Himanta Biswa Sarmaஜார்க்கன்ட், ராம்கரில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, “2019 தேர்தலில் 300 இடங்களை வென்ற பாஜக அயோத்தியில் ராமர் கோயிலை கட்டியது. ஜம்மு காஷ்மீரில் 370 பிரிவை ரத்து செய்தது. குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்தது. இப்போது 400 இடங்களுக்கு மேல் வென்றால் மதுராவில் உள்ள கிருஷ்ண ஜென்ம பூமியிலும், வாரணாசியில் ஞானவாபி மசூதி உள்ள இடத்திலும் கோயில் கட்டப்படும்" என்று பேசி இருக்கிறார்.

இப்பொழுது வடமாநிலங்களில் தேர்தல் நடந்துகொண்டு இருக்கிறது. தேர்தல் நடத்தை விதி நடைமுறையில் இருக்கிறது.

ஆனாலும் அதைப்பற்றி எல்லாம் கொஞ்சமும் கவலைப்படாத பா.ஜ. கவினர் தொடர்ந்து மத வெறுப்புணர்வுப் பேச்சுகளைப் பேசி வருகிறார்கள் என்பதற்கு அசாம் முதல்வரின் பேச்சு மேலும் ஒரு சான்றாக அமைகிறது.

இதுபோன்ற பொறுப்பற்ற பேச்சுகளால் வெறுப்புணர்வுகள் வளரும், அமைதி குலையும் என்பதைத் தெரிந்தே பா.ஜ.கவினர் இப்படிப் பேசுகிறார்கள் என்பது கவலை தருகிறது.

அரசியல் கட்சிகள் தங்கள் சாதனைகளைச் சொல்லி, இனி சாதிக்க இருப்பதைச் சொல்லி அமைதியாகவும், நேர்மையாகவும் மக்களைச் சந்தித்துத் தேர்தலைச் சந்திக்க வேண்டும்.

மாறாக இன, மத வெறுப்புணர்வைப் பேசி, அமைதியற்ற சூழலை உண்டாக்கித் தேர்தலைச் சந்திக்க நினைப்பது அரசியலின் மாண்புக்கு இழுக்காகும். அதைத்தான் தொடர்ந்து, தெரிந்தே செய்துகொண்டு இருக்கிறது பா.ஜ.க.

தமிழ்நாடு உள்பட்டுத் தென்னாடு மட்டுமன்று, இப்போது வடபுல மக்களும் சிந்தித்து, விழிப்படைந்து கொண்டு வருகிறார்கள்.

வெறுப்புணர்வுப் பேச்சுகளும், பிரித்தாளும் சூழ்ச்சிகளும் ஒரு காலத்தில் எடுபட்டு இருக்கலாம். இனிவரும் காலங்களில் அவை எடுபடாது.

ஒன்றியத்தில் பா.ஜ.கவின் வீழ்ச்சி உறுதியாகிறது.

- கருஞ்சட்டைத் தமிழர்

Pin It