தமிழ் இலக்கியச் சூழலில் வட்டார வழக்குப் படைப்புருவாக்கங்களில் விரிவும் ஆழமுமான பங்களிப்பைச் செய்திருப்பவர் எழுத்தாளர் கண்மணி குணசேகரன். விவசாயத்திலும் வாழ்நிலையிலும் மிகவும் பின்தங்கியிருக்கும் அவரது வட்டாரத்தைப் போலவே இலக்கிய உலகிலும் அவரது படைப்புகள் மீதான புகழ் வெளிச்சமும் மிக மங்கலாகவே இருக்கிறது. ஆனாலும் என் மக்களையும் மண்ணையும் படைப்புகளில் ஆவணப்படுத்துவதே எனது வேலை எனத் தீவிரமாகத் தொடர்ந்து இயங்கி வரும் அவரை விருத்தாசலத்திலிருந்து பதினாறு கி.மீ தொலைவிலுள்ள அவரது சொந்த ஊரான மணக்கொல்லை வீட்டில் சந்தித்தோம்.

கவிதையிலிருந்து எழுதத் தொடங்கி பிறகு சிறுகதை, நாவல் என வளர்ந்து வட்டாரச் சொல்லகராதி எனப் பெரும் சாதனைப் படைப்பைச் செய்திருக்கிறீர்கள். அந்தப் படிநிலைகளைப் பற்றிச் சொல்லுங்களேன்.

எல்லோரையும்போல கவிதையில் தொடங்குவது மாதிரிதான் நானும் கவிஞர் பேராசிரியர் பழமலையின் பாதிப்பில் எழுதத் தொடங்கினேன், அந்த சமயத்தில் தங்கர்பச்சானின் ‘வெள்ளை மாடு’ பெருமாள்முருகனின் ‘திருச்செங்கோடு’ போன்ற சிறுகதைத் தொகுப்புகளையெல்லாம் படிக்கும்போது நாமும் சிறுகதை எழுதிப் பார்க்கலாமே என்று ஆசை வந்தது, அப்புறம் சிறுகதைகள் எழுதினேன். அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதுக்குப் பிறகு நாவல் எழுதினேன். அதுவும் நல்லாப் போச்சி. அப்புடி இருக்கையில சங்கமித்ரான்னு ஒரு மார்க்சிய பெரியாரிய அறிஞர் “ஒன்னோட எழுத்துல நிறைய வட்டாரச் சொற்கள் இருக்கு. அதைத் தொகுத்து ஒரு அகராதியா போடலாம்‘ன்னு யோசன சொன்னாரு. ஒரு அம்பதாயிரம் செலவு ஆவும். நானே புத்தகம் போட்டுக் குடுக்கறன்னு” சொன்னாரு.kanmani gunasekaran 500ஆனா நாமளே பத்தாவதுதான் படிச்சிருக்கோம். இதெல்லாம் படித்த மொழி அறிஞர்கள் செய்யவேண்டிய வேலை. இந்த அகராதிலாம் நமக்கு சரிப்படாதுன்னு நான் விட்டுட்டேன். அப்புறம் பெருமாள் முருகனோட கொங்கு வட்டாரச் சொல்லகராதி பார்த்தேன். படிக்கப் படிக்க எனக்கு சில விபரங்கள் புரிஞ்சிது. குறிப்பா ‘தப்புக்கொட்டை’ அப்டின்னா என்ன, அது பேச்சு வழக்கு பயன்பாட்டில் எப்படியிருக்கிறது? இந்தமாதிரியான விளக்கம் இருந்தா போதும். இதைத் தயார் பண்றது ஒன்னும் சிரமம் இல்ல. எளிதான வேலதான்னு எனக்குப் பட்டுது. அப்புறம் நாமதான் கவிதை, கதை, நாவல்ன்னு இந்த மண்சார்ந்த மொழியில எழுதிகிட்டிருக்கோம். நம்மள விடவும் இந்த மண்ணின் சொற்களை வேற யாரு சிறப்பா தொகுத்து செஞ்சிட முடியும்ன்னு ஒரு நம்பிக்கை. மீறி நமக்கு சிக்கல்ன்னு வந்தா ரெண்டு சுழி ‘னா’னாவா மூணுசுழி ‘ணா’ணாவான்னுதான் பிரச்சின வரும். அத யாருகிட்டயாவது குடுத்து சரி பண்ணிக்கலாம். அப்படின்னு அகராதி வேலயில தீவிரமா எறங்கினேன்.

பிரபஞ்சன் ஒரு மேடையில ‘எழுத்துலகத்துல நுழையும்போது யார் முகத்துல நீங்க முழிக்கிறீங்களோ அவங்க எழுத்துமாதிரி உங்க எழுத்தும் ஆகிப்போயிடும்‘ன்னு சொன்னாரு. பிறகு யோசித்துப் பார்த்தபோது நான் பேராசிரியர் பழமலை முகத்துல முழிச்சிருக்கேன். அதனாலதான் என்னுடைய எழுத்து கிராமம் சார்ந்ததாக இருந்துருக்கு. அதுதான் என் அகராதிக்கு மூலகாரணமா இருந்துருக்கு.

அகராதிங்கறது மத்தவங்க சொல்றாப்ல அது ஒரு ஆயாசம் தருகிற மாதிரியான வேலைதான். ஆனா இந்த அகராதியையும் ஒரு படைப்பிலக்கியமாதான் நான் பாக்கிறேன். அதில் வருகிற பேச்சு வழக்கு பயன்பாட்டு வாக்கியங்கள் மக்கள் அனுபவத்தில் புழங்குகிற வார்த்தைகளின் கோர்வை. படிப்பவர்களை உற்சாகப்படுத்தும் வண்ணம் பதிவு செய்கையில் அதையும் ஒரு படைப்பிலக்கியமாகத்தான் பார்க்கிறேன். அதனால் அதை ஆர்வமா என்னால செய்ய முடிஞ்சிது.

ஒரு பல்கலைக்கழகம் செய்ய வேண்டிய வேலை அது. அதனை ஒற்றை ஆளாகச் செய்துள்ளீர்கள். அந்த அனுபவம் பற்றி சொல்லமுடியுமா?

