கை, கால்கள் இல்லாதவை. ஊர்ந்து செல்லும் அமைதியான, எளிய உயிரினங்கள். மற்ற உயிரினம் போல ஒன்றுதான் பாம்பு. முன்பு டைனசோர் காலத்தில், இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு மண்ணைத் தொட்டு பூமிக்கு வந்தவை. பரிணாமத்தின் பரிசோதனை பரம்பரைகளை வெற்றி கொண்டு இன்று வரை ஊர்ந்து ஊர்ந்து பூமியில் வாழ்ந்துகொண்டிருப்பவை. இவற்றை புனிதர் பட்டம் கட்டி தெய்வமாக்குவதற்குப் பதில் விவரமாக புரிந்து கொள்ள வேண்டும்.

உலகில் 3,500 பாம்பு இனங்கள் உள்ளன. இதில் மிகக் குறைந்த எண்ணிக்கை உள்ளவையே நச்சுத்தன்மை உடையவை. இதில் சாதாரணமாக நாம் காண்பது நான்கைந்து இனங்களை மட்டுமே. இவை மனிதர்கள் இருக்கும் இடத்தில் இருந்து எப்போதும் ஓடி ஒளிந்து கொள்ளவே முயல்கின்றன.

ஆனால் பெரும்பாலான நேரங்களில் நாம் இவற்றின் பின்னால் ஓடி சாகடிக்கிறோம். அல்லது கடிக்கப்படுகிறோம். தெரிந்தும் தெரியாதது போல நடந்து கொள்கிறோம். ஹீரோத்தனம் காட்ட வெறும் கைகளால் பிடிக்க முயல்கிறோம்.

ஏன் எதற்காக பாம்புகள் உடலில் நஞ்சு உள்ளது?

இந்தியாவில் சாதாரணமாக காணப்படும், மனிதனைக் கொல்லுமளவு நஞ்சுள்ள பாம்பு இனங்கள் நான்கு மட்டுமே. அவை கட்டு விரியன் (Common Indian Krait - Bungarus caeruleus), இந்திய நாகம் (Common Indian Spectacled Cobra - Naja naja), கண்ணாடி விரியன் (Russell's Viper - Daboia russelli) மற்றும் சுருட்டை விரியன் (Saw scaled Viper - Echis carinatus). இவை மனிதனைக் கொல்லுமளவுக்கு நஞ்சு உள்ளவை என்ற பொருளில் big four என்று அழைக்கப்படுகின்றன.king cobraஇது தவிர ராஜநாகம் (King cobra Cobra - Ophiophagus hanna), ஒன்றிரண்டு சம்பவங்களில் மட்டுமே மனித உயிரிழப்புக்குக் காரணமாக இருந்ததாகக் கூறப்படும் கூன் மூக்கு குழி விரியன் பாம்பு (Humpnosed Pit Viper - Hypnale hypnale) போன்றவை இந்தியாவில் காணப்படும் சில நச்சுப் பாம்புகள்.

ராஜநாகத்தை சாதாரணமாக பசுமை மாறாத வனங்கள், அவற்றுடன் சேர்ந்துள்ள பகுதிகளில் மட்டும் காண முடியும். மனிதரைக் கொல்லும் அளவுக்கு நச்சுத் தன்மை அற்றவை என்றாலும் நாகப்பாம்பு, பச்சிலைப் பாம்பு, பூனைக்கண்ணன் அல்லது பூனைப் பாம்பு (Cat eyed snake) போன்றவை நஞ்சுள்ள வேறு சில இனங்கள்.

கை, கால்கள் இல்லை என்பதால் இயற்கை இவற்றுக்கு சில தனித்துவம் மிக்க வரங்களை அளித்துள்ளது. இதில் சுவாரசியமான சிலவற்றை இங்கு காண்போம். ஊர்ந்து செல்வதால் உடல் காயப்பட, சேதமடைய வாய்ப்பு உள்ளது. இதைத் தடுக்க இவற்றுக்கு தோலால் ஆன ஆடை உள்ளது! நம் உடலில் நகம், முடி ஆகியவை கரோட்டின் என்ற புரதத்தால் ஆக்கப்பட்டுள்ளது போல இவற்றின் உடலிலும் இந்தப் பாதுகாப்பு உள்ளது.

