பத்துப்பாட்டு பனுவல்கள் தொகுப்பு நூல்களாகச் சுட்டப்பட்டாலும் இத்தொகுப்பில் அடங்கியுள்ள ஒவ்வொன்றும் தனித்தன்மையுடைய பனுவல்களாகத் தம் சொல்லாட்சிப் பாங்கிலும் கருத்துப்பொருண்மையிலும் அமைகின்றன. பத்துப்பாட்டினுள் அமைந்துள்ள நூல்களைக் காலவரிசைப்படுத்தும் இராசமாணிக்கனார் அறிஞர்கள் பொருநராற்றுப்படை பட்டினப்பாலை. பெரும்பாணாற்றுப்படை. குறிஞ்சிப்பாட்டு ஆகிய பனுவல்கள் ஒரு காலத்தன எனவும் அதன் தொடர்ச்சியாய் மலைப்படுகடாம், மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை போன்றன ஒரு காலத்தன எனவும், சிறுபாணாற்றுப்படை அதற்கடுத்த காலச்சூழலிலும் தோன்றியதாகக் போன்றோர் கால எல்லைகளைத் தீர்மானிக்கின்றனர். இப்பாட்டுத் தொகுப்பினுள் ஆற்றுப்படை வகைமையிலும், அகம், புறம், அகம் புறம் இணைவு எனும் பொருண்மையிலும் பகுப்பு முறையை வைக்கலாம். எதுவாக இருப்பினும் பழந்தமிழ் பனுவல்கள் அனைத்தும் வாய்மொழித் தன்மைக் கூறுகளை உள்வாங்கிய எழுத்துமொழி ஆக்கங்களாகவே காணக் கிடக்கின்றன. வாய்மொழி மரபின் வழிவந்த அலைகுடிகளை நிலைத்த குடிகளால் கட்டமைக்கப்பட்ட நிறுவனச் சமூகத்தின் அதிகார வரம்பிற்குள் கொண்டு வரும் சமூக, பொருளாதார, அரசியல் காரணிகளைப் பயன்படுத்தி தமக்குள் உள்வாங்கிக் கொண்டதை அவ்விலக்கியங்களின் பொருண்மைச் சேர்மங்கள் உணர்த்துகின்றன. வரையறுக்கப்பட்ட கோட்பாட்டின் படிநிலைகளுக்கு உட்படாத கூட்டுச்சமூக அமைப்பினரை நிறுவனமயமாக்கும் முன்னெடுப்புக்களை இவ்விலக்கியங்கள் மேற்கொண்டன.

