உலகில் தென்கிழக்காசியாவின் வரலாற்றினை அறிவியல் முறையில் ஆய்வு செய்த வரலாற்று அறிஞர்களில் இலங்கையினைச் சேர்ந்த ஆர்.ஏ.எல்.எச்.குணவர்த்தனா (RALHG) முதல் வரிசையில் வைக்கப்பட வேண்டியவர். இலண்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஏ.எல்.பஷாம் அவர்களின் வழிகாட்டுதலில் முனைவர் பட்டம் பெற்ற அவர் சிங்களம், பாலி, பிராகிருதம், ஆங்கிலம் போன்ற மொழிகளில் நன்கு தேர்ந்தவர். தமிழ்மொழிச் சான்றுகளை புரிந்து கொள்வதில் திறம் கொண்டவர். தம் ஆய்வுக்களமாக தென்கிழக்காசியாவின் தொல்லியல், கல்வெட்டியல், இலக்கியம், நீர்ப்பாசனத் தொழில்நுட்பம், அரசுருவாக்கம் போன்றவற்றை தெரிவு செய்தார். இத்துறைகளில் அறிவியல்பூர்வமான முடிவுகளை வெளியிட்டார். பெருமளவில் இலங்கையிலும் இந்தியாவிலும் களஆய்வுகளை மேற்கொண்டார். இலங்கையின் கண்டிநகரில் அமைந்துள்ள பேராதனை பல்கலைக்கழகத்தில் வரலாற்று பேராசிரியராக பணியாற்றினார். அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் செயற்பட்டார். ஆக்ஸ்போர்ட், சிகாகோ, கேம்பிரிட்ஜ், கியோடோ பல்கலைக் கழகங்களில் வருகைதரு பேராசிரியராக பணியாற்றினார். அதிபர் சந்திரிகா குமாரதுங்காவின் அமைச்சரவையில் அறிவியல் & தொழில்நுட்பத்துறையின் அமைச்சராக பொறுப்பேற்றிருந்தார். இங்கு அவரது ஆய்வுக் கட்டுரைகளின் வழியே அறியப்பட்ட கூறுகள் அவருக்கு மதிப்பேற்படுத்தும் பொருட்டு பகிரப்படுகின்றன.

அரசுருவாக்கம், நீர்ப்பாசனத் தொழில்நுட்பம் இவ்விரண்டிற்கும் இடையிலான தொடர்புகளை கல்வெட்டுகளிலும், கள ஆய்வுகளிலும் கண்டடைந்து அதனால் உண்டான சமூகப்பொருளியல் இயக்கத்தினை தம் கட்டுரைகளில் விளக்கினார். அரசு பற்றிய இவரது வாதத்தில் ஒருமுனைப்பட்ட அரசு, கூட்டுறவு அரசு இரண்டிற்கும் இடையில் அமைந்த நீர்ப்பாசனத் தொழில்நுட்ப மேலாண்மை போன்றவற்றினை விளக்குவது கருப்பொருளாக அமைந்தது.

