தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டம் அம்மாசத்திரம்  கிராமத்தைச் சேர்ந்தவர் ஜி.சரவணன். இவர் 2000 ஆம் ஆண்டிலிருந்து பல்வேறு இதழ்களில் சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுதி வருகிறார். தம்முடைய சிறுகதைகளைத் தொகுத்து ’தெற்கு பார்த்த வீடு’ எனும் தலைப்பில் முதல் சிறுகதைத் தொகுப்பையும், ’பார்த்தாவுக்கு எழுதாத கடிதம்’ எனும் தலைப்பில் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பையும் எழுதி வெளியிட்டுள்ளார். பார்த்தாவுக்கு எழுதாத கடிதம் எனும் நூலை விமர்சிக்கும் வகையில் இக்கட்டுரை அமைகிறது.

இந்நூலின் ஆசிரியர் என்னுரையில், ‘பெரும்பாலான கதைகளில் கிராமியத்தை விடவும் முடியாமல் நகரியத்தை ஏற்கவும் இயலாமல் அல்லாடிய மக்களைத்தான் சொல்ல முயன்றிருக்கிறேன்.’ என்று கூறியுள்ளதை இக்கதைகளைப் படிப்பவர்கள் நன்கு உணர முடியும்.

வாலிபால்

g saravanan short stories‘வாலிபால்’ சிறுகதையில் இந்திராகாந்தி தலைமையிலான மத்திய அரசு, பள்ளிகளில் தொடங்கி வைத்த சிறுசேமிப்புத் திட்டம் கதையின் தொடக்கத்திலும், கிராமங்களுக்கு ராஜீவ்காந்தி வழங்கிய பஞ்சாயத்து போர்டு டி.வி. கதையின் முடிவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இக்கதையில் ஐந்து வரை கிராமத்திலுள்ள பள்ளியில் படித்த சிறுவன் ஆறாம் வகுப்பினை நகரத்திலுள்ள பள்ளியில் படிக்கச் செல்வதில் கதை தொடங்குகிறது. இந்நிலையில், கிராம விளையாட்டையும், நகரப் பந்து விளையாட்டையும் ஒப்பிட்டுக் கூறியுள்ளார்.

கைப்பந்து என நினைத்து கூடைப்பந்தினை ஏலத்தில் எடுத்து, அதனால் பிறர்படும் சிரமங்களை மிகவும் எதார்த்தமாகவும் நகைச்சுவையாகவும் பதிவு செய்துள்ளார்.

பார்த்தாவுக்கு எழுதாத கடிதம்

‘பார்த்தாவுக்கு எழுதாத கடிதம்’ எனும் கதையில் மார்கழி மாதத்தின் அதிகாலையில் ஆனந்தா எனும் பெண்ணைக் காணச் செல்கின்ற இளைஞனுக்கு அவளையும் அவள் போடும் கோலத்தையும் பிடித்துப்போவதை அழகுறக் காட்சிப்படுத்தியுள்ளார். ”ஆனந்தா தரையில் பரவும் வண்ணத்துப்பூச்சிக்கு சிறகை விரித்துக் கொண்டிருந்தாள். கால்களை அகட்டி நின்று குனிந்தபடி கோலம் போடுவதில் மட்டுமே லயித்திருந்தாள்.”(ப.19)

ஆனந்தா வரைந்திருந்த வண்ணத்துப்பூச்சி கோலத்தில் எவ்வாறு கிடந்தது என்பதை அழகுற வர்ணிக்கிறார். “ஒவ்வொரு வண்ணத்துப்பூச்சிக்கும் வெவ்வேறு நிறம் கொடுத்திருந்தாள். நாளெல்லாம் பறந்து திரிந்து ஆயாசமாக ஓய்வெடுக்க தரையில் பரவிய நிலையில் சிறகு விரித்துக் கிடப்பது மாதிரி வரைந்திருந்தாள்.”(ப.20)

நகரத்திற்குச் செல்வதற்கு முன் இந்நிகழ்வு நடப்பதால், இதுபோன்று கோலம்போடும் வழக்கம் நகரப் பகுதிகளில் இல்லாததை எண்ணி ஆசிரியர் கதையின் வழியாக வருத்தம் கொள்கிறார்.

