குணவர்தனவின் இறப்புச்செய்தி 2010 நவம்பர் 16இல் என்னைத் துயராக்கியது. அவரை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இருந்தபோது அறிவேன். நான் அமெரிக்காவில் வசித்தாலும் அவருடன் நெடுநாளைய நட்பினைக் கொண்டிருந்தேன். அவர் உடல்நிலை சரியில்லாமல் நெடுநாள் அவதிப்பட்டார். தினமும் இரத்த சுத்திகரிப்பு (dialysis) செய்து கொண்டிருந்தார். அவரின் இறப்பு எதிர்பார்க்கபடாத ஒன்று. முடிவை நோக்கி சென்று கொண்டிருந்தாலும் தடையின்றி தொடர்ந்து ஆய்வினை மேற்கொண்டார். அவர் சமூகநீதியின்மேல் பெரும் அக்கறை கொண்டிருந்ததால் இயங்கி வந்தார். தம் எழுத்துகளில் இனஒதுக்குதல் பற்றி பேசி வந்தார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராகச் செயற்பட்டார். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சராகவும் இயங்கினார். அவர் பொதுமேடைகளில் பேசியதில்லை. ஆனால், அவருடைய எழுத்துகளில் சமூக - பொருளியல் தொடர்பான அக்கறை இருந்தது. அவரின் எழுத்துகள் நினைவில் நிலைத்திருக்கும் நிலையான நினைவுச் சின்னம் போன்றன. ஆழ்ந்தகன்ற அவரது ஆய்வுக் கட்டுரைகள் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் வெளிவந்தன. அவை இலங்கையின் பண்டைய மற்றும் இடைக்காலத்து வரலாறு பற்றியவை. அவற்றின் மூலம், தற்காலத்திய வரலாற்றினை அறியலாம். அவை பற்றி சிலவற்றைக் கூறலாம்.

Leslie Gunawardanaஅவருடைய சிறந்தநூல் Robe and Plough: Monasticism and Economic Interest in Early Medieval Sri Lanka. இந்நூல் 1979 இல் வெளியிடப்பட்டது. அந்நூல்தான் அவருடைய அடுத்தடுத்த ஆய்விற்கு அடிப்படையாக அமைந்தது. அவர் மார்க்சியக் கொள்கைச் சார்புடையவர். எனவே, புத்த மடாலயத்தினைச் சமூக - பொருளியல் நிலையோடு இணைத்துப் பார்த்தார். அந்நூல் முக்கியமாகப் பேசும் ஒரு விஷயமாக, மடாலயம் புத்தமதக்கொள்கை மற்றும் நடைமுறையுடன் சமூக அரசியல் உலகில் எவ்வாறு இசைந்து செயற்பட்டது என்று அமைகிறது. இந்நூல் இடைக்காலத்திய மடாலயங்கள் பற்றிய கூர்மையான கருத்துப் பெட்டமாக மட்டுமன்று, பண்டைய புத்தசமயத்தின் உயிரோட்டமான தன்மை பற்றியும் பேசுகிறது. இலங்கையின் மடாலயங்களில் நிலக்கிழத் தன்மை பற்றியும் விளக்குகிறது. இது இந்தியாவின் பிராமண நிலக்கிழார்களின் தன்மையினை ஒத்தது. புத்த மடாலயங்கள் செல்வச் செழிப்புடன் இருந்ததால் சங்கம் நன்குவளர்ந்த சொத்துடைமை நிறுவனமாக இருந்தன. மடாலயங்களில் அடிமைமுறை ஒரு கூறாக இருந்தது. இவ்வடிமைமுறை, ஐரோப்பிய பண்ணை முறையினை ஒத்திருந்தது. ஆனால், அந்த அடிமைமுறை மடாலயத்தின் முக்கியக் கூறாகத் தோன்றவில்லை. மடாலயங்களில் அப்போதிருந்த செல்வச்சூழலில் அவர்கள் இருந்தனர். குணவர்தன, மடாலயத்தின் குறுக்கும் நெடுக்குமான இயக்கத்தினை விளக்கினார். மடாலயம் எவ்வாறு அரசியல் அமைப்போடும் அன்றாட வாழ்வுடனும் இடம்பெற்றிருந்தது என்பதனை வெளிப்படுத்தினார். மடாலயங்களில் ஒவ்வொருவரும் பிறருடன் இணைந்து இயங்கினர். அவர்களிடையேயான பிணைப்பு மிக முக்கியமானது. இலங்கையின் வரலாற்று வரைவியலில் இந்நூல் ஒரு மைல்கல்லாக (landmark) அமைந்தது. விமர்சன வரலாற்றுவரைவியலின் அடிப்படையில் நூல் எழுதப்பட்டுள்ளது. அதுவரையான வரலாற்று வரைவியலானது விளக்கமுறையின் அடிப்படையில் அரசின் அதிகாரப் படர்ச்சியில் (அரசர்கள், ஆளுநர்கள்) கவனம் செலுத்தின. பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக உறவுகள் பெரும்பாலும் வரலாற்று எழுத்துகளில் தனிப்பிரிவாக வைக்கப்பட்டன.

