 |
தலையங்கம்
மைசூர் போண்டாவுக்குள் மைசூர் இல்லாததைப் போலவே நீதிமன்றத்திலும் நீதி இருக்காது என்பது நிரூபணமாகிக் கொண்டேயிருக்கிறது. சதாம் வழக்காயிருந்தாலும் சமூகநீதி வழக்காயிருந்தாலும் ஈராக் இந்தியா என்ற பாரபட்சமின்றி நீதியின் தராசு வெறும் காயலாங்கடை ஈயம் பித்தளைத் தட்டுகளாக இழிகின்றன.
அமெரிக்க அரசின் மனிதகுல விரோதச் செயல்களை ஊன்றி கவனிக்கும் யாவரும் யூகித்ததைப் போலவே சதாமுக்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தன்னோடு முரண்படும் யாருக்கும் இதேகதிதான் என்பதை இப்படியான தண்டனைகள் தாக்குதல்கள் ஆக்ரமிப்புகள் ஆட்சிக் கவிழ்ப்புகள் வழியாக உலகத்தை எச்சரித்துக் கொண்டேயிருக்கிறது அமெரிக்கா. அமெரிக்காவின் அணுக்கநாடாக இந்தியாவை தகவமைக்க கால்நக்கித் திரியும் ஆட்சியாளர்கள் இப்போதும்கூட தமது சுயமரியாதை, நாட்டின் கௌரவம் குறித்தெல்லாம் கவலைப்படுவதாய் தெரியவில்லை.
சதாமுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை கண்டிப்பவர்கள், முகமது அப்சல் விஷயத்தில் தீவிர தேசியவாதிகளாகி தண்டனையை வலியுறுத்தும் இரட்டைநிலையை மேற்கொள்கின்றனர். மனிதவுரிமை இயக்கங்களும், சிபிஐ(எம்) காஷ்மீர் மாநிலக்குழுவும், காஷ்மீர் முதல்வரும் அப்சலுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்தனர். மாற்றுக் கருத்து தேசபக்தி தராசில் நிறுத்தப்பட்டு தீவிரவாத ஆதரவு முத்திரை குத்தப்பட்டுவிடுமோ என்கிற அச்சத்தில் பிறகு பின்வாங்கிவிட்டார் முதல்வர். மூவாயிரம் நாலாயிரம் பேரைக் கொன்ற மோடியை முதலமைச்சராக்கி கொண்டாடும் சங்பரிவாரம் அப்சலை தூக்கிலிட வேண்டும் என்று ரகளை செய்வதற்குப் பின்னே மதவேஷமே மண்டியிருக்கிறது. இதில் தேசபக்தியென்று ஒரு புண்ணாக்குமில்லை.
மரணதண்டனை கூடாது என்பது மனிதவுரிமை இயக்கங்களுக்கு மட்டுமேயான பிரச்சினையல்ல. ஒரு நாகரீக சமூகத்தின் வாழ்நெறியை செம்மைப்படுத்துவதில் அக்கறையுள்ள மக்கள் இயக்கங்கள் கைக்கொண்டு போராடவேண்டிய கோரிக்கையுமாகும்.
சாதிய முளைக்குச்சியில் கையும் காலும் பிணைக்கப்பட்டு சத்தம் எழுப்பாமலிருக்க அக்ரஹாரத் தூமத்துணிகளும் லங்கோடுகளும் வாயில் திணிக்கப்பட்டிருந்த தமிழக தலித்களுக்கும் சூத்திரர்களுக்கும் விடுபடும் தைரியத்தை ஊட்டியவர்களில் ஆன்மீகப்புடுங்கிகள் ஒருவருமிலர். பொதுவெளியில் நடமாடவும் தமது மேதமைகளை வெளிப்படுத்தவும் இம்மக்களை ஆளுமைப்படுத்தும் அருங்காரியத்தை நிறைவேற்றியவர்கள் அயோத்திதாசர் தொடங்கி ரெட்டைமலை சீனிவாசன், பெரியார், சிங்காரவேலர், சீனிவாசராவ், ஜீவா, பி.இராமமூர்த்தி போன்ற பௌத்த, நாத்திக, பொதுவுடைமை இயக்கத் தலவர்கள் தான். இவர்களால்தான் பட்டணத்துப் பாதை பண்ணைபுரத்துக்கும் நீண்டது. பஸ் வந்தது. பஸ்ஸில் ஏறவும் உட்காரவும் உரிமை கிடைத்தது. வாய்திறந்து இம்மக்களால் பேசமுடிந்தது. அதனால்தான் இளையராஜாவால் பாட முடிந்தது.
ஆனால் இப்போது, நான் யார்? எங்கிருந்து வந்தேன்? எங்கே போகப் போகிறேன்? இந்த பிரபஞ்சத்தை படைத்தது யார்? என்ற தத்துவ விசாரம் பிடித்தாட்டுகிறது அவரை. இப்படி தன்னையும் தன் பூர்வீகத்தையுமே மறந்துவிட்டு தான் யார் என்று உழப்பிக் கிடப்பவர் பெரியாரை மறந்துவிட்டதில் ஆச்சர்யமில்லை. இளையராஜாவுக்கு முன்பும் இசை இருந்தது, பின்னும் இருக்கும் என்பதால் போய்யா டுபுக்கு என்று சிலர் ஒதுக்கிவிடலாம். ஆனால் விசயம் இத்தோடு முடியவில்லை.
கடவுள் நம்பிக்கையுள்ள தான், கடவுள் மறுப்பாளரான பெரியார் படத்துக்கு இசையமைக்க முடியாது என்ற இளையராஜாவின் தர்க்கத்தை, தன் மதம்/ சாதி/பால் அல்லாத நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கமாட்டேன் என்று ஒரு மருத்துவர் சொல்லும் வரை நீட்டிக்கமுடியும். மாற்றுக் கருத்துள்ளவர்களை வெறுத்தொதுக்க வேண்டுமானால் சாதுவேடம் தரித்து ருத்திராட்சக் கொட்டை உருட்ட வேண்டும் என்று சரியாகத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்.
முக்கல் முனகல்களில் அர்த்தராத்திரி சரசங்களில் ஆன்மீகத்தின் பேரொளியை தரிசித்து அவற்றுக்கெல்லாம் இசையமைக்கும் இவர் பெரியார் படத்துக்கு இசையமைத்திருந்தால் அதுதான் பெரியாருக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரும் அவமானமாய் இருந்திருக்கும். அங்குலம் அங்குலமாய் பெரியார் நடந்த இந்த மண்ணில் நடமாடமாட்டேன், இந்த காற்றை சுவாசிக்க மாட்டேன் என்று அடம் பிடிக்குமளவுக்கு ஆன்மீகப்பித்தும் நாத்திக எதிர்ப்பும் ஒருவேளை அதிகமாகிவிட்டால் அவரது இசைப்பிரியர்களுக்கு மட்டுமல்ல இல.கணேசனுக்கும் பேரிழப்புதான். எங்கள் காது குடைய உதவாத கோழியிறகு யார் வீட்டு எரவாணத்திலும் தொங்கட்டும். விட்டொழி அந்த...................
(கோடிட்ட இடத்தை நிரப்பிக்கொள்ள வாசகர்களுக்கு உரிமையுண்டு)
ஆசிரியர் குழு
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|