ஆனந்தா கோலம் போடுவதை ஒளிந்து பார்க்கும் நிலையில் தத்துவார்த்தமான கருத்தினை ஆசிரியர் வெளிப்படுத்தியுள்ளார். “எல்லாவிடத்திலும் எல்லோருக்கும் மனசை உணர்த்துகிற மாதிரியான எந்தக் கருவியும் இல்லாதது எத்தனை துயரமானது. உணர்வு பூர்வமான கருத்துகளையும்கூட சிலரிடம் சொல்லமுடியாமல் போவது எத்தனை துரதிருஷ்டவசமானது.”(ப.18)

கதையின் முடிவில் பார்த்தாவுக்கு கடிதத்தின் வழியாகச் சொல்ல நினைத்ததாக, “எதையும் ரசித்துப் பார்க்கவே நினைக்கிற எல்லோருக்கும் ரசிக்க வேண்டியதெல்லாம் அத்தனை சரியாய் கிடைக்கிறதில்லை” எனும் எதார்த்த வாழ்வின் உண்மையைப் புலப்படுத்தியுள்ளார்.

பிற கதைகள்

தெற்கு பார்த்த வீடு எனும் கதையில் மங்கலத்தாயியின் வீட்டுத் திண்ணையும், சக்கரத்தார் சாவு கதையில் சீனிச்சாமியின் வீட்டுத் திண்ணை குறித்தும் கிராமம் சார்ந்த நிலையில் கதையின் ஊடாகப் பேசப்படுகிறது.

நகரத்தில் மைக் மூலம் விளம்பரம் செய்த நபர் சக்கரத்தாரின் இறப்புச் செய்தியைக் கிராமத்தில் முதன் முறையாகக் கூறுவதும், அதனால் மக்களால் அவர் பட்ட துன்பத்தையும், உண்மை தெரிந்தபின் வெள்ளந்தியாய் மக்கள் பேசும் பேச்சினையும், சீனிச்சாமி என்பவர் அவருக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுப்பதையும் அழகாய்க் காட்சிப்படுத்தியுள்ளார்.

தனித்த மரம் சிறுகதையில் கிராமம் நகரமயமாகும் நிலையைக் கதையின் போக்கில் விளக்கிச் செல்கிறார். “வயல்களில் வீடுகள் முளைத்து நிற்கின்றன. வாய்க்கால்களைத் தூர்த்து தார்ச்சாலையாக்கிவிட்டார்கள். காவிரியில் நீரூமில்லை. கரையோரம் நிழலுமில்லை. குளங்கள் நீர்த்தேக்கமின்றி குட்டைகளாகச் சிறுத்துவிட்டன.” (ப.37)

மேலும், ராசமக்கா வாழ்வின் வழியாக, ‘தனித்து விடப்பட்ட பெண்களுக்கு தைரியம் பெருக்கெடுத்து விடுகிறது’ என்னும் வாழ்க்கைத் தத்துவத்தை பதிவு செய்துள்ளார்.

பட்டு எனும் கதையின் மூலம் மனித மனம் ஏதேனும் ஒன்றில் லயித்துப் போனால், அதற்காக ஏங்குவதும், அதை மட்டுமே நாடுவதும் தேடுவதுமாக இருக்கும். ஒருவேளை கண்டடையவில்லை என்றால் என்றேனும் ஒருநாள் கண்டுவிடலாம் என்ற நம்பிக்கையில் காணும் வரை தேடிக் கொண்டே இருக்கும் என்பதைப் புலப்படுத்தியுள்ளது தனிச்சிறப்பு.

கணவன் - மனைவி இடையேயான சிக்கலை பொம்மையும் பொம்மைகளும் எனும் கதையில் ஆசிரியர் பேசுகிறார். மனைவியிடம் ஆறேழு மாதங்களுக்கு மேல் அடிவாங்கும் கணவன், வாழ்வை வெறுத்த நிலையில் வீட்டை விட்டு வெளியேறி ரயில் பயணத்தை மேற்கொள்கிறான். பயணத்தில் சந்திக்கும் குடும்பத்தின் ஆரவார நிலை, சிறுவனுடன் ஏற்படும் உறவு, பயணத்தின் போது வந்து போகும் மனைவியின் புலம்பல், தஞ்சாவூரில் இறங்கிய ரவி மீண்டும் வீட்டிற்குத் திரும்ப முடிவு செய்து ரயிலுக்குக் காத்திருப்பதாகக் கதையை நிறைவு செய்கிறார். இதில் மனித மனதின் ஊடாட்டத்தை நுணுக்கமாகச் சித்தரித்துள்ளார்.

