சினிமாவிற்கு இலக்கியம் போன்று சிறந்த மதிப்பும் இறவா வரமும் உள்ளதா.. இலக்கிய ரசனை போல சினிமா ரசனை சாத்தியமா என்றெல்லாம் விவாதிப்பதை விட சினிமா ரசனையை பரந்து பட்ட தளத்திற்கு எடுத்து செல்ல முடியுமா என்ற சோதனை முயற்சியே 13/15-10. 2023 அந்தியூர் வெள்ளிமலை நித்யவனத்தில் நடைபெற்ற திரைப்பட ரசனை பயிற்சி முகாம்.

ஆர்வலர்கள் கலந்து கொண்ட முகாமை இஸ்மாயில் ரபீக் மற்றும் அஜிதன் நெறிப்படுத்தினார்கள். சினிமாவின் தோற்றம் வரலாறு ஊமைப்படம் பேசும்படம் சினிமாவின் போக்குகள் புதிய யதார்த்த வாத படங்கள் நவீன சினிமா திரைமொழி சினிமா இரசனை என சினிமா குறித்த பல அடிப்படை தகவல்களை தொகுத்து விளக்கம் தருவதாக பயிற்சி சிறப்பாக அமைந்தது. முதல் நாள் ரேயின் பதேர் பாஞ்சாலி திரையிடப்பட்டது. படம் குறித்த விரிவான உரையாடல் மறுநாள் காலை தொடர்ந்தது.

படத்தின் சிறப்பை படைப்பாளியின் மேன்மையை புரிந்து கொண்டது மட்டும் அல்ல ஒரு சினிமாவை எவ்வாறு இரசனையுடன் வாசிப்பது என்பதையும் அனைவரும் புரிந்து கொண்டனர். : இரண்டாம் நாள் வணிக படங்கள் கலைப்படங்கள் உலகின் மிகச் சிறந்த இயக்குனர்களின் படங்கள பற்றி அஜிதனின் அறிமுக உரையுடன் பங்கேற்பாளர்களின் கலந்துரையாடல் உடன் பயிற்சி. பின் ருஷ்ய இயக்குனர் ஆந்தரே தஸ்தவேஸ்கியின் Mirror படம் காண்பிக்கப்பட்டது. மரணப் படுக்கையில் இருப்பவரின் நினைவாக கனவுகளாக இழைந்த படம். முதல்முறை பார்த்து தெளிதல் சாத்தியம் இல்லை என்றாலும் படத்தின் அழகியலும் பூடகமான மொழியும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. சினிமா பொழுது போக்கு சாதனமல்ல. அது மனித இரசனையை மானுட விடுதலையை மேம்படுத்தும் கலையாக சிறக்க வேண்டும் என்பதற்கான அக்கறை இந்த முகாம் இது போன்ற தொடர் முயற்சிகள் இரசனை மேம்படுத்தலில் அவசியம் என்பதை அனைவரும் ஏற்றனர்.

நாணல் - குறும்படம் அழகு பாண்டி அரசப்பன்

சுப்ரபாரதிமணியன் பல ஆண்டுகளுக்கு முன்னால் ஆனந்த விகடனில் எழுதிய ” பாதுகாப்பு “ என்ற சிறுகதையை நாணல் என்ற பெயரில் குறும்படமாக்கியிருக்கிறார். அவரின் கதைகள் முன்பே ஆறு குறும்படங்களாகி உள்ளன. அயலான், இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிகுமார், பேரெழில் குமரன், எஸ் எல் முருகேஷ் போன்றோர் அந்தக் குறும்படங்களை இயக்கியிருக்கிறார்கள். இந்த முறை சுப்ரபாரதிமணியனே இயக்கியிருக்கிறார்.

