தொடர்ச்சியாக மரம் கொள்ளையடிக்கப்பட்டிருந்த பெரியாறு புலிகள் சரணாலயத்தில் இன்று அப்படி ஒரு சம்பவம் பேருக்குக் கூட நடப்பதில்லை. அந்த இடத்தை சுற்றியிருக்கும் காட்டைப் பாதுகாக்க அன்று சில வனத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட ஆக்கப்பூர்வமான செயல்களும், மறுவாழ்வுத் திட்டங்களுமே இதற்குக் காரணம். வயனா கலெக்டர்ஸ் என்றும் விடியல் என்றும் கேட்டால் அந்த சரணாலயம் நடுங்கிய ஒரு காலம் இருந்தது. அவர்களுடைய கோடாரிகளின் கூர்மையில் அன்று காட்டில் மூச்சை இழந்து விழாத மரங்களே இல்லை.

அன்று கொள்ளையர்கள் இன்று காடு காக்கும் போராளிகள்

அவர்களுக்கு முன்னால் அடிபணியாத வனத்துறையினரும் அன்று இல்லை. ஆனால் இதெல்லாம் இப்போது பழங்கதை. இன்று இவர்கள் இதே காட்டின் காவல்காரர்கள். இன்று இவர்களின் கண்ணில் மண்ணைத் தூவி யாரும் காட்டிற்குள் காலெடுத்து வைக்க முடியாது. ஒற்றை மரத்தையும் அசைக்கக்கூட முடியாது. சில வனத்துறையினர் மேற்கொண்ட நேர்மறை தலையீடுகளும் மறுவாழ்வு திட்டங்களுமே கொள்ளைக்காரர்களாக இருந்த இவர்களை காட்டின் காவல்காரர்களாக மாற்றியது.

அன்று தேக்கடியில் வனத்துறை அதிகாரியாக இருந்த பென்னிச்சன் தாமஸ் என்பவரின் தலைமையில் முன்னாள் வயனா/கலெக்ட்டர்ஸ்என்ற பெயரில் ஒரு அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது.vidiyal 1வயனா என்றால் வாசனையுள்ள இலைகளுடன் கூடிய ஒரு மரம். இந்த மரத்தின் பட்டையை செதுக்கி கடத்திக் கொண்டு போய் விற்ற குழுவை நல்வழிப்படுத்தி, மறு வாழ்வு கொடுத்த அமைப்பு என்ற பொருளிலேயே இவர்கள் முன்னாள் (எக்ஸ்) வயனைகள் என்று அழைக்கப்படுகின்றனர்.

இந்த அர்த்தத்திலேயே இவர்களுக்கு எக்ஸ் வயனை/கலெக்ட்டர்ஸ் என்று வனத்துறை பெயரிட்டது. காட்டில் நடக்கும் கொள்ளையைத் தடுக்க கொள்ளைக் கூட்டத்தில் இருந்து மனம் திருந்தி வந்த மனிதர்களே இதன் உறுப்பினர்கள்.

காட்டில் இவர்களுக்கு தெரியாத வழிகள் இல்லை. மரம் வெட்ட எந்த வழியாக கொள்ளைக் கூட்டம் வரும் என்றும், வெட்டிய பிறகு அவர்கள் எந்த வழியாக காட்டைவிட்டு வெளியில் போவார்கள் என்றும் இவர்களைக் காட்டிலும் நன்றாகத் தெரிந்தவர்கள் வேறு எவரும் இல்லை.

ஆனால் இப்படி செய்வது தவறாகாதா? திருடன் கையிலேயே கருவூல சாவியைக் கொடுப்பது போல் இல்லையா இது? என்று பல கேள்விகள் எழுந்தன. ஆனால் இந்த விமரிசனங்களைக் கேட்டு வனத்துறையினர் மனம் தளரவில்லை. அவர்கள் எக்ஸ் வயனைகளை காட்டை கொள்ளையடிப்பவர்களுக்கு எதிராக செயல்படும் பலம் பொருந்திய போராளிகளாக மாற்றினர். இது 1996ல் நடந்தது. காட்டைக் கொள்ளையடிப்பதைத் தடுப்பது தவிர அவர்கள் வாழ வழி காண உதவும் மறுவாழ்வுத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