திரைப்படத் துறையில் சாதிக்கும் எண்ணத்தில் அப்பாவிடம் சொல்லாமலேயே வீட்டை விட்டுச் சென்னைக்குச் சென்ற மகனுக்கும் அப்பாவிற்குமான நிலைப்பாட்டினை சரண் எனும் கதையில் ஆசிரியர் படம்பிடித்துக் காட்டியுள்ளார். திடீரென்று சென்னை வந்து மகனைச் சந்திக்கும் அப்பாவிற்கும் மகனுக்கும் இடையிலான உரையாடலின் மூலம் தலைமுறைகளுக்கு இடையிலான முரண்பட்ட சிந்தனைகளைத் தெளிவுற பதிவு செய்துள்ளார்.

மன இருக்கை எனும் கதையினை ஒரு பெண்ணின் நிலையிலிருந்து ஆசிரியர் பதிவு செய்துள்ளது புதிய முயற்சி என்றே எண்ணத் தோன்றுகிறது. குறிப்பாக பேருந்துப் பயணத்தின்போது, இல்லாததை விரும்பும் பெண்ணின் மனநிலையையும், ஆண்களின் மீதான சந்தேகப் பார்வையையும், முடிவெடுத்தலில் தெளிவற்ற நிலையையும் கதையின் வழி  வெளிப்படுத்தியுள்ளார். இதேபோன்று சீத்து என்கிற சிறுமியைக் குறித்த கதையையும் பெண்ணின் நிலையிலேயே ஆசிரியர் கூறியுள்ளார். சித்திரை மாதத்தில் பிறந்ததால் சித்திரைச் செல்வி என்று தந்தை சூட்டிய பெயரை, முதலில் சித்து என்று சுருக்கி, பின்னர் சீத்து என்று சுருக்கிக் கூப்பிட ஆரம்பித்ததிலிருந்து அச்சிறுமி படும் இன்னல்களையும், சீத்தப்பா எனத் தன்னைக் கேலி செய்பவர்களை எதுவும் செய்யாமல் நகரும் தந்தையின் பயந்த சுபாவமும், பெயர் பிடிக்காமல் போனதால் அவளுக்கு எல்லாமும் பிடிக்காமல் போவது, கல்யாணம் ஆகப்போகும் புதிய சூழலால் தன்னைத் தேற்றிக் கொள்வது எனப் பெண்ணின் மனநிலையிலிருந்து கதையைப் பதிவு செய்துள்ளார்.

நீதிமன்றத்தின் அனுமதியுடன் மக்கள் குடியிருக்கும் வீடுகள் எந்திரத்தால் இடிக்கப்பட்டு மூட்டை முடிச்சுகளுடன் மக்கள் இடம்பெயர்வதையும், காலம் காலமாய் மக்கள் வழிபட்டு வந்த வீரனார் கோயிலை இடித்து நெடுஞ்சாலை போடப் பேச்சு நடக்கும் சமயம் பூசாரி அதிகாரிகளை அடிப்பதும், அதனால் கைது செய்யப்பட்ட பின்னர், தரைமட்டமாக ஆக்கப்பட்டு சாலை அமைப்பதையும், வெளிவந்த பூசாரி பைத்தியமாய்த் திரிவதையும்  யானையடிக் குதிரை கதையில் பதிவு செய்துள்ளார்.

பிச்சை என்பவனை மையமாக வைத்து அவனுக்குள் இருந்த நெருப்பினை உள் நெருப்பு எனத் தலைப்பிட்டு ஆசிரியர் கதையாக வடித்துள்ளார். தான் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்த மிராசுதார் வீராசாமியின் செயலைக் கடைசி வரை வெளிப்படையாகக் கூறாமல் கதையின் முடிவில் அவர் வீட்டின் முன் பிச்சை பிணவண்டியை நிறுத்தியதும், மிராசுதார் தப்பி ஓடுவதன் மூலமே மிராசுதார் மீது வாசகனுக்குக் கேள்வி எழுகிறது. பிச்சைக்கும் அவன் மனைவிக்கும் இடையே நடந்த சண்டைக்கான காரணத்தினைக் கதையின் முடிவில் ஆசிரியர் கூறாமல் கூறி கதையைச் சட்டென முடித்துள்ளார்.

இந்தச் சிறுகதை நூலின் ஆசிரியருக்குள் ஒரு கவிஞன் ஒளிந்துள்ளதை ஒரு பூவும் இன்னொரு சிரிப்பும் எனும் கதையின் தலைப்பு உணர்த்துகிறது. தலைப்போடு நின்றுவிடாமல் கதைக்குள்ளும் கவித்துவம் புலப்பட்டுள்ளது. ‘பூக்கள் ஒரு அழகு என்றால் பூச்செடிகள் இன்னொரு அழகு.’ என்று கவித்துவமாகக் கதையின் போக்கில் ஆசிரியர் வர்ணித்துச் செல்கிறார்.