இலங்கையின் பண்டைய மற்றும் இடைக்காலத்திய வரலாற்றில் அரசின் மிகமுக்கியமான கூறான நீர்ப்பாசனக் கட்டமைப்பு பற்றிய இவரது ஆய்வுகள் மிக முக்கியமானவை (ஆனால், இது குறுகியஅளவில் பாசனக்குளம் என்ற அளவிற்கு சுருக்கிப்பார்ப்பது மூடத்தனமானது). உண்மையில் இந்நீர்ப்பாசனக் கட்டமைப்பு பெருமளவிலான நிலத்தினை நெற்பயிர் விளைச்சலுக்குக் கொண்டு வந்தது. இந்தப் பாசனமுறை நாகரிகம் Oriental Despotism என்ற கீழைத்தேய வல்லாட்சிக்கு இட்டுச் சென்றது என்று சொல்லும் சிலரின் கருத்தினை அவர் உறுதியாக விமர்சித்தார். அவரின் தொடக்ககாலத்திய ஆய்வுகள் நீர்ப்பாசனப் பொறியியல் தொழில்நுட்பத்தின் (hydraulic engineering) சிலகூறுகளைக் கச்சிதமாக வெளிப்படுத்தின. சூசகமான கூறுகளுடன் கட்டப்பட்ட (Key technical features) பாசனமடைகளின் அமைப்பு பற்றி கவனம் செலுத்தினார். தென் ஆசியாவின் இந்த அறிவியல் தொழில்நுட்பம் பற்றிய அவரார்வம், அத்தொழில்நுட்பத்தின் தகைமை பற்றி சரியாக வெளிக்கொணர்ந்தது. தற்போது அதன்மேல் மக்களுக்கு ஆர்வமில்லாமல் இருக்கலாம். அவருடைய ஆய்வுக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூல்வடிவில் வெளியிடப்பட்டால் இலங்கையிலும் உலக அளவிலும் ஆய்வுப் புலத்திற்குப் பெரிதும் பயன்படும். அதன்மேல் சரியான கவனம் செலுத்தப்படும்.

குணவர்தனவின் பலகருத்துகள் தவிர்க்கவியலாமல் அறிந்தேற்பினைப் பெறுகின்றன. அதில் ஒன்று: எந்தத்தீவும் தீவன்று. ஒவ்வொரு தீவும் விரிந்த உலகோடு தொடர்புடையது. இன்னொரு கருத்தியலையும் முன்வைக்கிறார்: கடல்வழிகள் உள்ளூர் நிலைமையினை உலக அளவிற்கு விளைவுகளை ஏற்படுத்துகிறது. வரலாற்று அறிஞர்கள் பலர் உள்ளூர், உலகளவில் எவ்வாறு உள்ளுறவு கொண்டிருந்தது என்பதனை உணர்த்தினர். ஒரு தேசத்தின் வரலாற்றியலில் நாடுகடந்த தேசியத் தன்மை (trans-nationhood) உண்டு. 1990 இல் திபெத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இலங்கைப் பிக்குகளின் வாழ்க்கைவரலாறு (biographies) என்ற கட்டுரையில் இக்கருத்தினை விளக்கினார். இலங்கை, தென்கிழக்காசியா இரண்டிற்குமான தொடர்புபற்றிய அவருடைய ஆய்வில் விசேடமாகத் தாய்லாந்து, திபெத்வரைக்கும் விரிவடைந்த அவரது ஆய்வில் இக்கருத்து வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