அறிவார்ந்த பண்பாட்டுக் கூட்டங்களான பாணர். பொருர். கூத்தர், விறலியர், போன்ற சாமானிய சமூகத்தில் உலவித்திரியும் கூட்டத்தாரை அன்றைய சமூக நிறுவன உருவாக்கங்கள் பயன்படுத்திக் கொண்டன. காலத்தால் தொன்மையான பொருநராற்றுப்படை இதனைத் தெள்ளிதின் உணர்த்தும். அதுபோலவே அத்தொகுப்பில் உள்ள பனுவல்கள் பல்வேறு நிலைகளில் இலைமறைக்காயாகக் கோடிட்டுக் காட்டும். சமூகத்தின் மையக்கருவிற்குள் வினைபுரியும் பலதரப்பட்ட கருத்தியல் சேர்மங்கள், அதன் விளைவாக பிறப்பெடுக்கும் முட்டல்கள், முரசல்கள், சமரசப் போக்குகள் போன்றவைகளை அவ்விலக்கியங்களை வாசிக்கும் போது அறிந்து கொள்ள முடியும். அதன் நோக்கில் சிறுபாணாற்றுப்படையை மறுவாசிப்புக்கு உட்படுத்தி அதன் நோக்கில் வாய்மொழி மரபினக் கூட்டங்கள் தங்களை உள்வாங்க முனையும் அதிகார வரம்புகளை மீறவும், தம்மை நிலைப்படுத்திக் கொள்ளவும் முயன்றிருப்பதை அப்பனுவலின் கருத்தியலிருந்து உய்த்து உணரலாம்.tamil sculptureசிறுபாணாற்றுப்படையைப் பாடியவர் இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் எனக்குறிப்பிடப்படுகிறது. இவரைப் பற்றிய முழுமையான தரவுகளைத் தமிழ் இலக்கிய வரலாற்றுப் பதிவுகளில் காணமுடியவில்லை. இவர் பாடியதாக இவ்வொரு பாடல் தான் குறிப்பிடப்படுகிறது. புதுவைக்கு 45 கி.மீ தொலைவில் உள்ள இச்சிறிய ஊர். உப்பங்கழிகள் சூழ்ந்த நிலப் பகுதியாகக் காட்சியளிக்கிறது. கடலுக்கும் ஊருக்கும் இடைப்பட்ட பரந்துபட்ட உப்பங்கழிகளைக் கொண்டது. இதனைக் கருத்தில் கொண்டு தான் அப்பகுதி இடைக்கழிநாடு எனப் பேசப்படுகிறது. அப்பகுதியில் உள்ள ஓர் சிற்றூர் தான் நல்லூர் அவ்வுரில் பிறந்தவரானதால் நாட்டையும் ஊரையும் இணைத்து இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் என அழைக்கப்பட்டார். இந்நல்லூருக்கு மேற்கில் ஓய்மாநாடு இருந்துள்ளது. இவ்வுரில் அவர் தம் சிலை நிறுவப்பட்டுள்ளது. சிறுபாணாற்றுப்படை ஓய்மா நாட்டு நல்லியக்கோடனைச் சிறப்பித்துப் பாடப்பட்டுள்ளது 269 அடிகளால் ஆனது. பாட்டு, யாழ், இசை என்ற நோக்குகளில் பொருள்படும் 'பண்' எனும் சொல்லின் அடிப்படையில் வந்தது தான் பாண் எனும் சொல்லாகும். அதன் வழிவந்தவர்கள் பாணர், பொருநர், கூத்தர் எனப் பலப்பெயர்களில் வழங்கலாகும் அலைகுடிப் பெருமக்கள். இப்பனுவல் வாய்மொழி மரபினரின் இருப்பை உறுதிசெய்யவும், முதுகுடிகளான சீறூர் சமூக அமைப்பு சிதைந்து விடாமல் போராடக்கூடிய ஒரு சூழலையும் காட்ட முனைகிறது.

"இனக்குழுச் சமுதாய எச்சங்களைத் தாங்கிய 'அரசு' என்னும் அமைப்பு உருவாகாத வன்புலச் சமுதாயத் தலைவர்களான சீறூர் மன்னர்களின் இயல்பும் சீறூர்த் தலைவியின் சமுதாயத் தொடர்பும் இச்சமுதாய வழிபாட்டு முறைகளும் உணவுமுறைகளும் போர்நோக்கங்களும் சமுதாய நலம் பேணுதல் என்பதை மட்டுமே மையமாகக் கொண்டிருந்தன. புலவர்களால் வரவேற்கத்தக்க பண்புடையவர்களாக விளங்கினர்." (பெ. மாதையன் 2004:31)

