கோவையில் தோழர்கள் Dr. வரதராஜுலு ஈ.வெ. ராமசாமி

6000 - 7000 ஜனங்கள் பிரம்மாண்டமான கூட்டம்

தோழர்களே! இன்று இந்தியாவெங்கும் பல தரங்களில் கிளர்ச்சிகளும், முயற்சிகளும் செய்யப்பட்டு வருகின்றன. அவற்றில் இப்போது மிகவும் விளம்பரமாய்க் காணப்படுவது இந்திய சட்ட சபைத் தேர்தல்களாகும். அது விஷயமாய் பல கட்சிக்காரர்களும் பலவித அபிப்பிராயக்காரர்களும் சட்டசபைத் தேர்தலுக்கு நிற்பதால் அவரவர்கள் அபிப்பிராயங்களைப் பொது ஜனங்களுக்குச் சொல்லி ஓட்டுகள் கேட்கவோ அல்லது எந்தப்படி சொன்னால் பொது ஜனங்கள் ஓட்டுகள் தங்களுக்குக் கிடைக்குமென்று கருதி அதன்படி பேசி ஓட்டுக் கேட்கவோ ஆன காரியங்களை அபேக்ஷகர்கள் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் எப்படிப்பட்ட நியாயமான, யோக்கியமான கொள்கைகள் கொண்ட அபேக்ஷகரும் ஜனங்களிடையில் வந்து தங்கள் அபிப்பிராயங்களையும், நிலைமைகளையும் சொல்லித் தீர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு விட்டது.periyar 430அதனாலேயே தோழர் வரதராஜுலு அவர்கள் இன்று இங்கு இந்திய சட்டசபைத் தேர்தலுக்குத் தான் நிற்பதைப் பற்றியும், உங்கள் எல்லோருடைய ஆதரவும் தனக்கு வேண்டும் என்பதைப் பற்றியும் தெரிவித்துக் கொள்வார். விஷயங்களைப் பொறுமையுடன் கேட்டு நடுநிலைமையிலிருந்து யோசித்துப் பார்த்து தங்களுக்குத் தோன்று கின்றபடி செய்யுங்கள்.

குறிப்பு: கூட்டத்தின் காரணத்தையும் அவசியத்தையும் எடுத்துக் கூறி பேசியது.

அக்கிராசனர் முடிவுரையாக

தோழர்களே! நான் ஒரு தேசாபிமானியல்ல. அது மாத்திரமல்லாமல் தேசாபிமானத்தைப் புரட்டு என்றும், அது தனிப்பட்டவர்களின் வயிற்றுச் சோற்று வியாபாரம் என்றும் சொல்லியும், எழுதியும் வரும் "தேசத் துரோகி"யாவேன். ஒரு காலத்தில் தேசாபிமானத்துக்காகச் சிறை செல்லும்படியான அவ்வளவு தேசாபிமானியாயிருந்து பல முறை சிறை சென்றும் வந்து தான் அதன் அனுபவத்தைச் சொல்லுகிறேனே ஒழிய வெளியில் இருந்து வேடிக்கை மாத்திரம் பார்த்துவிட்டு நான் இப்படிச் சொல்ல வரவில்லை.

தோட்டிக்குப் புல் சுமக்கும் வேலை போகாது

இதனால் பாமர மக்கள் தூஷணைக்கும், பழிப்புக்கும் கூட ஆளாகியிருக்கிறேன் என்றாலும் எனது உறுதியான எண்ணத்தை நான் மாற்றிக் கொள்ள முடியவில்லை.

"நாட்டுக்கு நல்ல துரை வந்தாலும் தோட்டிக்குப் புல்லுச் சுமக்கும் வேலை போகாது" என்பது தான் தேசாபிமானிகளின் மகாத் மாக்களின் சுயராஜ்ய தர்மமாகும். இந்த சுயராஜ்யம் வருவதை விட இப்போது இருக்கும் பர ராஜ்யமே மேலானது என்பது எனது கருத்து.

இன்றைய பர ராஜ்யத்தில் தோட்டி புல்லுச் சுமக்கும் வேலையைவிட்டு மந்திரி வேலை செய்தாலும் செய்யக்கூடும்.

ஆனால் அவனவன் ஜாதித் தொழிலையும், பரம்பரைப் பெருமையையும், பழக்க வழக்கங்களையும் காப்பாற்றும் காங்கிரஸ் சுயராஜ்யத்தில், தோட்டிக்குப் புல்லுச் சுமப்பதை விட வேறு தொழில் ஏற்பட முடியுமா என்று யோசித்துப் பாருங்கள். இந்தக் காரணத்தினால் தான் நான் தேசத்துரோகியாக இருக்கிறேன், சுயராஜ்யத்துக்கும் விரோதியாக இருக்கிறேன். ஆனால் பார்ப்பார ஜாதியையும், பறை ஜாதியையும் அழித்து எல்லோரும் சரிசமமான மனிதர்கள் என்று ஆக்கும் தேசாபிமானத்துக்கும், சுயராஜ்யத்துக்கும் நான் விரோதியுமல்ல துரோகியுமல்ல என்பதை ஞாபகத்தில் வையுங்கள்.

