"எங்கிங்க மலை பெய்யிது...வானம் பாத்த பூமி தாங்க..." என்று அந்த காலத்தில் பேசுவார்கள் என்று நம்பிக் கொண்டிருந்த நினைவுக்கு.. அது இந்தக் காலத்திலும் நடக்கும் நடக்கிறது என்று சுர்ரென சுட்டு நினைவு படுத்தி இருக்கிறது இந்தக் கோடை.

மழை என்பது ஒரு கால நிலை. நாம் நம்ம வேலையை செய்கிறோம். அது அதன் வேலையை செய்கிறது என்று கவனத்தில் இல்லாத மழை பற்றிதான் இந்த பயமும்... பதற்றமும்.

எது ஒன்றும் காத்திருக்கும் போது தான் அதன் மதிப்பு தெரிய வருகிறது. அதுவாக கிடைக்கையில் அதன் மீது இருக்கும் அலட்சியம் இயல்பாக வெளிப்படும். அதன் வடிவம் மிக மிக தட்டையானது. தட்டைகளின் வழியே பொதுமை எப்போதும் அலட்டிக்கொண்டுதான் ஆட்சி செய்யும். இதோ இந்தக் கோடை.. வேறொன்றை நமக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

அதுவும் மழையோடு விளையாடி மழையோடே வளர்ந்த எனக்கெல்லாம் இந்த வெயில்... தண்டனை.

வெயிலின் தாக்கம் மனிதனை கொன்று கூறு போட்டுக் கொண்டிருக்கிறது. ஆராய்ச்சி கண்டுபிடிப்பு தொழில் நுட்பம் வளர்ச்சி என்று என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம். வெயிலை இப்படி கடுப்பேற்றி விட்டு ஏசிக்குள் ஒளிந்து கொள்வது கயமைத்தனம். எல்லை மீறி சென்று கொண்டிருக்கும் வெயிலின் போக்குக்கு வழி செய்தவர்கள் நாம் எல்லாருமே தான். நாலா திசையிலிருந்து கோர கைகளை விரித்துக் கொண்டு வரும் வெயிலின் இந்தக் கால வடிவம் மனிதனை மிரட்டுகிறது. மனுஷா நீங்க நினைக்கற மாதிரி தண்ணீ சாதாரண விஷயம் இல்ல. அது இல்லனா விஷமாகி வீணாவீர்கள் என்பதை உடல் கொப்பளிக்க சூடு வைத்து சொல்லிக் கொண்டிருக்கிறது.

நம்மை போன்ற பொயட்டிக் ஃபெல்லோஸ் மழையில் நனைவதும் வேடிக்கை பார்ப்பதும்.. மழையோடு விளையாடுவதும்... அது இயல்பு. ஆனால்.. நேற்றிரவு பெய்த அந்தச் சிறு மழையை கதவு திறந்து எட்டி பார்த்த சாதாரண கண்களில் தெரிந்ததெல்லாம் சூடு சூடு. மழைக்கு காத்திருந்த மனதை சிமிட்டி சிமிட்டி காட்டியது. கண்கள் கெஞ்சியதெல்லாம் இன்னும் கொஞ்சம் பெயி. (அப்போதும் சில பிணங்கள் பேய்த்தூக்கம் தூங்கியதை பற்றி சொல்வதற்கில்லை.)

நான் கூட கதவு கம்பிகளுக்கு இடையே ஒரு தும்பியைப் போல பார்த்திருந்தேன். ஒரு டம்ளர் மழையை கொஞ்சம் கொஞ்சமாக சொட்டி விட்டு அப்படியே வானக்கூட்டில் தன்னை வளைத்து ஒளித்துக் கொண்டது. கோபம் இருக்கும் தானே. குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல இந்த பூமியை பிச்சு வீசிய புத்திகெட்ட மனுஷனுக்கு புத்தி புகட்ட தயாராகி விட்டதா. தாங்குமா காலம். இருட்டிக்கொண்டு சுழன்று கொண்டிருந்த வானத்தை தாகத்தோடு பார்த்தபடியே நின்றபோது கைவிடப்பட்ட பாலைவனத்தில் கண்ணீருக்கு ஏங்கும் கால்களை உணர்ந்தேன். எரிச்சலூட்டும் இரவை கிழித்துக் கொண்டு மறுபக்கம் சென்று விட தோன்றியது.

வராத மழை அத்தனை தீவிரத்தை நமக்குள் உண்டாக்கி விட்டது. தாத்தாக்கள் வானம் பார்த்த காலம் ஒன்று இருந்தது. இப்போது மீண்டும் வானம் பார்க்க வைத்து விட்ட நம்மை நாமே நொந்து கொள்ளத்தான் வேண்டும்.

சுற்றிலும் மலைகள் இருக்கும் கோவையே கொழுந்து விட்டு எரிகிறது என்றால் நடுவில் சிக்கிக் கொண்ட சிட்டிகளின் நிலைமை பரிதாபத்துக்குரியது.

வாகன புகை.. வண்டிகளின் பெருக்கம்... சாலையோர மரங்களை அகற்றுதல்... எரிவாயு... தொழிற்சாலை புகை.. என்று ஏராள வழிகளில் மழையின் வழியை அடைத்து விட்டோம். என்ன செய்வது என்று புரியவில்லை. நிஜமாகவே ஒருவித நடுக்கத்தை நேற்றிரவு உணர்ந்தேன். வருவது போல வந்து அப்படியே நின்று விட்ட மழையை வெறிக்க தேடினேன். அது தண்டனை கொடுத்த மாதிரியேதான் இருந்தது. எல்லாருமே தூங்கி விட்டால் பிறகு யார் தான் சிலுவையை சுமப்பது. ரெம்ப நேரம் சுமந்து கொண்டு நின்றேன்.

பொறு பொறு அடிச்சு நொறுக்க போறேன் என்று கிசுகிசுக்கும் மழையின் அசரீரி ஒரு பூதமாக மிரட்டிக் கொண்டிருக்கிறது. பருவ நிலை மாற்றத்தை குழப்பி எந்த மாதத்தில் என்ன வேலை என்பதை இயற்கைக்கு மறக்கடித்து விட்டோம். இந்த வருடம் கடுமையான மழைப்பொழிவு இருக்க போகிறது என்று வானிலை ஆய்வு எச்சரிக்கை விடுத்து விட்டது. பார்ப்போம்.

வீடுகளில் வீதிகளில் சாலைகளில்... என பார்க்கும் கண்களில் எல்லாம் வெப்பமும் வெக்கையும். சொல்லொணா மாய துயரத்தை மதிக்குள் சொட்ட விட்டு அலையும் இந்த நாட்கள் எச்சரிக்கை மணி அடிப்பதை புத்தி உள்ளோர் புரிந்து கொள்வர். தேவைக்கு வாழ்ந்த போது தோகை விரித்த இயற்கையை... வசதிக்கு வாழ பழகி ஆப்பாக்கிக் கொண்டோம்.

மரத்தை நடுவது பற்றியெல்லாம் நிறைய பேசியாயிற்று. மரத்தை வெட்டாதீர் என்றும் தான். சாலை விரிவாக்கத்தில் கோவையை கொதிக்க செய்து விட்ட திட்டங்களில் வெந்து உருகுகிறது நாட்கள். என்று தணியுமோ இந்த போர்க்களம்.

- கவிஜி

Pin It