநில சூத்திரர்கள்; அவர்களைத் தவிர்த்துப் பார்த்தால் சூத்திரர்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பம் என்கிறார். அதிகாரிகள் மட்டத்தில் இப்படி. அவர்களுக்கு அடுத்த மட்டங்களில் நிலமை எப்படியுள்ளது? இது 1.1.2000 இல் மத்திய அரசுப் பணியில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் இருக்கும் நிலை பற்றி மத்திய பணியாளர் அமைச்சகத்தின் பொதுமக்கள் துயர் துடைப்பு மற்றும் ஓய்வூதியத் துறை ஆண்டு அறிக்கை 2001-2002 தெரிவிக்கிறது. மேலேயுள்ள பட்டியலும் கீழேயுள்ள பட்டியலும் இடம் பெற்றுள்ள அறிக்கை : தெற்காசியாவில் சாதி, இனக்குழு மற்றும் புறக்கணிப்பு : அரவணைப்போடு கூடிய சமூகத்தை கட்டமைப்பதில் துயர் துடைப்பு நடவடிக்கைக ளின் பங்கு. மனித வளர்ச்சி அறிக்கை அலுவலகம், சிறப்புக் கட்டுரைகள் 2004 அறிக்கைக்காக- ஐக்கிய நாடுகள் சபை வளர்சித் திட்டம். (Caste Ethnicity and Exclusion in South Asia : The role of affirmative action policies in building inclusive societies. Human development report office, Occasional Paper for HDR 2004, United Nation Development Programme.)
உயர்கல்வியும் சாதியும்:
சரி, அரசு இயந்திர நிலைதான் இப்படி, இப்போது முன் வந்துள்ள கல்வி குறிப்பாக உயர் கல்வியில் நிலை எப்படி உள்ளது? EPW சூன்- 17, 2006 இதழில் NSSO தரவுகளிலிருந்து பேரா.சதீஷ் தேஷ்பாண்டே காட்டும் சித்திரத்தைப் பாருங்கள். இந்தப் பட்டியல் ஒரு நகர்ப்புற மாதிரி கணக்கெடுப்பின் (Urban Sample Survey) அடிப்படையில் உருவாக்கப்பட்டதுதான். நகர்ப்புறங்களில் ஆதிக்கசாதி மக்கள் தொகை ஒப்பீட்டளவில் அதிகம். மொத்த மக்கட்தொகையில் 10 % தான் அவர்கள். ஆனால் இந்த கணக்கெடுப்பில் அவர்கள் 36.9 % இருப்பதைக் கவனத்தில் கொள்ளவும். நகர்ப்புறங்களிலேயே பிற்படுத்தப்பட்டோர் பட்டதாரிகளாய் இருப்பது 10-15% தான். கிராமப்புறங்களையும் கணக்கில் கொண்டால் மொத்த பட்டதாரிகளில் இவர்கள் 5 அல்லது 6% தான். அதாவது மக்கள் தொகையில் 52% இருக்கும் (மண்டல் கமிசன் கணக்குப்படி) மக்களில் பட்டதாரிகள் 5 அல்லது 6 %தான். இதுகூட கடந்த 80 ஆண்டுகால இட ஒதுக்கீட்டின் பயனாக அதிகரித்துள்ள தென்னக பட்டதாரிகளையும் கணக்கில் கொண்டால்தான். இந்தி பேசும் மக்கட்பகுதியில் நிலை என்னவென்று எளிதில் யூகித்துவிடலாம். நிலை இப்படியிருக்க இவர்களில் ஒரு பகுதியை கிரீமிலேயர் என கூறுவது எப்படி?