நான் இந்திய சுயராஜ்யம், இந்திய தேசாபிமானம் என்பதைப் பற்றி மாத்திரம் பேசுவதாக நினைத்து விடாதீர்கள். உலகத்தில் உள்ள எல்லா தேசங்களின் தேசாபிமானங்களையும், சுயராஜ்யங்களையும் கண்டும், தெரிந்தும் தான் பேசுகிறேனே ஒழிய, கிணற்றுத் தவளையாய் இருந்தோ, வயிற்றுச் சோற்றுச் சுயநல தேசபக்தனாயிருந்தோ நான் பேச வரவில்லை.

எந்தத் தேசத்திலும் எப்படிப்பட்ட சுயராஜ்யத்திலும், குடியரசு நாட்டிலும் ஏழை பணக்காரன், முதலாளி தொழிலாளி வித்தியாசம் இருந்துதான் வருகின்றது. நம் நாட்டில் இவை மாத்திரமல்லாமல் பார்ப்பான் பறையன், மேல்ஜாதி கீழ்ஜாதி ஆகிய அர்த்தமற்ற அயோக்கியத்தனமான வித்தியாசங்களும் அதிகப்படியாய் இருந்து வருகின்றன.

இவைகளை ஒழிக்கவோ, அழிக்கவோ இன்றைய தேசாபி மானத்திலும், சுயராஜ்யத்திலும் கடுகளாவாவது யோக்கியமான திட்டங்கள் இருக்கின்றனவா என்று உங்களைக் கேட்கின்றேன்.

உலகத்திலேயே மேம்பட்ட செல்வச் செருக்குள்ள நாடான அமெரிக்க நாட்டிலேயே 2 கோடி பேர்களின் குடும்பங்கள் வேலையில்லாமல் திண்டாடுகின்றன வென்றால் உலகத்தில் சூரிய அஸ்தனமில்லாத பிரிட்டிஷ் சுயராஜ்ய இங்கிலாந்தில் 20 லட்சம் பேர்களின் குடும்பங்கள் வேலையில்லாமல் பட்டினி கிடக்கின்றன வென்றால் சுயராஜ்ய ஜனநாயக ஆட்சிக்கு வேறு என்ன உதாரணம் வேண்டும். பிரான்சு குடியரசின் யோக்கியதைக்குப் புதுச்சேரியைப் பார்த்துக் கொள்ளுங்கள். இந்திய மக்களுக்குள்ள குறைகள் அங்கும் உண்டு.

சுயராஜ்யமுள்ள சுதேச சமஸ்தானங்களை எடுத்துக் கொள்ளுங்கள். பிரிட்டிஷ் இந்தியா சின்னக் கருப்பனானால் சுதேச சமஸ்தான இந்தியா பெரிய கருப்பனாய் இருக்கிறது.

இப்படிப்பட்ட தேசாபிமானம், சுயராஜ்ய அபிமானம் என்கின்ற சூட்சி களையும், தந்திரங்களையும் விட்டு விட்டு மனித ஜீவ அபிமானமென்கின்ற தலைப்பின் கீழும், கொள்கையின் கீழும் எல்லோரும் ஒன்று சேருகின்ற வரையில் நான் "தேசத் துரோகி"யாயிருந்து தேசாபிமானப் புரட்டையும், சுயராஜ்யப் புரட்டையும் வெளியாக்காமல் இருக்க முடியாது.

காங்கிரஸ்

காங்கிரசைப் பற்றிப் பிரமாதமாகப் பேசப்படுகின்றது.

காங்கிரசின் பயனாய் இந்த 50 வருஷகாலமாய் பாமர மக்களுக்கு என்ன நன்மை ஏற்பட்டதென்று விரல் விட்டுச் சொல்ல முடியுமா என்று கேட்கின்றேன்.

முதலாவது காங்கிரஸ் எல்லா ஜனங்களுக்கும் பிரதிநிதியாய் இருக்கின்றதாவென்றும் கேட்கின்றேன்.

வடநாட்டில் முஸ்லீம்கள் காங்கிரசுக்கு விரோதமாய் முஸ்லீம் லீக் வைத்து காங்கிரசைக் கண்டித்து வருகிறார்கள். பெரும்பான்மையான 100க்கு 90 முஸ்லீம்கள் காங்கிரசில் இல்லை.