கேரளாவில் இருந்து 23 பேர் அன்று மைய நீரோட்டத்துக்கு கூட்டிக் கொண்டு வரப்பட்டனர். தேக்கடியில் டைகர் ட்ரையல் என்ற நிகழ்ச்சியின் கீழ் பயணிகளுக்குத் துணையாக காட்டில் அவர்களுடன் சேர்ந்து செல்லும் வேலையே இவர்களுக்கு முதலில் கொடுக்கப்பட்டது. எக்ஸ் வயனைகள் அவர்களுடைய புது வாழ்வுடன் முன்னோக்கிச் சென்றனர். காட்டில் மரம் கடத்தப்படுவது முடிவிற்கு வந்தது. ஆனால் இதோடு பிரச்சனைகள் தீர்ந்து விடவில்லை. ஒரு பக்கம் வயனை கடத்தல் முடிவுக்கு வந்தபோது மற்றொரு பக்கம் சந்தனக் கடத்தல் ஆரம்பித்தது.

தமிழ்நாட்டில் இருந்து வந்த கூட்டமே இதற்குப் பின்னால் செயல்பட்டது. அருவி என்பவனே இவர்களின் தலைவனாக இருந்தான். இவர்கள் வனத்துறையினருக்கு தலைவலி கொடுத்துக் கொண்டிருந்த சமயத்தில்தான் அதிகாரி பிரமோத் ஜி, ராஜ் கே பிரான்சிஸ் ஆகியோர் தேக்கடிக்கு வந்து சேர்ந்தனர். மரம் வெட்டும் கூட்டத்தைப் பிடிக்க வேண்டிய பொறுப்பு இவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மங்களாதேவி கோயிலுக்குச் செல்லும் வழியில் கரடிக் கவள என்ற இடம் உள்ளது. வெட்டப்படும் சந்தன மரங்கள் இந்த வனப்பாதை வழியாகவே அதிகமாகக் கடத்தப்பட்டன.

இரவு நேரங்களில் யாருடைய கண்ணிலும் படாமல் மின்னல் வேகத்தில் கொள்ளையர்கள் காட்டிற்குள் நுழைவார்கள். ஓசைப்படாமல் மரத்தை வெட்டிக்கொண்டு போவார்கள். இதுதான் இவர்களின் நடைமுறை. வெட்டப்பட்ட மரங்களுக்கு கிலோகணக்கில் விலை நிச்சயிக்கப்பட்டது. ஒரு மரத்தை வெட்டி தேவைப்படுவோருக்கு கொண்டு போய் கொடுத்தால் அன்று 15,000 முதல் 25,000 ரூபாய் வரை கிடைக்கும்.

ஒரு பிரச்சனை இரண்டு மாநிலங்கள்

கைது செய்யப்படமுடியாத ராஜாக்களாக காட்டில் ஆட்சி செலுத்திய இவர்களை எப்படி பிடிக்கலாம் என்பது பற்றி வனத்துறையினர் ஒரு திட்டத்தை வகுத்தனர். 2003ல் நடைமுறைபடுத்தப்பட்ட இந்தத் திட்டத்தின் பெயர் சீட்டா. எக்ஸ் வயனை உறுப்பினர்கள் காட்டில் மின்னல் வேகத்தில் பயணிக்கும் திறன் பெற்றவர்களாக இருந்தார்கள். அருவியைப் பிடிப்பதே திட்டத்தின் முக்கிய நோக்கம். அந்த சமயத்தில் தமிழ்நாட்டில் ஸ்டான்லி என்று ஒரு போலீஸ் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் இருந்தார். இவரை ராஜ் கே பிரான்சிஸ் நேரில் சென்று பார்த்தார்.

அப்போது கொள்ளைக்காரர்களைப் பிடித்து அவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கும் திட்டம் உருவாக்கப்பட்டது. இதற்கு இடையில் தமிழ்நாட்டில் கொள்ளைக்கார குழுவில் இருந்த முருகன் என்ற ஆளிடம் இருந்து சவால்கள் எழுந்தன. இவர்களுக்கு சீட்டாடும் பழக்கம் உண்டு. ஒரு முறை அது கண்டுபிடிக்கப்பட்டது. தமிழ்நாடு காவல் துறையினர் என்று நினைத்து கேரளக் குழுவை பார்த்த அவர்கள் தப்பியோடினர். அந்த குழுவில் முப்பது பேர் அளவிற்கு ஆட்கள் இருந்தனர். பிறகு, வந்தது கேரள காவல்துறையினர் என்பதை அவர்கள் புரிந்து கொண்டனர்.