நீர்ப்பாசனத் தொழில்நுட்பம்

ralh gunawardhanaஉலகின் முதன்மையானதும் மிகச் சிறப்பானதுமான நீர்ப்பாசனத் தொழில்நுட்பம் வளமாக அமைந்த பகுதிகளாக மெசபடோமியாவும், அஸ்ஸீரியாவும் அறியப்படுகின்றன. அடுத்து எகிப்தும், சீனாவும் அம்மதிப்பினைப் பெறுகின்றன. தாய்லாந்தும் இலங்கையும் அதுபோன்ற சிறப்பிடத்தினை பெறுகின்றன. இவற்றுள் இலங்கையின் நீர்ப்பாசனத் தொழில்நுட்பம் மிகுந்த நுணுக்கம் கொண்டதாக அமைந்திருப்பதனை தம் ஆய்வில் வரைபடங்களுடன் RALHG விளக்கினார். கி.மு.3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.3ஆம் நூற்றாண்டு வரையிலான அரசுருவாகும் காலகட்டத்திலேய இலங்கையில் பாசனத் தொழில்நுட்பம் செழிப்புற்றது என்பது இவரது  கருத்தாகும். இத்துறையில் இவருக்கு ஆர்வமேற்படுத்திய Joseph Needam அவர்களை மறவாமல் குறிப்பிடுகிறார். மேற்சொல்லப்பட்ட நிலப் பிரதேசங்களில் இலங்கை தவிர மற்றவை வாய்க்கால் பாசன முறையில் வளம் பெற்றவை. இலங்கையில் ஏரிப்பாசனம் பண்டுதொட்டு நிலவி வருகிறது. ஆற்றிலிருந்து வரும் நீரினை ஏரிகளில்/ குளங்களில் சேமித்து அவற்றினை தேவையான காலங்களில் குமிழி, மடைகள் வழியே வெளியேற்றி வேளாண்மைக்கு பயன்படுத்தும் முறையினை பண்டைக்காலத்தில் இலங்கை பின்பற்றியது. இம்முறையிணை நேரில் அறிவதற்கு களப்பணியினை மேற்கொண்டபோது ஏரியிலிருந்து நீரினை வெளியேற்றும் மேற்சொல்லப்பட்ட இருவகையான அமைப்புகளை RALHG கண்டார். இலங்கையிலிருப்பது போன்று மடையமைப்புகள் இந்தியாவில் வரலாற்று காலங்களில் இருந்தனவா என்பதனைக் கண்டறிவதற்கு இந்தியாவில் களப்பணியினை 1970களில் மேற்கொண்டார். தமிழ்நாட்டில் கங்கைகொண்ட சோழபுரத்தில் முதலாம் இராஜேந்திரன் (கி.பி.1012-1044) உருவாக்கிய பொன்னேரியில் அதுபோன்றதொரு மடையினைக் கண்டார். அதனடைப்படையில் வரைபடங்களுடன் அம்மடை இயங்கும் முறையினை உலகுக்கு வெளிப்படுத்தினார். இதுபோன்ற மடைகள் ஸ்பெயின் நாட்டில் இரண்டு இடங்களில் இருப்பதாக ஒருகுறிப்பு தந்தார். இப்படி இவரதுஆய்வு தென்கிழக்காசியா தொடங்கி ஸ்பெயின் வரை நீளப்பாய்ந்தது.

நீர்ப்பாசனத் தொழில்நுட்பத்தின் தலைமைக்கூறு நீரோட்டம். நிலப்பரப்பின் சரிவுத்தன்மைதான் புவியீர்ப்பு விசையினால் நீரினை வாய்க்கால் வழியே ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு இழுத்துச் செல்கிறது. எனவே, வாய்க்கால்களை அமைக்கும் போதும் பாசனஏரிகளை உருவாக்கும்போதும் நீர்வரத்துக்கு வசதியான சரிவான நிலப்பரப்பினை தெரிவுசெய்தல் முதன்மையானது. இங்கு நிலப்பரப்பியலின் இயற்கைத் தன்மைதான் நீர்ப்பாசனத் தொழில்நுட்பத்திற்கு தளம்அமைக்கிறது. இலங்கையில் பாசனக்குளங்கள் உருவாக்கப் படுவதற்கு இயற்கையாக அமைந்த கற்பாறைகள் கரைகளாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளன. இத்தெரிவினால் மூன்று நன்மைகள் உண்டு: (1) குறைவான மக்களின் உழைப்பே போதுமானது (2) வெள்ளக்காலங்களில் கரைகள் உடையப் போவதில்லை (3) கரைகளை வலுவாக்க அவற்றின்மேல் மரங்களை வளர்க்க வேண்டியதில்லை. இதுபோன்று கற்பாறைகள் கரைகளாக அமைந்த குளங்களை தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தின் மலைக்குன்றுகள் சூழ்ந்த நார்த்தாமலை என்ற ஊரின் ஊர்க்குளமான அணிமத ஏரியில் காணலாம். இதன் காலம் சுமார் கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டு. ஆனால், இதனையும் பின்னே குறிப்பிட்டுள்ள பெருஞ்சுனையூரின் தொட்டிமடையினையும் RALHG அறிந்திருக்கவில்லை.