ஆளும் வர்க்கங்கள் ஆதிக்கசாதிகள் வேறுவேறல்ல
ஆக இந்தப் புள்ளிவிவரங்கள் காட்டுவதென்ன? இந்தியாவின் பெரு முதலாளித்துவம் என்றாலும், நிலப் பிரபுத்துவம் என்றாலும், பெரு முதலாளித்துவ நிறுவனங்களின் நிர்வாகம் என்றாலும் அரசு இயந்திரம் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் நிர்வாகம் என்றாலும் அவற்றில் உள்ள பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சாதியினர் கைகளில் ஆறுவிரல் ஏழுவிரல் கொண்டோர் போல விதிவிலக்குகள் தாம். அது கிட்டத்தட்ட முழுமையாக பார்ப்பன, பனியா, தாகூர் சாதிகளால் ஆனதே. இவர்களது வரிசையில் மாறுதல் உண்டே தவிர தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரான பெரும்பான்மை என்பது இந்த வரிசைக்கு புறத்தேதான். தேவர் காலடி மண்ணே என்றோ கண்ணு பட போகுதய்யா சின்ன கவுண்டரே என்றோ இளையராஜா இசையில் பாட்டைக் கேட்டு புளகாங்கிதம் அடையலாம் அல்லது வடிவேலு போல ஏய்ய்.. நாங்க யாரு தெரியுமுல்ல சிங்கம்டா என நிலை தெரியாது அபத்தமாக மமதை கொள்ளலாம். அவர்கள் தாமாக தம்மைக் குறித்து ஏதோ நினைத்துக் கொண்டு தாழ்த்தப்பட்ட மக்கள் மீது வன்கொடுமைகளை கட்ட விழ்த்துவிட்டால் அதனை எப்படி எதிர்கொள்ள வேண்டுமோ அப்படித்தான் எதிர் கொள்ளமுடியும்.
அதிருக்கட்டும் சாதிரீதியாக அவர்களது நிலை இதுதான் என்பதை அவர்களுக்கு எடுத்துக் கூறி அவர்கள் சாதிரீதியாகக் கொண்டுள்ள மாயை அகல எடுத்த முயற்சிகள் என்ன என்பதை அக்கறையுள்ள அனைவருமே சிந்திக்க வேண்டும். தந்தைப் பெரியார் அந்த வேலையைச் (வேலையையும்..) செய்தார். இவர்களுக்கு கொம்பு சீவி விட்டு சாதிய மேலாதிக்க உணர்வை வளர்த்தவர்களோடு கடைசிவரையில் அவர் முரண்பட்டு மோதினார். இன்றய தலைவர்கள் குறைந்தபட்சம் இந்த சாதிய மேலாதிக்க உணர்வின் குவிமையமாக விளங்குபவரின் சமாதிக்குச் சென்று சாதிய மேலாதிக்க சக்திகளோடும் மதவாதிகளோடும் தோளோடு தோளுரச குருபூஜை செய்யாது இருக்கலாம்.
இந்த புள்ளிவிவரங்களைத் தொடரலாம்; காவல் துறை, நீதி மன்றங்கள், ஊடகங்கள், உயர் கல்வி ஆசிரியர்கள் என எல்லாவற்றிலும் இதுதான் நிலை. இத்தோடு மதம் மற்றும் மதத்தலைமை என்பதையும் கணக்கில் கொண்டால் சித்திரம் முழுமையடையும். அது என்ன ? இந்தியாவின் ஆளும் வர்க்கமும் ஆதிக்க சாதியும் ஒன்றுதான் வேறு வேறு அல்ல. ஒரே கட்டமைப்பின் இருவேறு பக்கவாட்டுத் தோற்றம்தான். ஒன்றுக்கெதிரான போராட்டம் தவிர்க்கவொண்ணாத வகையில் மற்றதற்கும் எதிரான போராட்டம்தான். உயர்சாதியைச் சேர்ந்தவர்களும் இந்தப் போராட்டத்தில் வருகிறார்களே, அவர்களுக்கு என்ன பதில்? அவர்கள் புரிந்துகொள்வார்கள். பாட்டாளி வர்க்க விடுதலைக்கு மார்க்சும் ஏங்கல்சும் லெனினும் போராடியது அவர்கள் பால் கொண்ட அனுதாபத்தால் அல்ல. பாட்டாளி வர்க்க விடுதலையில்தான் சகல பிற வர்க்கங்களின் விடுதலையும் அடங்கியுள்ளது என்பதால்தான். இதனைப் புரிந்து கொண்டு நம்மோடு இருந்து பணிபுரியும் பிற வர்க்கத்து தோழர்கள் இல்லையா? அதேபோல எல்லா சாதிகளையும் சேர்ந்த எல்லா மக்களின் விடுதலையும் சாதி அடுக்கின் அடி மட்டத்தில் உள்ள தலித்களின் விடுதலையில்தான் உள்ளது என்பதை அவர்களில் பெரும் பகுதி புரிந்து கொள்வார்கள். பிற்படுத்தப்பட்ட மக்கள் பகுதியிலும் பெரும்பகுதி புரிந்து கொள்வார்கள். புரியச் செய்யவேண்டியது பெரும் பணி தான்.