இந்நிலையில் பிரான்சிஸிற்கு ஒரு போன் வந்தது. “தைரியம் இருந்தால் நேரில் வரச் சொல்லி” வர வேண்டிய இடத்தையும் பேசிய ஆள் சொன்னான். பிரான்சிஸ் அதற்கு ஒத்துக்கொண்டார். ஸ்டான்லிக்கும் தகவல் தரப்பட்டது. முருகன் பிடித்து வைக்கப்பட்டிருந்தான். இந்த நடவடிக்கைகளில் ஸ்டான்லி முக்கிய பங்காற்றினார். விலை மதிப்பு மிகுந்த மரங்களை வெட்டும்போது கொள்ளைக்காரர்கள் கைது செய்யப்படுவர். தண்டனை முடிந்து ஒவ்வொரு தடவையும் இவர்கள் வெளியில் வரும்போது அடுத்த கொள்ளையை நடத்துவார்கள்.

ஒரே ஆள் இந்த குற்றத்திற்காக ஐந்து முறை வரை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறான். ஒரே ஆளை பல முறை கைது செய்யும் நிலை வந்தபோது இவர்கள் ஏன் தொடர்ந்து இவ்வாறு செய்கின்றனர் என்ற சந்தேகம் காவல்துறையினருக்கு ஏற்பட்டது. தமிழ்நாட்டில் இவர்களுக்கு எதிராக ஒரு போக்கு இருந்தது. கூலி ஆளை யாரும் மதிப்பதில்லை. சடங்குகள் எதற்கும் இவர்கள் அழைக்கப்படுவதுமில்லை. குடிக்க தண்ணீர் கூட கொடுக்க மாட்டார்கள். இதனால் மன அழுத்தத்திற்கு உள்ளான இவர்கள் செய்து வந்த தொழிலைக் கைவிட்டுவிட்டு யானைத் தந்தம் கடத்துதல் போன்றவற்றை செய்து நிறைய பணம் சம்பாதிக்க ஆரம்பித்தனர்.

கூலி வேலை செய்து வாழ்க்கையை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் இவர்கள் இத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபட்டனர். “உங்களுக்கு வேலை கிடைத்தால் நீங்கள் கள்ளக்கடத்தலை நிறுத்துவீர்களா?” என்று கேட்கப்பட்டது. அவர்கள் சம்மதித்தனர். இதுவே விடியலின் ஆரம்பம்.

அருவி என்ற கொள்ளைக்காரனுடைய தம்பி நீரில் மூழ்கி உயிரிழந்தான். தமிழ்நாடு காவல்துறையினர் வந்தார்கள். அறிக்கை எழுத பெயர் கேட்டபோது சகோதரனுடைய பெயருக்குப் பதில் அருவி தன் பெயரைச் சொன்னான். இதனால் போலீஸ் ஆவணங்களில் அருவி இறந்து போனவனாக ஆனான். இதனால் அருவி உயிரோடு இருக்கிறான் என்பதற்கு எந்த ஒரு சாட்சியும் இல்லாமல் போனது. முப்பது ரூபாய்க்கு மரத்தை வெட்டி விற்றுக் கொண்டிருந்த காலம் முதல் ஒரு மரத்திற்கு முன்னூறு ரூபாய்க்கு விற்கும் காலம் வரை அருவியைப் பிடிக்க முடியவில்லை. பாறைகளைப் பிடித்துக்கொண்டு ஏறி இறங்கும் திறனும், மின்னல் வேகத்தில் ஓடும் ஆற்றலும் அருவிக்கு இருந்தது.

அருவி குட்டையாக இருந்ததால் மரத்தை கொள்ளையடிப்பவர்களுக்குப் பின்னால் அவன் இருப்பதை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. விசாரணை செய்ய தமிழ்நாட்டிற்குச் சென்ற கேரள காவல் துறையினரிடம் அவன் இறந்துவிட்டான் என்று கிராம அலுவலர் கூறினார். அப்படி ஒரு ஆள் உயிரோடு இருக்கிறான் என்பதை நிரூபிக்க கேரள காவல்துறைக்கு ஒரு ஆவணமும் இல்லை. இதில் உண்மையை அறிய காவல் துறையினர் சீட்டா என்ற ஒரு குழுவை அமைத்தனர். 1980களில் இது நடந்தது.

காட்டை சுற்றிக் காட்ட காளை வண்டித் திட்டம்

அருவியின் நடமாட்டங்களைப் புரிந்து கொள்ளவும் அவனுடைய மறைவிடத்தைக் கண்டுபிடிக்கவும் ஆறு மாதங்கள் ஆயின. வனத்துறை அதிகாரி செபாஸ்டியன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. கொள்ளையர்கள் பல குழுக்களாக காட்டில் நுழைவர். வனத்துறையினரின் கையில் ஒன்றிரண்டு குழுவினர் மாட்டிக் கொள்ளும்போது மற்றவர்கள் மரத்தை வெட்டி முடித்து விடுவார்கள். மரம் வெட்ட வருபவர்களுக்கு குட்டையான கால்சட்டையே அடையாள உடை.