குறும்படம் என்றதும் ஏதோ நீதி போதனை குறித்த வகுப்பு என்று எண்ணிக்கொண்டு அந்தப்பக்கமே போகாமல் புறக்கணித்தவன் நான். குறும்படம் திரைப்படம் இரண்டுமே நமக்கானதல்ல என்று ஒதுங்கியே வந்திருக்கிறேன். ஓரமாய் ஒதுக்கியே வைத்திருக்கிறேன். ஆனால் நானே எழுதியுமிருக்கிறேன் ஒரு நல்ல புத்தகம் ஓரமாய் ஒதுங்கியே கிடக்கிறது ஒருவருக்கு அது வாசிக்க கிடைக்கும் வரை என்று. இருந்தாலும் கனவு அவ்வப்போது குறும்பட விழாக்கள் நட்த்துகின்றது திருப்பூரில். சமீபத்தில் சிக்கண்ணா அரசு கல்லூரி தமிழ்துறை சார்பில் நடந்தேறிய குறும்பட பயிற்சி பட்டறைக்கு ஒரு நல்ல நாளில் செல்ல நேர்ந்ததும் நல்லதுதான். குறும்படம் என்றால் என்ன? குறும்படங்களின் தாக்கம் திரைத்துறையில் என்னமாதிரியான முன்னெடுப்புகளை தரவல்லது. அதன் தாக்கம் குறித்தும் அறிய முடிந்தது.

சரி இந்த படத்தப் பத்தி பேசுவோமா.. .. .

இன்றைய நவீன அசுர வேக திருப்பூர் சூழலில் ஒரு எழுத்தாளனை முன் நிறுத்தி அவனின் உணர்வுகளை இவ்வளவும் சொல்லத்துணிவதுதான் கனவு சுப்ரபாரதிமணியன் போன்ற மீப்பெரும் எழுத்தாளுமையின் நேர்மை என சொல்லலாம். இதில் என்ன நேர்மை தீமை என்றெல்லாம் பேசலாம். ஏதோ தொழில் செய்வோரை கதையின் நாயகனாக காட்டிவிட முடியும் சூழலில் தன்னைப்போன்ற ஒரு எழுத்தாளன் தான் தன் கனவு நாயகன் என எழுதவும் ஒரு துணிவு வேண்டும். அதே நேரம் நான்கே நடிகர்களை வைத்து பதினைந்து நிமிடத்திற்குள் ஒரு கதை சொல்ல கதா விருது வாங்கியவருக்கு தகுதி இருக்கத்தான் செய்யும். நாணல் படர்ந்த இடத்தில் காண்டாமிருகம் வாழ ஆசைப்படுமாம்.

நாணல் வேய்ந்த கூரைகளால் நம் முன்னோர்கள் வீடு கட்டி வாழ்ந்தார்களாம். நாணல் வளையும் வளைந்து கொடுக்கும் வீழாது. வாழும் கரை காத்து வாழவைக்கும் இதை நமது பழமையான இலக்கிங்களும் நமது பன்முகதன்மை கொண்ட படைப்பாளியான சுப்ரபாரதிமணியனும் எடுத்துக்கொண்டதில் குறும்படமாய் முன்னெடுப்பதில் மகிழ்வே.

அடுத்த தலைப்பென்ன என கேட்கும் வில்லனுக்கு ஏற்றதாய் “மடியில சாஞ்சா மல்லிகா” என எழுத்தாளனுக்கே உரிய நக்கல் பேச்சில் அவனுக்கான எதிர்பார்ப்பையும் கூறி ஒரு நகைப்பு முரணை காட்டியுள்ளது சிறப்பு. வில்லன் இப்படித்தான் இருக்கனுமென ஒரு கோட்டர் பாட்டிலை தண்ணி கூட கலக்காமல் குடிப்பதாக காண்பித்தது அதிர்ச்சியை தருகிறது.

கொடூர வில்லத்தனத்தை அடையாளங்காட்டுகிறது. ”சிறுக்கி மக சிக்காமலா போயிருவா“ என்பது தேனி வட்டார வழக்கெனில் அந்த வில்லன் யார்?!.. .. ஒரு கடிதம் எழுத ஆரம்பித்து அதன் மூலம் எழுதி முடிகிற போது கதையும் முடிகிறது. ஒரு எழுத்தாளுமையின் கையில் குறும்படம் சிக்கியது விதி. பெரும்படம் தப்பியது பழைய கதி.