மேலும், நகர வாழ்வு கற்றுக் கொடுத்திருக்கிற நாகரிகமாக பின்வரும் கருத்தினை ஆதங்கமாகப் பதிவு செய்துள்ளார். ”ஒரு பூச்செடியை பராமரிக்கிற ஞானத்தையும் கூட இன்னொருவரிடம் கேட்டுப் பெற வேண்டியதிருக்கிறது என்பதும், நாய்க்குட்டி வளர்ப்பு முறை கூட நீண்ட நேரப் பயிற்சிக்குப் பிறகுதான் நமக்கு சாத்தியப்படுகிறது.” (ப.78)

ரயிலில் வந்தவள் கதையில் பின்னோக்கு உத்தியை ஆசிரியர் கையாண்டுள்ளார். ரயிலுக்காகக் காத்திருத்தலில் கதை தொடங்கி, ரயிலில் பயணம் செய்தபடி வத்சலா என்ற பெண்ணைப் பின்னோக்கு உத்தியில் நினைவுகூர்ந்து, வத்சலாவை நினைவுபடுத்தியபடி எதிரில் அமர்ந்திருக்கும் பெண்ணிடம் பேசத் தொடங்குவதில் கதை முடிகிறது.

ஒரு மரணம் மற்றும் சில கடமைகள் எனும் சிறுகதையில், எல்லோருக்கும் தெரிந்த பேச்சாளரான அண்ணாச்சி என்பவர் கண்ணகி சிலை அருகில் நிகழ்ந்த விபத்தொன்றால் இறந்து பிணக்கிடங்கில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில் கதை தொடங்குகிறது. மனித இறப்பிற்குப் பின் பிற மனிதர்கள் சிறப்பித்துப் பேசும்நிலை, பிணக்கிடங்கின் சூழல், பிணக்கிடங்கிற்குள் அடையாளம் காட்டச் செல்பவர் எதிர்நோக்கும் இன்னல்களும், அவரின் மனநிலையும் கதையின் போக்கில் விவரிக்கப்படுகிறது.

உடலை அடையாளம் காட்டக் காத்திருக்கும் நிலையில் மனித  வாழ்க்கை குறித்தும் காலம் பற்றியும் தத்துவார்த்தமான கருத்துகளை ஆசிரியர் சொல்லிச் செல்கிறார். “மரணம் எத்தனை துயரமானது என்பதை உணர்ந்திருந்தாலும் இத்தனை எளிதாய் இத்தனை சுலபமாய் நிகழ்ந்துவிடுகிற மரணங்களிலிருந்து மீள்வது எத்தனை கொடுமையானது.

பல்லாயிரம் சிறகுகள் கொண்ட விசித்திரக் கழுகு மாதிரி காலம் விண்ணெங்கும் பறந்து சென்று கொண்டேயிருக்கிறது. தன் நீண்ட அலகால் சில மனிதரை கொத்திக் கொள்வதும் சிகரமேற்றுவதும் வழியிலேயே தவறவிட்டு விடுவதுமாய் பயணித்துக் கொண்டேயிருக்கிறது.” ((ப.92) இவ்வாறு கதையின் போக்கிற்கேற்ப கருத்துகளைப் பதிவு செய்வது ஆசிரியரின் முதிர்ச்சியையே காட்டுகிறது.

இக்கதையின் முடிவில் தான் வாழ்ந்த காலங்களில் எத்தனையோ மேடைகளில் பேசி பார்வையாளர்களின் கைத்தட்டல்களைப் பெற்ற பேச்சாளருக்கு அமைதியாக இறுதிச் சடங்கு நடந்து முடிந்த பின்னர் அனைவரும் வண்டியில் வீடு நோக்கிப் பயணிக்கின்றனர். இந்நிலையில் ஒரு குறியீட்டு உத்தியாகக் கதையை இவ்வாறு ஆசிரியர் நிறைவு செய்கிறார். “ஓயாது கேட்டுக்கொண்டேயிருக்கிறது கைத்தட்டல். வண்டியில் ஓட்டுனர் தவிர மற்ற யாவரும் சலனமற்று உறங்கிக் கொண்டிருக்கின்றனர். கைத்தட்டல்களைச் சுமந்து கொண்டு வாகனங்கள் கலைய விரைகிறது வண்டி ஊரை நோக்கி.” (ப.95)