இப்பனுவலில் மையப்படுத்தப்படுகின்ற மன்னன் ஓய்மான் நாட்டு நல்லியகோடன் ஓவியர் குடித்தலைவன். அவனது தலைநகர் நன்மாவிலங்கை. கடையேழு வள்ளல்களுக்குப் பின்னர் வாழ்ந்தவன். சிறுபாணாற்றுப்படை ‘ஓவியர் பெருமகன்' எனக் குறிப்பிடுகிறது. வேள்மகன்- வேண்மான் என மருவியதுபோல ஓவியர் மகன் எனப்படுவது ஓய்மான் என மருவியிருக்கலாம். தமிழ் இனப்பழங்குடிகளில் ஓவியர் குடியில் வந்த வள்ளல்களில் மூவராக நல்லியக்கோடன், நல்லியாதன், வில்லியாதன் என மூவர் ஓய்மாநாட்டுப் பகுதிகளில் அதிகாரம் செலுத்தியதாகக் கருதப்படுகின்றனர். ஓய்மாநாடு எனப்படுவது எயிற்பட்டினம், வேலூர், கிடங்கில், மாவிலங்கை போன்ற பகுதிகளை உள்ளடக்கியதாகும். சோழப்பகுதிகளுக்கும் தொண்டை நாட்டிற்கும் இடையில் பரந்து கிடந்த நாடுகளில் ஒன்றாகக் குறிப்பிடப்படுகிறது. நல்லியக்கோடனைப்பற்றி தொகை நூலான புறநானூற்றில் நன்னாகனார் பாடிய பாடலொன்று (176) உள்ளது. அதுபோல் நன்னாகனார் புறநானூறு 376 ஆம் பாடலில் நல்லியாதனையும், 379 ஆம் பாடலில் வில்லியாதனையும் புகழ்ந்துரைக்கிறார்.

சமூகத்தின் வாய்மொழி மரபினரான பாணர் கூட்டத்தினரின் முக்கியத்துவம் அன்றைய காலத்தில் பெரிதும் உணரப்பட்டது. உலகம் கடந்த மனோபாவத்தை அவர்கள் கொண்டிருக்கவில்லை. அலைகுடிகளான அம்மக்கள் குழுவாகப் பயணித்தனர். அவர்தம் தனித்தன்மையுடைய பண்பாட்டு நடத்தை அசைவுகள் பொது மரபிற்குள் கொணர அன்றைய வேந்தர்களின் எல்லை விரிவாக்க முன்னெடுப்புக்களை கொணர பழந்தமிழ் இலக்கியங்கள் உணர்த்தும். அலைகுடிகளுக்கும் நிலைகுடிகளுக்கமான பண்பாட்டுப் பரவலை பக்தவத்சலபாரதி மானுடவியல் நோக்கோடு கூறியிருப்பது சிந்திக்கத் தக்கது. "ஒவ்வொரு திணையிலும் வாழ்ந்த நிலை குடிகளின் வாழ்வியலில் அலைகுடிகளின் பங்கு பணிகள் பல்வேறு நிலைகளில் பின்னிப் பிணைந்திருந்தன.”(இலக்கிய மானிடவியல் 127) இவ்விரு மரபுகளும் தமக்குள் கரைந்துக் கொண்டன. சிறுபாணாற்றுப்படை இருதளங்களிலிருந்தும் கருத்தியல் பிணைப்புகள் இணைக்கப்பட்டு போராடியிருக்கின்றன. சுயாதின பழைய மரபுகள் தம்மைத் தகவமைத்துக் கொள்ள அதனை இப்பனுவல் பலவிடங்களில் பதிவு செய்துள்ளது. இயற்கையைப் போற்றுவதும் அதனை பெண்னோடு இணைத்து பேசி பெண்ணின் அடையாளத்தை வளமையின் குறியீடாகக் காணுவதும் அலைகுடிச் சமூகத்தின் கருத்தியல் நோக்காகும் பாணாற்கூட்டங்கள் தங்கள் வாழ்க்கைச் செயல்பாடுகளுக்காக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகரும்போது ஆணும், பெண்ணுமாகக் குழுவாகச் சென்றனர். இந்நூலின் தொடக்கத்தில் இளவேனிற் முதுவேனிற் காலத்தில் பாணர்களின் பயணம் தொடங்குகிறது. கடும் வெப்பமுடைய காலத்தில் அக்கூட்டத்தார் வற்றிய ஆற்றங்கரையில் கூர்மையான வெப்பமேறிய பரல்கற்கள் வழி நடந்து செல்லும் போக்கை பெண்ணின் உடல் வளத்தோடு தொடர்படுத்துகிறது.