கொங்கு வட்டாரச் சொல்லகராதியின் முன்னுரையில அதைத் தொகுப்பதற்கும் வெளியிடுவதற்கும் எப்படியெப்படியெல்லாம் சிரமப்பட்டார்ன்னு பெருமாள்முருகன் எழுதியிருந்தார். மேலும் கி.ராவோட வட்டாரச் சொல்லகராதியின் விற்பனைப் பின்னடைவையும் அதில் குறிப்பிட்டிருந்தார். அதைப் படித்ததும் மனசுக்குள் ஒரு தேக்கம். கி.ரா. பெரிய எழுத்தாளர். நிறைய நண்பர்கள் தொடர்புல இருக்கறவரு. அதே மாதிரி பெருமாள் முருகன் அவர்களும் பெரிய எழுத்தாளர், கல்லூரிப் பேராசிரியரா இருக்கறவரு. வெட்டிக்கிட்டு வாடான்னா கட்டிக்கிட்டு வர்றதுக்கு நிறைய மாணவர்கள் இருக்கறாங்க. இப்பேர்கொத்த பெரிய கைகளுக்கே இந்த அகராதியை தொகுக்க, வெளியிட இவ்வளவு சிக்கல் இருக்குதுன்னாஞ் நம்மளாம் எம்மாத்திரம். அப்புறம் பேராசிரியர் பழமலைகிட்ட போயி பேசினேன். அவுரு உனக்கென்ன தெரியும். நீ பத்தாவது படிச்சவன். இதெல்லாம் அறிஞர்கள் புலவர்கள் செய்யவேண்டிய வேலை. கதை கவிதை எழுதறமாதிரி சாதாரண வேலையான்னு மூஞ்சக் காட்னாரு.

இருந்தபோதும் என்னோட பதிப்பாளர் தமிழினி வசந்தகுமார் அண்ணன்ட்ட கேட்டுப் பாக்கும்னு ஒரு ஆவலம். அது என்னோட ஆதண்டார் கோயில் குதிரை சிறுகதைத் தொகுப்பு வந்த நேரம். அகராதி தொகுக்கறதப் பத்தி அவருக்கிட்ட கேட்டன். அவரு நீ எதைப் பத்தியும் யோசிக்காத, நம்ம தமிழினியில போட்டுக்கலாம், நீ உடனடியா சொற்களை சேகரிக்கிற வேலயப் பாருன்னு ஊக்கம் கொடுத்தாரு. அவர் கொடுத்த அந்தத் தெம்புதான் அகராதி வேலைய உடனடியா நான் தொடங்கறதுக்கு காரணமாயிருந்துச்சி. அதுக்கு ஒரு மூணு நாலு வழிமுறையை நான் கண்டுபிடிச்சேன்.

நம்ம ஒரு வட்டாரப் படைப்பாளியா இருக்கிறோம். நமக்குத் தெரிஞ்ச சொற்களை முதலில் பதிவு செய்யணும்ன்னு முடிவு பண்ணேன். எங்க ஊரு வித்தியாசமான நிலப்பகுதியை கொண்டது. மத்த ஊரு மாதிரி நெல்லு மட்டும் நடுற நஞ்சைப் பகுதியோ மானாவாரியா மட்டும் பயிர் வைக்கிற புஞ்சைப் பகுதியோ மட்டுமே இல்லாம எல்லா மகசூலும் வைக்கிற மாதிரியான மண் அமைப்பு. நெல்லும் நடுவாங்க. மானாவாரி பயிரும் வைப்பாங்க. எல்லாத்துக்கும் மேல எங்க ஊர்ல முந்திரியும் இருக்கு. மூன்று வகையான விவசாயம் செய்றமாதிரி இருந்ததுல ஒவ்வொரு சாகுபடி பற்றிய சொற்களை சேகரிக்க எனக்கு ஒரு வரப்பிரசாதமா அமைஞ்சது. இவ்வளவு வாய்ப்பா நமக்கு இருக்கறப்ப நம்மளவிட வேற யாரு இத சிறப்பா செய்யமுடியும்ன்னு எல்லா நிலைகளிலும் நான் சேகரிச்சி அகரவரிசைப்படுத்திகிட்டு அதை செராக்ஸ் போட்டு நமக்குத் தெரிஞ்ச நண்பர்கள்கிட்ட ஆர்வம் உள்ளவங்கள்ட்ட ஒரு பிரதியைக் கொடுத்தேன்.

‘இதப் படிச்சிப் பாருங்க, இது இல்லாம எதாவது சொற்கள் உங்களுக்கு தென்பட்டாலும் இதுல எழுதி வைங்க. அதோட இந்த சொல்லுக்கு வேற ஏதாவது கூடுதல் பேரு, விளக்கம் இருந்தாலும் அதையும் எழுதி வைங்க‘ன்னு சொன்னேன். அப்புடி கண்டுபிடிச்ச ஒரு சொல்லுதான் ‘ஒதப்பை.‘ எங்கூர்ல ஒதப்பைன்னா ஆட்டுக்குடலில் செறிபடாது தங்கியிருக்கும் தழைச்சாந்துக்குப் பெயர் ஒதப்பை. அந்த சாந்தை கரப்பான் கடிக்கு காலுறை மாதிரி கட்டி வைத்தியமாக பயன்படுத்துவார்கள். இந்த ஒரு விளக்கம் மட்டுந்தான் என்னுடைய நினைவில் இருந்து எழுதி வைச்சிருந்தன்.

ஆனா வடலூர்ல நம்ம தம்பி ஒருத்தர் சேகரிச்சி சொன்னாரு. ஒதப்பைங்கறது நாற்று வேரில் ஒட்டியிருக்கும் எளிதில் கரைபடாத சேற்றுக்குப் பேருன்னு சொன்னாரு. ‘நாத்து வேருல இருக்குற ஒதப்பையை அலசக்கூட தெம்பத்த பயலுவோ நாத்தறிக்க வந்துருக்காங்க‘ன்னு சனம் கிண்டல் பண்ணும்னு சொன்னாரு. இப்படி நிறைய சொற்கள் நட்பு வட்டாரத்தில் கிடைச்சது. இது ஒரு வகை.