இனி காண விளைவோம் அவரின் திரை மொழி. வசந்தியின் வாழ்க்கை ஒரு பேரனுபவம். பக்கத்து வீட்டு பெண்களோடு பகிர்ந்து கொள்ளும் சிரிப்பு வெறுப்பு பொறுப்பு என அனைத்தையும் ஒரு வயதான எழுத்தாளன் மீது ஒரு இளம் வயதுக்காரி நம்பிக்கைவைத்து அவர் வழி செல்கிறாள் என்பதும். தன் சுய வாழ்க்கையின் பேராபத்துகளை தன் எழுத்தின் ஒரு கதா பாத்திரம்கூட நெருங்கி பாதிப்பை உணரக்கூடாதென அக்கறைப்படுதல் பிரமிப்பு. மனையாளை இழந்த தன் நண்பனுக்கு மறு பிறவி கொடுக்கும் பிரம்மனாக எனக்கு அந்த எழுத்தாளன் தெரிகிறான்?!.. .. உங்களுக்கு.. ..

கதையினூடே கிரிஜா சுப்ரமணியத்தின் கைவண்ணமான மாடி தோட்டமும் அதன் பேரழகும் இந்தக்குறும்படம் பார்ப்பவர்களை குறுந்தொட்டம் போட வைக்கும்.. .. சதிராட்டம் ஆட வைக்கும். பின்னணி இசை சிறப்பு.

ஆட்கள் தேர்வு நேர்மை. சிறுகதையை திரைக்கதை வடிவமாக்கியிருக்கும் கிளமண்ட் விக்டர் இந்தப் படத்தில் பிரதான கதா பாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார் என்ன ஆரம்ப அறிமுகங்களில் ஒரு பாட்டு வைத்திருந்தால் எனக்கும் ஒரு ஒரு பாட்டெழுத வாய்ப்பு கிடைத்திருக்கும். இருந்தாலென்ன அடுத்த முறை எனக்கானதாக இருக்கலாம். இல்லை உங்களுக்கானதாக கூட

(Naanal short film / u tube channel/ crime production channel and subrabharathimanian chl)..

திரை நாவல் : யுவராஜ் சம்பத்

பொதுவா உங்க நாவல் எல்லாமே ஏதாவது ஒரு பொது பிரச்சனையே மையமாக வைத்து அதை சுற்றி பின்னப்பட்டிருக்கும்.. ஆனா இது கொஞ்சம் அப்படி இல்லையோ? எனக்கு ஒரு எண்ணம் தோன்றுகிறது.

கந்துவட்டி கொடுமை பொருந்தாக் காதல் இந்த இரண்டைப் பற்றியும் ஒரு சின்ன லீடு இருந்தது. நான் கூட அதை விவரித்து பின்னாடி நாவல் பயணிக்கும் அப்படீன்னு நினைச்சேன்.

ஆனா நீங்க செய்யல. ஏன்? போதும் அப்படிங்கிற ஒரு மனநிலையா? எவ்வளவு சொன்னாலும் இந்த சமுதாயம் கேட்காது அப்படிங்கிற ஒரு வெறுப்புணர்வா??..

உங்க நாவலை படிக்கிற எல்லாருக்கும் இந்த வித்தியாசம் கொஞ்சம் தூக்கலாகவே தெரியும் அப்படின்னு நினைக்கிறேன்.. .

கதை இரண்டு சர்வதேச திரைப்பட விழாக்கள் இரண்டு இடங்களில்.. திருவனந்தபுரத்திலும் கோவாவிலும்.