ஆனால் ஒரு சிறுபகுதி புரிந்து கொள்ளவில்லை என்றால் கவலைப்பட வேண்டியதில்லை. இவர்களை உத்தேசித்து சொல்ல வேண்டியதைச் சொல்லாதுமென்று விழுங்கினால் பெரும் பகுதி தலித், பிற்படுத்தப்பட்ட மக்களின் நம்பிக்கையைப் பெறுவது இயலாது. எல்லா சாதியிலும் எல்லா வர்க்கத்தினரும் இருக்கின்றனர் எல்லா வர்க்கத்திலும் எல்லா சாதியினரும் இருக்கின்றனர் என்ற எதார்த்தத்திற்குப் புறம்பான மாயைதனைக் கைவிடாமல் இது சாத்தியமல்ல. இதனைக் கைவிடாமல் நேருவிற்கு குதிரை மாமிசத்தைப் புகட்ட முனைந்தது போன்ற முயற்சி வெற்றி பெறப்போவதில்லை. அப்படியென்றால் தலித் ஒற்றுமை அல்லது தலித்-ஓபிசி ஒற்றுமையைக் கட்டி அதன் மூலம் கதி மோட்சம் பெற்றிடலாம் என்று எடுத்துக் கொள்ளலாமா? பிற்படுத்தப்பட்டோரும் தலித்துக்களும் ஒற்றுமைப்பட வேண்டும் என்பதில் ஐயமில்லை. ஒற்றுமை இல்லாது எவர் பிரச்சினைக்கும் தீர்வில்லை. இவ்விருவரது பிரச்சினைகளையும் நேர்மையாகக் கையாளும் ஒரு அமைப்பால்தான் இவர்களை ஒற்றுமைப் படுத்த இயலும். இவர்களது பிரத்யேகப் பிரச்சினைகளை நேர்மையோடு கையாள்வது என்பதில் வர்க்கரீதியாகவும் சாதிரீதியாகவும் ஆளும் தரப்பாக உள்ள சிறுபகுதியினை சகல முனைகளிலும் எதிர்த்து நிற்பது என்பது முதல் நிபந் தனை. இது ஒரு கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டுமே சாத்தியம். உலகம் இந்தியாவைவிடப் பெரியது. இந்தியாவின் பிரச்சினை சாதி மட்டுமல்ல. ஏகாதிபத்தியத்தில் ஆரம்பித்து, அணு ஒப்பந்தம், உலகமயம் முதல் ஹொகேனக்கல், முல்லைப் பெரியார் வரை எத்தனையோ பிரச்சினைகள் உள்ளன. சாதி மிகப் பெரிய பிரச்சினை என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. சாதியும் வர்க்கமும் இரு வேறு பிரச்சினைகள் எனக் காண்பதில்தான் தவறு உள்ளது.
சோசலிசமும் சாதியும்
வர்க்கப் பிரிவினை ஒழிக்கப்படும்வரை சாதிய ஏற்றத் தாழ்வுகளை ஒழிக்க முடியாது என்பது உண்மையே. வர்க்கப் பிரிவினை ஒழிக்கப்படுவது எப்போது சாத்தியமாகும்? அது ஒரு முதிர்ச்சியடைந்த சோசலிச சமூகத்தில் தான் சாத்தியம். அது என்று சாத்தியமாகும்? அன்று லெனின் சொல்லியதுபோல அல்லது சமீபத்தில் டெங் சியோ பிங் சொல்லியதுபோல பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான அரசு அமைந்து பல நூறு ஆண்டுகள் இடைவிடாத முயற்சியாக சோசலிசக் கட்டுமானம் சரியாக-வலதுசாரி இடதுசாரி பிறழ்வுகள் இல்லாது - நடை பெற்றால்தான் சாத்தியம். சீனா இப்போது சோசலிச கட்டுமானத்தின் மிகவும் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் நாடு என்பதுதான் அவர்களது துணிபு. அதுதான் சரியான நிர்ணயிப்பு என்று தெரிகின்றது. அப்படியெனில் இன்னுமொரு 3 நூற்றாண்டுகளுக்கு கோயில் கருவறை நுழைவு, தமிழில் அர்ச்சனை, ரெட்டைத் தம்ளர், உத்தபுரம் சுவர், சுடுகாட்டுப் பாதை எல்லாவற்றையும் ஒத்திவைத்து மறந்துவிடலாமா?
