1. தாங்கள் சிறை சென்ற "தியாகத்"தைப் பற்றி "ஏ" வகுப்புக் கைதியாகப் போடப்பட வேண்டுமென்று கேட்டுக் கொண்டதும், பிறகு அதிலும் பிறரைவிட அதிக வசதிகள் வேண்டுமென்று கேட்டு வாங்கிக் கொண்டதும், பிறகு ஜஸ்டிஸ் கட்சியாரைக் கொண்டு சிபார்சு செய்து ஆஸ்பத்திரிக்கு வந்ததும், பிறகு அதை விட்டு குறித்த காலத்திற்கு முந்தி விடுதலையாவதற்கு ஜஸ்டிஸ் கட்சியார் சிபார்சு செய்ததுமான விஷயங்கள் இருக்கும்போது, ஜஸ்டிஸ் கட்சியைத் தூற்றுவதும் "தியாகம்" என்று சொல்லிக் கொள்வதும், யோக்யமான செயலாகுமா?

2. பெண்களில் ஒரு கூட்டத்தாராகிய தேவதாசிகளை கோவிலில் ஆடவிட்டால்தான் இந்து மதம் நிலைக்குமென்று சொல்லி பெண் சமூகத்தை இழிவுபடுத்திய தங்கட்கு பெண்களுடைய ஓட்டுகளைக் கேட்க வெட்கமில்லையா?periyar 4783. ஜஸ்டிஸ் கட்சியை "வகுப்புவாதக்" கட்சியென்று கூறும் தாங்கள், உங்களுடைய இனத்தார்களாகிய பிராமணர்களின் வீடுகளில் 100க்கு 99ல் "To let for Brahmins only" ("பிராமணர்களுக்கு மட்டும் வாடகைக்கு விடப்படும்") என்று போர்டுகள் போடப்பட்டிருப்பதற்கு என்ன காரணம் சொல்லுகிறீர்கள்?

4. "வகுப்பு வாதக் கட்சி" என்று நீங்கள் கூறும் ஜஸ்டிஸ் கட்சியின் பிரமுகர்களால் நடத்தப்படும் பச்சையப்பன் காலேஜ், தொண்டை மண்டலம் ஹைஸ்கூல் முதலிய பள்ளிக்கூடங்களிலுள்ள உபாத்தியாயர் களில் 100க்கு சுமார் 65 பேருக்கு மேல் பிராம்மணராயிருக்க, வகுப்புவாதமே கடுகளவும் இல்லாததாக வேஷம் போடும் தங்கள் இனத்தாரால் (பிராம்மணரால்) நடத்தப்படும் மயிலாப்பூர் P.S. ஹைஸ்கூல், திருவல்லிக்கேணி ஹிந்து ஹைஸ்கூல் (Hindu High School) முதலிய பள்ளிகளில் 100க்கு 2 பேர் கூட பிராம்மணரல்லாத உபாத்தியாயர்கள் இல்லாதிருப்பதற்குக் காரணமென்ன?

5. இந்திய சட்ட சபையில் மொத்த அங்கத்தினர்கள் 145, இதில் 40 பேர் சர்க்காரால் (நாமினேஷன்) நியமிக்கப்படும் சர்க்கார் "தாஸர்கள்", 9 பேர் ஐரோப்பியர்கள், 7 பேர் நிலச் சுவான்தார்கள், 30 பேர் முஸ்லீம்கள்; 4 பேர் வர்த்தகத் தொகுதியைச் சேர்ந்தவர்கள்; 2 பேர் சீக்கியர்கள் ஆக மொத்தம் 92 போக பாக்கி 53. இதில் காங்கிரஸ்காரர்கள் எத்தனை பேர் வர முடியும்? அப்படியே 53ம் வந்தாலும் 92 பேருக்கு எதிரிடையாக எதைச் சாதிக்க முடியும் என்பதை விளக்க முடியுமா?

6. அப்படியே ஒரு வேளை தங்களுடைய "பேச்சு வன்மையால்" இதர 144 பேரையும் தங்கள் கொள்கைக்குத் திருப்ப முடிந்தாலும், வைசிராயினுடைய (Certification) சர்டிபிகேஷன் அதிகாரம் இருக்கும் வரையில் தங்களால் என்ன செய்ய முடியும்.