சூளவம்சம், அதன் ஒத்தகாலத்து பூஜாவலிய போன்ற இலக்கியங்கள், கலிங்க மாகன் (Megha - 1215-1236) தமிழ், கேரளத்துப் படையினருடன் இலங்கைக்குள் நுழைந்து ரஜரட்டவினைக் (Rajaratta) கைப்பற்றியதாகவும் புத்த வழிபாட்டிடங்களை அழித்தாதாகவும் கூறுகின்றன. இந்நூல்கள் இலங்கைமீதான தமிழரின் ஆக்கிரமிப்பு பற்றி கொடூரமாகப் பேசுகிறது. ஆனால், அவருடைய நண்பரும் உடன் ஆய்வாளருமான அமரதாஸலியனகமகே (Amaradasa Liyanagamage) கலிங்கப்படையின் நுழைவின்போது இலங்கையின் புத்தபிக்குகள் தென்னிந்தியாவிற்குத் தப்பிவந்து சோழநாட்டில் தஞ்சம்புகுந்தனர் என்கிறார். கலிங்க மாகனின் படைநுழைவினை மூன்றாம் விஜயபாகு தடுத்து நிறுத்தினான். சோழநாட்டில் தஞ்சம்புகுந்த பிக்குகளை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வந்தவர் அவரும் அவருடைய மகனான இரண்டாம் பராக்கிரமபாகுவும் ஆவர். இது தமிழ்ப்புத்தபிக்குகளின் தயவினால் நிகழ்ந்தது. அக்காலத்தில் சிறந்து விளங்கிய புத்த மடாலயத்தினை நிறுவியவர்களில் தமிழ்ப்புத்தபிக்குகளும் இருந்தனர். இங்கு, ஒன்றினை நினைவுகூர வேண்டும். அதாவது இலங்கையின் பல அரசர்கள் பிற்காலத்து கோட்டை (Kotte) முதல் கண்டி அரசர்கள் வரை தமிழ்மொழியறிவும் பெற்றிருந்தனர். கம்பளை (Gampola), கோட்டை (Kotte) அரசகுலத்தினர் தமிழர், கேரளர்களை முன்னோராகப் பெற்றிருந்தனர். இதில் மிக முக்கியமானவர் நான்காம் புவநேகபாகு (Bhuvanekabahu) (Sapumal Kumaraya - சப்புமல் குமாரயா) மற்றும் அவரின் சகோதரர் எட்டாம் வீரபாராக்கிரமாபாகு (Ampulagala - அம்புலுகல) ஆவர். இதனை வேறுமாதிரி சொல்ல வேண்டுமானால் குணவர்தனவும் லியனகமகேவும் குறிப்பிடுவதுபோல் (சிங்களவரும், தமிழரும் எதிரிகள் அல்லர்) சிங்களவரையும் தமிழரையும் எதிர் எதிர் நிலையில் நிறுத்த வேண்டியதில்லை. மாறாக, அவர்களிடையேயான உள்ளுறவினை (interplay) முறையாகப் புரிந்து கொண்டால் சென்ற காலத்தினைப் பாராட்டியும் இன்றைய அதன் தொடர்ச்சியினைப் பாராட்டாமலும் இருக்கவியலாது.