பாம்புகள் பொதுவாக நிலப்பகுதியிலேயே வாழ்கின்றன. ஆனால் ஐந்து இனங்கள் மட்டும் கடல் நீரில் வாழ்கின்றன. இவை மேற்கு இந்தியா மற்றும் இந்தோனேஷியாவில் காணப்படுகின்றன. இவை அரிதாகவே தரை இறங்குகின்றன. இவற்றில் மிகச் சிறிய இனம் இரண்டடி நீளம் உள்ளது. பெரியவை நான்கடி வரை நீளம் உடையவை. என்றாலும் வனப்பகுதிகளில் வாழும் இவற்றின் நடத்தை பற்றி போதிய தரவுகள் இல்லை.

பன்னாட்டு இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தின் (IUCN) வகைப்பாட்டின்படி நூறு பாம்பு இனங்கள் அழியும் ஆபத்தில் உள்ளன.

உடல் வளர்ச்சிக்கு ஏற்ப இந்தத் தோல் கவசம் வளர்வதில்லை என்பதால் இவை ஒவ்வொரு வளர்ச்சி கட்டத்திலும் தோல் உரிக்கின்றன. இது பாம்பு தோலுரித்தல் என்று அழைக்கப்படுகிறது. வாயின் நுனி முதல் வாலின் கடைசி வரை தசைகளால் ஆன குழல் போன்ற வடிவத்தில் உடல் அமைந்திருப்பதால் இவற்றின் உள் உறுப்புகள் அனைத்தும் நீண்டதாக, ஒன்றன் பின் ஒன்றாக உள்ளது.

புலன்களின் அதிசயம்

இமைகள் இல்லாததால் பாம்புகள் கண்களை இமைப்பதில்லை. கண்கள் எப்போதும் திறந்தே இருக்கும். புற்றுகளிலும் மற்ற இடங்களிலும் ஊர்ந்து சென்று நுழையும்போது இமைகள் இல்லாத கண்ணில் தூசுக்களும் மண்ணும் விழ வாய்ப்பு உள்ளது. அதனால் இவை எப்போதும் பிரில்ஸ் (brilles) என்ற கண்ணாடி போல பளபளப்பான கவசத்தை அணிந்து கொண்டே நடக்கின்றன. இதனால் இவற்றின் கண்கள் இருட்டிலும் பளபளப்புடன் மின்னுகின்றன.

நம்மைப் போல பாம்புகளுக்கு புறச்செவிகள் இல்லை. என்றாலும் நமக்கு செவிப் பகுதியில் இருக்கும் உள்ளுறுப்புகள் அனைத்தும் இவற்றுக்கு உள்ளன. இவற்றின் கேள்விப்புலனுக்கு பயன்படும் கொலுமெல்லா (columella) என்ற உறுப்பு சிறிது வித்தியாசமானது. இது கீழ் தாடையுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அதிர்வுகள் உணரப்படுகின்றன. ஆனால் நாம் கேட்கும் ஒலிகளில் பாதியை மட்டுமே பாம்புகளால் கேட்க முடியும். கீழ் தாடை எலும்புகள் வழியாக கடந்து செல்லும் அதிர்வுகளை மட்டுமே இவை உணர்கின்றன. அதனால் இவை தாடை எலும்புகள் மூலமே கேட்கின்றன என்று கூறலாம்.

இவை மூக்கால் நுகர்வதில்லை. நாவால் நுகர்கின்றன. ஜேக்கப்சன்ஸ் (Jacobson’s organ) என்ற தனித்துவம் மிக்க நுகர்வுணர்வு உறுப்பு உள்ளது. இது பாம்பின் வாய்ப்பகுதிக்கு நேர் மேலாக அமைந்துள்ளது. பாம்பு தன் முன்நாக்கை வெளியில் நீட்டும்போது அது காற்றில் இருந்து வேதிப்பொருட்களை சேகரிக்கிறது. பிறகு பாம்பு தன் நாக்கை உள்ளே இழுத்துக் கொள்ளும்போது வாசனையை நுகர்கிறது. வாசனை வரும் திசையை அறிய இரண்டாகப் பிளந்த நாக்கு உதவுகிறது.

