இலக்கம் 4, பிச்சிப்பிள்ளைத் தெருவிலிருந்து...
பிரளயனுடன் ஒரு நேர்காணல்
IV
ஆதவன்: நாடகத்தில் ஒருவனுடைய பர்சனாலிடி டெவலப்பாகிறது பற்றி பேசினோம். குழந்தை பருவத்தில் ஓவியத்தில் ஆர்வம் கொண்டு இயங்கியவர்கள் பின்னர் ஓவியத்திலிருந்து விலகினாலும் கூட சில விஷயங்களில் முடிவெடுப்பது, தீர்மானிப்பது, தனக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை சரியாக செய்து முடிப்பது போன்ற சில விஷயங்களில் மற்றவர்களை விடவும் வேறுபட்டவர்களாக வளர்கிறார்கள், அதனால் ஓவியம் என்பது ஒருவனுடைய தனிப்பட்ட ஆளுமையை வளர்ப்பதில் முக்கியமான பங்கு வகிக்கிறது என்கிறார் ஓவியர் மருது.பொதுவாக எல்லா கலை இலக்கிய வடிவங்களுக்கும் இந்த பண்பு இருக்கிறதா?
பிரளயன்- ஆமாம், அது எல்லா வடிவங்களிலும் இருக்கு. ஒவ்வொரு வடிவமும் ஒவ்வொருவிதமான பண்புகளை உருவாக்கும். இப்ப எழுத்து தனித்த செயல்பாடாக இருக்கிறபோது ஒருவனுடைய ஆளுமை, தன்முனைப்பு(ணிரீஷீ) அதிகமாகலாம். தன்முனைப்பு ஒரு இல்யூஷன்தானே? இன்னைக்கு இந்த சமூகத்தில் எல்லாக் கலைகளில் செயல்படுவோருக்கும் அந்த தன்முனைப்பு தேவைதான். ஆனால் நாடகத்தில்தான், இன்னொருவனின் தன்முனைப்புடன் உரசிப்பார்க்க, ஒத்துப்போக வேண்டிய சூழல் இருக்கு. இப்ப குழுவா இயங்கவேண்டிய சூழ்நிலை. ஒரு பொதுநோக்கம் சார்ந்து எந்தவிதமான நிதியாதாரம் இல்லாம மக்கள் மத்தியில் பெறுகிற காசோடு இயங்குகிறபோது, அதற்கு வேறு விதமான பண்புகள் நிச்சயமா வந்துதானே ஆகணும்.
முக்கியமா கூட்டுமுயற்சி என்பது தனிநபர் முக்கியத்துவத்தை மூடி மறைக்கிற விஷயம் அல்ல. எல்லோருமே அதை தவறாகப் புரிந்து கொண்டார்கள். நாங்க கூட்டு முயற்சியில் நாடகம் பண்றோம்னா... பருப்பு, அரிசி, மொளகான்னு ஆளுக்கொன்னா எடுத்துவந்து பொங்கிப்போட்டு சாப்பிடறது இல்ல. அதில் நாடக ஆசிரியன் பங்கு இல்லையென்று சொல்ல வரவில்லை - ‘‘நாடக ஆசிரியன் இறந்துவிட்டான்’’ என்கிற பின்நவீனத்துவ கோஷத்தை ஆதரிக்கிறவர்கள் அல்ல நாங்கள். - நாடக ஆசிரியன் இருக்கிறான், இயக்குநன் இருக்கிறான், அந்த நாடக ஆசிரியனுடைய பங்கு ஒரு வீதிநாடகம் தயாரிக்கிறபோது வேறுவிதமாக இருக்கிறது. உதாரணத்துக்கு ஷேக்ஸ்பியர் நாடகத்திலிருந்து ஒரு பிரதி எடுத்து நிகழ்வாக மாற்றுகிறோம். இப்ப ஷேக்ஸ்பியர் இல்லே, ஆனா அந்த பிரதிக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுப்போம், அந்த சொல்லுக்கு, எழுதப்பட்ட பனுவலுக்கு, அந்த ஆளுமைக்கு இருக்கிற செல்வாக்கையும், உலக அளவில் இருக்கும் மதிப்பையும் வைத்து முக்கியத்துவம் கொடுப்போமில்லையா? ஆனால் இன்னைக்கு சமகால நாடகாசிரியன் ஒரு நாடகம் எழுதுகிறபோது நடிகரிடத்தில் நிறைய எதிர்பார்க்கிறான்.