குணவர்தன பண்டையகாலம் பற்றிய ஆய்வில் ஒருமுக்கிய கருத்தினை விளக்குகிறார். இன்றைய தேசியவாதிகள் கடந்த காலத்தினை மிகவும் எளிமைப்படுத்துகிறார்கள். அதனை வேரொன்றுக்குப் பயன்படுத்த முயற்சிக்கின்றனர். புத்தபண்பாடு கெடாத புனிதமானது என்றுகூறி சிங்களவர்-தமிழர், புத்தம்-பிற இவற்றுக்கிடையிலான எதிரெதிர் இரட்டைத்தன்மை (oppositional dualism) இருப்பதாக எண்ணி, அதனை ஓர் அடையாளமாக ஆக்குகின்றனர். இக்கருத்தின் பின்னணியில் குணவர்தனவின் இருகட்டுரைகள் அமைந்தன. அவை: The People of the Lion, Historiography in time of ethnic conflict: Construction of the past in contemporary Sri Lanka. இவற்றுக்கு இரு எதிர்வினைகள் எழுந்தன. ஒன்று:ஆய்வுப்பூர்வமானது. ஏனென்றால், கடந்தகாலத்தின் வரலாற்றில் என்ன நிகழ்ந்தது என்பதனை எவராலும் முழுமையாக அறிய இயலாது. வரலாற்றில் கிடைக்கின்ற சிறு சிறு சான்றுகளைக்கொண்டு வரலாற்றினை மறுகட்டமைப்பு செய்வதில் சிலர் திருப்தியடைகின்றனர். வரலாறு எப்போதும் மறுவாசிப்பிற்கு (interpretation) உட்பட்டது. இம்மறுவாசிப்பு சிலவற்றினை மறுப்பதற்கான ஏதினைத் தருகிறது. அதில் ஆய்வுப்பூர்வமான வாதத்திற்கும் இடமுண்டு. இன்னொரு பார்வை: வரலாற்று மறுவாசிப்பினை கொடூரச் சொற்களில் (hostile vituperation) எதிர்கொள்வது. பெரும்பாலும் உணர்ச்சிப்பூர்வ சொற்களில் தெளிப்பது. இந்தப் பாணியிலான பேச்சு தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. இலங்கையில் இந்தச் சரியான பேச்சினை (right speech) புறக்கணிக்கின்றனர். ஆனால், புத்தர் சரியான பேச்சினைத்தான் போதித்தார். கொடூரப் பேச்சு பேசும் நபர்களை குணவர்தன தவிர்த்தார். அவர்கள் தேசியவாதம் என்ற சொல் அண்மைக்காலத்தின் அய்ரோப்பியர்களால் கண்டுபிடிக்கப்பட்டது என்பதனை மறந்தனர் என்றார். சில இடங்களில் தேசியம் என்பது குடும்ப அரசியலைப் போன்றது (family resemblance) என்றார். இதுபோன்ற இனவெறி (fanatic) அவர்களுக்கே நஞ்சாகும் என்பதை நான் உணர்கிறேன்; குணவர்தனவும் உணர்கிறாரா தெரியவில்லை.