பல பாம்புகளும் நல்ல புகைப்படக் கலைஞர்கள். அவற்றின் மூக்குக்கும் வாய்க்கும் இடையில் உள்ள பகுதிகள் வழியாக அல்லது மேல் உதட்டின் பாகங்கள் வழியாக அவை இரை அல்லது எதிரியின் உடல் வெப்பநிலையை உணர்ந்து மூளைக்கு அனுப்பி அந்த உயிரினத்தின் உடல் வெப்ப வரைபடத்தை உருவாக்குகின்றன. இரையாக இருந்தால் பிடிக்கின்றன. எதிரியாக இருந்தால் ஒளிந்து மறைகின்றன.

இவை குளிர் இரத்தப் பிராணிகள். உடலுக்குள் வெப்பத்தை உருவாக்கும் ஆற்றல் இல்லாத புழுக்கள், பூச்சிகள், மீன்கள், ஊர்வன, இருவாழ்விகள் போன்றவை இவ்வகையைச் சேர்ந்த உயிரினங்கள். பாலூட்டிகள், பறவைகள் போன்றவை வெப்ப இரத்தப் பிராணிகள். நல்ல குளிர்காலத்தில் பாம்புகள் வெப்பமான இடத்தை தேடிச் செல்கின்றன. கோடையில் குளிர்ந்த இடத்தில் இருக்க விரும்புகின்றன.

இரையின் கை, கால்களில் இருக்கும் நகம், மற்ற பாகங்களால் உணவுக்குழாய் சேதமடையாமல் இருக்க அவை இரையை தலை முதலாக விழுங்குகின்றன. இரை பெரிதாக இருந்தால், வாய்க்குள் செல்ல முடியாததாக இருந்தால் அதை விழுங்கும்போது இவற்றின் தாடை எலும்புகளின் பின்புறம் கதவு போல அகலமாகத் திறக்கும். மூச்சுத்திணறல் ஏற்படாமல் இருக்க தொண்டையில் அமைந்துள்ள க்ளாட்டிஸ் (glottis) என்ற குழல் போன்ற உறுப்பின் உதவியுடன் இவை மூச்சு விடுகின்றன.

மனிதரைக் கொல்ல வந்தவை அல்ல பாம்புகள்

பாம்பின் உமிழ்நீரே நஞ்சு. மனிதன் போன்ற உயிரினங்களை கொல்லக்கூடிய வீரியம் உடையவை நஞ்சுள்ள நச்சுப் பாம்புகள் என்றும், வீரியமற்றவை நச்சுத் தன்மையற்ற பாம்புகள் என்றும் அழைக்கப்படுகின்றன. பாம்பைப் பற்றியும் ஏராளமான கதைகள் உண்டு.

இதிகாச காலம் முதல் இன்று வரை மனிதன் இவற்றைப் பற்றி ஏராளமான கற்பனை கலந்த மூட நம்பிக்கையைத் தூண்டும் கதைகளை உருவாக்கி இருக்கிறான். முன்பொரு குறும்புக்கார நரி ஒரு அட்டையிடம் கேட்டது. “நீ நடக்கும்போது எந்த காலை முன்னால் வைத்து நடக்கிறாய்?”. அதனுடன் அட்டையின் நடை நின்றது. பாம்புகளும் இதே போலத்தான் என்றொரு கதை உண்டு.

முன்னோக்கிச் செல்பவர்களை பின்னோக்கி இழுத்து கீழே தள்ளிவிடும் வகையில் தெரிந்தோ தெரியாமலோ புனையப்பட்ட பல கதைகள் ஏராளம். பாம்புகளுக்கு மனிதர்களைப் பற்றி எந்த மூட நம்பிக்கையும் இல்லை. அவை மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்த வந்த உயிரினங்கள் இல்லை. அவற்றை அவற்றின் வழிக்குப் போகவிட்டால் போதும்.