"மணிமலைப் பணைத்தோள் மாநில மடந்தை

அணிமுலைத் துயல்வரூஉம் ஆரம் போல" (சி.பா 1-5)

'மாநில மடந்தை' எனும் சொல்லின் பொருள் ஆழமானது, நிலத்தை பெண்ணாகப் பாவிக்கின்றது. பெண்ணின் கருப்பைக்கு இணையாக நிலம் சுட்டப்படுகிறது. தங்களது களைப்பைத் தீர்த்துக்கொள்ள கடப்பமரங்களின் நிழல்களில் தங்கியுள்ளனர். தங்குதல் எனப்படுவது பொதுமைப் படுத்தப்படுகிறது. ஆணுக்கு வேறாகவோ பெண்ணிற்கு வேறாகவோ பிரித்துப் பார்க்கவில்லை பாணர்களும் அவர்தம் விறலியர்களும் ஒன்றாகவே தங்கள் இருப்பை அமைத்துக் கொண்டனர். பெண்ணைக் குறிக்கும் சொல் பல பொருள்களில் பயன்படுத்தப்படுகின்றது. கிரேக்கத்தில் 'வீனஸ்' பெண் பாலினத்திற்கான புனிதத்துவ உயிரியல் சொல்லாகக் கருதப்படும். நிறுவனம் சமூகத்தில் பெண்ணானவள் மூன்றுவித அச்சுறுத்தலுக்கு உள்ளாகுகிறாள். 2. கீழ்படிதல், 'சுரண்டல்' எனும் நோக்கில் ஆணாதிக்கப் பாலினத்தால் பெண் சுரண்டப்படுகிறாள். 'கீழ்ப்படிதல்' எனும் நோக்கில் அவளின் 3 அடக்குமுறை, நுகர்வுப் பொருளாகச் வாழ்வாதாரம் ஆணை மையமிட்டதாகவே அமைகின்றது. 'அடக்குமுறை' எனும் போது சமூக நிறுவனங்களால் ஒதுக்கப்பட்டும் விளிம்பு நிலைக்குத் தள்ளப்படுகிறாள். இம்மூன்றும் இயல்பாகவே பேரரசு விரிவாக்கங்களில் நடைபெறும். ஆனால் அதற்கு மாறாக அலைகுடிச் சமூகத்தில் பெண் கொண்டாடப்படுபவளாக இருக்கிறாள். நிலம் பெண், மலைகள்-மார்பு, மூங்கில் தோள். அருவி- மார்பில் அசைகின்ற முத்துமாலை என பெண்ணின் வளத்தை இயற்கையின் வளப்பெருமையோடு ஒப்பிட்டுப் பேசப்படுகிறது. நிலத்தைப் பெண்ணோடு இணைத்துப் பார்ப்பது போல பெண்ணை நிலத்தோடும் அதன் கருப்பொருளோடும் இணைத்துப் பார்க்கப்படுகிறது. சமனிலைத் தன்மை நோக்கில் முன்வைத்துக் கொண்டாடப்பட்டனர்.

1. சுரண்டல்

விறலியர் குறித்த வருணனையில் பெண்ணின் உறுப்புகள் இயற்கையின் பல் பரிமாணங்களோடு பொருத்திக் காட்டப்படுகிறது. பெண் தீட்டுக்குரியவள் என்ற பிற்கால மனப்பபாண்மை அக்காலச் சமூகத்தில் உருப்பெறவில்லை கூந்தல் தொடங்கி பாதம் வரை பெண்ணின் நலம் போற்றப்படுகிறது. இருண்ட கூந்தல் மழைகால முகில், கூந்தலின் அழகு தோகை மயிலின் நாணம், பெண்ணின் பாதம் - விரைந்தோடிய நாயின் நாக்கு, தொடை-பிடியின் தும்பிக்கை மயிர் முடிப்பு-வாழைப்பூ, தேமல்-அரும்பு மொய்க்கும் வேங்கை மலர் முலை- கோங்கின் முகை(மொட்டு),நீர்மை எயிறு-நுங்கின் நீர், கற்பு-முல்லை, பார்வை - மான், நுதல்-ஒளி என இயற்கையின் பல்லுறுப்புகளை விறலியின் உறுப்பு நலத்தோடு பொருத்திக் காட்டப்பட்டுள்ளன, நிலம் எல்லா வளமைகளையும் தமக்குள் கொண்டிருப்பது போல மனித இன விருத்தியின் கருப்பையாகப் பெண்ணிருக்கிறாள் என்பதே அதன் நோக்கு.

