பெரும்பாலும் குறும்பட விழாக்கள் என்பது அந்தந்த பகுதி சார்ந்த ஆர்வமுள்ள இளைஞர்கள், இயக்குனர்கள் இவர்களின் படங்களைத் திரையிடுவது மற்றும் அவர்கள் சார்ந்த விருப்பங்களை நிறைவேற்றுவது என்ற வகையில் அங்கங்கே நடந்து வருகிற போது குறும்பட விழாக்கள் சர்வதேச தரத்தை எட்ட வழிகாட்டும் முயற்சிகள் பேராசிரியர் ஆர் சிவகுமார், ஆர். பி அமுதன் போன்றோரின் நிகழ்வுகளில் காணப்படுகிறது அந்த வகையில் தான் பேராசிரியர் ஆர் சிவக்குமார் ஒருங்கிணைக்கும் முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் நடத்தும் குறும்பட ஆவணப்பட விழாக்களில் இந்தத் தரத்தை சுலபமாக அடையாளம் கண்டு கொள்ள முடியும்.

அந்த வகையில் தான் புதுச்சேரியின் குறும்பட விழாவின் படங்கள் அமைந்திருந்தன இவற்றில் ஆர்வம் கொண்டு திரைப்படத்திற்கு செல்லும் முயற்சியில் உள்ள இளைஞர்கள் எடுக்கும் குறும்படங்கள் பளிச்சென்று தெரிகிற வகையில் தேர்வு செய்யப்படுவதும் சிறப்பாகவே இருக்கிறது. அவர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கான பயிற்சி என்ற வகையில் ”திரை இயக்கம்” என்ற பிரிவையும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினர் ஆரம்பித்து நடத்தி வருகிறார்கள்.

திரை இயக்கம் சார்ந்து இளைஞர்களை குறும்படம் நோக்கில் பயிற்றுவிப்பதும் அதன் நிறைவாய் குறும்படங்கள் எடுக்க ஆயத்தம் செய்வதும் முக்கியமான விஷயமாக இருக்கிறது. வழக்கமாக குறும்படங்கள் சார்ந்து இயங்கும் கல்வித்துறை மற்றும் வணிக நிறுவனங்களுடைய பங்களிப்பு ஓரளவு இருந்தாலும் பெரும் பணம் செலவு செய்ய வேண்டி இருக்கிறது இளைஞர்களுக்கு அப்படி அடிப்படை திரைப்படக் கல்வி சார்ந்த படிப்பை பெரும்பாலும் முன்னிலைப்படுத்தாமல் அவர்களுடைய ஆர்வத்தையும், வாசக மனதினையும் கொண்டு ஓராண்டு பயிற்சிகள் மூலம் திரைப்படமாக்கும் முயற்சிகளை ஊக்குவிக்கும் மூலமாக சில குறும்படங்கள் திரை இயக்கம் மூலம் வெளிவந்திருக்கின்றன. திரை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் நடிகை ரோகிணி, எடிட்டர் லெனின் போன்றோரின் ஈடுபாடும் முக்கியமானவை. அந்த வகையில் சுந்தர் ராமசாமி அவர்களின் ஜன்னல் என்ற சிறுகதை குறும்படம் ஆகி இருப்பதை இவ்விழாவில் முத்திரையாகத் திரையிட்டார்கள்.

முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்ந்த படைப்பாளிகளின் படைப்புகளை எடுத்துக் கொண்டு குறும்படங்கள் ஆக்கி இருக்கலாம். ஆனால் தமிழில் குறிப்பிடத்தக்க இன்னொரு வகை படைப்பாளியாக இருந்த சுந்தர ராமசாமியின் சிறுகதையை எடுத்ததற்கு காரணமாக குறைந்த கதாபாத்திரங்களும் அதனால் கட்டமைக்கப்படும் குறைந்த செலவில் ஆன காட்சிகளும் காரணமாக இருந்திருக்கலாம்.. என் ஆறு சிறுகதைகளை பலர் குறும்படங்களாக ஆக்கி இருந்தாலும் நானே சமீபத்தில் இயக்கிய ”நாணல்” என்ற குறும்படம் ஆனந்த விகடனில் வெளிவந்த ”பாதுகாப்பு“ என்ற சிறுகதையை மையமாகக் கொண்டிருந்தது இந்த கதையை நான் எடுத்ததற்கு காரணம் குறைந்து செலவில், குறைந்த கதாபாத்திரங்கள் என்ற ரீதியில் தான் மனதில் முதலில் வந்தது, அப்படித்தான் ஒரு சின்ன முயற்சியாக குறைந்த கதாபாத்திரங்களும் அவர்களின் நிகழ்வுகளும் மிக எளிமையாக சொல்ல முடிந்த லாவகம் அந்த ”சன்னல்” (ஜன்னல் கதை சன்னல் என குறும்படத்தில்) குறும்படத்தில் கூட்டு இயக்கத்தில் தென்பட்டது. ஆரம்பகால முயற்சிகளுக்கு இது போன்ற குறைந்த கதாபாத்திரங்களும் குறைந்த நிகழ்வுகளும் உள்ள கதைகள் பயன்படும் என்பதற்கு உதாரணமாக ”சன்னல்” படத்தை சொல்லலாம்.

முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தை சேர்ந்த எழுத்தாளர்களின் குறும்படங்கள் பல்வேறு நிலைகளில் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. அந்த நிலையில் அமைப்பின் முக்கிய எழுத்தாளர் கோவை கரீம் அவர்களின் இரு கதைகளை மையமாகக் கொண்ட இரு குறும்படங்கள் இவ்வாண்டில் திரையிடப்பட்டது முக்கியமான நிகழ்வாகும். ”முதல் கேள்வி“ என்ற அவருடைய சிறுகதை ”தாழிடப்பட்ட கதவுகள்” என்ற சிறுகதை தோப்பில் இடம் பெற்றிருக்கிற ஒரு பெண்ணுக்கு ஏன் அவள் சார்ந்த முஸ்லிம் அமைப்பின் வட்டத்தில் குறிப்பிட்ட வகைஉரிமையை தரக்கூடாது என்ற ஒரு பெண் எழுப்பும் கேள்விகளும் அந்த பெண் சார்ந்த பிற பெண் கதைபாத்திரங்களும் சரியாகவே உருவாக்கப்பட்டு இருந்தன..

அதுவும் கருப்பு வெள்ளையில் அந்த படம் இன்னும் அழுத்தமான பாதிப்புகளைத் தந்து பெண் என்பவள் ஆணின் அடுத்த நிலையில் இருந்து பார்க்கப்படும் தன்மையை சரியாக வெளிப்படுத்தி இருந்தது. கரீம் அவர்களின் இன்னொரு சிறுகதை “இன்று தஸ்தகீர் வீடு“ (கருப்பு அன்பரசன் இயக்கம்) இது முஸ்லிம் சிறுபான்மை சமூகம் சார்ந்து இன்றைக்கு காவல்துறையும் அரசு அதிகாரமும் அவர்களை சந்தேககக் கொண்டு பார்க்கும் விசாரணைப் பார்வையை அது சார்ந்த அடிப்படை உரிமைகளை கேள்விக்குறியாக்கியிருந்தது ஜெயச்சந்திரா ஹஸ்மி இயக்கிய ”ஸ்வீட் பிரியாணி” என்ற குறும்படத்தில் உணவு விநியோகம் செய்யும் ஒரு ஊழியரின் ஒருநாள் அனுபவங்களை சொல்கிற போது அவர் சார்ந்த சாதி பலரை எப்படி துன்புறுத்துகிறது.

மனதளவில் என்பதை காட்டியது சுரேஷ்குமாரின் அரிதாரம் போன்ற குறும்படங்கள் இன்றைய சமூக ஊடக பாதிப்பான சமூகத்தில் தடுமாறும் கலைஞர்கள் பற்றிய அக்கறையை மற்றும் நம்பிக்கை இழப்பையும் ஒரு சேர சொன்னது.. ஸ்கூல் பெல் போன்ற மூன்று நிமிட படங்கள் சொல்லும் செய்திகள் குழந்தை உழைப்பு சார்ந்த பல கேள்விகளை உருவாக்கும். சாய் இயக்கத்தில் திரையிடப்பட்ட ”லாட்டரி டிக்கெட்” என்ற படம் அது பாதிக்கும் ஒரு குடும்ப சூழலை சொன்னாலும் அது லாட்டரி சார்ந்த விமர்சன குறிப்பை தவறவிட்டது. கரீம் சிறுகதைகள் தொட்ட பிரச்சனைகளை இலங்கையில் இருந்து ஆத்மா சபீர் அவர்கள் இயக்கிய ”நொச்சிமுனை தர்கா” என்ற ஆவணப்படம் அந்தப் பகுதியில் பல்வேறு சாதி, இன மக்கள் சேர்ந்து வாழ்ந்த காலகட்டத்தையும் இன்று அவர்களின் பிணைப்பு காணாமல் போயிருக்கும் விரோதத்தையும் சரியாக சொல்லி இருக்கிறது.

பொதுவாக இது போன்ற திரைப்பட விழாக்களில் அதிகபட்சமான எண்ணிக்கையில் குறும்படங்களை பார்க்க ரசிகர்கள் விருப்பப்படுவதுண்டு. ஆனால் நீண்ட ஆவணப்படங்கள் இது போன்ற விழாக்களில் இடம்பெற்று அந்த விருப்பங்களை சரியாக நிறைவேற்ற முடியாமல் செய்துவிடும். ஆனால் அந்த ஆவணப்படங்களின் சொல்லும் தன்மையும் களமும் அப்படி விரிவாகத்தான் சொல்லப்பட வேண்டும் என்பதை இந்த விழாவில் திரைப்யிடப்பட்ட பல படங்கள் உணர்த்தின. அட்மிட்டட் என்ற பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் முதல் திருநங்கை மாணவர் பற்றிய படம், டேர்ன் யூ ஆர் பாடி டு த சன் என்ற இரண்டாம் உலகப் போரின் போது பிடிக்கப்பட்ட சோவியத் சிப்பாயின் வாழ்க்கை கதை, முற்றிலும் பெண்களால் நடத்தப்படும் தலித் செய்தி நிறுவனம் சார்ந்த அதில் பங்கு பெற்ற பத்திரிகையாளர்கள் பற்றிய ரைட்டிங் வித் ஃபயர், எத்தியோப்பியாவின் விவசாய குடும்பங்களில் காணப்படும் இயற்கை பாரம்பரிய பிரசவ முறைகள் பற்றியது போன்றவை இந்த வகையில் நீண்ட ஆவணப்படங்கள் தான்.