குணவர்தன துணைவேந்தராகக் கடமையாற்றியபின் அரசியல் வட்டத்திற்குள் நுழைந்தார். 2000-2001 காலகட்டத்தில் அதிபர் சந்திரிகா குமாரதுங்க அரசில் அறிவியல் தொழில்நுட்பத்துறை (science and technology) அமைச்சராகச் சிறிது காலம் பணியாற்றினார். ஆனால், மக்களால் தெரிவு செய்யப்பட்டவரன்று; ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டவர். இப்பதவி, அவர் இலங்கையின் பண்டைக் காலத்திய நீர்ப்பசனத் தொழில்நுட்ப அறிவு கொண்டிருந்ததால் வழங்கப்பட்டது என்பதில் எனக்கு சிறிது சந்தேகம் உண்டு. அவர் நீண்டகாலம் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியோடு தொடர்பு கொண்டிருந்ததால் அப்பதவி அளிக்கப்பட்டிருக்க வேண்டும். அப்போது அக்கட்சி அதிபர் சந்திரிகாவின் ஆட்சியில் கூட்டணி வைத்திருந்தது. எனக்குக் குணவர்தனவின் அரசியலில் உடன்பாடில்லை. இருந்தபோதும் நம் அரசியல் வாழ்வில் பெற்ற சில நண்பர்களோடு சில கருத்துகளைப் பகிரலாம். நான் சிலவற்றை வெளிப்படையாகக் கண்டிக்கிறேன். அரசியலில் சகிப்புத் தன்மை எழும்வரைக்கும், இனக்கொடுமை தொடர்கிற வரைக்கும், இனஒதுக்குதல் உள்ளவரைக்கும், சுதந்திரம் தடுமாறுகிறபோதும் என் கருத்துகளைச் சொல்லிக் கொண்டிருப்பேன். நாம், எளிய ஆனால் பல வடிவம் கொண்ட பண்பாட்டில் வாழ்கிறோம். பலரும் அரசியல் களத்தில் நண்பர்களையும் உறவினர்களையும் கொண்டுள்ளோம். நட்பில் கருத்து வேறுபாடு இல்லையெனில் அது நட்பன்று. இலங்கையில் நட்பும் இரத்தஉறவும் எப்போதும் மகிழ்ச்சிமட்டும் தரும் என்று சொல்லமுடியாது, வேறு வேறு விளைவுகளையும் தருகிறது. குணவர்தனவுடனான என் நட்பில் எந்தச் சிக்கலும் இல்லை. ஏனெனில், அவருடைய மார்க்சிய அரசியல் நம்பிக்கை நான் சொல்லக்கூடிய புத்த மனிதத்துவம் (Buddhist humanism) என்பதோடு சிறப்பாக ஒத்துப் போகிறது. இன்னும் சில மார்க்சியத் தலைவர்களையும் அறிவேன். அவர்கள் தம் இறுதி காலத்தில் மார்க்சியத்தினைக் காரணகாரியத்துடன் விரும்பியோ விரும்பாமலோ முதலாளித்துவத்துடன் சேர்த்துப் பார்த்தனர். குணவர்தன, ஒருபோதும் நாட்டின் ஏழைகள்மீதான இரக்கத்தினை விடவில்லை. இறப்பதற்குச் சற்றுமுன் தன் மனைவியுடன் மலைமேல் கண்டியிலுள்ள என்வீட்டிற்கு வருகை புரிந்தார். அன்று மாலையில் வீட்டின் உப்பரிகையிலிருந்து கீழே மலைகளைப் பார்த்து இரசித்தோம். அழகான தும்பரை (Dumbara) சமவெளி கண்முன்னே விரிந்து கிடந்தது. மாலை மறைந்து இரவு எழும்போது மின்மினி போன்ற விளக்கொளிகள் ஆயிரம் ஆயிரமாகக் கிராமங்களில் இருந்து ஒளிர்ந்தன. அது இன்னொரு வகையான அழகினைத் தந்தது. பகலில் அவ்வழகு மரங்களிடையே மறைந்திருக்கும். அப்போது குணவர்தன என்னிடம் ‘சில ஆண்டுகளுக்கு முன் இவ்விடம் இருட்டு மண்டி கிடந்தது. இன்று பல ஏழைகளும் மின்வசதி பெற்றனர்’ என்று சொன்னார். இக்கூற்று உண்மைதான். ஆனால், எந்தவொரு அரசாட்சியினையும் காப்பதற்காகச் சொல்லப்பட்டதன்று. ஆனால், பல ஏழைகள் வசதிபெற்றனர் என்பதனை யாரும் பெருமையுடன் கூறலாம். அவர் ஒரு கிராமத்துப் பையன் (village boy) என்பதற்காக எவரும் பெருமை கொள்ளலாம். அவர் தலங்கமுவ மத்திய கல்லூரியிலிருந்து (Tholangomuva Central School) பல்கலைக்கழகத்திற்கு வந்தவர். இலவசகல்வி முறையில் (free education system) கல்வி பெற்றார். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் (University of Ceylon) இளங்கலை வரலாற்றுச் சிறப்புத்துறையில் (ஆனர்ஸ் படிப்பில்) முதல்நிலையில் தேர்ச்சி பெற்றார். பல பரிசுகளையும் வெகுமதிகளையும் பெற்றார். 1965 இல் இலண்டனில் முனைவர் (கலாநிதி) பட்டம் பெற்றார். கெஸ்பரிஸ் (J.D.Caspairs) என்ற ஒல்லாந்த (Dutch) அறிஞரிடம் பயின்றார். அவ்வாசிரியரின் தூண்டுதலால் தென்கிழக்காசியா வரலாறுபற்றி ஆய்வதில் ஆர்வம் பெற்றிருப்பார். அவராலேயே ஒல்லாந்து (Dutch), சீனம் (Chinese) ஆகிய மொழிகளைக் கற்றிருப்பார்.

