 |
தலையங்கம்
.
ஆசிரியர் குழு
ச. தமிழ்ச்செல்வன்
எஸ்.காமராஜ்
உதயசங்கர்
ஜே. ஷாஜகான்
உதயசங்கர்
சாம்பான்
ரா.ரமேஷ்
நிர்வாகக்குழு
ந. பெரியசாமி
ப. சிவகுமார்
ஆசிரியர்
சம்பு
சிறப்பாசிரியர்
ஆதவன் தீட்சண்யா
படைப்புகள் / நன்கொடை அனுப்ப:
PUTHU VISAI
B2, BSNL QUARTERS
HOSUR - 635109
TAMIL NADU
INDIA
[email protected]
புது விசை - முந்தைய இதழ்கள் |
2009 ஜனவரி 1 பிறக்கிற நள்ளிரவின் போதும் இலங்கைத் தமிழர் பிரச்னை முடிவுக்கு வந்துவிடாதென திடமாக நம்பி / முன்னுணர்ந்து கலை இலக்கியவாதிகள் சிலர், புத்தாண்டு கொண்டாட்டங்களை மறுத்து ஒப்பாரிப் போராட்டம் ஒன்றை நடத்த முன்கூட்டியே ஏற்பாடு செய்து வருகின்றனர். ஆக எல்லோருக்குமே தெரிந்திருக்கிறது, இது நேற்று தொடங்கிய பிரச்னையுமில்லை நாளை முடியக் கூடியதுமில்லை என்பது. ஆயுதங்களின் இலக்காக இனவெறி அரசப்படையாலும் கேடயமாக புலிகளாலும் மனித நிலையிலிருந்து கீழிறக்கப்பட்ட எளிய தமிழ்க்குடிகளின் நிராதரவான நிலையைத் தடுக்கவியலா நிலையில், நெஞ்சம் பதற உயிர் உருக ஒரு தலையங்கம் எழுதுவது உள்ளிட்ட எதுவுமே உள்ளேன் ஐயா என்று ஒருமைப்பாடு தெரிவித்து சுயதிருப்தி அடைவது தானேயன்றி பிரச்னைக்கான தீர்வை தரப் போவதில்லை.
அரசியல் நிலைபாட்டிலிருந்து ஈழத்தை ஆதரித்து இன்ன லுற்ற இயக்கங்களையும் தலைவர்களையும் பின்னுக்குத் தள்ளி, ஆட்சியாளர்கள் பூசிவிட்ட அரிதாரத்தோடு திடீர் தலைவர்கள் தோன்றி திணறடித்துக் கொண்டிருக்கிறார்கள் தமிழகத்தை. பொத்தானை அமுக்கியதும் பொங்கும் நுரை யெனவே இவர்களிடமிருந்து பீறியடிக்கும் தமிழுணர்வு, எல்லை தாண்டிப் பாய்கிறது ஈழத்திற்குள் மட்டும். உள்ளூரில் ஒடுக்கப்படும் தமிழருக்காக குரல் கொடுத்து உதைபடுவதைவிடவும் இது தொந்தரவில்லாதது. தவிர வும் பொதுவாழ்வில் இருப்பதான சுயபெருமிதமும் சற்றே மரியாதையும் கிட்டும். அரசாங்க செலவிலேயே போராளி யாகி அரசாங்கத்தாலேயே கைது செய்யப்பட்டு தியாகி யாகவும் மாறிவிடலாம்.
மின்வெட்டு, விலையேற்றம், குடும்ப வாரீசுகளின் குத்து வெட்டுகளால் பெருகிவரும் மக்களின் அதிருப்தியை திசை திருப்பவும், மாநில ஆட்சியில் பங்கு கேட்டு நச்சரிக்கிற - விரைவில் மத்தியில் ஆட்சியை இழக்கவிருக்கிற காங்கிரசை கழற்றிவிடுதல், அதிமுகவை தனிமைப் படுத்துதல் ஆகிய காய்களை நகர்த்தவும் (இப்படியான தந்திரங்களுக்காகவே மூத்த ராஜதந்திரியாக புகழப் படுகிறார்) இலங்கைத் தமிழர் துயரை பயன்படுத்திக் கொள்ள விரும்பும் கருணாநிதி குறைந்தபட்சம் இங்குள்ள அகதிகள் முகாம்களையாவது மனிதப் பயன்பாட்டிற்குரி யவையாய் சீரமைத்து நன்றி தெரிவித்துக் கொள்ளலாம்.
பதற்றத்தையும் மதக்கலவரத்தையும் தூண்டிவிட சீர் குலைவு வேலைகளிலும் குண்டுவெடிப்புகளிலும் ஈடுபடுகிறவர்களாக ராணுவ உயரதிகாரிகளும் முற்றும் துறந்த சந்நியாசிகளும் இருப்பது அம்பலமாகியுள்ளது. எங்கே குண்டு வெடித்தாலும் இஸ்லாமியர்மீது பழி போடும் பொதுப்புத்திக்குள் பதுங்கிக்கொண்டு இந்துத் தீவிரவாதிகள் செய்யும் அழிமானங்களில் இதுவும் ஒன்று. இந்தியாவை இந்துமயமாக்கி, இந்துவை ராணுவமய மாக்க விரும்பும் சங்பரிவாரிடம் அதிகாரம் சிக்குமானால் ராணுவம் இந்துத்துவமயமாக்கப்பட்டு, சிங்கள இன வெறிப்படைபோல அது மதவெறிப்படையாக மாற்றப் படும் பேரபாயம் உள்ளதென்பதை மறுபடியும் முன்னறிவிக்கிறது புதுவிசை.
கண்டந்துண்டமாக வெட்டியெறிவது, உயிரோடு எரிப் பது, ஊரேகூடி கட்டிவைத்து அடிப்பது, மலம் தின்ன வைப்பது, ரத்த உறவுகளை புணருமாறு சித்திரவதை செய்வது, பெண்களை வல்லாங்கு செய்வது, பிறப்புறுப்பில் இரும்புத்துண்டங்களை பாய்ச்சுவது என தொடரும் வன்கொடுமைகளால் தலித்துகள் துள்ளத்துடிக்க கதறி மாளும் போது கண்ணையும் காதையும் இன்ன பிறவற்றையும் பொத்திக்கொள்கிற ஊடகங்கள், சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி ( சென்னை சட்டக் கல்லூரி அல்ல) மாணவர்களது மோதலின் சில குறிப்பிட்ட காட்சி களை மட்டும் உலகின் முதல் வன்முறைபோல திரும்பத் திரும்ப காட்டிக் கொண்டிருக்கின்றன. ஊடகங்களை பீடித்திருக்கும் சாதிய மனநோயை சமூகம் முழுவதன் மீதும் படரவிடும் முயற்சி இது. வெட்டி ஒட்டி உலவ விடப்படும் இக்காட்சிகளுக்கு வெளியேதான் உண்மை தத்தளித்து நிற்கிறது என்பதை அம்பலப்படுத்திட கல்வியாளர் மற்றும் மனித உரிமை அமைப்புகள் மேற்கொண்ட கூட்டு ஆய்வின் அறிக்கை இவ்விதழில் முழுமையாக வெளியிடப்படுகிறது.
- ஆசிரியர் குழு
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|