இவர்கள் உடம்பு முழுவதும் க்ரீஸ் அல்லது மோரை தடவிக் கொண்டிருப்பார்கள். காட்டில் அட்டை உடம்பில் ஏறி பிடித்துக்கொண்டு இரத்தம் குடிக்காமல் இருக்க விளக்கெண்ணையுடன் ஆரோட்டு மாவையும் கலந்து பூசிக் கொண்டிருப்பார்கள். வனத்துறையினர் பிடித்தால் வழுக்கி அவர்கள் பிடியில் இருந்து நழுவி தப்பித்து விடுவார்கள். சிறிய மரம் வெட்டப்படுகிறது என்றால் வெட்டப்பட்டவுடன் அதை தாங்கிப் பிடித்து சத்தம் போடாமல் கீழே இறக்கி தரையில் வைப்பார்கள். குழுவில் இருப்பவர்கள் எல்லோரும் ஒரே சமயத்தில் மரத்தை வெட்ட ஆரம்பிப்பர்.

வெட்டப்பட்ட மரத்தின் நுனிப்பகுதி நல்ல வெள்ளை நிறத்தில் இருக்கும். முன்னால் செல்பவர்கள் இந்தப் பகுதியையே தூக்கிக் கொண்டு செல்வார்கள். இதை அடையாளம் வைத்துக்கொண்டு மரத்தின் பின் பகுதியை மற்றவர்கள் தூக்கிக் கொண்டு செல்வார்கள். இவை அனைத்தும் இருட்டில் நடக்கும். நிலா ஒளி இருக்கும் இரவில் மரம் வெட்ட மாட்டார்கள். பெல்ட் வாள் என்ற கருவியை இவர்கள் அணிந்திருப்பார்கள். அதன் ஒரு குறிப்பிட்ட பகுதியைத் தட்டிவிட்டால் ஒரு பிரத்யேக ஓசை கேட்கும். இந்த ஓசையைக் கேட்டால் யானை போன்ற வன விலங்குகள் இவர்களை நெருங்காது.

ஒரு முறை அருவி காட்டிற்கு வருகிறான் என்ற விவரம் வனத்துறையினருக்குக் கிடைத்தது. அருவியால் புரிந்து கொள்ள முடியாத வகையில் நேரடியாக சென்று பிடிக்காமல் இருக்கும் விதத்தில் ஒரு திட்டம் வகுக்கப்பட்டது. அருவி சந்தன மரத்தை வெட்டிவிட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்த சமயத்தில் வனத்துறையினர் அவனைத் தாக்கினர். குழுவில் அருவியுடன் இருந்த சிலரும் பிடிபட்டனர். ஒரு சமயம் ராஜ் பிரான்சிஸ்ஸைத் தேடி ஒரு விருந்தாளி வந்தான். தண்டனை முடிந்து விடுதலையான அருவிதான் அந்த விருந்தாளி.

தன்னுடன் வேறு சிலரும் உண்டு என்றும் எல்லோருக்கும் வாழ ஒரு வழி காட்டவேண்டும் என்றும் அருவி சொன்னான். வயனைகள் என்ற திட்டம் அப்போது நடைமுறையில் இருந்ததால் இந்த குழுவினரைப் பயன்படுத்தி தமிழ்நாட்டில் லோயர் கேம்ப் பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு காட்டை சுற்றிக்காட்ட காளை வண்டி பயணத்திட்டம் (Bulluck cart discoveries) என்ற பெயரில் 2002-2003 காலத்தில் ஒரு புதிய திட்டம் தொடங்கப்பட்டது. திராட்சை தோப்புகள், தென்னந்தோப்புகள், செவ்வந்தி பூந்தோட்டங்களை சுற்றிக் காட்டுவதே திட்டத்தின் நோக்கம்.

பயணச் சீட்டு தேக்கடியில் கொடுக்கப்பட்டது. பயணிகள் காளை வண்டிகள் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். விடியல் என்று பெயரிடப்பட்ட இந்த அணியில் 23 பேர் இருந்தனர். வனத்துறையின் முக்கிய நீரோட்டத்தின் ஓர் அங்கமாக இவர்கள் மாறினர். முதலில் இவர்கள் வனத்துறை உயர் அதிகாரி பிரமோத் அவர்கள் முன்னிலையில் சரணடைந்தனர். தன்னார்வத்துடன் சில நல்ல உள்ளங்கள் கொடுத்த 35,000 ரூபாயைப் பயன்படுத்தி இரண்டு காளைகள் வாங்கப்பட்டன.