நீர்வளத்தினைக் கைக்கொள்வதன் வாயிலாக அதனை வேளாண்மைக்குப் பயன்படுத்தும் மக்களின் உழைப்பையும், உற்பத்தியினையும் அரசினால் கைக்கொள்ள முடியும். எனவே, இலங்கையில் அரசுகள் பெரிய ஏரிகளை/குளங்களை உருவாக்கின என்றார். தொடக்கத்தில் வேளாண் குடிமக்கள் தங்களுக்கான பாசன ஏரிகளை/குளங்களை தாமே உருவாக்கினர். ஆனால், அவை அளவில்சிறியன; தொழில்நுட்பத்தில் நுணுக்கமானவை. சிறிய ஏரிகள் என்பதிலிருந்து பெரிய ஏரிகள் உருவாக்கப்படுவதற்கு சமூகம் மாறிற்று என்பது ஒரு வரலாற்று நிகழ்வு. இலங்கையில் சக்கரவட்டகா என்றதொரு நீர் இறைக்கும் கருவி பாசன வேலையினை எளிதாக்கிற்று என்றார். அதேபோன்று மடைகள் பெரிய ஏரிகளின் கரையோரங்களில் அமைக்கப்பட்டதால் கரைகள் சிதைவடையாமல் இருப்பதற்கு ஏது செய்தது என்றார். இத்தொட்டிமடைகள் ஏரிகளின் உள்பகுதியின் தரைத்தளத்திலேயே கரையினையொட்டி அமைக்கப்பட்டதால் நீர்த் தொட்டிக்குள் விழுந்து தொட்டியிலிருந்து தொடரும் கரைக்குக்கீழுள்ள தரைகீழ் வாய்க்கால் வழியே வெளியேறும். இதனால், கரையினைத் தாக்கும் நீரின்அழுத்தம் மட்டுப்படுத்தப்பட்டு நீர் சீராக வெளியேறும். இத்தொட்டிமடை பெரும்பாலும் கருங்கற்களால் கட்டப்பட்டிருக்கும். இதன் தரைகீழ்வாய்க்கால் நீர்க் கசியாதவாறு செங்கல் கட்டிட அமைப்பினால் மூடப்பட்டிருக்கும். இதுபோன்றதொரு அமைப்பு புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பெருஞ்சுனையூர் என்ற ஊர்க்குளத்தில் அமைந்துள்ளது. ஆனால், இத்தொட்டிமடை காலத்தால் பிந்தியது (கி.பி.1600).

தமிழ்நாட்டில் ஊருக்கு பொதுவான குளங்கள் ஊர்க்குளங்கள் என்று சுட்டப்படுகையில் இலங்கையில் அவை gamikavāvi என்றும் பெரிய குளங்கள் makāvāvi என்றும் அழைக்கப்பட்டுள்ளன. ஒரு பெரிய ஏரியிலிருந்து நீரினை பிறிதொரு குளத்தில் தேக்கிவைத்து அதிலிருந்து நீரினை பகிர்ந்தளிக்கும் குளம்  dāṇavāvi என்று அழைக்கப்பட்டுள்ளது (distributing tank; supporting tank). இலங்கையில் இதுபோன்ற பாசனக் குளங்கள் கி.பி.2 ஆம் நூற்றாண்டிலேயே உருவாக்கப்பட்டதற்கு கல்வெட்டுச் சான்றுகள் உண்டு எனக்கூறும் இவர் அங்கு கி.பி.நான்குமுதல் ஏழாம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் ஆறு தலை முறைகளில் அறுபதுக்கும் மேற்பட்ட பாசன ஏரிகள் உருவாக்கப்பட்டன என்றும், அதில் அரசர்களின் பங்கு பெரிதில்லை என்றும் கூறினார். இதன்பணிகள் கி.மு.மூன்றாம் நூற்றாண்டிலேயே தொடங்கப்பட்டதாகவும் இப்பணிகளால் விளைநிலங்கள் ஓராண்டிற்கு மூன்று முறை விளைந்தது என்றும் RALHG விளக்குகிறார்.