அப்புறம் பெண்கள் மட்டும்தான் பிறந்த மண்ணின் மொழியை விடாமல் எந்த ஊருல கட்டிக்கொடுத்தாலும் கூடவே எடுத்துக்கிட்டுப் போறவங்க. எங்க ஊருக்கு வெளியூரிலிருந்து வாக்கப்பட்டு வந்த மருமகள்கிட்ட கொண்டுபோயி பிரதிய கொடுத்து இதப் படிச்சிப் பாருங்கன்னு சொல்லி அவுங்ககிட்ட சொற்களை புடுங்கறது. இது மற்றொரு வகை.

அப்புறம் நாட்டுப்புறப் பாடல்கள், இலக்கியங்கள். பேரா ஆறு.ராமநாதன் அவர்கள் தொகுத்த தென்னாற்காடு மாவட்ட நாட்டுப்புறப் பாடல்கள் தொகுப்பிலிருந்து சேகரிச்சேன். எழுத்தாளர் ராசேந்திர சோழன், கவிஞர் கரிகாலன் என இங்கத்திய படைப்புகளிலும் தேடினேன். இப்படியே நண்பர்களிட்ட தெரிஞ்சவங்ககிட்ட சேகரிச்சி சேகரிச்சி அடுத்த ஊர்ல என்ன சொல் எப்படியிருக்குன்னு கேட்டு கேட்டு அப்படிதான் அத முடிஞ்சவரைக்கும் சிறப்பா செஞ்சேன்.

பிணம் தூக்கிட்டு போகும்போது சுடுகாட்டு முனையில அதைத் திருப்புவாங்க. மயானம் காக்கும் அரிச்சந்திரனோட எல்லை அது. அந்த மொனையில ‘ஊரு தொழிலாளி’ ஒரு பெருக்கல் குறியை கிழிச்சி அதுல கால்பணம் போட்டு முறத்தால மூடி வைச்சிட்டுப் போவாரு. அதுக்கு எங்கூர்ல ‘அரிச்சந்திரன் மொடக்கு’ன்னு பேரு. செங்குறிச்சிப் பக்கம் அதுக்கு ‘பாடைத் திருப்பி’ன்னு பேரு. இன்னும் சில ஊர்கள்ல அதுக்கு ‘அரிச்சந்திரன் மறப்பு’.

இப்புடி நிறைய சொற்கள் இருக்கு. நாமளாதான் ஒவ்வொண்ணா தேடித்தேடி அந்த இடத்தை அடையணும். இந்த மண்ணில் இன்னும் நிறைய சொற்கள் இருக்கு. சேகரிப்பிற்கு பெரிய அளவுல வட்டார எல்லைகளை எடுத்துக்கிட்டாலும் எங்க ஊர்ல உள்ள சொற்களைத்தான் கடுமையாக யோசிச்சி யோசிச்சி சேகரிச்சன். அதுமாதிரி ஒவ்வொரு ஊரிலும் பகுதியிலும் அளவுகடந்த சொற்கள் இருக்கும். அந்தந்த பகுதியில் மண்மொழியில் விரிவும் ஆழமுமான மனிதர்கள் அங்கங்க இறங்கி ஆய்வு செய்யும்போதுதான் முழுமையா பதிவாகும்.

தமிழில் வேளாண்மை சார்ந்த படைப்புகளே ரொம்பக் குறைவுதான். பன்றி சாணத்தை எருவாகப் போட்டு அல்லல்படும் ஒரு விவசாயியின் அனுபவம்தான் கோரை நாவல். ஒரு சிறுகதையாக எழுத வேண்டிய அந்த உள்ளடக்கத்தை நாவலாக எழுதியிருந்தீர்கள். உங்களுடைய மற்ற நாவல்களுக்கும் இதற்குமான வரவேற்பு எப்படி இருந்தது?

ஒரு படைப்பாளிக்கு உண்மையிலேயே ஒரு மகிழ்ச்சி என்னன்னா அவன் என்ன மனசில வச்சிட்டு எழுதினானோ அதைப் படித்துணர்ந்து ஒருவர் அதுபற்றி கேட்கும்போதோ சொல்லும்போதோதான் பெரிய மகிழ்ச்சி. உண்மையாலுமே அத ஒரு சிறுகதயா எழுதணும்ன்னுதான் எனக்கு ஆசை. அது ஒரு சிறுகதைக்கான கருதான். ஒரு சோதனை முயற்சியா நாவலா விவரிச்சிப் எழுதிப் பார்ப்போம்ன்னு எனக்கு ஒரு ஆசை.

அப்பதான் நான் எழுத்தாளர் க. ரத்தனத்தோட ‘கல்லும் மண்ணும்‘ன்னு ஒரு புத்தகம் படிச்சிருந்தன். 112 பக்கத்துல சின்ன நாவல். அதுல ஒரு கிழவன், ஒரு பையன். அந்தக் கொல்லையில ஒரு பாறை இருக்கும். அந்தப் பாறையை அகற்றி நிலமா ஆக்கணும்ன்னு கிழவனுக்கு ஆசை. அந்தப்பக்கம் நிறைய மலைகளை உடைப்பாங்க. மலையை ஒடைக்கறவனுக்கு கொல்லை நடுவுல இருக்கற இந்தப் பாறைய உடச்சி நிறைய பணம் சம்பாதிக்கலாம்ன்னு நினைப்பு. இரண்டுக்கும் இடையில் அந்த நாவல் சிறப்பா ஓடும். ஒரு சின்ன விசயத்தை வச்சி இப்பிடி நாவலா எழுதியிருக்காங்களே நாமளும் எழுதிப் பாப்பும்னு அந்தப் புத்தகம் ஒரு நம்பிக்கையை எனக்கு கொடுத்தது.

அதுக்கு தகுந்தாப்ல அப்பதான் குடும்பத்துல எனக்கு தனியா பங்கு பாகம் பிரிச்சி நிலம் ஒதுக்கியிருந்தாங்க. எனக்கு ஒதுக்குன நிலத்துல பூராவும் கோரை. மிக மோசமான எளிதில் அழிக்கவே முடியாத அந்த கோரைக்கிட்ட நானும் என்போன்ற மற்றவர்களின் அனுபவங்களையும் எழுதணும்ன்னு தோணுச்சி.