அரச, சமய நிறுவனப் பொருண்மைகளில் திருவடி சொல்லாடல் புனிதத்திற்குரியதாகவும், ஆளுமைத் திறனை வெளிப்படுத்தக்கூடியதாகும். அனைத்தும் தமக்குள் அடக்கம் (அடங்கும்) என்னும் கருத்தியல் நோக்கில் கட்டமைக்கப்படும். திருவடி அரசனுக்குரியதாகச் சொல்லப்படும்போது அரசனின் அதிகாரத்திற்கும் வலிமைக்கும் பிற உயிர்களுக்குத் தஞ்சத்திற்குரிய இருப்பிடமாகவும். பகைவர் நடுக்கத்திற்குரியதாகவும் அமையும் சான்றாக தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் புகழ்ந்துரைக்கும் புறநானூற்றில் 78ஆம் பாடலில் குன்னூர்கிழார் "வணங்கு தொடைப் பொலிந்த வலிகெழு நோன்தாள்" என மன்னனின் அதிகாரப்புலத்தை அவன் தன் வீரக்கழளைக் குறியீடாகக் காட்டுவார்.. இருபாலாருக்கான சமூகநடத்தை முறைகளைத் தொல்காப்பியம் சுட்டும்போது பெண்பாலினத்தை அடக்கியாளும் நடத்தைகளைக் கொண்டதாகவே ஆணுக்கான சூத்திர மொழிகளை வடிவமைக்கும்.

"தன்னுறுவேட்கை கிழவன் முற்கிளத்தல்

எண்ணுங்காலை கிழத்திக்கில்லை" (தொ.பொ.116)

"சொல்லெதிர் மொழி அருமைத்தாகாலின்

அல்ல கூற்றுமொழி

அவள் வாயினன்"           (தொல்-கொ-108)

சமூகத்தின் இயங்கு ஆற்றலாக ஆண் பாலின ஆதிக்க அரசியலை முன்வைத்தனர். அதனால் சமூகத்தில் முதல் உரிமைப்பேறும் தடையில்லா வாரிசுக் கருத்தியலும் ஆணுக்கு இயல்பாகக் கிடைத்துவிடுகிறது. ஆனால் சிறுபாணாற்றுப்படை பெண்ணின் முக்கியத்துவத்தை ஆண் உணரும்படியான ஒரு கருத்தினைத் தருகிறது. பாணர்களின் வழிப்பயணத்தில் களைப்புற்ற விறலியின் துயரைப்போக்க ஆண்மக்கள் அவள் தம் சீறடியை மெதுவாக வருடுகின்றனர்.

"வாள்நுதல் விறலியர் நடைமெலிந்து அசைஇய நல்மென்

சீறடி கல்லா இளையர் மெல்லத் தைவர'  (சி.பா 30-32)

பிற்கால நிறுவனக் கருத்தியல்களில் கடவுளர்களின் திருவடிகள் எல்லா உயிர்களின் தஞ்சத்திற்குரிய இடமாகக் காட்டும். குறிப்பாக வைணவர் இடும் நாமம் திருமாலின் திருவடியாகப் போற்றும் மரபுண்டு. நம்மாழ்வார் திருமாலின் திருவடியாகக் குறிக்கப்பெறுவார். ஸ்ரீசடோரி என அழைப்பர். அதனடிப்படையில் பக்கதரின் திருவடிச்சேவை வலியுறுத்தப்படும். அதற்கு புராணங்கள் வழி உதாரணம் காட்டப்படும் கருடன் பெரிய திருவடி, அனுமன்-சிறிய திருவடி எனப்படுவர். அதற்கு நேர்மாறாக பெண்ணின் முக்கியத்துவம் அலைகுடிச் சமூகத்தில் உணரப்பட்டுள்ளது.