இலங்கையைப் பொறுத்து பாசனத் தொழில் நுட்பத்திற்கும் அரசுக்கும் இடையிலான தொடர்பு ஆர்வமூட்டும். தொடக்கத்தில் பெரும்பாலும் அரசின் விளிம்புநிலைப் பகுதிகளிலேயே பாசனத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன என்றும் இக்கட்டமைப்பில் அரசுத்தலையீடு நாட்டின் அனைத்துப்பரப்பிலும் நிகழ்ந்தது என்றும் கூறுவதற்கில்லை என்கிறார். இடைக்காலத்து தமிழ்நாட்டின் வரலாற்றின் சோழர் ஆட்சியில்கூட காவிரியின் வடிநிலப்பகுதி, கொள்ளிடப் பாசனப்பகுதி தவிர புதுக்கோட்டை போன்ற வறண்ட நிலப்பகுதியில் பாசனக் குளங்களை அரசு உருவாக்கவில்லை. மக்களே உருவாக்கினர் என்பதனை கல்வெட்டுச் சான்றுகள் வழியே அறியலாம். இப்பகுதியில் ஊர்க்குளங்கள் ஊரார்களாலும் நாட்டுக்குளங்கள் நாட்டார்களாலும் ஆளப்பட்டன (வல்லநாட்டுக்குளம், கவிநாட்டுக் கண்மாய் போன்றன). இதைப்போன்று இலங்கையிலும் தனியாரும், குலத்தலைவர்களும் பாசனக்குளங்களின்மேல் ஆளுமை கொண்டிருந்தனர் என்கிறார் RALHG. இலங்கையில் கிடைத்த சான்றுகளின்படி வணிக அரசுக்கும் நீர்ப்பாசன அரசுக்கும் பெருத்த வேறுபாடில்லை என்பதும் வணிகத்தில் சேர்க்கப்பட்ட செல்வமே நீர்ப்பாசனச் சொத்தாக மாற்றப்பட்டது என்பதும் இவர் கூற்றாகும்.

இந்தியாவும் இலங்கையும்

புவியியலினடிப்படையில் இந்தியத் துணைகண்டமும் இலங்கைத் தீவும் அருகருகே அமைந்திருப்பதால் நீர்ப்பாசனத் தொழில்நுட்பப் பரிமாற்றம் ஏற்படுவதற்கு ஏதுவான சூழல் அமைந்திருக்கும் என்று RALHG கருதினார்.இலங்கையின் வறண்ட பகுதிகளில்தான் ஏரிப்பாசனம் பயன்பட்டது என்றும் இதுபோன்று தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகப் பகுதிகளிலும் ஏரிமுறை நீர்ப்பாசனம் பயன்பாட்டில் இருந்தது என்றும் தம் ஆய்வில் நிறுவினார். இங்கு சிறு சிறு அளவிலான ஏரிமுறை நீர்ப்பாசனம் அரசுருவாக்கக் காலத்திற்கு முன்பே வந்தது என்றும் இதே காலகட்டத்தில் (megalithic period) இரும்பின் பயன்பாடும் பானைவனையும் (black and red ware) தொழில்நுட்பமும் வந்தன என்பதும் இவர்கூற்று. பெருங்கற்காலத் தளங்கள், பாறைக்குன்றுகள், நீர்ப்பாசனஏரிகள் மூன்றும் நெருக்கமானத் தொடர்புடையன. இதற்கு தமிழ்நாட்டில் உள்ள சித்தன்னவாசல், நார்த்தாமலை, குடுமியான்மலை போன்ற இடங்களை சான்றாகக் காட்டலாம். இவ்விடங்களில் ஓரிரண்டு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் தொல்லியல் தளங்கள், இயற்கையாக அமைந்த மலைக்குன்றுகள், குடைவரைக் கோயில்கள், கட்டுமானக் கோயில்கள், பாசனக்குளங்கள் போன்றவை உள்ளன. இவை வரலாற்றின் அறுபடாதத் தொடர்ச்சியாகும். இந்தியாவிலும் இலங்கையிலும் பெருங்கற் காலத்தில் நெல்விளைச்சல் அறிமுகமானதாக RALHG கூறினார்.