தோழர் வரதராஜுலு காங்கிரசை முஸ்லீம் சமூகம் ஒப்புக்கொள்ளவில்லை என்றதற்கு ஒரு வாலிபர், தோழர்கள் டாக்டர் அன்சாரி, கிச்சுலு, அபூல்கலாம் ஆசாத் ஆகியவர்கள் இருக்கின்றார்கள் என்று சொன்னார். இவர்கள் பேச்சைக் கேட்கும் முஸ்லீம்கள் யார்?

அப்படியானால் காந்தியார் சென்ற வட்ட மேஜை மகாநாட்டின் யோக்கிதை இந்து முஸ்லீம் விஷயத்தில் சிரிப்பாய்ச் சிரிப்பானேன்? வகுப்புத் தீர்ப்பு விஷயமாய் இன்னமும் காங்கிரசுக்கும் முஸ்லீம்களுக்கும் ஒரு முடிவு ஏற்படாமல் காங்கிரசுக்குள்ளாகவே பிளவு ஏன்?

டாக்டர் அம்பேத்காரைத் தீண்டப்படாதவர்கள் பிரதிநிதியல்லவென்ற காந்தியார் அவரோடு ராஜி செய்து கொள்ளப் பட்டினி கிடந்து அவர் கையெழுத்தைப் பெறுவானேன்?

தென் நாட்டில் உள்ள பார்ப்பனரல்லாதார் 100க்கு 95 பேர்கள் காங்கிரசை விட்டு வெளியேறித் தனி ஸ்தாபனம் ஏற்படுத்தி சர்க்காரிடம் தங்கள் உரிமையைப் பெற முயற்சிப்பானேன்? சட்டசபையிலும், மந்திரி சபையிலும், ஸ்தல ஸ்தாபனங்களிலும் பார்ப்பனரல்லாதார் கட்சியாரே நிறைந்து இருப்பானேன்?

காங்கிரஸ் கொள்கையை ஒப்புக்கொள்ளாதவன் தேசத் துரோகியென்றால் பண்டித மாளவியா, மூஞ்சே, பாய் பரமானந்தா, ஆனே ஆகியவர்கள் காங்கிரஸ் கொள்கைக்கு விரோதமாய் பிரசாரம் செய்து தேர்தல்களில் போட்டிபோடுவானேன்?

தேசீயவாதிகள் என்று சொல்லக்கூடிய முஸ்லீம்கள் கூட சர். அப்துல் ரஹீம் போன்றவர்கள் ஏன் காங்கிரசில் இல்லை? இவர்கள் எல்லாம் காங்கிரஸ் கொள்கைகளைப் பெரிதும் ஆதரிப்பதில்லை யென்பது உங்களுக்குத் தெரியவில்லையா?

வகுப்புணர்ச்சி

வகுப்புத் தீர்ப்பை மூடிவைத்துப் பேசுவது முஸ்லீம்களை ஏமாற்றவா அல்லவாவென்று கேட்கின்றேன்.

காங்கிரஸ்காரர்கள் உண்மையான தேசாபிமானிகளாய் எல்லா மக்களுக்கும் பிரதிநிதிகளாய் இருப்பார்களேயானால், எல்லா வகுப்பு மக்களையும் கூட்டி வைத்துப் பேசி ஒரு முடிவு செய்வதற்கு முயற்சிக்காமல் ஒவ்வொரு வகுப்பிலும் ஏதோ இரண்டொரு சோனகிரிகளைச் சேர்த்துக் கொண்டு மற்றவர்கள் எல்லோரையும், வகுப்புவாதி, தேசத்துரோகியென்று வையவிடுவதால் தாங்கள் வெற்றி பெற்று விடலாம் என்று நினைப்பது ஏமாற்றத்தைத் தான் தருமே யொழிய வேறில்லை.

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்

20 வருஷங்களுக்கு முன்பே முஸ்லீம்களுக்கு வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கொடுத்ததுபோல் பார்ப்பனரல்லாதார் கேட்ட பிரதிநிதித்துவம் அப்போதே கொடுத்திருக்கும் பக்ஷத்தில் இந்நாட்டில் பார்ப்பனரல்லாதார் கக்ஷி தோன்ற இடமே இருந்திருக்காது. அல்லது நான் கேட்ட காலத்திலாவது பார்ப்பனர்கள் செவி சாய்த்திருப்பார் களானால் நானும் காங்கிரசை விட்டு ஓடி வந்திருக்க மாட்டேன்.

பார்ப்பனர்கள் தங்கள் சாமர்த்தியத்தால் இவைகளை யடக்கி விட்டதாகக் கனவு கண்டார்கள். இன்று வட்டியும் முதலுமாய் தலைதூக்கி நிற்கின்றது. தந்திரத்தினால் இவைகளையும் அடக்கி விடலாமென்பதாகக் கருதாதீர்கள். மூடி வைத்த சிலந்திப் புண் அழுகிப் புழுத்து நாறுவது போல் இன்னமும் அதிகமாய் நாறப்போகின்றது என்பது உறுதி.

பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார், இந்து முஸ்லீம், தாழ்த்தப்பட்டவர்கள் மேல் ஜாதிக்காரர்கள் ஆகிய பிரச்னைகளைத் தீர்க்காமலும், அவரவர்கள் நன்மைக்குத் தனித்தனியே பிரிந்து அரசாங்கத்தை நத்தும்படியாகவும் செய்துவிட்டு வெறும் தேசாபிமானப் பேச்சைப் பேசிக் கொண்டு தேர்தலுக்கு நின்றால் உலகை ஏமாற்றி விட முடியுமா? என்று கேட்கின்றேன்.

சட்டசபைக்குப் போய் "ஜாதி வித்தியாசங்களை யொழித்து தீண்டாமையையொழித்து எல்லோருக்கும் கோவில், குளங்கள், சத்திரம், பள்ளிகூடம் ஆகியவைகளில் பிரவேச உரிமை வாங்கித் தருகின்றோம்" என்று பார்ப்பனரல்லாத மக்களிடத்திலும், தாழ்த்தப்பட்ட மக்களிடத்திலும் சொல்லி ஓட்டுக் கேட்பதும், சட்டசபைக்குப் போனால் "சமூக சீர்திருத்தமோ கோவில் பிரவேசமோ, ஜாதி வித்தியாச ஒழிப்போ, கோவில் குளம், நுழைவோ ஆகிய இவைகள் சம்பந்தமான காரியம் ஒன்றும் நாங்கள் இந்திய சட்டசபையில் செய்யமாட்டோம். இதற்குச் சட்டமும் கொண்டு வரமாட்டோம்" என்று பார்ப்பனர்களிடமும், சனாதனிகளிடமும் சொல்லி ஓட்டுக் கேட்பதுமாய் இன்று தேர்தல் தந்திரப் பிரசாரம் நடைபெற்று வருகிறதென்பது உங்களுக்குத் தெரியாதா?

இந்தப்படி தோழர்கள் இ.ராஜகோபலாச்சாரியார், டாக்டர் ராஜன், கு. சத்தியமூர்த்தி முதலிய தலைவர்களென்போர்கள் பேசி வருகிறார்களா இல்லையா? என்று கேட்கின்றேன்.

பட்டினியின் யோக்கியதை

கோவில் பிரவேசம் வாங்கித் தருகிறேன் என்று டாக்டர் அம்பேத்காரிடம் சொல்லி ஏமாற்றிப் பட்டினி கிடந்து தனித் தொகுதியை குழி வெட்டிப் புதைத்து விட்டு இப்போது "பொது ஜனங்கள் ஆதரவில்லாததால் ஆலயப் பிரவேச மசோதாவை வற்புறுத்தக் கூடாது" என்று சொல்லுவதும், இனியும் சட்டசபையில் அப்படிப்பட்ட தீர்மானங்கள் கொண்டு வருவதில்லையென்று வாக்குக் கொடுப்பதும் எவ்வளவு நாணையமும், யோக்கியமும், சத்தியமுமான நடவடிக்கை என்று பாருங்கள். இவர்கள் தான் சத்தியாக்கிரகிகளாம். சத்திய சோதனை செய்கின்றவர்களாம், சத்தியத்திற்காகப் பட்டினி கிடப்பவர்களாம்.

இந்தத் தேர்தலை எதிர்பார்த்தே வருணாச்சிரமிகளுடைய ஆதரவு இல்லாமல் போய்விடுமென்று பயந்தே, ஆலயப்பிரவேச மசோதா கொலை செய்யப்பட்டு விட்டது என்பது எனது அபிப்பிராயம். சூட்சியும், தந்திரமும் எவ்வித நன்மையையும் செய்துவிட முடியாது.

கேள்விகளும் பதில்களும்

காங்கிரஸ்காரர்: நீங்கள் ஆதரிக்கும் ஷண்முகம் செட்டியார் மாதம் 4000 ரூபாய் சம்பளம் வாங்குகிறாரா இல்லையா?

ஈ.வெ.ரா: ஆம் மேளதாளத்தோடு வாங்குகிறார்.

காங்கிரஸ்காரர் : அதற்காகத்தானே அவர் சட்டசபைக்குப் போகப் பார்க்கிறார்.