சாதாரண மனிதன் திரைப்பட திருவிழாக்களை எப்படிப் பார்க்கிறான் என்கிற ஒரு மாறுபட்ட பார்வை. திரைப்பட விழாக்களுக்கு தவறாமல் செல்கிற அறிவுஜீவிகளின் பார்வையில் இந்தியத் திரைப்படங்கள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன, சர்வதேச திரைப்படங்களை இந்திய திரைப்படங்களுடன் தரத்தில், கதையில், காட்சிகளில், ஒப்பு நோக்குதல் போன்றவை மிக சிறப்பாகவே படம் பிடித்து காட்டி இருக்கிறீர்கள்.

சினிமாத்துறையில் திருப்பூரைச் சார்ந்தவர்களின் பங்களிப்பு கடந்த 50 வருடங்களாக சிறப்பாகவே இருக்கிறது என்பதை உங்கள் நாவலைப் படித்து, அதற்குப்பின்னால் தெரிந்து கொண்டேன்.

எனக்கெல்லாம் மிகப்பெரிய ஆர்வம் இருந்தது. நாமும் ஏதாவது ஒரு நாள் சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு சென்று அந்த விழாக்களை ஏன் அறிவு ஜீவிகள் பெரிதாக கொண்டாடுகிறார்கள், அப்படி அங்கு என்னதான் நடக்கிறது என்று பார்க்க ஆவல் இருந்தது. ஆனால் ஒரு பார்வையாளனாக அங்கு செல்லும்பொழுது எப்படியெல்லம் சிரமப்பட வேண்டும். பயணம் முதல் உணவு வரை 4, 5 தியேட்டர்களுக்கு நடுவே ஓடுகிற ஓட்டம். இந்த திரைப்படத்தை பார்க்க முடியுமா முடியாதா என்கிற ஏக்கம். அதை பார்ப்பதற்கு இரவு 12 மணிக்கு எழுந்து ஆன்லைனில் டிக்கெட் புக் செய்ய வேண்டிய அவலம். இதையெல்லாம் மீறி மொழி தெரியாத சக மனிதர்கள். இத்தனை சிரமங்களுக்கு மத்தியிலும் அங்கு போகத்தான் வேண்டுமா என்கிற கேள்வியை எழுப்பியிருக்கிறது இந்த நாவல்.

வெறுமனே திரைப்பட விழாக்களை மட்டும் முன்னிறுத்தாமல் அந்தப் பகுதி மக்களின் உணவு வகைகள்,, கலாச்சாரம், மொழி, சிறப்பு போன்ற எல்லாவற்றையும் உங்களுடைய பாணியிலேயே மிக அழகாக, இயல்பாக, நாவலைப் படிக்க வாசகனின் மனதில் பதியும்படி எளிமையாக சொல்லியிருக்கிரீர்கள். இது உங்களுடைய வழமையான உத்தி என்றாலும்கூட, முழு நாவலையும் படித்து முடித்த பிறகு எத்தனையோ புது வித உணவுகளையும், அந்த மாநில மக்களின் கலை, பண்பாடு போன்றவற்றயும், சினிமா சம்மந்தபட்ட தொழில்நுட்ப வார்த்தைகளையும் தெரிந்து கொண்டேன்.

அந்த விழாவிற்கு நானே சென்று வந்து அவதிப்பட்ட, பிரபுவாக என்னை உணர்ந்து கொண்டேன். மிகச் சிறப்பாக வந்திருக்கிறது இது. உங்களின் மணிமகுடத்தில் மற்றொரு வைரக் கல்லாக ஜொலிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. வாசகனுக்கும் உலக சினிமா பற்றி பொது அறிவு கொடுத்து இருக்கிறீர்கள்.

தமிழ் நாவல் களத்தில் புதிது இது. நாவல்களின் வகைமைகளில், களங்களில் புதிது புதிதாக எடுத்துக் கொள்ளும் உங்களின் முயற்சியில் திரைப்பட விழாக்களின் கோலாகலம் இதில்

(Thirai novel.. Subrabharathimanian, Rs 300 Zero degree publication , Chennai)

Pin It