தமிழ்நாட்டில் சங்ககாலம் எனப்படும் இரும்புக் காலத்தில் அரசுருவாக்கம் ஈடேறவில்லை. என்றாலு,தொடர்ந்து வந்த பல்லவர்-பாண்டியர்களால் ஆற்றுவளம் நிறைந்த பகுதிகளில் வடக்கிலும் தெற்கிலும் அரசுகள் எழுந்தன. ஆனால், இவ்வரசுகள் தோன்றும் முன்பே இங்கு சிறு சிறு பாசனக்குளங்கள் தோன்றியிருந்தன. ஆனால், பல்லவரின் எழுசிக்குப் பிறகுதான் பெரிய அளவிலான பாசனக்குளங்கள் உருவாக்கப்பட்டன என்கிறார் RALHG. ஆனால், அவை ஏற்கனவே பயன்பாட்டில் இருந்து வந்தவற்றின் விரிவாக்கமே என்பதனை நிலப்பரப்பியல் மூலமாகவும் உள்ளூர் நிலவமைப்பின் மூலமாகவும் அறியலாம். ஆனால், இலங்கையில் பல்லவர்களுக்கு முன்பே பெரியஅளவில் நீர்ப்பாசனத் திட்டங்கள் உருப்பெற்றன என்றார். இங்கு இந்தியாவும் இலங்கையும் சில பொதுவான பாசனத் தொழில்நுட்பக் கூறுகளைக் கொண்டுள்ளன என்பதனை முன்வைக்கிறார். இதில் அடிப்படையான கூறு என்னவெனில் பாசனக் குளங்களின் கரைகளின் உள்பரப்பு கற்களால் (stone slabs) பதிக்கப்பட்டிருக்கும். இக்கற்பரப்பு குளத்திலிருந்து கரைநோக்கி வரும் நீரலையின் வேகத்தினை மட்டுப்படுத்தும். தமிழ்நாட்டின் வரலாற்று காலத்தில் உருவாக்கப்பட்ட பலகுளங்களில் இம்மாதிரியமைப்பினை காணலாம். ஒரு வேறுபாடு இலங்கையில் ஏரியிலிருந்து நீரினை வெளியேற்றும் வழி (inlet) கரையின் ஓரத்தில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் அவ்வமைப்பு பெரும்பாலும் குளத்தின் நடுவில் அமைக்கப்பட்டுள்ளது; சில இடங்களில் ஓரத்தில் அமைந்துள்ளது. இலங்கையில் பெரும்பாலும் தொட்டிமடைகளே உண்டு. ஆனால், தமிழ்நாட்டில் பொன்னேரியின் தொட்டிமடை இலங்கையின் தொழில்நுட்பத்திலிருந்து பெரிதும் மேம்பட்டது, நுணுக்கமானது. அதில் குமிழிக்கான கூறுகளும் உண்டு.

வரலாற்றுக்கு முந்திய காலத்தில் (pre-history) இந்தியாவிலிருந்து இலங்கைசென்ற பாசனத் தொழில்நுட்பம் வளர்ச்சிபெற்று இடைக்காலத்தில் இந்தியாவிற்கு திரும்பியதற்கு வாய்ப்புண்டு என்று தென்கிழக்காசிய பாசனத் தொழில்நுட்பம் பற்றி முத்தாய்ப்பான கருத்தினை RALHG பதிவு செய்கிறார்.