இந்நூலின் கடைசிக் கதையாக கடவுளின் வருகை எனும் கதை இடம் பெற்றுள்ளது. இதில் நண்பனொருவன் தன் வீட்டில் சீட்டு விளையாடியதால், தன் தாய் கோபம் கொண்டு முதுகில் ஓங்கி அடித்து சாணிக் கரைசலைத் தலையில் கவிழ்த்து விடுகிறாள். இருமுறை குளத்தில் குளித்தும் சாணிவாடை போகவில்லை. இதனால் மனமுடைந்த சிறுவன் ஊரைவிட்டே வடக்கு நோக்கி ரயிலில் பயணம் செய்கிறான். ரயில் பயணத்தில் சந்தித்த சிவப்பு சீருடைக்காரர்களின் உதவியால் ரயிலில் உணவு விற்கும் வேலை செய்கிறான். ஒருவேளை தெரிந்தவர்கள் யாரும் வந்தால் மீண்டும் ஊருக்குச் செல்ல நேரிடும் என்ற எண்ணத்தால் அவர்களின் உதவியால் ரேணிகுண்டா செல்கிறான். இந்த இடத்தில் கதையில் முன்னோக்கு உத்தியை ஆசிரியர் கையாண்டுள்ளார்.

மாதே என்ற ஒரிஸா பெண்ணைத் திருமணம் செய்து வாழும் நிலையில் குழந்தை இல்லாமையால் இருவரும் குழந்தைக்காக ஏங்கித் தவிக்கிறார்கள். இதனால் கணவனுடன் அடிக்கடி மாதே சண்டை போடுகிறாள். இப்படியாக இடைவெளியும் நெருக்கமும் மாறி மாறி குழந்தையின்மையால் ஏற்படுகிறது. இருவரின் மனநிலையும் கதையின் போக்கில் பதிவு செய்யப்படுகிறது.

ஒருநாள் மாலையில் பேருந்து நிறுத்தமொன்றில் அமர்ந்திருக்கும்போது, தமிழ்நாட்டு முகச்சாயலில் பத்து வயது சிறுவனைப் பார்க்கிறான். தன்னைப் போல ஊருக்குச் செல்ல மறுக்கும் அவனைத் தன்னையே பார்த்த நிலையில், அவனுடன் பேசி வீட்டிற்கு அழைத்து வருகிறான். பசிக்குது என்றவனுக்கு சாப்பாடு வாங்கிக் கொடுத்து,  ’சாப்பிடுகையில் அவனின் பசியை இவன் உணர்ந்தான்’ என்று அவனின் அனுபவ உணர்விலிருந்து பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விடியற்காலையில் வீட்டிற்குள் உறங்கும் சிறுவனை மனைவியிடம் காட்டுகிறான். “ஆச்சர்ய மிகுதியோடு வீட்டுக்குள் சென்று அவனைப் பார்த்தபோது மின்னலென கடவுளின் முகம் வந்துபோனது அவளுக்கு. அவனது கன்னத்தில் கைவைத்துப் பார்த்துப் பூரித்துப் போனாள். எதுவும் பேசத் தோன்றாமல் இவனைக் கட்டிக் கொண்டாள். இறுக அணைத்த நிலையில் இருவரும் சிரித்துக் கொண்டார்கள். சிறுவன் உறக்கம் கலைந்து எழுந்திருக்கட்டும் எனக் காத்திருந்தனர்.” எனக் கதையை ஆசிரியர் நிறைவு செய்கிறார். எத்தனையோ நாட்கள் குழந்தைக்காகக் காத்திருந்த இருவரும் சிறுவன் தூங்கி விழிக்கும் வரை காத்திருக்க மாட்டார்களா என்ன என்றே எண்ணத் தோன்றுகிறது. இன்றும் இவர்களைப் போன்று குழந்தை இல்லாதவர்களாக வாழ்பவர்களில் எத்தனை பேர் குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்க முன்வருகிறார்கள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

இச்சிறுகதை நூலின் அணிந்துரையில் பேராசிரியர் இரா.காமராசு குறிப்பிட்டதைப் போல, கதைத் தேர்வும், வழங்கல் முறையும் கைகூடிய இக்கதைகள் தமிழ்ச் சிறுகதை நெடும்பரப்பில் கவனிக்கத்தக்கவை. தனக்கெனத் தனித்ததொரு தடத்தில் பயணிக்கும் ஜி.சரவணன் நவீனத்தமிழுக்கு நல்வரவு என்பது எள்ளளவும் மிகையில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.

பார்த்தாவுக்கு எழுதாத கடிதம் | ஜி.சரவணன்

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை

விலை: ரூ.100

- முனைவர் க.கிருஷ்ணமூர்த்தி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை,  தருமமூர்த்தி இராவ்பகதுர் கலவல கண்ணன் செட்டி இந்துக் கல்லூரி, பட்டாபிராம், சென்னை -72

Pin It