பேராதனையில் துணைவேந்தராக இருந்தபோது எதிர்பாராதவிதமாக அவரின் அரசியல் கருத்து (political views) காரணமாக உடன்பணியாற்றியவர்களிடமிருந்து விலகியிருக்க வேண்டியதாயிற்று. அதில் சில தவறுகளும் உண்டு; சரியும் உண்டு. ஆனாலும், அவருடன் பணியாற்றியவர்கள் இலங்கை பற்றிய அவருடைய பங்களிப்பிற்கு அவரைப் பாராட்டினரா என்று தெரியவில்லை. அவர் தனிமைப்படுத்தப்பட்டதனைத் தொடர்ந்து நோய்வாய்பட்டார். வாழ்வு வெறுமையானது. வெகுசிலரே அவரை வந்துபார்த்தனர். ஒரு அறிஞர் வெகுவிரைவிலேயே தனிமைக்குள்ளாவார். அத்தனிமை குணவர்தனவை ஆய்விற்கு உட்படுத்தியது. புத்தகங்களுக்கு இடையே கிடந்தார். எப்போதெல்லாம் நோயில் இருந்து மீள்கிறாரோ அப்போதெல்லாம் எழுதினார்.

அவரோடிருந்த சிலநினைவுகள் மனத்தில் ஒலிக்கின்றன. கள ஆய்வின்போது அவ்வளவாக அறியப்படாத, சிறந்த ஒரு தொல்லியல் தளத்தினை ஆய்வதற்குச் சென்றேன். ரஜகல (Rajagala) என்ற அந்த இடம் வளம்நிறைந்த மலைப்பகுதி. அதனையடைவது பெருஞ்சிரமம். யானைகளின் புகலிடமாக இருந்தது. அப்போது தீவின் பல உயிரினங்கள் அழிந்து கொண்டிருந்தன. 70களின் பிற்பகுதியில் அவ்விடத்திற்கு இருவரும் செல்வோம் என்று குணவர்தனவிடம் சொன்னேன்.