ஆனால் அவற்றின் களம் சார்ந்து அவை விரிவாக சொல்லப்பட வேண்டிய அவசியத்தையும் இந்த படங்கள் உணர்த்தின. தேனீக்கள் இல்லாமல் போன உலகத்தில் மனித இனம் இருக்குமா என்ற கேள்வி தொடர்ந்து எழும்பிக் கொண்டே இருக்கிறது. இதை சொன்ன பீ டேல்ஸ் என்ற குறும்படம் சுற்றுச்சூழல் சார்ந்து நிறைய கேள்விகளை உருவாக்கியது. இதே போல் இன்று தனியார் மையத்தில் சிக்கிக் கொண்டிருக்கின்ற பொதுத்துறை நிறுவனங்களை மீட்டெடுக்கிற போராட்டம் எவ்வளவு முக்கியம் என்பது தமிழ்நாட்டின் பொது போக்குவரத்து பேருந்துகளின் முக்கியத்துவத்தை முன்வைத்து எடுக்கப்பட்ட “எஞ்சின் ஆப் த தமிழ்நாடு ” என்ற படம் சரியாகச் சொன்னது. மக்களின் எழுச்சியும் போராட்டங்களும் காலத்திற்கு ஏற்ற மாறி விடும் அதற்கு அதிகாரத்தின் குரல் அடிபணிந்துதான் தீரும் என்பதை ”மை இமேஜனரி கண்ட்ரி” என்ற சிலி நாட்டு நீண்ட ஆவணப்படம் உணர்த்தியது.

"ரைடர் ருக்மணி” என்ற தமிழ் படம் வாகனத்தில் தன் பயணத்தை தொடர்ந்து அனுபவங்களை பதிவு செய்து கொள்கிற ஒரு இளம் பெண்ணின் கோணத்தில் ஆவணப்படமாக சொல்லப்படாமல் அதில் உடைசார்ந்து புறக்கணிக்கப்படும் ஒரு சாதாரண மனிதனின், திரைப்பட போஸ்டர்களை ஒட்டும் ஒரு தொழிலாளியின் அனுபவங்களை இணைத்து சொல்லியிருந்தது ஆவணப்படத்தில் இன்னொரு புனைவு கோணத்தையும் கொண்டு வந்திருந்தது புதுமையாய். இதே போல அனிமேஷன் படங்களின் பங்களிப்பு இன்று திரைப்படங்களில் முக்கியமானதாக மாறிவிட்டது.

அதனால் தான் இந்த பட விழா ”மிக்ஸி” என்ற ஒரு அனிமேஷன் படத்துடன் துவங்கியது. கட்டாய உழைப்பில் ஈடுபடுத்தப்பட்ட குழந்தையின் உழைப்பு மற்றும் பாரம்பரிய விதைகள் மற்றும் உணவுகள் பற்றிய எண்ணங்களை சொன்னதிலும் ஒரு புதிய கோணம் கிடைத்தது. அதேபோல பிரெஞ்சு ரோஸ்ட் என்ற ஒரு அனிமேஷன் படத்தின் தன்மையும் இன்னொரு கோணத்தில் விளக்கப்பட்டிருந்தது. எல்லா வகைமைப்படைப்புகளையும் திட்டமிட்டு உட்படுத்தியதில் விழாவின் பரிமாணம் வித்தியாசமாகிவிட்டது.

சுமார் பத்து நாடுகளின் இருந்து வந்த இந்த திரைப்படங்கள் தமிழ் குறும்பட ஆவணப்பட பார்வையாளர்களை சர்வதேச தரத்தில் அமைந்த படங்களின் நோக்கங்களை வெளிக்காட்டுவதாக அமைந்திருந்தன என்பதுதான் சிறப்பு. ஆனால் மூன்று நாட்கள் மட்டுமே என்பது இதுபோன்ற விழாக்களில் சில சமயம் திருப்தி தராத அதிர்ச்சியை ஏற்படுத்தும். அந்தந்த ஆண்டுகளில் வந்த இது போன்ற தீவிரமான படைப்புகளை உடனுக்குடன் பார்வையாளர்கள் பக்கம் கொண்டு சேர்த்திருப்பதில் இது போன்ற ஆவணப்பட குறும்பட திருவிழாக்கள் முக்கிய பங்கை முன் வைக்கின்றன.

- சுப்ரபாரதிமணியன்

Pin It