நல்லியக்கோடனின் வள்ளன்மையை முன்னிறுத்த வேந்தர்களின் பெருவெளி அதிகாரப்புலங்கள் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன. மூவேந்தர்களை அடையாளப்படுத்தும்போது அவர்தம் 'குடிவழிப் பெருமை' பேசப்படுகிறது. குடிவழி எனப்படுவது வேந்தர்களுக்கு ஆட்சியுரிமையைக் கருவிலேயே பெற்றுதரும் காரணி எனலாம். கைலாசபதி "வீரன் ஒருவன் வீரத்தாலும் துணிவாலும் மட்டுமன்றி அவனுடைய குடிவழியாலும் அவன் மற்றவரிமிருந்து வேறுபடுகிறான்" எனக்கூறுவார். நத்தத்தனார் சேரனையும், சோழனையம், பாண்டியனையும் அவர்தம் குடிவழியோடு இணைத்துப் பேசுவது மாறுபட்ட சிந்தனையைத் தருகிறது. 'குட்புலக்காவலர் மருமான்", 'தென்புலக்காவலர் மருமான்'. 'குணபுலம் காவலர்' இவ்வரிகளில் இடம்பெறும் மூன்று சொற்களும் அவ்வேந்தர்களின் ஆட்வி எல்லை. மக்களின் நம்பகத்தன்மை குடிவழி மரபுரிமை என்ற பொருண்மைகளைச் சுட்டுகின்றன.

'குடபுலம்', 'தென்புலம்', 'குணபுலம்' என்பது சேர, பாண்டிய, சோழரின் ஆட்சி பரப்புகள். காவலர் என்னும் சொல் மன்னுயிரின் அச்சம் தீர்க்கும் தொழிலைக் குறிக்கின்றது. உள்ளார்ந்த பொருள் மக்கள் வாழ்வியல் பதற்றத்தின் நோக்கிலேயே இருந்துள்ளது என்பதை உணரமுடிகிறது. பேரரசுகள் தமது வலிமைமிகு போர்களால் தம் எல்லை விஸ்தரிப்பை மையமிட்டு நடத்துவதால் இயல்பாகவே மக்களின் மனதில் அச்ச உணர்வு உட்புகும். 'மருமான்' எனப்படுவது மரபுரிமையைச் சுட்டும். இம்மூன்றும் வேந்தர்களின் ஆட்சி அதிகால வல்லாண்மையைக் காட்டுகின்றது. மூன்று தலைநகரங்களான வஞ்சி, மதுரை, உறந்தை நகர்களைச் சுட்டுவது அவ்வேந்தர்களின் மைய அதிகாரப் புலன்கள் நத்தத்தனார் இதனைப் புகழ்ந்துரைப்பது போல வரிசைப்படுத்திக் கூறினாலும் நல்லியகோடனின் வளப்பகுதிகளைக் காட்டிலும் வறியதாகக் காட்டுகிறார். மேலும் இம்மன்னர்களுக்குப் புகழுரை தொன்மங்களான சேரனின்-வடபுல ஆளுமை, தொன்மம், பாண்டியனுக்கும்-தமிழுக்கும் ஆன தொன்மம் சோழனுக்கும் தம்குடிப்பேணலுக்குமானத் தொன்மங்களைப் புகழுரைபோல முன்வைக்கப்பட்டாலும் 'வறிதே என்ற சொல்லின் மூலம் அவைகள் நம்பகத்தைமயில்லா புகழுரைக்களாகக் காட்டி வேளீர் அரசனான நல்லியக்கோடனின் முனைகின்றது. பெருமையை முன்னிலைப்படுத்த இப்பனுவல்.