தான் எழுதுகிற ஒவ்வொரு எழுத்தையும் நடிகன் நடித்தாக வேண்டும் என்கிறான். ஆனால் நடிகர்களின் எதிர்பார்ப்பை புரிந்துகொள்வதில்லை. பள்ளிக்கூட நாடகத்துல நீங்க பார்த்திருப்பீங்க, எழுதிக்கொடுத்துட்டான்னா அதுதான் உன்னதம். அதுல கேள்வி கேட்க உரிமையே கெடையாது. ‘கிண்டனுங்க’ மாதிரி கேள்வி கேக்கிறீங்க, எழுதிக்கொடுத்திட்டா நடிக்க வேண்டியதுதானே? உனக்கு என்ன தெரியும் அதபடிச்சியா இதபடிச்சியான்னு கேட்பான். கேட்டா நடிகன் மெரண்டுதானே போவான். இப்படியான சூழல்ல அந்த நடிகன் என்னத்த உருவாக்க, ‘கிரியேட்’ பண்ண முடியும்? இது ஒரு அடிப்படையான தார்மீகக் கேள்வி இல்லையா? இதுக்கு ஒரு இடம் கொடுக்கணுமா, இல்லையா? சரி, கேள்வி கேட்டது தப்புன்னு சொன்னா அவனை கன்வீன்ஸ் பண்ணவேண்டியது நாடக ஆசிரியனுக்கு கட்டாயம் இல்லையா? கன்வின்ஸ் பண்ணுகிற தர்க்கம் அதுல இருக்கனும், அதற்கான தர்க்கத்தை அந்த பிரதியில உருவாக்கனும்.
சிவகுமார்: கேள்விகளை ஏற்றுக்கணுமா?
பிரளயன்: ஏற்றுக்கொள்வதின்னு இல்ல. அந்த கேள்விக்கு ஸ்கிரிப்ட்ல பதில் இருக்கணும். இல்லேன்னா பதில் கேள்வி கேக்கிற உங்ககிட்ட இருக்கணும். நாடக ஆசிரியன் பார்க்காம விட்டிருக்கலாம், அவனை பார்க்க வைக்கணும். ஒரு நாடக ஆசிரியன், இயக்குனர், எல்லோரும் குழுவின் கருத்துக்கு ஒப்புக் கொடுக்கணும். அதுதான் கூட்டுமுயற்சி.
ரவிவர்மா- அறிவொளியில் நீங்கள் மற்றவர்களுக்கு சொல்லித்தந்ததைப் பார்த்ததில்- சென்னை கலைக்குழு இயக்குனரானப்புறம்- இப்ப உங்க குழுவோட நடிகர்கள் மற்றவங்களுக்கு பயிற்சி தரும்போது அவங்களோட பயிற்றுவிப்பு முறையிலிருந்து உங்களோட Ideology, system of training / approach, methodology ரொம்ப தெளிவா உருக்கொண்டிருப்பதா எனக்குப் படுது. இவையெல்லாம் எந்தெந்த காலகட்டத்தில் உங்களுக்கு வாய்த்தது?