விவசாயிக்கு பிரச்சினையாவே இருக்கற அந்த கோரைய அவ்வளவு எளிதா இன்னமும் ஒன்னும் பண்ணமுடியாம இருக்கறதுங்கறதுதான் உண்மை. இப்பக்கூட கோரை கரம்புல பன்னி நோண்டுறத நிறைய பார்க்கலாம். பன்னிய பட்டியில போட்டு அடைச்சி வச்சிருந்தாக்கூட முறிச்சியெடுத்துக்கிட்டுப் போய் கோரக் கொல்லையில நோண்டத்தான் செய்யும். இன்னமும் எனக்கு ஒதுக்கன அந்தக் கொல்லை கோரையாதான் இருக்கு. பன்னி நின்டிக்கிட்டு பன்னியும் கோரையுமாதான் கெடக்கு. அத எழுதி முடிச்சதும் கோரையுடனான அனுபவப் பாடுகளை உள்ளடக்கிய ஒரு சின்ன விசயத்தையும் நாமளும் விரிவா எழுத முடியும்ங்கறது தெரிஞ்சிச்சி. அந்த நாவலின் முழுகதையையும் மனசுல வைச்சி ஒன்லைன் ஆர்டர்ல பண்ணி முதல் அத்தியாயத்த கடைசியிலும் கடைசி அத்தியாயத்த மொதல்லியுமா மாத்தி மாத்தி எழுதிகிட்டுப் போனன்.

நம்ம வசந்தகுமார் அண்ணன் அவரோட நண்பர் பஷீர்ட்ட கொடுத்து படிக்கச் சொன்னதுல அவுரு நல்ல நாவல்னு சொல்லி அப்படியே அச்சுக்கு அனுப்பிட்டாரு. எப்பவுமே வாழ்வியல் சிக்கல்களைத்தான் எழுதணும்னு சொல்ற வசந்தகுமார் அண்ணனுக்கு அத இன்னும் எடிட் பண்ணி கொண்டுவந்துருக்குனும்னு சொல்லிக்கிட்டு இருப்பாரு. ஆனாலும் அதையும் தாண்டி கோரை நாவலுக்கென்று நிறைய வாசகர்கள் இப்பவும் இருக்காங்க.

உங்க படைப்புகளில் பெரும்பாலும் பெண்கள் அல்லலும் ஆற்றாமையும் துன்பமும் துயரமுமாகவே இருக்கிறார்களே ஏன்?

பொதுவாக பெண்பிள்ளைகள் அரைப் பாவாடை கட்டும்போது ஒரு கனவு இருக்கும். முழுப்பாவாடைக்கு மாறும்போது ஒரு கனவு இருக்கும். தாவணி கட்டும்போது இளவரசர்களா கனவுல வந்துகிட்டுருப்பாங்க. அதுக்கப்புறம் சொந்தக்காரன் அவன் இவன்னு எவனாவது ஒருத்தனுக்கு கட்டிக் குடுத்துடுவாங்க. கையோட குழந்தை குட்டின்னு ஆயிட்டுன்னா அவுங்க கனவுக்கு எதிரும் புதிருமான ஒரு வாழ்க்கையா மின்னால நிக்கும். அதனால பெண்களைப் பாத்தாலே ஒரு இரக்க மனநிலைதான் எனக்கு வரும். அவங்க பாடுகளை நாம தொடர்ந்து பாக்குறோம். அவுங்க அளவுக்கு துயரங்களை குடும்பங்களில் சந்திச்சது யாருமே கிடையாது. அந்த அடிப்படையில்தான் பெண்கள் படுற இன்னல்களை என்னுடைய படைப்புகள்ல எழுதணும்ன்னு நினைக்கிறேன்.

அப்புறம் பெண்கள் கூட்டம்ன்னா அவங்ககிட்ட போயி சகஜமா பேசறது எனக்கு ஒரு இயல்பு. எனக்கு இருபது வயசா இருக்கறப்ப எங்க அம்மா இறந்துட்டாங்க. அப்ப தெருவுல இருக்குற பொம்பள சனங்கதான் அரவணைச்சி கொண்டு போனாங்க. அதனாலேயே என்னுடைய படைப்புகள் எப்போதுமே பெண்கள் சார்ந்துதான் இருக்கும்.

kanmani gunasekaran 375அப்புறம் சந்தோஷ கணங்களை எழுதுவதில் எனக்கு உடன்பாடில்லை. அஞ்சலை நாவலில் சொல்லியிருப்பேன். எரியாமல் புகைஞ்சிகிட்டிருக்கிற கொள்ளியை எழுதுறதுதான் என் வேலை.

எரிஞ்சிகிட்டிருக்கிறதப் பத்தி எழுத வேண்டியதில்லை.

அஞ்சலை மாதிரியான துயர வாழ்வை எழுதும்போது உங்கள் மனநிலை எப்படி இருக்குமென்று சொல்ல முடியுமா?

ஒவ்வொரு அத்தியாயத்திலும் அஞ்சலை கூடவே வந்துகிட்டே இருக்கும். அந்த வாழ்வியல் சம்பவத்தை நிலத்துல வேலை செஞ்சுகிட்டிருக்கும்போது அந்தப் பொண்ணு கண்ணீரும் கம்பலையுமா ஏங்கிட்ட சொல்லிச்சி. அதுக்கப்புறம் நேரடியா போயி பஞ்சாயத்துல்லாம் பேசியிருக்கோம். அதனால அதுகூட பயணிக்கிறப்ப கூடப் பொறந்த ஒரு பொறப்புக்கு நடந்த ரத்தமும் சதையுமான வலிகளை, பாடுகளை எப்படி நம்ம உணர்கிறோமோ அப்படித்தான் அத உணர்ந்து எழுத முடிஞ்சது.

உங்கள் வட்டாரமே நாட்டார் தெய்வ வழிபாடு அதிகளவு விளங்கும் இடம். அதைப் பற்றி கூறுங்களேன்.