நீர் உரிமை

இலங்கையில் கிறிஸ்து சகாப்தத்திற்கு முன்புவரை பெரும்பாலும் அரசுகள் வரண்டநிலப்பகுதிகளிலேயே இயங்கின. அவை பெரிதும் பாசனகுளங்களை, வாய்க்கால்களை சார்ந்திருந்தன. ஆனால், அவை அளவில் சிறியன. கிறிஸ்து சகாப்தத்தின் காலம்வரை பாசன ஏரிகளின் மீதான தனியார் உரிமை சான்றுகளில் பதியப்படவில்லை; கூட்டுரிமை வழக்கில் இருந்தது. கூட்டுமுயற்சியே பாசன ஏரிகளை உருவாக்கியது; பராமரித்தது. ஒரு ஊருக்கு ஒரு குளம் என்ற கோட்பாடு நிலவியது. ஊர்க்குளம் பொதுவானது; நீர் பகிர்ந்தளிக்கப்பட்டது. ஏரிகளினருகே உள்ளவர்கள் அதிகமாகவும் தொலைவில் உள்ளவர்கள் குறைவாகவும் நீர் பெறுவதற்கு வாய்ப்பு இருந்தது. இதற்கு இயற்கையமைப்பும் காரணமானது. சடங்குகள் வழியேயும் வேறு கருத்தியல்கள் வழியேயும் நீரினைப் பயன்படுத்துவோரிடையே அதிகாரப் படிநிலை இருந்தது என்றும் இதனை சமூக-அரசியல்நிலை உறுதிசெய்தது என்றும் RALHG கூறியுள்ளார். ஆட்சியாளர்கள் நீர்ப்பாசனக் கட்டமைப்பினை உருவாக்குவதற்கு ஆணையிட்டவுடன் நேரடியாகப் பங்கு பெறவில்லை என்றும் தெரிவித்தார். சில பாசனக்குளங்கள் தனியாருக்கு உடைமையாக இருந்தபோது சிலகுளங்கள் இனக்குழுக்களுக்கு சொந்தமாக இருந்தன என்றும் கூறினார். கிராம சமூகங்கள் சமத்துவமற்று இயங்கியபோது பலம்வாய்ந்த குலத்தலைமை பானத் தொழில்நுட்பத்தின்மேல் ஆளுமை கொண்டது. மடைகளின்மேல் ஆளுமை கொண்டவர்கள் குளத்திலிருந்து நீரினைத் திறக்கவும் நீர் வழங்கலைத் தவிர்க்கவும் முனைந்தனர். நீர்ப்பாசன நடவடிக்கைகளில் முன்பு குறிப்பிட்டது போன்று ஒரு குறிப்பிட்டநிலம் ஆண்டுக்கு மூன்றுமுறை பயிரினை விளைவித்தது. பெரிய அளவிலான பாசனகுளங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வேளாண் ஊர்களுக்கு நீர்வசதியளித்தது. கி.பி.2ஆம் நூற்றாண்டில் பாசனக் குளங்கள் மீதான தனியார் உரிமை கூடுதலானது. பாசன நிலங்கள் விரிந்தன. வாழ்விடங்களும் பெருகின.

அரசு

அரசுருவாக்கத்தில் சமத்துவமின்மை நீர்ப்பாசனச் செயற்பாடுகள் பெரும்பங்கு வகித்தன. அரசுக்கும் மக்களுக்கும் இடைவெளி நீண்டிருந்ததால் அதனை இட்டுநிரப்புவதற்கு அரசர்கள் சடங்குகள் செய்ய வேண்டியிருந்தது. இதனை ritual sovereignty என்ற கருத்தோடு ஒப்பிடலாம். பழங்குடித் தலைமைகள் (ancient chiefdoms) அரசமைப்புடன் ஒருங்கிணைந்த பிறகே பாசனத்தொழில்நுட்பத்தில் அரசின் தலையீடு எழுந்தது. அரசு எழுந்தபின் ஆளும் குடும்பத்தின் உறுப்பினர்கள் பிற வட்டாரஙகளில் தலைவர்களாயினர். அரசு ஒருங்கிணைப்பு போர், மணவுறவின் மூலம் நிறைவேறியது என்பன இவரது கூற்று.