நான் ஒரு தொழில்முறை நாடக இயக்குனராக இருக்கும்பட்சத்தில் என்னை ஒரு தொழில்முறை நாடகக்குழுவுக்கு நாடகம் இயக்குவதற்காக கூட்டிப்போறாங்கன்னு வச்சிக்கிங்க. அங்க பெரிய ஆளுங்க,பெரிய நடிகர்களெல்லாம் இருக்காங்க. நான் ஒரு விஷயத்தை முன்மொழியறேன். அதை விளக்குகிறேன்.ஆனா ஒருகட்டத்தில் நாடகத்தை மேலே கொண்டு போகமுடியாமல் திணர்றேன்.அந்த இடத்தில் நான் திக்கித்திணறுவதை வெளிக்காட்டமாட்டேன். சரி இன்னக்கி இதோட ஒத்திகையை முடிச்சுக்கலாம் நாளைக்கு பார்ப்போம்னு வந்துடுவேன். ஆனா வீதிநாடகத்தில் அப்படி செய்யறதில்ல. நான் எங்கே திக்குகிறேன் எங்கே தடுமாறுகிறேன் என்பதை என்னுடைய நடிகர்களுக்கு தெரிவிக்கிறேன். உதவி செய்யுங்கன்னு கூப்பிடுகிறேன். இப்போ ஆதவன் கதை எழுதறார்னா ஒரு இடத்தில் நின்னுபோய்விடுது அடிக்கிறார் திருத்துகிறார் பேப்பரை கசக்கி போட்டுட்டு இன்னொரு பேப்பரில் எழுதறார். சரியாய் வந்தபிறகு பிரதி எடுத்து நம்மிடம் கொடுக்கிறார். எந்த இடத்தில் அடித்தார் எங்கே நிறுத்தினார் என்று எதுவும் நமக்குத் தெரியாது. அந்த பிராசஸ் அவருடைய பர்சனல். ஆனால் ஒரு நாடக ஆசிரியன்-இயக்குனர் அந்த பிராசஸை நடிகர்களோட சேர்ந்து செய்கிறபோது அது தனிநபர் விஷயம் இல்லை. நான் இங்கே திணறிட்டேன்னா அப்படியே அவனுக்குத் தெரியும். உதவுவான். இந்த பண்புகள் எங்களுடைய நாடகத்தயாரிப்பதில் இருக்கு. எல்லா கட்டத்திலயும் இருக்கு. இது புதுசா உருவாக்கிய ஒரு படைப்பாக்க மதிப்பீடுதான். இதை டெமாக்ரடிக் தியேட்டர்னும் சொல்லலாம். இந்தப் பண்பு இந்தப் பண்பாடு ஒரு ‘அரசியல் அரங்கில்’ (political theatre) செயல்படுகிறவனுக்கு மிகவும் அவசியம்.
சம்பு- இயக்குனராக நாடக ஆசிரியனாக உங்களுக்கு ஏற்பட்ட பண்பாட்டு மாற்றங்களை சொன்னீர்கள்... உங்கள் குழுவுக்குள் அது எப்படி இருக்கிறது?
கலைப்பயணம் போகிறபோது இண்டர்பர்சனல் ரிலேஷன்சிப் பற்றி ரொம்ப அழுத்தமாகச் சொல்லுவோம். உயரிய மனித மதிப்பீடுகளை பேணவேண்டும், பின்பற்றனுங்கிற அவசியத்தை பங்கேற்றவர்கள் உணர்ந்தார்கள்... பொதுஇடத்தில் புகைபிடிப்பது, பொதுஇடத்தில் ‘சானிடேசன் கூடாது’, . பிறகு பெண்ணை உயர்த்தி நாடகம் போட்டுட்டு நாமே பெண்களை கிண்டல் செய்பவர்களாக இருக்கக்கூடாது என்று சொல்லிக்கொடுத்ததை கடைப்பிடிக்க வேண்டியிருந்தது. சில மதிப்பீடுகளை மாற்றிக்கொள்ளவும் வேண்டியிருந்தது...
ரவிவர்மா- அறிவொளி கலைப்பயணத்தில் பங்கேற்றவர்களுக்கு தனிப்பட்ட முறையில் தலைமைப்பண்பு உருவானதா சொன்னீங்க... உங்களோட பயிற்சித்திட்டத்தில் அப்படியொரு ஒழுங்கு இருந்ததா?அதாவது ஒரு கலைஞனா இருக்கிற நீ தவறான முன்னுதாரணமா இருந்துடக்கூடாது- உதாரணமா பொது இடத்தில் நாடகம் போடற நீ பொதுயிடத்தில் ஒண்ணுக்கடிக்காதே என்பது எங்களுக்கு கூத்துப்பட்டறையில் ஒரு முக்கியமான அறிவுரையாக இருந்தது. அப்படியான ஒரு learning decipline உங்க பயிற்சியில் இருந்ததா?
