உலகெங்கிலும், பல்வேறு நாடுகளில் அந்தந்த அரசாங்கங்கள், பல்வேறு துறைகளில், சிறந்த குடிமக்களுக்கு, உயரிய விருதுகள் வழங்கி சிறப்பிக்கின்றன. அரசாங்கங்கள் கடந்து, பல்வேறு அமைப்புகளும் தங்கள் கொள்கைகளுக்குத் துணை நிற்கும் பல சிறந்த ஆளுமைகளைக் கண்டுபிடித்து, அவர்களில் சிறந்தவர்களைத் தேர்ந்தெடுத்துத், தங்கள் கொள்கைகள் சார்ந்த பல்வேறு பெயர்களில், விருதுகள் வழங்கி சிறப்பிக்கிறார்கள்

umapathy valasa vallavan and vetriazhaganஅந்த வகையில், திராவிட இயக்கத் தமிழர் பேரவை, கடந்த 2022 ஆம் ஆண்டு முதல், பெரியாரியக் கொள்கைகளுக்குத் தங்களை ஒப்புக் கொடுத்த சிறந்த மூன்று ஆளுமைகளைத் தேர்ந்தெடுத்து, “கருஞ்சட்டை விருது”கள் வழங்கி வருகிறது.

முதலாவதாக, தங்கள் அமைப்புக்குள்ளாகவே, எந்த கைம்மாறும் இன்றி தங்கள் உழைப்பைச் செலுத்தி வரும் மூத்த தோழர்களில் ஒருவர், இரண்டாவதாக, பெரியாரிய சிந்தனைகளைப் பரப்பும் வகையில் களப்பணியோ அல்லது ஆய்வுப் பணிகளோ மேற்கொண்டு,

 தொடர்ச்சியாக இயங்கும் பெரியார் தொண்டர் ஒருவர், மூன்றாவதாக, கட்சி அரசியலில் ஈடுபட்டு பெரிய பலன்கள் ஏதுமின்றி, அமைதியாகக் கொள்கை வழி நின்று களப்பணியாற்றி வரும் தி.மு.க வைச் சார்ந்த தொண்டர் ஒருவர் என மூன்று பேரை ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுப்பது என முடிவானது. இந்த மூன்று பேரையும் தேர்ந்தெடுக்க அமைப்பிலிருந்து ஐந்து பேர் கொண்ட ஒரு குழு தலைவர் அவர்களால் நியமிக்கப்படும்.

இந்த முடிவுகளின் படி, முதல் ஆண்டான 2022 ஆம் ஆண்டு, பேரவையின் மூத்த தோழரும், வரலாற்று எழுத்தாளருமான தோழர் எழில் இளங்கோவன் அவர்களுக்கும், திராவிடர் கழகத்தைச் சேர்ந்த தோழர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த அய்யா சின்னராசு அவர்களுக்கும் ஏப்ரல் 29, 2022 அன்று சென்னை, சர் பிட்டி தியாகராயர் அரங்கில், அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்களால் கருஞ்சட்டை விருதுகள் வழங்கப்பட்டன.

இரண்டாம் ஆண்டான 2023 ஆம் ஆண்டு, தலைவருடன் நீண்ட காலமாக பயணிக்கும், பேரவையின் துடிப்பு மிக்க பெரியாரிய கருஞ்சட்டைப் போராளி தோழர் மு.மாறன் அவர்களுக்கும், திராவிடர் கழகத்தின் பிரச்சாரச் செயலாளரும், வழக்கறிஞரும், பெரியாரியப் பெண்ணியவாதியுமான தோழர் அருள்மொழி அவர்களுக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்தில் அமைதியாகக் களப்பணி ஆற்றி வரும் மூத்த தோழர் தஞ்சை கூத்தரசன் அவர்களுக்கும் சென்னை தேவநேயப் பாவாணர் அரங்கில் ஆகஸ்ட் 5, 2023 அன்று கருஞ்சட்டை விருதுகள் வழங்கப்பட்டன. மாண்புமிகு அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் பரிசுகள் வழங்கிப் பேசினார். அது போது, திராவிட சித்தாந்த அமைப்புகளே திராவிட மாடல் ஆட்சியின் வழிகாட்டி என்று சொன்னது நம் போன்ற பெரியாரிய, அமைப்புகளுக்கு மிகுந்த ஊக்கத்தை அளித்தன. அதுமட்டுமல்லாமல் அன்று அவர் சனாதனத்தையும் ஒரு பிடி பிடித்தது, தலைநகரம் புதுதில்லி வரை எழுச்சியை ஏற்படுத்தி சங் பரிவாரங்களின் ஆத்திரத்தைக் கிளப்பியது.

2024ஆம் இவ்வாண்டுக்கான விருதுகள் தலைவர்,பொதுச் செயலாளர், மற்றும் மூவர் கொண்ட விருதுக் குழுவின் பரிந்துரைகளை ஏற்று தலைவரால் அறிவிக்கப் பட்டிருக்கின்றன. நம் பேரவை சார்பில் நீண்ட கால பெரியாரிய களப் பணியாளரும், நம் அமைப்பை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் பரப்புரை அலகான திராவிடப் பள்ளியை செவ்வனே நடத்தி வருபவருமான தோழர் பொள்ளாச்சி உமாபதி அவர்களுக்கும், திராவிட ஆய்வியல் அறிஞரும், சிந்தனையாளரும், மறைந்த திராவிடச் சிந்தனையாளர் அய்யா ஆனைமுத்து அவர்களின் சீடரும். அவருடைய “சிந்தனையாளன்” இதழைத் தொடர்ந்து வெளியிட்டு வருபவருமான தோழர் வாலாஜா வல்லவன் அவர்களுக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஆள் அரவமின்றி தன்னுடைய இலக்கியப் பங்களிப்பைச் செய்து வரும் மூத்த தோழர் கவிஞர் வெற்றியழகன் அவர்களுக்கும் அறிவிக்கப்படுள்ளன.

இந்த ஆண்டுக்கான கருஞ்சட்டை விருதுகள் வரும் ஜூலை மாதத்தில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளும், இடமும், நேரமும் பின்னர் அறிவிக்கப்பட இருக்கின்றன.

அவரவர் தனிப்பட்ட வாழ்க்கையைக் கடந்து, சக மனிதர்களை எண்ணி, எதிர்காலத் தலைமுறையினரை எண்ணி, பொதுவாழ்வில் பயணிக்க முன் வருபவர்கள் மிகச் சிலரே! அதில் குடும்ப சுமைகள் அழுத்த, தங்கள் உடல் நலனைக் கவனியாது இடையில் பின்வாங்குபவர்கள் எத்தனையோ பேர்! தொடர்ந்து தங்கள் பொருளாதாரம், நேரம், உழைப்பு ஆகிய பல வளங்களை இச்சமூகத்துக்காக ஒதுக்கியும், தியாகம் செய்தும் வாழ்ந்து கொண்டிருக்கும், போராடிக் கொண்டிருக்கும் சரியான தூய உள்ளங்களை அடையாளப் படுத்தி, அவர்களைச் சிறப்பிக்கும் இந்த உன்னத முயற்சி தொடர வேண்டும். அதுவே அம் மாமனிதர்களை ஊக்கப்படுத்தவும் தொடர்ந்து செயல்படவும் வைக்கும் பேரவையின் உயர்ந்த செயல்பாடாக இருக்கும்!

- சாரதாதேவி

Pin It