ஈ.வெ.ரா: ஆம், அதற்கும், அதற்கு மேற்பட்ட பதவிக்கும் போகத்தான் போகிறார். இதில் என்ன தப்பு இருக்கிறது? தோழர் பட்டேல் காங்கிரஸ்காரராய், ஒத்துழையாதாராய் இருந்து இந்திய சட்டசபைக்குப் போய் முட்டுக்கட்டைப் போட்டுச் சர்க்காரை உடைத்து விடுவதாக பொது ஜனங்களிடம் சொல்லி சத்தியம் செய்து கொடுத்துவிட்டு ஓட்டு வாங்கி அங்கு போன பிறகு மாதம் 4000 ரூபாய் சம்பளத்துக்கு அடிமையாகி சர்க்காரை முட்டுக்கட்டை போடுவதற்குப் பதிலாய் ஒழுங்காக நடத்திக் கொடுப்பதாகவும், ராஜ விஸ்வாசத்துடன் ராஜபக்தி உள்ளவராய் இருப்பதாகவும் சத்தியம் செய்து கொடுத்து மாதம் 4000 ரூ. சம்பளம் வாங்கினாரா இல்லையா? ஆனால் தோழர் ஷண்முகம் அப்படிச் செய்யவில்லை. "நான் முட்டுகட்டை போடுகிறேன்" என்று சொல்லி ஓட்டுக் கேட்கவில்லை. "தேசபக்தர்" "தேசீயவீரர்" "தேசாபிமான சிங்கம்" என்கின்ற தோழர் பட்டேல் வாங்கிய சம்பளத்திற்கு மேல் ஒரு காசும் அதிகம் வாங்கவுமில்லை. இப்பொழுதாவது காங்கிரஸ்காரர்கள் தங்கள் இந்திய சட்டசபைக்குப் போனால் பிரசிடெண்டு ஸ்தானம் (கிடைப்பதானால்) ஆசைப் படுவதில்லை யென்றோ தாங்கள் பிரசிடெண்டுக்கு யாருக்கும் ஓட்டுச் செய்வதில்லை யென்றோ சொல்ல முடியுமா வென்று கேட்கின்றேன். (சிரிப்பு, கைத்தட்டலுடன் சிரிப்பு)

ஈ.வெ.ரா: தோழர்களே! சிரிக்காதீர்கள், இன்னமும் இவர்கள் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லப் போகிறேன். அவை உங்களுக்கு ஒரு அறிவு விருந்தாகும். அதைக் கேட்டால் உங்களுக்கு பசி கூட ஏற்படாது.

காங்கிரஸ்காரர்: ஜஸ்டிஸ்கட்சி உத்தியோக வேட்டைக் கட்சியாயிற்றே அதை நீங்கள் ஆதரிக்கலாமா?

ஈ.வெ.ரா: ஆம். ஜஸ்டிஸ் கட்சி உத்தியோக வேட்டைக் கட்சிதான். ஆனால் ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் காங்கிரஸ்காரர்கள் 30, 40 வருஷகாலமாய் ஆடி வந்த உத்தியோக வேட்டையைத்தான் வேட்டையாடிப் பிடிக்கிறார்களே தவிர வேறில்லை. ஆனால் காங்கிரஸ் காரியதரிசிகள், காங்கிரஸ் பிரமுகர்கள், தேசாபிமானிகள் ஆகிய சர்.சி.பி.ராமசாமி அய்யர், கே.சீனிவாசய்யங்கார், வி.கிருஷ்ணசாமி அய்யர், சர்.பி.எஸ். சிவசாமி அய்யர், மகாகனம் சீனிவாச சாஸ்திரிகள் முதலியவர்கள் ஆடிய வேட்டைகளைத்தான் ஆடுகிறார்களே ஒழிய அவர்கள் வாங்கின சம்பளத்தைத் தான் வாங்குகிறார்களே ஒழிய புதிய வேட்டை யொன்றுமில்லை. அதிக சம்பளம் ஒன்றுமில்லை.

மற்றும் காங்கிரஸ் தேசாபிமானிகள் தங்கள் ஜாதிக்கு மாத்திரமே உத்தியோக வேட்டையாடினார்கள். ஜஸ்டிஸ் தேசாபிமானிகள் தங்களுக்கும் பார்ப்பனர்களுள்பட எல்லா மக்களுக்குமாக வேட்டையாடு கிறார்கள். வேட்டையை இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர், தாழ்த்தப்பட்டவர் எல்லோருக்கும் பங்கிட்டுக் கொடுக்கிறார்கள். பழைய காங்கிரஸ் வேட்டைக்காரர்கள் இப்போது தங்களுக்கு வேட்டை கிடைக்கவில்லை யென்கின்ற காரணத்தால் வேட்டையைப் பரிகாசம் பண்ணுகிறார்கள். இப்போதும் பல காங்கிரஸ்காரர்களை எனக்குத் தெரியும். அவர்கள் தங்கள் அண்ணன் தம்பிகளையும், சிற்றப்பன் பெரியப்பனையும், மாமன் மச்சானையும் உத்தியோக வேட்டையாட விட்டு விட்டு தாங்களும் முயற்சி செய்து பார்த்த வேட்டைக்கு லாயக் கில்லாதவர்களே பெரிதும் ஜெயிலுக்குப் போய்விட்டு வந்து இங்கு தேசாபிமானிகளாயிருப்பது எனக்குத் தெரியும்.

காங்கிரஸ்காரர்: ஜஸ்டிஸ் கக்ஷி என்ன சாதித்தது?