பிரளயன்- நீ செய்யற நாடகத்துக்கு நீ உண்மையா இருக்கணும்கிறதுதான் நடிகனுக்கான பயிற்சியில் பிரதானம். அந்த ruling idea வுக்கு நீ விசுவாசமா இருக்கணும். இதுதான் நடிப்புக்கோட்பாட்டில் personal truth. இது ஸ்டானிஸ்லாவ்ஸ்கி சொல்ற personal truth அல்ல. அப்புறம் தனிமனிதர்களுக்கிடையிலான உறவிற்கு (Inter personal Relationship) முக்கியமா அழுத்தம் கொடுக்கிறாம். ஒருத்தரையொருத்தர் சார்ந்து இருக்க வேண்டியிருக்கு. எல்லாருமே சமமானவர்கள். அதுக்காக கூடை செங்கல்லும் பிடாரியல்ல. ஒரு செங்கல்தான் பிடாரி. A இன்னிக்கு இந்த பொறுப்பை செய்யுது. அது இல்லாட்டினா B அதை செய்யும். Aக்கு கேப்டன்ற முறையில் முக்கியத்வம் கொடுக்கிறாம். கேப்டன் அந்த பொறுப்பை நிறைவேற்றும்போது அவருக்கு எல்லோருமே கீழ்ப்படியறாங்க. நிகழ்வு முடிந்த பிறகான விவாதத்தில் கேப்டன் எல்லோருக்கும் கட்டுப்படணும். இப்படியானதுதான் எங்க பயிற்சிமுறை. நீங்க நாடகத்துறையில் டாக்டரேட் பண்ணியிருக்கீங்க. பதினைந்தாண்டுகளுக்கு முன்னாடியும், இப்பவும் எப்படி வேலை செய்யறேன்னு உங்களுக்குத் தெரியும். நான் ரொம்ப அனிச்சையாவோ அல்லது கான்சியசாகவோ இதை அடைஞ்சிருக்கலாம். இதை நீங்க எப்படி பார்க்கறீங்க என்பதுதான் முக்கியம்.
ரவிவர்மா- 1989 ல் ஸ்கூல் ஆப் டிராமாவிலிருந்து நாலு கலைஞர்கள் உங்க அறிவொளி முகாமில் கலந்துக்கிட்டு திரும்பின பிறகு நான் வர்றேன். அப்ப, எல்லா மாணவர்களும் திரும்பின பிறகு ஒருத்தன் மட்டும் அங்கே என்ன பண்றான்னு ஸ்கூல் ஆப் டிராமாவிலிருந்து ஒரு கடிதம் வருது. அறிவொளி பயிற்சி ஒரு வேஸ்ட்... ஸ்கூல் ஆப் டிராமாவுக்கு அது தேவையில்லைங்கிறது தான் செய்தி. நான் அதை நிராகரிக்கிறேன். என்ன பண்ணினாலும் கேம்ப்பை முடிக்காம வரமாட்டேன்னு இங்கேயிருந்து பதில் கொடுக்கறேன். நான் உறுதியா நின்னதைப் பார்த்துட்டு ஏகாம்பரமும் எனக்கு ஆதரவா முகாம்லயே இருக்காரு.
ஸ்கூல் ஆப் டிராமாவுக்கு வந்தது, அவங்க சொல்லிக் கொடுத்த methods வழியா internal marksலயோ எதிலேயோ என்னை முதல் மாணவனா நிரூபிச்சது எல்லாமே அறிவொளி இயக்க முகாம்ல வித்தியாசமான அணுகுமுறையால ரொம்ப இயல்பா zero ஆக்கப்படுது. என்னிடமிருந்த பெரிய ஈகோ உடைஞ்சிப்போச்சு. நாடகக்கலைஞன் என்பதைவிட அவனுக்குள்ளே இருக்கிற மனிதனை நீ யார்னு கேட்கிற மாதிரி இருந்தது. எனக்கு சரியா சொல்லத் தெரியல. நான் கலைஞனா ஒரு மாஸ்க் போட்டு ஏமாத்தமுடியும். மேடையிலயோ வாழ்க்கையிலயோ என் சோகத்தை எதையோ மறைச்சு மனிதனா வாழமுடியும். ஆனா அதையெல்லாம் விலக்கி எறிஞ்சிட்டு ரவிவர்மா நீ உன்னைக் காட்டுங்கிற மாதிரி... ஏதோ... என்னுடைய நெகடிவ்வை தொடற மாதிரி இருக்கு. எனக்கு உடம்பெல்லாம் உதறுது. அந்த முகாம்ல என்னால ஒரு சின்ன மூவ்மெண்ட் கூட பண்ணமுடியல. அப்படியே நிக்கிறேன்.
