பாறைக்குள் அசையும்
ஓவியத்தை
வடித்தெடுக்கும் பெண் வயிறு

*
வளைவுகளின்
வாழ்நாள் முணுமுணுப்பு
ஒலிப்பனாய் எதிரொலிக்கிறது

*
காதல் தோல்விக்கு
கதறி அழு
கவிதை அது

*
கொலுசோசை குவிய
ஓடி வந்து ஜன்னல் திற
மழை வரட்டும்

*
மூச்சு முட்டும் வரை
முத்தம் இடு
முழு மனிதன் ஆவாய்

*
வீட்டுக்குள்ளும் இருக்கிறான்
வெளியிலும் இருக்கிறான்
வீட்டுக்குள்ளும் வெளி கொண்டவன்

*
நேரடியாகக் கொல்ல முடியாது
இவன் மறைமுகமாக
செத்துப் பழகியவன்

*
வசைச் சொற்களுக்குப் பிறகு
உச்சரிக்கும் உன் பெயரில்
உச்சம் கொள்கிறது உள்நாக்கு

*
எப்போது வலை வீசினாய் வானமே
கடல் மீன்களெல்லாம்
விண்ணில் சிக்கி இருக்கின்றன

*
தும்மலில் தூண்டில் இருக்கிறது
இருந்தும் இதயம்
பிழைத்துக் கொள்கிறது.

- கவிஜி

Pin It