மனிதரைக் கொல்ல அவதாரம் எடுத்த விஷ உயிரினங்கள் இல்லை பாம்புகள். நம்மைப் போல பூமியில் வாழ இயற்கையால் படைக்கப்பட்டவை. ஒவ்வொரு உயிரினத்திற்கும் உயிர் வாழ என்று சில தேவைகள் உள்ளன. இரை வேண்டும். இணை வேண்டும். இடம் வேண்டும். நம்மைப் போன்ற உயிரினங்கள் வெளியில் இறங்குவது இந்தத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கே.

இதற்கு இந்த உயிரினங்களும் விதிவிலக்கு இல்லை. இணை தவிர மற்ற இரண்டு தேவைகளை நிறைவு செய்து கொள்ளவே நம் வீட்டிலும் சுற்றுப்புறங்களிலும் அவை நுழைகின்றன. இந்த இரண்டு தேவைகளும் நம் வீடு அல்லது சுற்றுப்புறங்களில் இல்லாமல் இருந்தால் அவை நாம் இருக்கும் இடங்களைத் தேடி வராது.

பாம்பின் நஞ்சு

நம் கவனக் குறைவே நம்மைப் பாம்புகள் கடிக்க ஏதுவான சூழலை ஏற்படுத்தித் தருகின்றது. நம் உயிரைக் குடிப்பது பாம்புகளின் விஷம் இல்லை. நம் அலட்சியமே அதற்குக் காரணம். பரிணாமம் அவற்றுக்கு நஞ்சைக் கொடுத்திருப்பது நம்மை கொல்ல அல்ல. இரை பிடிக்க, பிடித்த இரையை செரிக்கவுமே அவற்றுக்கு அந்த நஞ்சு!

இது உணவை செரிக்க உதவுகிறது. நம் உமிழ்நீர் வாய்க்குள் சென்று விழும் ஒவ்வொரு பருக்கையைப் பொறுத்தவரையும் ஒரு நச்சுப்பொருளே. என்றாலும் நம்மை ஒரு பாம்பும் நஞ்சுள்ள உயிரினம் என்று அழைப்பதில்லை. பேசும் சக்தி இல்லாததால் அல்ல, அவற்றுக்கு விவரம் இருப்பதால்தான் அவை அவ்வாறு நம்மை அழைப்பதில்லை!

அதனால் உணவு மற்றும் இடத்தை பொறுத்தவரை நம்மைப் போல அதே ஸ்ட்டேட்டஸ் உள்ள பாம்புகளைத் துன்புறுத்தாமல் அழிக்காமல் அவற்றின் போக்கில் அவற்றை வாழ விடுவோம். நம் அறியாமையால் அல்லது பாம்புகளின் அறியாமையால் அவை நாம் வாழும் இடங்களுக்குள் நுழைந்து விட்டால் அவை சட்டென்று நம் கண்களில் படும்படியான சூழ்நிலையை உருவாக்கி வைப்போம். பார்க்கும் சந்தர்ப்பம் ஏற்படும்போது விலகி நின்று அவற்றை உற்றுநோக்குவோம்.

வெளியில் தானாகவே செல்ல அவற்றுக்கு உதவும் சூழ்நிலையை ஏற்படுத்தித் தருவோம். வெளியில் செல்லவில்லை என்றால் மட்டும் அதிகாரப் பூர்வ பாம்பு பிடிப்பவர்களை உதவிக்கு அழைப்போம். நாம் நலமுடன் வாழ விரும்புவது போல பாம்புகள் உட்பட பூமியில் உள்ள எல்லா உயிரினங்களையும் வாழ விடுவோம்.

** ** **

மேற்கோள்கள் மற்றும் மேலதிக விவரங்களுக்கு

https://www.mathrubhumi.com/environment/features/all-you-need-to-know-about-snake-day-1.8735628

&

https://nationalzoo.si.edu/animals/news/do-snakes-have-ears-and-other-sensational-serpent-questions#

&

https://en.m.wikipedia.org/wiki/Common_krait

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It