எல்லா விசயங்களும் புதுமையா ஆச்சர்யமா இருக்கு. 'ஒரு கேள்வி' நாடகத்தில் மட்டும் ஒரேயொரு மூவ்மெண்ட்- அதையும் தப்பா செய்யறேன். அதை இப்படி இந்த ரிதம்ல வந்து நில்லுன்னு பிரளயன் கோடிட்டு காட்டுறார். நாடகத்துல எம்.ஏ படிக்கற என்னால- அப்படித்தானே இருக்கும் ஈகோ- ஏன் இந்த சின்ன மூவ்மெண்டைக் கூட சாதிக்க முடியலன்னு அந்த கணத்துல தோனுது. எல்லாத்தையும் நிறுத்திட்டு அப்சர்வ் பண்ண ஆரம்பிக்கிறேன்... Self discipline, work discipline, learning discipline..... மனிதனை மனிதனா பார்க்கிற Basic sensiblity உன்கிட்ட இருக்காங்கிற பெரிய கேள்வியையெல்லாம் உள்வாங்கிக்கிறேன். அதோட கேம்ப் முடியுது. நான் போயிடறேன். அதுக்கப்புறம், மேடைநாடகத்துக்கும் வீதிநாடகத்துக்கும் இடையே கற்பிக்கப்படற வித்தியாசத்தை கவனிக்கிறேன். மேடை நாடகம்னா மேல்தட்டு, வீதிநாடகம்னா தெருவுல வித்தைக்காட்டும் கழைக்கூத்தாடிகள் என்ற படிநிலை இருக்கு.... அந்த hierarchy எனக்கு மட்டுமில்ல எல்லார்க்கிட்டயும் இருக்கும்னு நினைக்கிறேன்.
நாடகப்பள்ளியில் 12 வருசத்தை அக்டமிக்காக முடித்த பிறகு நடிப்புக்காக வந்த என்னை நல்ல டைரக்டர், செட் டிசைனர், என்றெல்லாம் வாத்தியார்கள் பாராட்டும்போது அவர்கள் குத்திக்காட்டும் விசயம் நீ நடிகனா இருக்க லாயக்கில்ல என்பது. அந்த வார்த்தைதான் என்னை கூத்துப்பட்டறையில் கொண்டு வந்து விட்டது. இத்தனை வருசத்தில் இரண்டு மூன்று நாடகங்கள் பிறகு Thesis க்காக மட்டும்தான் பிரளயனிடம் வந்திருக்கேன். மரியாதை மட்டும் எனக்கு மனசுல இருக்கு. ஆனா அவர் வேலையில் என்ன நடந்தது? எனக்கும் வீதி நாடகத்துக்கமான உறவு என்னவா இருந்தது என்கிற கேள்வி இருக்கு. Thesis Guideக்காக அவரிடம் போகும் போது வீதி நாடகம் நவீன நாடகத்தில் சேர்ந்ததா இல்லையா என்று என்னிடம் கேட்கிறார். அவருடைய Method எல்லாம் என்னுடைய Thesisயில் ஓரளவு பதிவு பண்ணியிருக்கேன். நமது கிராமம் பிராஜக்டுக்கு கூத்துப்பட்டறை பிரதிநிதியா வந்தேன். சென்னைக் கலைக்குழுவும் வந்தது. பிரளயன் நாடகம் போட்டாரு. பார்த்தவுடன் அவருக்கான ஒரு Methodologyயை அடைந்திருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. மேலும் ஒரு வடிவத்தை நாடகத்தின் ஆழத்திற்காக - வீச்சிக்காக உபயோகிக்க முடியுங்கிறதுல பெரிய தெளிவை அடைஞ்சிருக்கார்னு தெரிஞ்சது.
எளிமையான விசயம்தான். எளிமையா அவர் அடைஞ்சிருக்கார். பனிரெண்டு வருஷமாகியும் எனக்கு இன்னும் தெளிவில்லை. குழப்பம் இருக்கு. பிறகு எனக்கு ஒத்து வராதுனுட்டு போயிட்டேன். நீ சில விசயங்களை பார்க்கனும்னு இவர் போன் பண்ணுகிறார். உள்ளே வருகிறேன். என்ன பண்ணுகிறோம் என்பதை மூடி மறைக்காத வெளிப்படை தன்மை கொண்டது அவருடைய Methodology. இந்த விசயத்தை இப்படி செய்யப்போகிறோம்னு Master campயில் மட்டும் முடிச்சிக்கிட்டு வராம எல்லாருக்கும் ஓப்பன்ல விடறாரு. அவங்களுக்கு அதை எதிர்கொள்ளத் தெரியல. எல்லா நடிகர்களுக்கும் அவர் ஒரு சவால்தான். ஒரு காலகட்டத்துல நிப்பாட்டிட்டு திரும்ப வேலைசெய்யும் போது அவங்களுக்கும் பெரிய புரிதல் உருவாகுது.
