கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த நூற்றுக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கும் நிலையில் பலர் கொத்துக் கொத்தாக செத்து மடிவதைப் பார்க்க முடிகிறது.

உயிர் குடிக்கும் வேதிப்பொருளை போதைக்காக கலந்து கள்ளச் சந்தையில் விற்கும் கும்பல் காவல் நிலையத்திற்கு அருகிலேயே கள்ளச் சாராயம் காய்ச்சியதாக கூறப்படுகிறது. குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்த ஒரு நபர் கள்ளச்சாராயம் விற்பனை செய்தது வெளியுலகத்திற்கு தெரிய வந்துள்ளது.

காவல் நிலையத்திற்கு அருகில் பிணையில் உள்ள ஒருவர் சாராயம் காய்ச்சி விற்கிறார் என்றால் அரசு நிர்வாகத்தின் சீர்கேட்டை விளக்க வேறொன்றும் தேவையில்லை.kallakurichi hooch tragedyஅரசு வருவாய் துறை மற்றும் காவல் துறையின் கண்காணிப்பு வளையத்திற்கான கட்டமைப்பு மிகச் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் கிராம உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் என வருவாய்த் துறையின் கண்காணிப்பு கட்டமைப்பு ஊர்ப் புறங்களில் தவறுகளைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த கண்காணிப்பு வளையங்களை எல்லாம் தாண்டி காவல் நிலையத்திற்கு அருகிலேயே ஒருவரால் கள்ளச்சாராயத்தை விற்க முடிகிறது என்றால் ஒட்டுமொத்தமான நிர்வாக சீர்கேடு வெட்ட வெளிச்சமாகி உள்ளது.

இன்று கள்ளச்சாராயம் குடித்து கொத்தாக செத்து மடிந்த ஒவ்வொருவரும் குடிக்கு அடிமையானவர்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அவர்களை குடிக்கு அடிமையாக்கியது யார்? கணவனை இழந்து, சகோதரனை இழந்து, தந்தையை இழந்து கதறும் மக்களைப் பார்க்கும் பொழுது பரிதாபமாக உள்ளது.

தெருவுக்குத் தெரு சாராயக்கடையை திறந்து மக்களை குடிக்கு அடிமையாக்கி அவர்களை விசச் சாராயத்தை வாங்கிக் குடிக்கும் அளவிற்குத் தள்ளியது தமிழ்நாடு அரசுதான். ஆண்ட கட்சி, ஆளுகிற கட்சி என்ற எந்த பேதமும் இல்லாமல் இந்த பெரும் குற்றத்திற்கு இரண்டு கட்சிகளுமே பொறுப்பு. இந்த இரண்டு கட்சிகளோடு கூட்டணி வைத்துக் கொண்ட ஒவ்வொரு கட்சிகளுக்கும் இந்தத் துயரத்தில் பங்கு உண்டு.

கள்ளச் சாராயத்தை குடித்து இறந்தவர்கள் குடும்பத்திற்கு 10 லட்சத்தை வழங்குவதாக அறிவிக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர்.

பத்து லட்சமாக அறிவிக்கப்பட்டதை 25 லட்சமாக உயர்த்த வேண்டும் என்கிறார் எதிர்க்கட்சித் தலைவர்.

கள்ளச் சாராயம் குடித்து மாண்டு போனவர்கள் குடும்பத்திற்கு அரசு வேலை வேண்டும் என்கிறார் இன்னொரு எதிர்க்கட்சித் தலைவர்.

ஒட்டுமொத்த ஊழல் மலிந்த நிர்வாக சீர்கேட்டை மறைப்பதற்கு இவர்கள் செய்யும் அரசியல் கேலிக்கூத்தாக உள்ளது.

டாஸ்மாக் கடையில் மது குடித்து கொஞ்சம் கொஞ்சமாக உயிர் உருகும் ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் இதே நிதி உதவியை தமிழ்நாடு அரசு அறிவிக்குமா?

ஒருவரை குடிப்பதற்கு பழக்கி விட்டு, விசச் சாராய விற்பனையைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்துவிட்டு, அதை வாங்கி குடித்து செத்துப் போனவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி அளிப்பது அறமா?

ஒவ்வொரு அரசுப் பள்ளியில் பயிலும் எளிய குடும்பத்து பிள்ளைகளை பாருங்கள், கண்களில் நீர்க்கசிய தந்தையை பறி கொடுத்துவிட்டு தத்தளிக்கும் பிள்ளைகளைப் பாருங்கள். பெரும்பாலும் தந்தையை இழந்த பிள்ளைகள் கூறுவது "சாராயத்தால் எனது அப்பா செத்துவிட்டார்" என்பதுதான்.