இப்பனுவலில் இதன் தொடர்ச்சியாய் கடையேழு வள்ளல்களான பேகன், பாரி, காரி, ஆய், அதியமான், நள்ளி, ஓரி ஆகியோரின் வள்ளன்மையை வரிசைப்படுத்தும் நத்தத்தனார் அவர்களது.

இன மரபுகளையும், மனித இன உற்பத்தி பிறப்பிடமான குறிஞ்சியையும், முல்லையையும் அதன் இயற்கை சார்க் கூறுகளையும் சிறப்பித்துப் பேசுகிறார். உறவுகளைக் இயற்கைக்கும்-மனிதனுக்குமான அதீத கொண்டுள்ள அலைகுடிச்சமூகத்தின் உயிரியல் நடத்தைகளைக் கோடிட்டுக் காட்டுகிறார். ஆவியன் பெருமகன், பெருங்கல் நாடன், பிறம்பின் கோமான், தன்மொழிஆய், முட்டாது கொடுத்த, நளிமலை நாடன், பிறப்பின் குறும்பொறை நல்நாடு. குறிஞ்சிக்கோமான் போன்ற சொற் பயன்பாடு எல்லாம் வாய்மொழி மரபின் வாய்பாடாகவே அமைகின்றது. இவ்வள்ளண்மைக் நடத்தைகளை இணைக்கிறார். கூட்டத்தோடு நல்லியக்கோடனின் பெருமைத்தகு

"எழுவர் பூண்ட ஈகைச் செந்நுகம்

விரிகடல் வேலி வியலகம் விளங்க

ஒருதான் தாங்கிய உரனுடை நோன்தாள்' (சி.பா 111-114)

நல்லியக்கோடனை 'ஓவியர் பெருமகன்' என ஆசிரியர் குறிப்பிடுவது இருவித பண்பாட்டுக் கூறுகளை இணைக்கிறது. தமிழ்ப் பூர்வக் குடிகளுள் ஒன்று ஓவியர் குடியாகும். அதாவது அதியர், அண்டர், அருவாளர், ஆவியர், பூழியர், வேளீர் போன்று ஒன்று எனலாம். 'பெருமகனெனப்படுவது' குடிகளின் தலைமையை உணர்த்துவது. பெருமைக்குரிய பண்புகளுடைய பெரியோன் எனப் பொருள் கொள்ளலாம். பேகனை-ஆவியர் பெருமகன், நள்ளி- இளையர்பெருமகன், ஆய்-வயவர் பெருமகன், அதியமான்-மழவர் பெருமகன், ஓரி-மழவர் பெருமகன் எனப் பதிவாகியிருப்பது சிந்திக்கத்தக்கது. இம்மரபுகளின் முக்கிய தொழிற்படுதல் வள்ளன்மையே. அதற்குச் சான்றாக 'கோடியர் புரவலன்' எனப் போற்றப்படுகிறது. பசியாற்றுவது இனமரபுகளின் முதல் செயற்பாடு, அதன் வழி வந்தது தான் பகுத்துண்டல்மரபு. நத்தத்தனார் 'ஒல்கு பசி', 'அழிபசி', என்ற சொற்களின் கூர்மையான பொருளின் மூலம் அதனைத் தீர்க்கும் கடமையுள்ளவன் நல்லியக்கோடன் எனப் புகழுரைக்கிறார். பாணர்கள் கூட்டமாக வாழ்வியலை மேற்கொண்டவர்கள் என்பதை இரும்பேர் ஒக்கல் செம்மல் உள்ளமோடு செல்குவீர்' எனக் காட்டுகிறார்.