முன்பைவிடவும் திருவிழாக்கள் கூடியிருக்கு. ஆனால் அந்த தெய்வம், இறை பற்றிய பிரியம், ஈர்ப்பு குறைந்து போயிருக்கு. எல்லா ஊர்களிலேயும் ஒரு கொண்டாட்டமா ஆயிருக்கு. நேத்து ராத்திரி கூட பாத்தன். பாட்டு கச்சேரின்னு நிக்கறதுக்கு இடமில்லை. அவ்வளவு கூட்டம். இன்னும் சில இடங்கள்ல சாமிக்கே காது கூசும் குத்தாட்டம், பாடல். நீங்க வர்ற வழியில விருத்தாசலத்தை ஒட்டி ஒரு பெரிய அய்யனார் கோயில் இருக்கு. கண்டியங்குப்பத்து அய்யனார் கோயில்ன்னு சொல்லுவாங்க. அய்யனாருக்கு எப்பவும் உலக்கைச் சத்தம் உரலு சத்தம் கேட்கவே கூடாது. கொல்லைவெளியில்தான் இருக்கும். கண்டியங்குப்பமும் பக்கத்துல இருந்த விருத்தாசலம் நகரமும் வளர்ந்து வளர்ந்து நெருக்கமா கோயிலச் சுத்தி வீடு கட்டிட்டாங்க. இப்ப அய்யனார் கோவில்ன்னு சொல்றதே சனங்களுக்கு இடையூறா இருக்கு. அய்யனாரா அது இருக்கக்கூடாதுன்னு அந்த சாமி பேரையே வெண்ணுமலையப்பர்ன்னு மாத்திட்டாங்க. இப்படியான நெருக்கடிகளில்தான் நாட்டார் தெய்வங்கள் இருக்கு.

சமீப வருடங்களாக நாட்டார் தெய்வங்களை சைவமயமாக்கல் செய்யும் முயற்சி ஆங்காங்கே நடந்து வருகிறதே? இங்கு எப்படி?

பொதுவாவே அய்யனார் எப்பவும் கறி சாப்பிடமாட்டாரு. அவருக்கு காவலா இருக்குற வீரனாருக்குதான் கறி படையல். இப்ப அம்மன் கோவில்லயே கூழ் ஊத்தமாட்டறாங்க. சோறாக்கி அதுவும் பொட்டலம் கட்டி கொடுக்குறாங்க. அதுமாதிரி வேற ஒரு கலாச்சாரத்தை நோக்கிதான் போயிட்டிருக்கு. அதுக்கு முதலீடு பண்றவன் கீழ்மட்டத்து ஆளா இல்லாம பெரிய பணக்காரனா செய்றபோது சைவம் அப்டி இப்டின்னு போகுது. அய்யனார் கோயில் போனாலே கறி ரசம் குடிக்கணும்ங்குற எண்ணம்தான் வரும். இப்ப ரசம்ங்கிற வார்த்தையே அத்துப்போச்சி.

தமிழ்ப்புனைவுகளில் அதிகம் பேசப்படாத தெருக்கூத்து, கூத்துக் கலைஞர்கள் பற்றி எழுதியிருக்கிறீர்கள். அதைப் பற்றி சொல்லுங்கள்.

நடுநாடு என்று சொல்லப்படும் இந்தப் பகுதியில் முந்தைய தலைமுறையில் ஒவ்வொரு குடும்பத்துல இருக்கிற தாத்தா, அப்பான்னு கட்டாயம் எதாவது ஒரு வேஷம் கட்டி கூத்து ஆடியிருப்பாங்க. அப்பிடித்தான் எங்க அப்பா தாத்தான்னு ரெண்டு பேருமே கூத்து ஆடுனவங்க. விவசாயம் பண்ற மாதிரி தெருக்கூத்தும் அவுங்களுக்கு ஒரு பயிர்தான். கோடைகாலத்து இரவுகளில் அவர்களாக புருதி எழுதி மனப்பாடம் பண்ணி சமா போட்டு ஆடுவாங்க. அதுக்கு ‘கெண்டை குஞ்சி சமா’ன்னு பேரு. கத்துக்குட்டிகளான அந்த கெண்டை குஞ்சி சமா அக்கம்பக்கத்து ஊர்களுக்குப் போய் ஆடும். மக்களும் விரும்பிப் பார்ப்பாங்க.

இப்படியான மக்களின் கலையை ஒரு படைப்பாளியா நின்னு எழுதறதுல எனக்குக் கூடுதலான மகிழ்ச்சி. இப்பவும் கூத்து பாக்கறதுன்னா மத்தவங்களாட்டம் அங்க நின்னு இங்க நின்னு பாக்குற வேலலாம் நமக்கு இல்ல. பாயை எடுத்துப்போயி சபைக்கும் முன்னால விரிச்சி புள்ளைக்குட்டின்னு குடும்பத்தோட கும்பலா குந்திப் பாத்தாதான் மனசுக்கு ஒரு திருப்தி. இப்பிடி எங்க அப்பா தாத்தான்னு அவுங்க வழியா வந்த இந்த ஈடுபாடுதான் ஒரு படைப்பாளியா இருக்கற என்னை அதையெல்லாம் அச்சு அசலா ஆவணப்படுத்த வைக்கிது.

இன்னைக்கு கூத்து நிலைமை எப்படி இருக்கிறது?

இன்னைக்கும் நிறைய கூத்து சமாக்கள் இருக்கு. 25 ஆயிரம் 30 ஆயிரம் செலவு பண்ணி கூத்து வைக்கிறாங்க. எல்லா சமாக்களுக்கும் வருஷத்துக்கு குறைந்தபட்சம் 150 நாள் 200 நாள் கூத்தும் கைவசம் வைச்சிருக்காங்க. ஆனால் பார்வையாளர்கள் வருகை வெகுவாக குறைந்துவிட்டது. மீறியும் வருபவர்கள் கூத்தில் ஆர்வமில்லாமல் வந்து குந்திக்கொண்டு ஊரு கதை உலகக் கதையை பேசினபடி சலசலப்பும் இரைச்சலுமாய் நாடகம் ஆடறவங்களுக்கு பெரிய இடைஞ்சல். சைலேன்ஸ், சத்தம் போடாதேன்னு கட்டியக்காரன் கத்தி கத்திஞ் இதனாலேயே பாட்ட தள்றது, கதைய நின்ன எடத்துல சுருக்கி சொல்றதுன்னு தெருக்கூத்து ஒரு நெருக்கடியில் வந்து நிற்கிறது.

