ஈரோடு அர்பன் பாங்கியைப் பற்றியும், அதன் நிர்வாகத்தைப் பற்றியும் "குடி அரசு" பத்திரிகையில் ஒரு குறிப்பு வந்திருந்ததை வாசகர்கள் கவனித்திருக்கலாம்.

ஈரோடு அர்பன் பாங்கி வெகு காலம் பார்ப்பனர் ஆதிக்கத்திலிருந்து வந்ததும், அது பார்ப்பனர் பாங்காகவே இருந்து வந்ததும், பார்ப்பனர்களுக்கும், பார்ப்பன சிஷ்யர்களுக்கும், அடிமைகளுக்கும் மாத்திரமல்லாமல் மற்றவர்களுக்கு அதில் இடம் கிடைப்பதே கஷ்டமாய் இருந்ததைப் பற்றி அவ்வப்போது பல குறிப்புகள் குடி அரசில் வந்து கொண்டிருந்ததும் யாவருக்கும் தெரியும்.

periyar 347இப்போது சுமார் 4, 5 வருஷ காலமாக சுயமரியாதை இயக்கத்தின் பயனாய் பார்ப்பனரல்லாத மக்கள் விழிப்பெய்தி பலதுறைகளிலும் முன்னேற்றம் அடைந்து வருவது போலவே இந்த அர்பன் பாங்கி விஷயத்திலும் கண் விழித்தும் முன்னேற்றமடைந்து பாங்கியின் பயனை பார்ப்பனரல்லாத மக்களும் பங்கு வீதம் இல்லாவிட்டாலும் ஒரு குறிப்பிடத்தகுந்த அளவுக்காவது அடைந்து வருகிறார்கள் என்பதைக் கேட்க பார்ப்பனரல்லாதார் எல்லோருமே மகிழ்ச்சி அடையக்கூடும். நிற்க

சமீபகாலமாய் அதாவது 2, 3 வருஷ காலமாய் ஈரோடு அர்பன் பாங்கி டைரக்டறேடானது ஒரு பார்ப்பனரல்லாதாரை பிரசிடெண்டாகக் கொண்டு நிர்வாகம் நடைபெற்று வந்ததைப் பற்றி அதன் எதிரிகள் பலவிதமாகக் குற்றங்களைக் கூறி விஷமப் பிரசாரங்கள் செய்து வந்ததோடு சிவில் கிரிமினல் விவகாரங்களும், தொல்லைகளும் நடந்து வந்ததோடு அந்த டைரக்ட்டர் சபை மீது நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் முதலியவைகள் கூட கொண்டு வர முயற்சிகள் நடந்து வந்ததும் யாவருக்கும் தெரிந்ததாகும்.

இதன் பயனாய் கடைசியில் ஏற்பட்ட பலன் என்னவென்றால் டைரக்ட்டர்களின் உத்தியோக ஆயுள் காலம் மறுபடியும் ஒரு வருஷம் வளர்ந்து வந்தது என்பதுடன் இம்மாதம் 22ந்தேதி நடந்த அர்பன் பாங்கி தேர்தலில் பழைய டைரக்ட்டர்களே அபரிமிதமான ஓட்டுகளுடன் மறுபடியும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்பதுதான்.

22.9.34ந் தேதி காலை முதல் மாலை வரை 400 பேர்கள் வரை ஓட்டர்கள் விஜயம் செய்து தங்கள் ஓட்டுகளைப் பதிவு செய்தார்கள். 5 இடங்களில் போலிங் நடந்தது. 11 பேர் தெரிந்தெடுக்கப்பட வேண்டிய 11 ஸ்தானங்களுக்கு 24 பேர்களுக்கு ஓட்டர்கள் ஓட்டுப் போட்டார்கள். கடைசியாக அடியில் கண்ட தோழர்களுக்கு அதிகமாக ஓட்டுகள் விழுந்ததால் அவர்களே தெரிந்தெடுக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்டது.

1. M. சிக்கையா 376

2. E.S. கோவிந்தசாமி நாயுடு 373

3. S.R. கண்ணம்மாள் 370

4. நா.மு. ஷண்முகசுந்தர முதலியார் 367

5. S. ராமசாமி நாயக்கர் 364

6. V.V.C.V. பெரியசாமி முதலியார் 363

7. E.Y. உமார் நவாஸ்கான் சாயபு 363

8. K.M. சீனிவாசம் பிள்ளை 360

9. K. காதர் சாயபு 359

10. V.V.C.R.முருகேச முதலியார் 358

11. V.வெங்கிடசாமி ரவுத்து 356

இதில் பத்து தோழர்கள் முன்னமேயே டைரக்ட்டராய் இருந்தவர்கள். தோழர் கண்ணம்மாள் மாத்திரம் புதிதாக தெரிந்தெடுக்கப்பட்டவர்கள்.

அடுத்த நாள் 23ந்தேதி காலையில் டைரக்ட்டர்கள் கூட்டம் கூடி தோழர் M. சிக்கையா அவர்களையே மறுபடியும் பிரசிடெண்டாகவும் தோழர் V.V.C. பெரியசாமி முதலியார் அவர்களை மறுபடியும் வைஸ் பிரசிடெண்டாகவும் தெரிந்தெடுத்தார்கள். தோழர் உப்புமண்டி காதர்சாயபு அவர்கள் தனது மகன் தோழர் அப்துல் ரஜாக்சாயபுக்காக ராஜினாமா செய்ததால் அந்த ஸ்தானத்துக்கு தோழர் அப்துல் ரஜாக் சாயபு அவர்கள் தெரிந்தெடுக்கப்பட்டார்.

வரப்போகும் 3வருஷ காலமும் டைரக்ட்டர்களும், பிரசிடெண்டும் ஒத்துழைத்து பாங்கியின் முற்போக்குக்கு உழைப்பதோடு மகாஜனங்களுக்கு நன்மை உண்டாகும் முறையில் தொண்டாற்றுவார்கள் என்று நம்புகிறோம். கடைசியாக அர்பன் பாங்கி டைரக்ட்ரேட்டுக்கு பெண் டைரக்ட்டரை தெரிந்தெடுத்த ஓட்டர்களை பாராட்டுவதுடன் அடுத்த எலக்ஷனிலாவது ஒரு தாழ்த்தப்பட்ட தோழரை தெரிந்தெடுக்க வேண்டுமென்றும் வேண்டிக் கொள்ளுகிறோம்.

(பகுத்தறிவு கட்டுரை 30.09.1934)

Pin It