ஈ.வே.ரா: ஜஸ்டிஸ் கட்சியானது தோழர் சி.பி. சுப்பையாவை மாகாண காங்கிரஸ் காரியதரிசி யாக்கிற்று. இதைவிட வேறு என்ன வேண்டும். தோழர் வரதராஜுலுவைத் தென்னாட்டுத் திலகராக்கிற்று. என்னை மாகாண காங்கிரஸ் காரியதரிசியாகவும், பிரசிடெண்டாகவும் ஆக்கிற்று. இவை தவிர இதுவரை காங்கிரஸ் சாதித்ததை யெல்லாம் ஜஸ்டிஸ் கக்ஷியும் சாதித்து வருகின்றது.

காங்கிரஸ் பார்ப்பனர்களுக்கே உத்தியோகம், படிப்பு முதலியவை இருக்கும்படி காங்கிரஸ் பார்த்து வந்தது. ஜஸ்டிஸ் கக்ஷி பார்ப்பனருக்கும், பார்ப்பனரல்லாதாருக்கும் இருக்கும்படி பார்த்து வருகிறது.

எல்லா உத்தியோகங்களுக்கும் எல்லாப் பதவிகளுக்கும் பார்ப்பனரல்லாதாரும் லாயக்கும், உரிமையும் உடையவர்களே என்று செய்து காட்டி மெய்ப்பித்து வருகின்றது.

உத்தியோக வேட்டையில் எல்லோருடைய சீட்டையும் ஒன்றாய் போட்டு குலுக்குகின்றது. இன்னம் என்ன வேண்டும்?

காங்கிரஸ்காரர் கேள்வி: உத்தியோகம்தான் பெரிதா?

ஈ.வெ.ரா.: ஆம், இது வரை தேசாபிமானிகள், காங்கிரஸ்காரர்கள், தேசீய வீரர்கள் என்பவர்கள் பெரிதும் உத்தியோகத்தை லக்ஷியமாகக் கொண்டுதான் உழைத்து வந்திருக்கிறார்கள். இப்போது பார்ப்பனரல்லாதார் அந்தக் கொள்கையைத் தேசாபிமானமாகக் கொண்டவுடன் பார்ப்பனர்கள் அதை தேசத் துரோகமென்று சொல்ல வந்து விட்டார்கள். பார்ப்பனர் அனுபவித்த காலம் எவ்வளவோ, அவ்வளவு காலமும் அந்த விகிதாச்சார எண்ணிக்கைக்குத் தக்கபடியும், அவ்வளவு பணமும் பார்ப்பனரல்லாதாரும் அனுபவிக்கும் காலம் வந்து விட்டால் பிறகு ஜஸ்டிஸ் கக்ஷியே நம் நாட்டிற்கு வேண்டா மென்று நானே சொல்லுவேன்.

தவிரவும், உத்தியோகங்களை வேண்டாமென்று சொல்லக் கூடாது. அதன் சம்பளங்களைக் குறைக்கும்படி சொல்ல வேண்டும். உத்தியோகத்தின் மூலம்தான் அரசாங்கம் நடைபெற வேண்டும். அதைப்பெற ஒவ்வொரு பிரஜைக்கும் எந்தக் கட்சியானாலும் ஜாதியானாலும் உரிமையுண்டு.

எலக்ஷன்களிலும், உத்தியோகங்களிலும் ஒரு யோக்கியமான முறை இல்லாத காரணத்தால்தான் எலக்ஷன்கள் வரும்போதும், உத்தியோகங்கள் வரும்போதும், நாட்டில் கலவரம், கக்ஷி பிரதி கக்ஷிச் சண்டைகள் நடந்து கொண்டு வருகின்றன.

எப்படியானாலும் வகுப்புச் சமரசமில்லாமல் நடைபெறும் தேசாபிமான வேலைகள் காந்தியார் நடத்துவதானாலும், யார் நடத்துவதானாலும், நாணையமாயும், நியாயமாயும், உண்மையாயும் நடத்த முடியாது. அது ஏற்படுகின்ற வரையில் நான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பிற்பட்ட மக்களுக்கும் உத்தியோகத்தில் குறைந்திருக்கும் மக்களுக்கும் அனுகூலமாய்த்தான் இருப்பேன். அதற்காக ஆயிரம் தேசத் துரோகி கூட ஆவேன். வகுப்பு நியாயம் தான் எனக்கு எல்லாவற்றையும் விடப் பெரியது.