எனக்கும் சொல்லிக்கொடுத்த மாதிரி இருந்தது. எனக்கு கிடைச்சதே போதும், இதோடு நான் போயிக்கிறேன் என்றேன். பயப்படாதே, நீ இரு என்றார். தைரியம் கொடுத்தார். வேலை செய்தோம். முன்பு பார்க்க முடியாத தெளிவை இப்போதும் அவரிடம் உணரமுடிந்தது. இது நடந்துக்கிட்டு இருக்கும்போது சேரனோட படத்துக்கு போனாம். எது நடந்தாலும் எங்களை Explore பண்றத்துக்கு தயாரா இருக்கனும் என்றிருந்தோம். அங்கே வேலை பார்த்தபோதும் ஒரு தெளிவான பிரளயனை பார்க்க முடிந்தது. Ideology, Training system - அதை எப்படி படிப்படியா அணுகறது என்பதில் உள்ள தெளிவு- சொல்லப்போனா ஒவ்வொரு கலைஞனும் இதற்காகத்தான் கஷ்டப்படுகிறான். இதை அடையறது எந்த நேரத்தில் என்பது அவங்களுக்கு பிரக்ஞைபூர்வமா தெரிஞ்சிருக்கும். இவருடைய நடிகர்களைப் பார்க்கும்பொழுது எல்லோருமே பக்குவம் அடைந்திருப்பது தெரிகிறது.
பிரளயன்- நீங்க பார்க்கிற மாதிரி என்னை யாரும் ஆய்வு ரீதியா அணுகல. சரியான முறையில பார்க்க வேண்டிய தேவைதான். நாடக ஆர்வத்தில்தான் எல்லோரும் வறாங்க. குழுவில் தங்களுக்கு முக்கியத்துவமும் முதன்மையும் தங்களுடைய நேரம் சரியான முறையில் செலவாகுதுங்கிற நம்பிக்கையும் இருந்தால்தான் அவங்க தொடர்ந்து இருப்பாங்க. இந்த கட்டாயத்துலதான் ஆரம்பத்திலிருந்து வேலை செய்தேன். அறிவொளியில் கூட நல்ல வேலையில் இருக்கிறவர்கள் பத்து பதினைந்து நாள் விடுமுறையில் வந்தாங்க. அவங்களோட நேரத்தை முறையாக சரியாக பயன்படுத்தறோம் என்கிற எண்ணத்தை அவர்களுக்கு உருவாக்காமல் அவர்களை நிறுத்தி வைக்கமுடியுமா? அவங்க ஆர்வத்தை தீர்க்க அங்கே வாய்ப்புகள் இருக்கா? இந்த பிரஷர்தான் ஒவ்வொருவரையும் சமமா பார்க்க வைத்தது. அடுத்து அந்த சூழ்நிலையே நாடக இயக்குனர், பிளே ரைட்டர் என்கிற உயர்ந்த ஸ்தானம் எதையும் கொடுக்கல. அப்படி ஒரு நிலையை கேட்டு வாங்க முடியாது.
ஒவ்வொருவரும் உடன்படாமல் எந்த ஒரு வேலையிலும் ஈடுபடமாட்டார்கள். அடுத்த கட்டத்துக்கு கொண்டு போக முடியாது. எனவே எல்லோரையும் உடன்படவைக்கிற நிலையிலிருந்துதான் வேலையை ஆரம்பிக்க வேண்டியிருந்தது. சில விசயங்களில் உடன்பாடு வராமல் உரசல் வந்துடும். கடைசியில் அதன் மீது விவாதிக்க நேரமில்லாம போயிடும். கருத்து மாறுபாட்டை விவாதிக்க நேரமில்லாம அதையெல்லாம் தவிர்க்க ஆரம்பித்தோம். பிறகு Inter Personal Relationship, Theatre Group பற்றியெல்லாம் படிச்சிருக்கோம். நான் முன்மொழிவதை, தியேட்டரிக்கல் பிராபளத்திற்கு நான் சொல்கிற தீர்வை நிராகரிப்பதற்கும் கூட ஒருவருக்கு வாய்ப்பு இருக்கவேண்டும். அவன் மத்தவங்களை கன்வின்ஸ் பண்றான். நான் அதுக்கு உடன்படனும். சில நேரங்களில் அப்படித்தான் நடந்திருக்கு. எல்லாம் முடிந்து இறுதிக்கட்டம் வந்திருச்சுன்னு நினைக்கிறபோது வெளியில் இருந்து, ஒரு சாதாரண அல்லது விஷயம் தெரிந்த மூன்றாவது மனிதர் பார்வையாளரா வர்றப்ப அவங்க கருத்துக்கு - அவங்க சொல்றது நம்மை கன்வின்ஸ் பண்றதா இருந்தா அதுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒத்துக்கனும்.