அக்காலச்சூழலில் வாய்மொழி மரபிலிருந்து எழுத்து மொழி மரபு பரிணமிக்கிறது என்பதனை 'பொருநர்க்கு ஆயினும் புலவர்க்கு ஆயினும் அருமறை நாவின் அந்தணர்க்கும் ஆயினும், எனும் வரிகள் நினைவுப்படுத்துகின்றன. இவ்வரிசையில் பொருநர்களை முன்வைத்து புலவர்மரபையும், அந்தணர் மரபையும் பின்னுக்குத் தள்ளுகிறார். நல்லியக்கோடனின் பண்புகளாக ஒரு நீண்ட பட்டியலைத் தருகின்றார் நான்கு வித மக்களினத்தாருக்கு ஏற்புடையதாகச் சுட்டப்படுகிறது. அறிந்தோர், மறவர், மகளிர், பரிசிலர் எனக் குறிப்படப்படுகிறது. சமூகத்தின் அனைத்துத் தர மக்களின் ஒப்புதலைப் பெற்றவன் நல்லியக்கோடன் என்பதனை வலியுறுத்த வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

"செய்ந்நன்றி அறிதலும் சிற்றினம் இன்மையும் இன்முகம் உடைமையும் இனியன் ஆதலும் செறிந்து விளங்கு சிறப்பின் அறிந்தோர் ஏத்த: அஞ்சினர்க்கு அளித்தலும் வெஞ்சினம் இன்மையும் ஆண் அணி புகுதலும் அழிபடை தாங்கலும் வாள்மீக் கூற்றத்து வயவர் ஏத்த: கருதியது முடித்தலும் காமுற படுதலும் ஒருவழிப் படாமையும் ஒழியது உணர்தலும் அரிஏர் உண்கண் அரிவையர் ஏத்த அறிவுமடம் படுதலும் அறிவுநன்டு உடைமையும் வரிசை அறிதலும் வரையாது கொடுத்தலும் பரிசில் வாழ்க்கைப் பரிசிலர் ஏத்த: பல்மீன் நடுவண் பால்மதி போல இன்நகை ஆயமொடு இருந்தோற் குறுகி" (சி.ய-211-230)

நல்லியக்கோடனின் தலைமைத்துவ உறுதிப்பாட்டை தமது குடிகளில் இயல்பாகவே பெற்றவன் எனும் நம்பகத் தன்மையைக் கொணரவே இவ்வரிகள் இடம் பெறுகிறன. அன்றைய காலத்தில் சிதைந்து கொண்டிருந்த பூர்வ இனக் குடிகள் நிலை குடிகளான நிறுவனச் சமூகங்களால் கரைத்துக் கொள்ளப்பட்டாலும் அவர்தம் மரபுகள் தங்களைத் தகவமைத்துக் கொள்ள முன்னெடுப்புக்களை எடுத்துக் கொண்டன என்பதை இப்பனுவல்கள் உணர்த்துகின்றன. எந்தவொரு கருத்தியலின் மையம் நெறிசார்ந்த சிந்தனைகளின் ஊடாக மாற்றங்களை உண்டாக்குவதாகும். இதனை நுண்ணிலைச் சிந்தனை முறைமைகள் என்பர். வெளிப்படையாகச் சொல்லப்பட்டாலும் இல்லையெனினும் எல்லா அரசியல் போக்குகளும் உள்ளார்ந்த நிலையில் ஒரு கருத்தியல் நிலையைக் கொண்டிருக்கும். சேம்பர்ஸ் அகராதி "ஆழ்நிலை மனத்தில் புதைந்து கிடக்கின்ற எண்ணங்களின் வகைகள், நடத்தைகளின் தன்மைகள் சமூக உருவாக்கம் ஆகிய பொருள்களை மையமாகக் கொண்டே ஒரு குறிப்பிட்ட இலக்கிய வடிவில் எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதே அதன் உருவாக்கம்" எனக் குறிப்பது இங்கு பொருந்தத்தக்கது.

- முனைவர் சூ.ஜா.இதயராஜா, தமிழ்த் துறைத் தலைவர், தூய சவேரியார் கல்லூரி (தன்னாட்சி, பாளையங்கோட்டை).

Pin It