ஆனாலும் இந்த மண்ணின் ரத்தத்தில் ஊறிய கலையாக இந்த தெருக்கூத்து இருப்பதால் தவிர்க்க இயலாமல் புதிய புதிய இளைஞர்களும் வந்துகிட்டிருக்காங்க. ஆனாலும் பார்வையாளர்கள் அம்பது பேர் நூறு பேருன்னு குறைஞ்சிட்டாங்க. அந்தக் காலத்துல மேல்பாதி மாணிக்கம், ஞானமேட்டு செல்வராசு, கொச வேலாயுதம், வேகாக்கொல்லை சின்னதுரைன்னு கூத்து வச்சா அந்தப் பக்கமே கடல் மாதிரி கூட்டம் இருக்கும். மறைவுல நாலாகடையும் ஒண்ணுக்க வுட்டு மறாநாளு நாத்தமா நாறும். அவ்வளவு சனம் கூடும்.

இந்த வட்டார மக்களின் வாழ்க்கையைத்தான் திரும்பத் திரும்ப எழுதுகிறீர்கள். அந்த சனங்களுக்கு உங்க எழுத்து எந்தளவு போய்ச் சேர்ந்திருப்பதாகச் சொல்ல முடியும்?

எனக்கு முழுசுமா தெரிந்த இந்த முந்திரிக் காட்டுப் பகுதியைத்தான் தொடர்ச்சியா எழுதிகிட்டிருக்கேன். ஆனா எனக்கு இங்க பெரிய கவனம் கிடையாது. திருச்சிக்கும் அங்காண்ட நெல்லை, மதுரை பகுதிகளில் எனக்கு இருப்பதுபோன்று இந்தப் பகுதியில் வாசிப்பு கிடையாது. இங்க விவசாயம்தான் பிரதான தொழில். வாசிப்பு, எழுத்துலாம் ரெண்டாம் பட்சம் தான். மீறி படிச்சாலும் நல்லாருக்குன்னுகூட சொல்ல மாட்டாங்க. என்னுடைய எழுத்து இவுங்களுக்கு போய் சேந்துருக்குன்னு சொல்றதுக்கு எதுவும் இல்ல. ஒரு ஆவணமா நான் பதிவு பண்ணிட்டிருக்கன்.

நடுநாடு என்று நீங்கள் வரையறுத்துக் கொண்ட இந்தப் பகுதியிலிருந்து நீங்கள், ராசேந்திர சோழன், இமையம், கரிகாலன் போன்ற குறிப்பிட்ட படைப்பாளிகளைத் தவிர பெரிதாக வேறு யாரும் உருவாகவில்லையே? அதற்கு என்ன காரணமெனக் கருதுகிறீர்கள்?

பொதுவாகவே வறட்சி இருக்கிற இடத்தில்தான் ஏன் நமக்கு வறட்சியாச்சின்னு யோசிப்பான். இந்தப் பகுதியில் நல்ல உணவு. இங்க வவுத்துப் பஞ்சமே எங்கயும் இருக்காது. வயிறு ரொம்பினாலே தூங்கிப் போயிடுறான் நம்ப ஆளு. அதுனால எழுத்துங்கறது பெரிய அளவு வரல. நானும் எட்டுன தொலைவுக்கு பாக்கிறேன். நமக்குப் பின்னாடி யாராவது வருவாங்களான்னு, நம்பிக்கை தர்ற மாதிரி ஒருத்தரும் தென்படுல.

கல்யாணம் பண்ணா ஒரு தோஷம் போயிடும். அது ‘சந்தோஷம்’னு கிண்டலுக்கு சொல்லுவாங்க. அதுமாதிரி கொஞ்சநஞ்சம் எழுதிகிட்டு இருக்கறவங்களும் கல்யாணம் பண்ணா எதையாவது விட்டுத்தான் ஆவணும்னு நினைக்கிறப்ப பட்டுன்னு எழுதறத விட்டுர்றாங்க. இந்த மண், மொழி, நிலம் சார்ந்த பிரச்சினைகள்தான் ஒரு படைப்பாளியை தொடர்ந்து எழுத வைக்கிது. அந்த அடிப்படையில் ரொம்பக் குறைவாதான் எழுத வர்றாங்க.

கவிஞர் பழமலய் வழிவந்தவர் நீங்கள் என்று சொல்கிறீர்கள். அவருக்குமே தமிழ்ச்சூழலில் பெரிய கவனமில்லையே? அதேபோல ஜெயமோகன், நாஞ்சில் நாடன் தவிர வேறு எந்த எழுத்தாளரும் உங்களைக் குறிப்பிடுவதாகத் தெரியவில்லையே, அதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?

பழமலை அளவுக்கு தமிழ்க் கவிதையை திசை திருப்பி மண்சார்ந்த புதிய போக்கில் நிலை நிறுத்தியவர் வேறு எவருமில்லை. மண்ணின் மொழி, நடை என அவருக்குப் பின்னால் ஒரு பெரிய பட்டாளமே கவிதை எழுத வந்தது. அவரைத் தமிழ்ச்சூழல் கொண்டாடத் தவறியதாகத்தான் சொல்லவேண்டும். இயல்பாகவே எழுதுவதிலும் வாசிப்பிலும் பின்தங்கியிருக்கிற வன்னியர் சமூகமும் அவரைக் கொண்டாடாமல் விட்டுவிட்டது.

எனக்குமே நல்லா தெரியுது. தமிழின் மிக உச்சபட்ச விருதுகள் வாங்கியிருக்கும் எழுத்தாளர்களுக்கு இணையாகவோ அல்லது அதையும் தாண்டியேகூட நான் எழுதியிருக்கிறேன். அதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. யாரும் பெரிதாகக் கண்டுகொள்ளாததற்கு நான் பிறந்த இந்த ‘சமூகம்’தான் காரணம். அதற்காக நான் அதை வெளிப்படுத்தாமல் இருக்கவும் முடியாது. வெளிப்படுத்தாமல் நான் நடிக்கவும் முடியாது. இதையெல்லாம் உள்வாங்கிப் போகிற மனநிலை எனக்கு வந்துவிட்டது.