நண்பர் முகிலோட பூங்கோதை நாடகம். அது இசை நாடக வடிவம். அருமையான மெட்டு. ஆனா அதன் உள்ளடக்கம் ரொம்ப மேலோட்டமா இருந்ததா உணர்ந்தோம். ஒரு பொண்ணு சின்னவயசுல இருந்து அவங்க அத்தை மகனைக் கட்டிக்கற ஆசையில நாட்களைக் கழிக்கறா. திடீர்னு அத்தை மகனோடு கல்யாணம் நின்னுபோயிடுது. செவ்வாய்தோஷம்னு. இந்த காரணத்தால அவளுக்கு பல மாப்பிள்ளைகள் தட்டிப்போகுது. கடைசில அவ பயித்தியம் புடிச்சுபோவதாய் நாடகம் முடியுது. மூடநம்பிக்கையின் அடிப்படையில ஒரு பொண்ணோட வாழ்க்கையை நீங்க பாழடிக்கலாமா... தோஷம், ஜாதகம்னு சொல்லி... இது நியாயமா... பெண்ணுக்கு இப்படியெல்லாம் கொடுமைகள் இழைக்கனுமான்னு ஒரு கேள்வியோட நாடகம் முடியுது. அந்த நிறைவுப் பகுதி யாருக்குமே திருப்தி அளிக்கல. ஆனா அந்த பாடலும், மெட்டும், ரொம்ப அழகா இருந்தது. ராமானுஜம் சார் வந்தாரு. அவரு விரல் வச்சா மைதாஸ் டச் மாதிரி. உஷா தான் அந்த பாத்திரத்தில் நடித்தாங்க. நல்லா டெவலப் ஆச்சு. நாங்க கண்டுபிடிச்ச இமேஜரிஸ் எல்லாத்தையும் ராமானுஜம் சரியான இடத்துல புகுத்திட்டாரு. அதே கேள்வியை மறுபடியும் விவாதித்தோம். நாடக ஆசிரியர் அந்த கேள்வியை முக்கியத்துவப்படுத்தல.
நாங்க உடன்படற மாதிரி பதிலும் சொன்னார். அன்று மாலை முகாமுக்கு சுதா சுந்தர்ராமன் உட்பட சில பெண்கள் வந்தாங்க. சென்னைக்கலைக்குழுவின் முக்கியமான கலைஞர்கள் நடிக்கிறார்கள். ஆட்டம் பாட்டம்னு நல்ல வடிவத்தோட எல்லாரையும் கன்வின்ஸ் பண்ணக்கூடிய வகையில் நாடகம் அமைந்தது. ஒரு பொண்ணுக்கு கல்யாணம் ஆகலன்னா பைத்தியம் பிடிக்கனுமா? கல்யாணம்தான் பெண்ணோட லட்சியமா? பெண் கல்விப் பற்றி நாம பேசிக்கொண்டிருக்கும் போது நீங்க இப்படி ஒரு நாடகத்தை அறிவொளியில போடனுமா? என்னால ஒத்துக்கவே முடியாது. நாடகமாக்கூட இதைப் பார்க்க முடியல... என்றார்கள். பாட்டு, வடிவம், எல்லாத்தையும் மீறி பெண்கள் நாடகத்தின் உள்ளடக்கத்தில் நிற்கிறார்கள். சடார்னு வந்த கேள்வி. இதுக்கு நாம் பதில் சொல்லனும் என்றார் ராமானுஜம். முகில் ஒன்றும் சொல்லல. நாங்க இதை உணர்ந்தோம் என்று வரிசையாக சிலர் சொன்னார்கள். அப்ப அதை தெளிவு பண்ணாம நாடகம் போடுறதில் அர்த்தமே இல்லைன்னு சொல்லிட்டு அவங்க போயிட்டாங்க. முகில் ரொம்ப அப்செட். அந்தக் கேள்வியை மையப்படுத்தினா கிளைமாக்ஸ்சே இல்லாம போயிடும். முரண்பாடு வறாது. உடனடியா ஒன்னும் பண்ண முடியல. அப்படியே விட்டுட்டோம். காலையில் ஒரு யோசனை.