அப்படி யார் சொன்னது என்ற கேள்வி எளிதில் எழுந்துவிடும். இதையெல்லாம் சொல்வதை வைத்து தீர்மானிக்க முடியாது; செய்வதை வைத்துத்தான் தீர்மானிக்க முடியும். சொல்வதை வைத்துத் தீர்மானித்தால் இந்தியாவில் எல்லோரும் சோசலிஸ்டுகள்தாம். தோழர்.வாஜ்பாய் காந்திய சோசலிஸ்டு, தோழர்.மன்மோகன் சிங்- தோழர். ப. சிதம்பரம்&கோ. மார்க்கெட் சோசலிஸ்டுகள், தோழர். ஜி.கே.வாசன், தோழர்.மணிசங்கர் அய்யர் நேருவிய சோச லிஸ்டுகள், தோழர்.அமர்சிங்-லோஹியா சோசலிஸ்ட், தோழர்.ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் சந்தர்ப்பவாத சோச லிஸ்ட், தோழர். மு.கருணாநிதி குடும்ப சோசலிஸ்ட். இன்னும் தைலாபுர சோசலிஸ்டுகள், தலித்திய பின் நவீனத்துவ சோசலிஸ்டுகள் என எங்கெங்கு காணினும் சோசலிஸ்டுகள்தாம். நடைமுறையில் யார் எதில் முன்னணி வகிக்கிறார்கள் என்பதுதான் கேள்வி.
சாதிய ஒடுக்குமுறைக்கு சோசலிசம் இல்லாது முழுமையான தீர்வு இல்லை. உண்மைதான். சீன குணாம்சங்களுடன் கூடிய சோசலிசம் என்று சீனக் கட்சி சொல்வதுபோல இந்திய குணாம்சங்களுடன் கூடிய சோசலிசம்தான் இந்த ஒடுக்குமுறைக்கு முடிவு கட்ட முடியும். அது சாதிய ஒடுக்குமுறைக்கு மட்டுமான தீர்வா? இல்லை. இதுதான் சகல ஒடுக்குமுறைகளுக்கும் உண்டான தீர்வு. அல்லது தீர்வுகளுக்கான முதற்படி. வர்க்க ஒடுக்குமுறை, ஏற்றத் தாழ்வான பொருளாதார வளர்ச்சி, தேசங்களுக்கிடையேயான சமனின்மை, தேசங்களின் பொருளாதார அடிமைத் தனம், கல்வியின்மை, வேலையின்மை, பசி, பஞ்சம், பட்டினி, நோய், பெண்ணடிமைத்தனம், விபச்சாரம், குழந்தை உழைப்பு எல்லாவற்றுக்கும் சோசலிசம் அல்லாது தீர்வு இல்லை. உண்மை. மானுட விடுதலையின் முதற்படி சோசலிசம். கூலி உயர்வு, பஞ்சப்படி, போனஸ் இவற்றால் எல்லாம் பிரச்சினை தீர்ந்துவிடுமா? 33% ஒதுக்கீடு கிடைத்ததும் பெண்விடுதலை வந்துவிடுமா? இல்லை. ஆனாலும் கூலிஉயர்வுக்கும் பஞ்சப்படிக்கும் போனசுக்கும் போராடத்தான் வேண்டும். ஒற்றுமையைக் கட்ட வேண்டும். ஏனென்றால் இவையெல்லாம்தான் புரட்சியின் மூலக்கூற்று நிகழ்வுகள் (Molecular process of revolution). இவற்றின் மூலம்தான் சோசலிசத்தின் இன்றியமையாமை புரிந்து கொள்ளப்படும். சோசலிசத்திற்கான போராட்டத்தை எப்படி நடத்துவது என்பது தெரிந்து கொள்ளப்படும்.