தென், தென்கிழக்காசியாவின் நாடுகளில் அரசுருவாக்கம் ஒருநிலப் பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு பரவுதல் அல்லது ஊடுபரவுதல் என்ற கருத்தியலின் அடிப்படையில் ஆய்வாளர்கள் ஆய்ந்து வருகின்றனர். இது போன்று கூறுபவர்கள் அரசுருவாக்கத்தில் உள்ளெழுச்சியாக நிகழும் சில கூறுகளை கவனிக்கத் தவறுகின்றனர் என்றும் மௌரிய அரசின் தாக்கத்தால் தென்னெல்லையில் சோழர், பாண்டியர் அரசுகள் தோன்றியதுபோல் இலங்கையிலும் அரசு எழுந்தது என்றும் கூறினார். இதற்கு வெளிக்காரணிகள் உண்டு. என்றாலும் உள்காரணிகளும் உண்டு. சடங்கு, அதிகாரம் பற்றி தெளிவற்ற கருத்து நிலவுவதால் அரசு பற்றிய ஆய்வு குழப்பத்தில் உள்ளது. முடிசூடும் விழாவின் அடிப்படையில் மட்டுமே அரசு நிறுவனம் ஆயப்படுகிறது. பிறவகைக் காரணிகளையும் ஆய வேண்டும். முடிசூடினால் மட்டுமே அரசு உருவாகாது என்பதும் இவரது கருத்தாகும்.

கல்வெட்டுகள்

இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் கிடைக்கின்ற பழங்கல்வெடுகளைப் படித்து அவற்றுக்கு விளக்கம் தருவதில் RALHG நன்கு தேர்ந்தவர். இலங்கையில் அரசு உருவாகும் சூழலையொட்டி அங்கு பொதுவான எழுத்துவடிவம் தீவுமுழுமைக்கும் வழக்கில் இருந்தது என்றார். இலங்கையின் அரசு எழுச்சிக்கு முன்பிருந்த சூழலை விளக்கும் RALHG அங்கு269 தலங்களில் கிடைக்கின்ற 1289 கல்வெட்டுகளையும் பகுப்பாய்வு செய்தார். அவற்றை தமிழ்நாட்டின் கல்வெட்டு செய்திகளோடு ஒப்பிட்டார். இலங்கையின் கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ள வட்டாரத் தலைவர்கள் குரிசில் தலைவர்களை சுட்டும் பட்டங்களான Rājha, Rājā, Gāmaṇi, Gamiṇi Āyā போன்ற சொற்களை ஆய்ந்தார். இவற்றில் முதலிரண்டும் ஆள்பவர்களின் கௌரவப்பட்டங்கள். என்றாலும், பிறர் இவற்றை Āyā என்ற சொல் Ayyā என்ற பாலிமொழிச் சொல்லிலிருந்து வந்தது என்றும் நிறுவ முயன்றனர். ஆனால், Ārya என்ற சமஸ்க்ருத சொல்லின் பாலிமொழிச் சொல் Āriya என்பதாகும். ஆனால், இச்சொற்கள் பண்பாட்டுநிலையில் பயன்படுத்தப்பட்டன; அரசியல் நிலையில் அன்று என்றார் RALHG.