சுதா கேட்ட கேள்வியை நாடகத்திற்குள் அப்படியே வைத்தால் என்ன? என்கிறேன் ராமானுஜத்திடம். அவர் எப்படி Accomadate பண்ணுவிங்க என்கிறார். அந்த கேரக்டர் பெண்ணே கேட்கட்டுமே... என்கிறேன். எப்படி கேட்கிறது? கேட்பதற்கான முகாந்திரம் என்ன இருக்கு... அந்த பெண்ணே கேட்பதற்கான டிரமாட்டிக் டெவலப்மெண்ட் என்ன... என்றெல்லாம் விவாதம் நடந்தது. குழுக்களாக பிரிஞ்சி இம்பர்வைஸ் பண்ணினோம். முக்கிய பாத்திரத்தில் ஆண் பெண்கள் மாறி மாறி செய்து பார்த்தோம். ஒத்திகையில் ஒரு பையன்தான் பெண்பாத்திரத்தில் பிரமாதமா பண்ணினான். அவன் போக்கில் கண்டுபிடிச்சதுதான் கிளைமாக்ஸ். நாடக முடிவில் பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கிறவள் திடீர்னு Freeze ஆகி, பின் யோவ் யார்யா நாடகம் பண்றது... என்னய்யா நாடகம் இது... கல்யாணம் ஆகலன்னா பொண்ணுக்கு பைத்தியம்தான் பிடிக்கனுமா? கல்யாணம்தான் பெண்ணோட லட்சியமா? ஜாதகம், அதுஇதையெல்லாம் தூக்கிப்போட்டுட்டு மனசுக்கு பிடிச்சவனோட சேர்ந்து வாழக்கூடாதா? நாடகத்துக்காகக் கூட நடிப்புக்காக கூட இதை என்னால ஒத்துக்கமுடியாதுய்யான்னு எழுந்திருச்சு போறா. பிறகு எல்லோரும் அவளை சமாதானம் செய்து அழகான ஒரு வாழ்க்கை அமைய ஆணும் பொண்ணும் போதுமுங்க, அதுக்குமேல ஜாதகமெல்லாம் அவசியமில்லா விசயம்தாங்க... என்று பாடி நாடகம் முடியுது.
உண்மையில் பெண்ணை ஒரு பாதிக்கப்பட்டவளாக பார்க்கவேண்டியதில்லை. இந்த முடிவு நல்ல அணுகுமுறைதான். முகிலுக்கு பிரச்சனையில்லை. எதுவுமே வெட்டப்படல. முடிவு மட்டுமே கொஞ்சம் மாற்றி சேர்க்கப்பட்டது.
நம்முடைய பிரச்சினையே நமக்கு தெரியலேன்னா அதை ஒத்துக்கிட்டு குழுவோடு சேர்ந்து விவாதிக்கும் போது எந்த இடத்தில் சிக்கித் திணருகிறோம் என்பதை தெரிந்துகொள்ள முடியும். அங்கே ஒரு தார்மீக பலம் கிடைக்குதில்லையா... நான் குழந்தைகளோடு நாடகம் பண்ணும்போதாகட்டும் பெரியவர்களுடனாகட்டும், நாடகத்தை ஆரம்பிச்சு பாத்திரங்களுக்கு நடிகனை முடிவு செய்த பிறகு அவர்களை மாற்றுவதே இல்லை. மாற்றினா அவர்களுக்கு உளச்சிக்கல் ஏற்படுது. குழந்தைகளோடு நாடகம் பண்ணும் போதுதான் அதை நான் கண்டுபிடிச்சேன். பெரிய நடிகர்களாக, விருது வாங்குவதற்காக வரல. பள்ளிக்கூட சூழலிலிருந்து ஒரு விசயத்தை கற்றுக்கொள்வதற்காக வர்றாங்க, அப்போ ஒவ்வொருத்தரையும் கவனமா கணிச்சு பாத்திரங்களை கொடுப்போம். எல்லாவற்றுக்கும் பல சாவிகள் இருக்கு.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|