அதுமட்டுமல்ல சோசலிசம் கட்டப்படும்வரை எல்லாப் பிரச்சினைகளையும் ஒத்திப் போடுவது என்பது சாத்தியமுமல்ல; தேவையுமல்ல. எல்லாப் பிரச்சினைகளுக்கும் மூல வேர் வர்க்கப் பிரிவினையாக இருக்கலாம். ஆனால் முன்னுக்கு வரும் பிரச்சினைகள் பொருளாதார வடிவம் கொண்டுதான் வரும் என்பதற்கு உத்திரவாதமில்லை. பிரச்சினைகள் நாம் எதிர்பார்த்த-நாம் விரும்பும் வரிசை யில்தான் வரும் என்பதற்கும் உத்திரவாதமில்லை. வருகின்ற பிரச்சினையைச் சீர்தூக்கிப் பார்த்து நியாயம் எதுவோ அதைச் செய்யவேண்டும். இது போலந்தின் தேசிய இனப் பிரச்சினை முன்னுக்கு வந்தபோது லெனின் கூறியதுதான். தேசிய இனப் பிரச்சினையை எழுப்புவது தொழிலாளர் வர்க்க ஒற்றுமையைப் பாதிக்கும் என ஒருசாரார் கூறியபோது, அதனை மறுத்து லெனின் கூறியது. ஆளும் வர்க்கங்கள் பாட்டாளி வர்க்கத்தோடு எந்த சமரசமும் செய்து கொள்ளாமலா இருக்கின்றன. எட்டு மணி நேர வேலை, சங்கம் வைப்பதற்கான உரிமை, கூட்டு பேரம் என எத்தனையோ சமரசங்களுக்கு ஆளும் வர்க்கங்கள் தள்ளப்பட்டுள்ளன. வைக்கமும், கீழத்தஞ்சையும், இட ஒதுக்கீடும் இவ்வகையைச் சேர்ந்தவையே.
பொருளாதாரம், சமூகம், அரசியல், கலை, இலக்கியம், பண்பாடு மதம், தத்துவம் என பல்வேறு முனைகளிலும் முரண்பாடுகளும் மோதல்களும் வெவ்வேறு வடிவுகளில் நடந்து கொண்டேதான் உள்ளன. இவற்றைத் திறமையாய்த் தன்வயமாக்கி, ஒருங்கிணைக்கும் போதுதான் ஒரு இயக்கம் புரட்சிகர வெகுஜன இயக்கமாக உருவெடுக்க முடியும். தமிழ் மொழிக்கு உரிய இடம், தமிழன் என்ற தேசிய இனத்தின் அடையாளத்திற்கு அங்கீகாரம், பிற்படுத்தப்பட்ட, தலித் மக்களுக்கு கல்வி, வேலையில் உரிய பங்கும் இடஒதுக்கீடும் என்பவை ஜன நாயகப்பூர்வமான கோரிக்கைகள். இந்த வெகுமக்கள் கோரிக்கைகளைக் கையிலெடுத்தமையால் தான் திராவிட இயக்கங்கள் இன்றுவரை பலவகையான சீரழிவுகளுக்கு பின்னர்கூட தமிழகத்தில் செல்வாக்குடன் இருக்கின்றன. அவர்களுக்கு பிராந்திய குட்டி பூர்ஷ்வாக்களின் ஆதரவு இருந்தது என்பது உண்மைதான்.
இந்திய பெருமுதலாளித்துவத்தின் கட்சியான காங்கிரசை, குட்டி பூர்ஷ்வாக்களின் ஆதரவால் மட்டும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தள்ளி நிறுத்த முடியும் என்று கூறுபவர்கள் சாதியை மட்டுமல்ல வர்க்கங்களையும் புரிந்து கொள்ளவில்லை என்பதுதான் பொருள். நாங்களும் தானே இவற்றையெல்லாம் ஆதரித்தோம் எனக் கூறுவதில் அர்த்தமில்லை. ரஜினி, கமல் படங்களில் மற்றும் பலர் நடிப்பது போலத்தான் அந்தப் பங்கு. முன்கை எடுக்கவில்லை என்பதுதான் வரலாறு. இந்த அம்சங்களில் இடதுசாரிகள் முன்கையெடுக்க வேண்டும். எடுத்தால் என்ன விளைவு இருக்கும் என்பதை உத்தபுரம் காட்டுகின்றது. தலித் கட்சிகள் மனம் கோணியது ஏன்? மற்ற கட்சிகள் மௌனம் சாதித்தது ஏன்? ஏனென்றால் இடதுசாரிகளின் தடுக்க முடியாத வளர்ச்சியின் வழி இதில் உள்ளது. சம்பள உயர்வுக்கும், போனசுக்கும் அலுவலகத்தின் கூட்டுறவு பண்டக சாலைக்கும் இடதுசாரிகள், மற்றவற்றுக்கு பிற இடம் என்னும் நிலை மாறுவதற்கு வழி இதில் உள்ளது. ஆண்டாண்டு காலமாக ஒரு அழுத்தக் குழு (Pressure - Ginger group) என்பதைத் தாண்டி தமிழக மக்களின் இந்திய மக்களின் அரசியல் சமூகப் போக்கைத் தீர்மானிக்கும் சக்தியாக மாறும் வழி இதிலுள்ளது.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|