இலங்கையின் பண்டைய வரலாற்று காலத்தில் வெவ்வேறு நிலப்பகுதிகளை வெவ்வேறு வட்டாரத் தலைவர்கள் ஆண்டனர். அவை ஒரேமாதிரியான ஆட்சிமுறையினை கொணடவையன்று. இவர்களில் parumaka என்பவர்களின் ஆட்சிநிலை பற்றி அறிவது எளிதல்ல. இவர்கள் பெரிதும் கௌரவத்தினை விரும்புகிறவர். கொடையளித்தல் மூலம் கௌரவத்தினைப் பெறுவதற்கு நினைப்பவர்கள். ஆட்சியாளர்கள் பருமகர்களை தம் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். பல பருமகர்கள் படைத் தலைவர்களாக இருந்தனர். கல்வெட்டுகளில் பல அரசு அலுவலர்களும் குறிக்கப்பட்டுள்ளனர். பல பருமகர்கள் ஆட்சியாளர்களின் குடும்பத்துடன் மணவுறவு கொண்டனர். இதனால் அரசு வலுப்பெற்றது.

சுருக்கமாக சொல்வதானால், நீப்பாசனத் தொழில்நுட்பத்தினைப் பெருக்கவும், கல்வெட்டுச் சான்றுகளைப் பொறிக்கவும் இரும்புத் தொழில்நுட்பம் தலையாய ஒன்று. இத்தொழில்நுட்பம் வேளாண்மைக்கான உழுபடைகருவிகளையும், போருக்கான கருவிகளை வடிக்கவும் தேவை. அப்போது எழுத்தும் தோன்றியது, சமயமும் வந்தது, அரசும் எழுந்தது. போரின் மூலமாகவும் திருமணவுறவு மூலமாகவும் அரச குடும்பங்கள் வட்டாரத் தலைமைகளை தம் கட்டுக்குள் இருத்தின. அரசு சடங்குகள் அறிமுகப்படுத்தப்பட்டன. மையத்தில் அரச குடும்பத்தினரும் விளிம்பு நிலைகளில் அவர்களோடு மணவுறவு கொண்ட வட்டாரத் தலைவர்களும் ஒருங்கிணைந்து நீர்ப்பாசனத் தொழில்நுட்பத்தினை காத்துவந்தனர். இதனை வேளாணூர்களில் வேளாண்குடிகள் மேற்கொண்டனர். இங்கு அதிகாரம் பகிரப்பட்டது, ஒருமுனைப்பட்டதல்ல என்பதே RALHG அவர்களின் கருத்தியலாகும். இவற்றையெல்லாம் கணிப்பதற்கு மார்க்ஸ் முன்மொழிந்த வரலாற்று இயங்கியல் பொருள்முதல் வாதம் என்ற கொள்கையே இவரின் ஆய்விற்கான திறவுகோலாக அமைந்தது. இதுவே Karl Augustus Wittfogel முன்மொழிந்த Oriental Despotism என்ற கோட்பாட்டினை ஒடிக்கிறது.

R.A.L.H.Gunawardana’s select works directly related to Hydraulic State and Society.

1. R.A.L.H.Gunawardana, Inter-societal Transfer of Hydraulic Technology in Pre-colonial South Asia: Some Reflections Based on a Preliminary Investigation in Southeast Asian Studies, Vol.22, No.2, September 1984. pp.115.142.

2 .……………….Cistern Sluices and Piston Sluices in Sri Lanka Journal of Humanities, Vol.10, Nos,i&2, 1984 published in 1987.pp.87-104.

3 .………………..Hydraulic in Ancient Sri Lanka: The Cistern Sluices in Rat Paranavitana Commemoration Volume (Leelananda Prematileeke et.al), Leiden, 1978. pp.61-74.

4 .…………………Social Function and State Political Power: A Case Study of State Formation in Irrigation Society in The Indian Historical Review Vol. IV, No.2, 1978.pp.259-273.

5 …………………Total Power or Shared Power? A Study of the Hydraulic State and its Transformations in Sri Lanka from the Third to the Ninth Century A.D. Paper presented to the Symposium on the Evolution of Political Organisations, Inter congress, international Union of Antrhopological and Ethnological Sciences, Amsterdam, April, 1981. Later it was published in The Indian Historical Review, 1981

- கி.இரா.சங்கரன்

Pin It