நான், என் மனைவி இருவரும் குணவர்தனவுடன் மலையுச்சிக்குச் சென்றோம். அதற்குமுன்பு பல தொல்லியல் தளங்களைக் கடந்து சென்றோம். அவற்றின்மேல், நின்று கொண்டு அவைபற்றி உரையாற்றினார். அவற்றை அதற்குமுன்பு நாம் கண்டுகொள்ளவில்லை. அதனை உணர்ந்தபின் மீண்டும் அங்கு சென்றோம். ஆனால், நடந்துவந்த வழியை மறந்து விட்டோம். இருட்டி விட்டது. ஆர்வத்தில் மரத்தின்மேல் ஏறி நடைபாதையினைக் கண்டுபிடித்தோம். அன்று அதிஷ்டவசமாக வீடு திரும்பினோம். சில ஆண்டுகளுக்குப் பின் அந்த இடம் புகலிடமாக அமைந்தது. நான் ஆச்சர்யப்பட்டேன். விலைமதிப்பற்ற அவ்விடத்தின் கடந்த காலத்தின் வரலாறு என்னவாயிற்று? இதனால் இன்னொரு பண்பாட்டுத் தீவிரவாதம் தோன்றியது. அவர்களின் தேடலில் அச்சான்றுகள் சிதைந்தனவா? இது இன்னொரு வகையான கவலை. இக்கவலை குணவர்தனவிற்கும் இருந்திருக்கும். தொல்லியல் தளங்களில் புதையலைத் தேடுவது பலருக்கும் அன்றாட வாழ்வின் போக்கானது. தொடர்ச்சியான நீண்ட காலத்திய போர்கள் நம் விழுமியங்களைத் தடுமாற வைத்தன. இது போரின் விளைவுகளில் ஒன்றாகவும் இருக்கும். கலிங்க அரசன் மாகனுடைய (Megha) படையெடுப்பு நம் வழிபாட்டு இடங்களை மட்டுமன்று நம் வாழ்வினையும் பாதித்தது. இப்போதும் அங்குநான் கள ஆய்வினை மேற்கொண்டுள்ளேன். அவ்விடங்கள் சிதைக்கப்பட்டதற்குச் சான்றுகள் உண்டு. தொல்லியல் தளங்களிலுள்ள கல்தூண்களை வீடுகள் கட்டுவதற்கு சிலர் எடுத்துச் சென்றனர். தொல்காலத்திய ஓவியங்கள் (primitive paintings) உள்ள குகைகளில் வெடிவைத்து, கற்களை உடைப்பவர்கள் (dynamiters) வேலை செய்கின்றனர். இல்லாத இடத்தில் இருப்பதனைத் தேடுகின்றனர். இப்போக்குப் பிற இடங்களிலும் தொடர்கிறது. என்னைப் பொறுத்தவரையில் குணவர்தன உண்மையில் இலங்கையின் ஒரு ஆக்கப்பூர்வமான வரலாற்று ஆசிரியர். சிதைக்கப்பட்டது போகக் கிடைத்த வரையிலான பழம்பொருள்களை வைத்து பல்கலைக்கழகத்தில் கற்கிறோம். குணவர்தன நம்பியதுபோல் நாமும் இன்றைய அறிவு எதிர்காலத்தில் பல்கிப்பெருகும் என்று நம்புகிறோம். அதனைப் பார்ப்பதற்கு நாம் இல்லாமல் போகலாம். அவர் நெடுநாள் நோய்வாய்பட்டிருந்தபோது அவர் மனைவி (Viru) உடனிருந்தார். அவருக்கு மருந்தளிப்பதிலும் தொடர்ந்து இரத்தம் சுத்திகரிப்பதையும் (dialysis) கண்காணித்து அவரைப் பாதுகாத்தார். அவரின் மகன் அசேல (Asela) இறுதிநாள்களில் அவருடன் இருந்தார். நிலையாமை என்பது நிரந்தரமானது. நாம் நேசிக்கும் ஒருவரிடமிருந்து பிரிவது தவிர்க்க முடியாத ஒன்று.

R.A.L.H. Gunawardana : His Life and Work (R.A.L.H. குணவர்தனவின் வாழ்வும் எழுத்தும் என்ற தலைப்பில் கணநாத் ஒபயசேகரவினால் Economic & Political Weekly இதழில் டிசெம்பர் 11 – 17, 2010 அன்று எழுதப்பட்ட கட்டுரையின் அடிப்படையில் அவரின் ஒப்புதலுடன் தமிழில் வடிக்கப்பட்டது)

மூலம் : கணநாத் ஒபயசேகர

தமிழில்  கி.இரா.சங்கரன் (தகைசால் பேராசிரியர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்)

& எம்.எம்.ஜெயசீலன் (முதுநிலை விரிவுரையாளர், தமிழ்த்துறை, கலைப்பீடம்,பேராதனைப் பல்கலைக்கழகம், இலங்கை)

Pin It