இந்த மதுக்கடைகளால் குடும்ப வன்முறை அதிகரித்துள்ளது. குடும்பச் சண்டைகளால் பிரிந்து வாழும் தம்பதிகள் அதிகரித்துள்ளனர். இதனால் பாதிக்கப்படுவது எதிர்காலத் தலைமுறைகள் தான். அவர்களின் கல்விதான். இப்படியான ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கு தான் நாம் ஓட்டு போட்டு இவர்களை தேர்ந்தெடுக்குறோமா என்ற கேள்வி ஒவ்வொருவர் உள்ளத்திலும் எழத் தொடங்கி இருக்கிறது‌.

ஒரு நாட்டின் சொத்தாகக் கருத வேண்டிய மனித வளத்தை மாண்புகள் இழக்கச் செய்து குற்றச் செயல் சமூகமாக மாற்றுவதற்கு பெரும் துணையாக நிற்கிறது தமிழ்நாடு அரசு.

கல்விச் சிறந்த தமிழ்நாடு இன்று சாராயம் நிறைந்த தமிழ்நாடாக மாறி நிற்கிறது.

ஆட்சியாளர்களே! ஆளும் திமுக அரசே! நீங்கள் சமூக நீதியைப் பேசலாம், கல்வி வளர்ச்சி குறித்து மார்தட்டிக் கொள்ளலாம், வலுவான மருத்துவ கட்டமைப்பு குறித்து வாய் கிழியப் பேசலாம்! இதை எல்லாம் சிதைத்து விடக் கூடியது சாராய விற்பனை. உங்களின் வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் இவர்களை சென்றடையப் போவதில்லை. மீண்டும் இவர்கள் பண்ணை அடிமை முறைக்கு மாறிக் கொண்டிருக்கிறார்கள். பிச்சை எடுத்தேனும் மது குடிக்க பழகி வருகிறார்கள்.

எளிய மக்களுக்காக நீங்கள் தீட்ட வேண்டிய பெரிய திட்டம் டாஸ்மாக் மதுக்கடைகளை படிப்படியாகக் குறைப்பது தான்.

நாங்கள் நேரடியாகவே பார்த்திருக்கிறோம். வாய்ப்புகள் இல்லாத பொழுது குடிக்கும் சிந்தனை அற்றுப் போவதாக குடித்தவர்கள் கூறி இருக்கிறார்கள். பேராவூரணி நகர் பகுதிக்குள் நான்கு சாலைகளிலும் இருந்த மதுக்கடைகள் பெரும் போராட்டத்தால் அப்புறப்படுத்தப்பட்ட பிறகு குடியை விட்டவர்களை நாங்கள் காட்டுகிறோம்.

ஒரு கிராமத்தின் சுடுகாட்டில் 22 பிணங்களை மொத்தமாக எரிப்பது என்றாவது நடந்திருக்கிறதா? பெரும் கொள்ளை நோய்கள் காலத்தில் கூட இப்படி பார்த்ததில்லையே. இதுவா நல்லாட்சி.

வருவாய் வருகிறது என்றால் அறமற்ற முறையில் ஆதாயம் தேட நினைக்கலாமா? அதை அரசே செய்யலாமா?

வேதத்தை மறுப்பதாகக் கூறுகிறீர்கள்... அது சனாதனம் என்கிறீர்கள். திருக்குறளை உயர்த்திப் பிடிப்போம் என்று உரத்துக் கூறுகிறீர்கள். ஆனால் வேதப் புத்தகம் கூறும் போதை பானம் விற்பதைப் பரப்புகிறீர்கள். திருக்குறளின் கள்ளுண்ணாமை நிலையை எடுக்க மறுக்கிறீர்கள். சனாதனத்தை வளர்ப்பது யார்? மதுக்கடைகள் நடத்துவது தான் திராவிட மாடலா?

தமிழ்நாடு அரசு உடனடியாக கள்ளச் சாராயம் விற்பனையில் ஈடுபட்ட நபர்களையும் அதற்குத் துணை போன அதிகாரிகளையும் தயவு செயாமல் தண்டிக்க வேண்டும். கண்காணிப்பு வளையத்தை தீவிரப்படுத்த வேண்டும். அரசு டாஸ்மாக் மது கடைகளை படிப்படியாகக் குறைக்க வேண்டும். முழு மதுவிலக்கு என்ற கொள்கையை நோக்கி அரசை நகர்த்த வேண்டும். இதுதான் அறமான ஆட்சியாக, சமூக நீதி ஆட்சியாக அமையும்.

- நா.வெங்கடேசன், ஆசிரியர், மெய்ச்சுடர்.

Pin It