நம்ம வேலை எழுதி ஆவணப்படுத்தி வச்சிட்டிருக்கறதுதான். நான் எழுத வந்த காலத்தில் சொன்னதுபோல என்னைக்காவது ஒரு பழைய புத்தகக் கடையில நம்ம புத்தகத்தைப் படிக்கிற ஒருத்தன் அந்தக் காலத்துலயே நம்ம வாழ்க்கையை எவனோ ஒருவன் எழுதியிருக்கான்னு சொல்லுவான். அந்த ஒருத்தனுக்காகத்தான் நான் எழுதிகிட்டிருக்கேன்.

பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்ட நிலையிலும் தொடர்ந்து தீவிரமாக எழுதி வருகிறீர்கள், அது எப்படி சாத்தியப்படுகிறது உங்களுக்கு.

என் அளவுக்கு வாழ்க்கை சிக்கல்களைச் சந்தித்தவர் யாரும் இருக்க முடியாது. அப்பா இறந்துட்டாரு. எங்க அம்மா தற்கொலை. என் அண்ணன் தற்கொலை. என் (முதல்) துணைவியார் தற்கொலை. இதிலிருந்தெல்லாம் மீண்டு வருவதற்கு என்னுடைய துயரப்பாடுகளை கடந்து இந்த எழுத்துதான் எனக்கு உதவியது. மேலும் இந்த முந்திரிக்காட்டு சனங்களை எழுதறதுக்கு நம்மளைத் தவிர்த்து இங்க யாருமே ஆளு கிடையாது. நம்பதாண்டா நம்ம வாழ்க்கைய எழுதணும் என்று கூடுதல் ஆர்வமும் உரிமையும் என்னைத் தொடர்ந்து எழுத வைக்கிது.

அரசுப்பணியில் இருப்பதும் ஒரு காரணம். நிலையான வருமானம் இருக்கறதாலதான் தொடர்ச்சியா எழுத முடிஞ்சிது. அடுத்து இந்த மக்களின் ஊடாக சுக துக்கங்களில் பங்கெடுத்துக்கொண்டு நாம வாழ்ந்துகிட்டு இருக்கோம்ங்கறதும் முக்கியம்.

காது குத்துவது, மூக்கு குத்துவது எல்லாம் ஒரு குறிப்பிட்ட சாதியினரின் வேலையாக இருக்கும் நிலையில் நீங்கள் இதில் ஈடுபடுவது எப்படி?

பத்திருவது வருசத்துக்கு முன்னாடி எங்க பங்காளி வீட்டு பாப்பா ஒன்னு வெளிய போய் மூக்கு குத்தறதுக்கு பயந்துகிட்டு கார முள்ள வச்சி தானாவே குத்திக்க முயற்சி பண்ணிட்டுருந்துச்சி. பக்கத்துல இருந்த நான் பட்டுன்னு அந்த முள்ள புடுங்கி வெடுக்குன்னு குத்திவிட்டுட்டேன். அப்பறமா அந்த அண்ணங்கிட்ட போனா வலிக்காம குத்திவுடும்னு பேரா போயிட்டுது. கடைசியில செப்பு ஊசி வைச்சி நிரந்தரமா குத்திவுடறாப்ல ஆயிட்டுது. காயம் ஆகாதபடிக்கு நாரத்தை முள்ளால்தான் ஆரம்பத்துல குத்துவேன். பிறகு செப்பு ஊசின்னு போயி இப்பலாம் நவீனமாக venflane ஊசிகள்தான். பெரும்பாலும் மூக்கு மட்டும்தான் குத்தி விடுவேன். ‘காது குத்து’ நிகழ்வை கோயில் குளங்களில் வைத்து விழாவாக செய்ய முடியாத ஏழைபாழைகள் என்னிடம் வருவார்கள். வீட்டோடு சரி.

சொந்தக்கார சனங்கள் அதுவும் எங்கள் குலதெய்வம் முதனை செம்பையனார் கோயிலில் என்றால் மட்டும் போய் குத்திவிட்டுட்டு வருவேன். இது நானா கத்துகிட்டு செஞ்சது. யார்கிட்டயும் காசு வாங்கிட்டு குத்த மாட்டேன். இதனால காது குத்துவதை தொழிலா செய்யிறவங்களோட வருமானத்தை சின்ன அளவில் தடுக்கிறமேன்னு ஒரு மனசு வருத்தமாதான் இருக்கு. ஒரு படைப்பாளி கவிதை எழுதுறான், கதை எழுதறான். அதோட காதும் குத்துறான்னு ஊரு மெச்சிக்க சொல்லிக்க வேண்டியதுதான். இதுவும் மக்களின் ஊடாக வாழ்தல் என்கிற கூடுதல் பலம்தான் எனக்கு.

இத்தனை காலத்தில் ஒரு எழுத்தாளராக எப்படி உணர்கிறீர்கள்?

நான் பொதுமொழியில் எழுதுகிற எழுத்தாளனாக இல்லாமல் வட்டார வழக்கு எழுத்தாளரா இந்த மக்கள் மொழியைப் பதிவு செய்திருக்கிறேன். இங்கு உள்ள பாடல்கள், கதைகள் இவற்றையெல்லாம் பொதுவெளியில் சொல்லிக்கிட்டு வருகிறேன். இத்தனை காலத்தில் எழுதிப் பெரிதாக சம்பாதித்தோம் என்பது இல்லாமல் பெரியளவில் மக்களின் மொழியைப் பதிய வைத்திருக்கிறேன் என்பது பெரும் நிறைவாக இருக்கிறது. இப்பவும் நடுநாட்டுக் கதைப்பாடல்கள், நடுநாட்டு ஒப்பாரிப் பாடல்கள், நடுநாட்டு சம்பந்தப் பாடல்கள் சேகரிச்சிட்டு இருக்கேன்.

சம்பந்தப் பாடல்கள்ன்னா என்னன்னு சொல்லுங்களேன்.

கல்லூரியில ரேகிங் இப்பல்லாம் வன்முறையா மாறிடுச்சி. தொடக்கக் காலத்துல முதல் அறிமுகத்தை கேலிப் பகடி செய்து ஒரு நெருக்கத்தை உருவாக்குகிற பழக்கமாதான் அது இருந்துருக்கும். அப்படி ஒரு முதல் அறிமுக கேலிப்பகடியா நடுநாட்டில் சம்பந்தப்பாடல்கள்னு இருக்கு. மாப்பிள்ளை வீட்டு சனமும் பொண்ணு வீட்டு சனமும் எதிரெதிரில் வரிசையில் உட்கார வச்சி தலைமயிரைப் புடிச்சி பாட்டுப்பாடி ரெண்டு பேரும் மோதிப்பாங்க.