ஒருவன் பாடுபட்டும் பட்டினியாய்க் கிடப்பதும், ஒருவன் பாடுபடாமல் வயிறு புடைக்கத் தின்று புரளுவதும், ஒருவன் பல வேலையைக் கைப்பற்றித் தனது தேவைக்கு மேல் பயனடைந்து பாழாக்க, ஒருவன் செய்வதற்குக் கூட வேலையில்லாமல் திண்டாடி தெருவில் தியங்க இவைகளுக்கு வகுப்பு ஆதிக்கமும், வகுப்பு வித்தியாசமும் காரணமாய் இருப்பதென்றால் இவற்றை எப்படிச் சகித்துக் கொண்டு வகுப்பைப் பற்றியே கவலையில்லாத தேசாபி மானத்தை ஒரு மனிதன் ஆதரிக்க முடியுமென்று கேட்கின்றேன்.

ஜஸ்டிஸ் கட்சியை நான் ஆதரிப்பதைக் கண்டு நீங்கள் வயிற்றெரிச்சல் படுவதில் பயனொன்றுமில்லை. அது தைரியமாய் வகுப்பு நியாயத்தையும், வகுப்பு வித்தியாசங்களையும் உயர்வு தாழ்வுகளையும் ஒழிக்கச் சட்டம் செய்வதையும், வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவத்தை அமுல் நடத்துவதையும் கொள்கையாய்க் கொண்டு வேலை செய்து வருகின்றது.

அதன் பயனாய் இன்று இந்த நாட்டில் எல்லா ஜாதியாரும் உத்தியோகம் அனுபவிக்கிறார்கள்.

கடைசியாக உங்களுக்கு ஒன்று சொல்லுகிறேன். அக்கட்சி மீது பொறாமைப்பட்டு பிரயோஜனமொன்றுமில்லை. இன்றைய நிலையில் அதை உங்களால் அசைக்க முடியாது. அதற்குக் கெடுதி செய்ய எண்ண எண்ண அது தேசமெல்லாம் வேரூன்றப் போகின்றது. அதன் பலக் குறைவு குற்றம் எங்கிருக்கிற தென்பது எனக்குத் தெரியும். அதைச் சரிப்படுத்த நானும் முயற்சிக்கிறேனே யொழிய, சும்மா இருக்கவில்லை. ஆனால் அது காங்கிரசிலில்லையென்று கருதி விடாதீர்கள்.

எனது ஒரு கேள்வி

உங்களை ஒன்று கேட்கின்றேன். இந்த மாகாணத்தில் ஜஸ்டிஸ் கட்சி யிருந்து அது இந்த 20 வருஷகாலமாகச் செய்து வந்த அரசியல் சமுதாய வேலையை விட ஜஸ்டிஸ் கட்சி யில்லாத வேறு மாகாணங்கள் அதிகமாகச் செய்த ஒரு காரியத்தைச் சொல்லுங்கள் பார்ப்போம். மற்ற மாகாணங்களிலில்லாத கெடுதி இங்கு ஏதாவது இருக்கின்றதா சொல்லுங்கள் பார்ப்போம். மற்ற மாகாண மந்திரிகள், இந்திய கவர்னர்கள் எல்லோரும் ஜஸ்டிஸ் கட்சிக்காரர்களா?

அங்கெல்லாம் ஜஸ்டிஸ் கட்சி யில்லாததால் கவர்ன்மெண்டு ஒழிந்து போய்விட்டதா? உத்தியோகங்கள், சட்டசபைகள், நிர்வாக சபைகள், காலியாகக் கிடக்கின்றனவா? தயவு செய்து யோசித்து பதில் கூறுங்கள்.

வீணாக இப்படி இந்தச் சூட்சிகளும், விஷமங்களும், துவேசமும், வலுக்க வலுக்க பார்ப்பனப் பூண்டுகள் உத்தியோகங்களில் குறைந்து போவதோடு மாத்திரமல்லாமல் மறைந்து போகவும் நேரிடும் என்று எச்சரிக்கை செய்கிறேன்.

கம்பளி போட்டு உட்காருவோம்

காங்கிரசின் யோக்கியதையும்; ஜஸ்டிஸ் கட்சியின் யோக்கியதையும் நாணையமாய் வெளியாக வேண்டுமானால் கம்பளி போட்டு எல்லோரும் உட்கார்ந்து ஒரு பொது நியாயாதிபதியை வைத்து இருவரும் பேசுவோம். ஜஸ்டிஸ் கட்சியின் அக்கிரமங்களையும், நாணையத் தவறுதல்களை நீங்கள் சொல்லுங்கள். காங்கிரஸ் பார்ப்பனர் அக்கிரமங்களை, மோசங்களை, நாணையத் தவறுதல்களை நானும் சொல்லுகிறேன். யார் சொல்லுவது சரி யென்று முடிவு செய்யட்டும். இந்த நாட்டுப் பார்ப்பனர்களுடையவும், பார்ப்பனீயத்தினுடையவும், காங்கிரசினுடையவும், அரசியலினுடையவும், தேசாபிமானத்தினுடையவும், 30, 40 வருஷத்திய வண்டவாளமும், கொடி வழிப்பட்டியும் என்னிடமிருக்கிறதேயொழிய நான் வெறும் ஆள் மாத்திரம் தானென்று கருதி கூப்பாடு போட்டு மிரட்டியோட்டி விடலாமென்று நினைத்து ஏமாந்து போகாதீர்கள்.