லோயர் பெரியாறில் இன்று பல பயணிகள் இத்திட்டத்தின் நன்மையை அனுபவிக்கின்றனர். இந்தியாவில் முதல்முறையாக இரண்டு மாநிலங்கள் ஒரு பிரச்சனையை ஒற்றுமையுடன் தீர்த்தனர். சந்தன மரம் கடத்தல் நிறுத்தப்பட்டதை அறிய மற்ற மாநிலங்களில் இருந்து அதிகாரிகள் கேரளாவிற்கு வந்தனர். காவலர்களாக மாறிய முன்னாள் கொள்ளைக்காரர்கள் காட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைபவர்களை விரட்டினர்.

ஆனால் முல்லைப் பெரியாறு பிரச்சனை பெரிதானபோது காளை வண்டித் திட்டம் கேரளாவுடையது என்று கருதி தமிழ்நாட்டில் பயணிகளுக்காக வாங்கப்பட்ட வண்டிகள் தாக்கப்பட்டன. காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. வண்டிகள் சில தீயசக்திகளால் தீக்கிரையாக்கப்பட்டன. பழைய கொள்ளைக்காரன் அருவி விடியல் அணியில் இருந்து பிரிந்து திருட்டுத் தொழிலுக்கே திரும்பிப் போனான். விடியல் அணியில் விரிசல் ஏற்படும் என்று அஞ்சப்பட்டாலும் அவ்வாறு நடக்கவில்லை. “தலைவர் அருவி வேண்டுமானால் போகட்டும். எங்களுக்கு இந்த வாழ்க்கையே போதும். காடும் காட்டு விலங்குகளும் எங்களை ஒருபோதும் கைவிடாது. வெளியுலக மனிதர்களிடம் இருந்து காடும் வன விலங்குகளும் எங்களைக் காப்பாற்றும்” என்று விடியல் குழுவினர் உறுதியாக நம்புகின்றனர்.

காட்டுடனான இவர்களின் சொந்தம் இன்று வரை தொடர்கிறது. இவர்களுடைய வாழ்க்கை இந்த நம்பிக்கையால் இன்று வரை முன்னோக்கிச் செல்கிறது. இதுவரை எந்த ஒரு வன விலங்கும் இவர்களைத் தாக்கியதில்லை. 1996-97ல் பெரியாறு புலிகள் சரணாலயத்தில் சூழல் பாதுகாப்பு கமிட்டிகள் (EDC) தொடங்கப்பட்டன.

சுற்றுலா வருபவர்களிடம் இருந்து புதிய அறிவுகளை பெற குழுவினருக்கு இது உதவியது. இவர்கள் இப்போது சமாதானமாக மதிப்புடன் வாழ்கின்றனர். மூங்கில் வேலைப்பாடு, இயற்கை நடத்தம், எல்லைப்புற நடைப்பயிற்சி போன்ற திட்டங்களில் பயணிகளுக்கு பாதுகாப்பு அளிக்கின்றனர். இவர்களின் குழந்தைகள் நன்றாகப் படித்து இப்போது நல்ல நிலையில் வாழ்கின்றனர். அன்றைய அணியில் இருந்த பலரும் இன்று நடுத்தர வயதைத் தாண்டியவர்கள்.

உடலில் உயிருள்ளவரை காடுடனான இந்த நல்ல வாழ்க்கையை தொடர்வதே இவர்களின் தீர்க்கமான முடிவு. அடுத்த தலைமுறைக்கும் இந்த நன்மைகள் தொடரும் என்பது உறுதி. மனிதராகப் பிறப்பவர்கள் எல்லோரும் நல்லவரே. சூழ்நிலைகளும் சுற்றுப்புறமுமே வாழ்க்கையை வழிமாறி போகச் செய்கிறது. காட்டைக் கொள்ளையடித்தவர்களே காட்டை காவல் காக்கும் போராளிகளாக மாறிய இந்த கதை எல்லோருக்கும் ஒரு சிறந்த முன்மாதிரி.

மேற்கோள்கள்: https://www.mathrubhumi.com/special-pages/world-environment-day-2023/formation-of-poachers-to-protectors-eco-development-committe-in-periyar-tiger-reserve-1.8611310

- சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It