மாங்காப் பழமே

மணக்கொல்லை சம்பந்தமே

இந்த சம்பாப் பிரிஞ்சாலும்

இந்த சம்பந்தம் பிரியக்கூடாது

ரொம்ப சந்தோஷமா இருக்கும். பாடல்களில் கேலி கிண்டல்களும் இருக்கும்.

ஓட ஒடப்பே

ஒதைபட்ட சம்பந்தமே

இந்த சம்பாப் பிரிஞ்சாலும்

இந்த சம்பந்தம் பிரியக்கூடாது

திருமணத்திற்கு பின்னால் சண்டை என்றால் யார் யாரிடமெல்லாம் அதுபற்றி கேட்க வேண்டும் என்கிற பாடலும் உண்டு.

கனகராணிய பெத்தன்.

கல்லு வூட்டுல வளர்த்தேன்

என் கனகராணிக்கு ஒன்னுன்னா

நான் கட்டுனவனத்தான் கேப்பேன்.

மகராணியப் பெத்தேன்

மாடி வூட்டுல வளத்தேன்.

என் மகராணிக்கு ஒன்னுன்னா

என் மாமியாரத்தான் கேப்பேன்.

இப்படி நிறைய பாடல்கள் இருக்கு. வாய்ப்பு கிடைக்கிற இடங்கள்ல சொல்லி பதிய வைச்சிக்கிட்டு இருக்கறன்.

அடுத்து என்ன எழுதுவதாகத் திட்டம்?

‘நடுநாட்டுப் பாடல்கள்’ இந்த ஆண்டுக்கான வெளியீடாக வரும். நடுநாட்டுப் பாடல்கள், ஒப்பாரி, சம்பந்தப்பாட்டுகள்னு சேகரிப்பு வேலைகள் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. உடனடியாக செய்யவேண்டிய வேலை இது- ஏனென்றால் இதையெல்லாம் தொண்டைக்குழிக்குள் வைத்திருக்கும் மனிதர்களில் பலர் போய்ச் சேந்துகிட்டிருக்காங்க. பொழுது போறதுக்குள்ள எதாவது பதிவு செஞ்சிடணும். நடுநாட்டுக் கூத்து வாத்தியார்களைப் பத்தி எழுதற யோசனையும் இருக்கு. எப்பவும் போல முதனை செம்பையனார் கூட இருக்கணும்.

இன்றைய தமிழிலக்கிய சூழல் பற்றிக் கூறுங்கள்

பத்திருபது ஆண்டுகளுக்கு முன்பிருந்த விரிவான ஆழமான இலக்கிய நிலை இப்போது குறைவாகத்தான் இருக்கு. நான் எழுத நுழைஞ்ச காலத்தில் எனக்குப் படிக்கக் கிடைத்த கதைகள் அளவுக்கு இப்போது வளமாக இல்லை. ஆஹா ஓஹோ என இலக்கிய நிகழ்வுகளும் கொண்டாட்ட கூடுகைகளாகத்தான் இருக்கின்றன.

வாழ்க்கையும் சுருங்கிக்கொண்டிருக்கிறது. வாழாதவர்களால் ஒருபோதும் சிறப்பாக எழுதிவிட முடியாது. வாசகப் பார்வையில் நின்று தன் எழுத்தை சரி செய்யக்கூடிய நிலையிலான எழுத்தாளர்கள் இன்று இல்லை. எழுத்தாளர் பார்வையில்தான் புத்தகங்கள் வருகின்றன. எழுதியவுடன் புத்தகம் போடணும்ன்னு நினைக்கிறதாலதான் ரொம்பநாள் நிக்கமாட்டேங்குது. யாராவது படிக்கிறவங்ககிட்ட கொடுத்து அந்தப் படைப்பை மேம்படுத்தி வெளியிடவேண்டும். அது தான் சரி.

கடைசியாக உங்கள் பகுதியின் அடையாளமாக திறந்த வெளியாகவே தெரியும் முந்திரிக்காடுகளைப் பற்றி சொல்லுங்கள்.

இங்க இருக்கிற முந்திரிக்காடுகள் பாதிக்கும் மேல் அரசாங்கத்துக்கு சொந்தமானவை. 1940 களுக்கு பின்பகுதியில்தான் முந்திரி இங்க வருது. அதுக்கு முன்னாடி வெறும் காடுதான். நிலமற்ற இங்கத்திய மனிதர்களைக் கொண்டு காட்டத் திருத்தி நீங்களே பயிர் வைச்சிக்குங்க. நாங்க கொடுக்கற முந்திரிக் கன்ன நட்டு வளர்த்துக்குடுங்கன்னு சொல்லிதான் காட்ட அழிச்சி முந்திரி போட வைச்சிருக்காங்க. எந்தெந்த வருசத்துல அங்க இருக்கிற காட்டுப் பகுதி அழிக்கப் பட்டதோ அந்த வருசத்து பெயரிலேயே இன்னமும் 48 காடு, 46 காடுன்னு வழங்கிக்கிட்டு இருக்கு. ஆரம்பத்துல முந்திரி மரங்கள திருட்டுபடியா வெட்டிக்கிட்டுப் போயி விப்பாங்க. கார்டு, வாச்சர், ரேஞ்சர்னு பாதுகாப்பும் பலமா இருக்கும். இல்லாததால முன்னல்லாம் முந்திரி மரத்தை வெட்டி விறகா விப்பாங்க. இப்பல்லாம் அந்த வேலை நடக்குறதில்ல. அரசாங்கமே தனியாருக்கு காடுகளை ஏலம் விட்டுவிடுகிறார்கள். ஏலம் எடுக்குறவங்க அவங்கவங்க காட்டப் பாதுகாத்துக்க வேண்டியதுதான். இந்தக் காடுகள்ல மயில்கள், மான்கள், பன்றிகள் நிறைய உலவுவதைப் பார்க்கலாம். ஊடாக நாங்களும் தான்.

கண்மணி குணசேகரன்

நேர்காணல்: ஜி.சரவணன்

Pin It