நான் மொட்டை மரம் என்னை மிரட்டுவதற்கு உங்களிடம் சரக்குக் கிடையாது. உத்தியோகமோ, பணமோ, வயிற்றுச் சோற்றுக்கு வழியோ, ஒரு பெருமையோ, கவுரவமோ எதிர்பார்த்துப் பொதுச் சேவையில் இறங்கவில்லை. 6,7 தடவை ஜயில் பார்த்தாய் விட்டது. சிவில், கிரிமினல் இரண்டும் பார்த்தாய்விட்டது. பார்ப்பனர்கள் தொல்லைகளையும் அவர்களால் கூடிய மட்டிலும் செய்து பார்த்தாய் விட்டதை அனுபவித்துமாய்விட்டது. காடு வா வா என்கிறது. வீடு போ போ என்கின்றது. நான் செத்தால் எனக்காக அழுபவர்கள் கூட யாருமில்லை. என்னால் காப்பாற்றப் பட வேண்டியவர்களும் யாருமில்லை. நான் ஒற்றையாள், "நின்ற நாளைக்கு நெடும் சுவர், விழுந்தால் குட்டிச் சுவர்" முழுகிப் போவது ஒன்றுமில்லை.

எலக்ஷன் முடிந்த எட்டாம் நாள் நான் அரசாங்க விருந்தாளியாய் போகப் போகிறேன்.

காங்கிரஸ்காரர் கேள்வி: அப்படியானால் நீங்கள் ஏன் காங்கிரசில் சேரக்கூடாது?

ஈ.வெ.ரா: சேருவதற்குச் சமயம் பார்த்துக் கொண்டுதானிருக்கிறேன். இந்தப் பம்பாய் காங்கிரசில் தோழர் காந்தி அவர்கள் விலகி போய்விடுவதாகச் சொல்லுகிறாராம்.

அந்தப்படி அவர் விலகி விடுவாரானாலும் எனது திட்டங்களை ஜஸ்டிஸ் கக்ஷி ஒப்புக்கொள்ளவில்லையானாலும் நான் காங்கிரசில் சேர்ந்து எனது திட்டத்தை நடத்த முயற்சிக்க உத்தேசித்திருக்கிறேன்.

இனியும் கேட்கலாம்

இன்று 8 மணிக்குக் கூட்டத்தை முடித்துக்கொண்டு வருவதாக ஒரு பெரிய விருந்துக்கு ஒப்புக் கொண்டிருக்கிறேன. மணி 8 லீ ஆகிவிட்டது. இனியும் கேள்வியிருந்தால் கேட்கலாம். இன்னும் 15 நிமிஷம் இங்கு இருக்க ஆ÷க்ஷபணையில்லையென்று சொல்லிச் சிறிது நேரம் சும்மா நின்று கொண்டிருந்தார். யாரும் எவ்வித கேள்வியும் இல்லாததால் கூட்டத்தை முடித்து விடுகிறேன் என்று சொன்னார்.

மறுநாள் காங்கிரசில் ஒரு கூட்டம் கூட்டப்படுமென்று ஒருவர் சொன்னார். அதற்குத் தோழர் ஈ.வெ.ரா. யாவரும் அங்கு போகலாமென்றும் அங்கு ஒரு கலாட்டாவும், குழப்பமும், கேள்வி கேட்பதும் என்பது கூட சு.ம.காரர்கள் செய்யாமல் இருக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டு கூட்டத்தை முடித்ததாகச் சொல்லிவிட்டு விருந்துக்குப் புறப்பட்டார். காந்திக்கு ஜே என்று ஒருவர் கூப்பாடு போட்டார். ஈ.வெ.ராமசாமிக்கு ஜே என்று ஒரு கூட்டம் கூப்பாடு போட்டது. தோழர் ஈ.வெ.ரா. அவர்கள் "காந்திக்கு மாத்திரம் ஜே போட்டால் போதும். அவர் நிலை இன்று பயணம் சொல்லிக் கொள்வதில் இருப்பதால் அவருக்குத்தான் மரியாதை செய்ய வேண்டும். நான் இன்னம் கொஞ்ச நாளைக்கு இருக்கிறவன் ஆதலால் எனக்கு வேண்டியதில்லை" என்று சொல்லி வண்டியேறினார்.

(குறிப்பு: கோவை டவுன்ஹால் மைதானத்தில் 12.10.1934இல் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தலைமையேற்று "சட்டசபைத் தேர்தல்" என்ற தலைப்பில் ஆற்றிய சொற்பொழிவு.

பகுத்தறிவு சொற்பொழிவு 21.10.1934)

Pin It