7. பெண்கள் உரிமை, தீண்டாமை ஒழித்தல் முதலிய சகல சமுதாய சீர்திருத்தத் துறைகளிலும், விரோதமான கொள்கையைக் கொண்ட தங்களையும், தங்களுடைய கட்சிக்காரர்களையும் சட்டசபைக்கு அனுப்புவதால் ஜன சமூகத்திற்கு என்ன பிரயோஜனமிருக்கிறது?

8. சென்ற சட்ட மறுப்பு சமயத்தில் திரு. பக்தவத்சல முதலியார், திரு. முத்துரங்க முதலியார் போன்ற பல பிரமுகர்களும், இன்னும் பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும் போலீசாரால் எவ்வளவோ அடிபட்டிருக்க திரு. பாஷ்யமய்யங்கார் அவர்கள் அடிபட்டதற்கு மாத்திரம் சென்னை சட்ட சபையில் ஒத்திவைக்கும் தீர்மானம்; இந்திய சட்டசபையில் கேள்விகள்; பார்லிமெண்டில் கேள்வி; இவ்வளவும் போதாமல், திரு. காந்தியவர்கள் இர்வினுக்கு எழுதிய கடிதத்திலும் இதைப் பற்றிய குறிப்பு இவ்வளவும் செய்ததிலிருந்து காங்கிரஸ் ஸ்தாபனமானது பார்ப்பனர்களுடைய கோட்டை என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்?

9. திரு. காந்தியவர்கள் வந்தபோது மாத்திரம் ஹரிஜன சேவை என்ற பெயரில் சேரியைக் கூட்டியதும், சேரிக் குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்து முழுக்காட்டினதுமான நாடகமெல்லாம் "ஹரிஜனங்களின்" பெயரால் பணம் திரட்டியதோடு சரியாய்ப் போய்விட்டதா? அந்தப் பணம் என்னவாயிற்று?

10. சோம்பேறிப் பிச்சைக்காரர்கள் தங்களுடைய வயிற்றுப் பிழைப்பிற்காக திருப்பதி "வெங்கடாசலபதியையும்," "பழனி முருகனையும்" சொல்லி பணம் கேட்பது மாதிரி தங்களுக்கு சொந்த யோக்கியதை இருந்தால் "மகாத்மா"வின் பெயரையும் "காங்கிரஸ்" பெயரையும் சொல்லி ஓட்டுக் கேட்பீர்களா?

11. சென்ற சட்டமறுப்பில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் அடிபட்டிருக்கும் போது, தாங்களும், திரு. ராஜகோபாலாச்சாரியார் அவர்களும் மாத்திரம் வாடகை மோட்டாரில் சொகுசாகப் போய் துண்டு நோட்டீஸ் கொடுத்து கைதியாகி விட்டு, இப்போது அடிபட்ட பார்ப்பனரல்லாத தொண்டர்கள் பெயரால் ஓட்டுக் கேட்டது யோக்கியமான செயலாகுமா?

12. காங்கிரஸ் பெயரினால் ஒரு பெண்ணைக்கூட தேர்தலுக்கு நிறுத்தாதது மன்றி சுயேச்சையாக நிற்கிறேன் என்று சொன்ன தேசீயவாதியான ஸ்ரீமதி ராதாபாய் சுப்பராயன் அவர்களை போட்டியின்றி நிற்பதற்கு இடமும் கொடாமல் செய்த காங்கிரசின் பிரதிநிதியான தங்களுக்குப் பெண்மக்கள் ஓட்டுக் கொடுப்பார்கள் என்று நீங்கள் கனவிலும் கருத முடியுமா?

13. ஜஸ்டிஸ் கட்சியில் பிராமணர் உட்பட எல்லோரும் சேர உரிமையுண்டு என்று சமீபத்தில் நடந்த மகாநாட்டில் ஏகமனதாக நிறைவேற்றி, அதன்படி விதிகளைத் திருத்தம் செய்த பிறகும் கூட வகுப்புவாதக் கட்சியான ஜஸ்டிஸ் கட்சிக்கு ஓட்டுக் கொடுக்காதீர்கள் என்று தாங்களும், திரு. ராஜகோபாலாச்சாரியார் அவர்களும் பிற பிரசாரகர்களும் சொல்லி வருவதன் காரணம், உங்களுடைய அறியாமையா? அல்லது வேண்டுமென்றே செய்யும் சூழ்ச்சியா? அல்லது பார்ப்பனத் தந்திரமா?

14. காங்கிரஸ் தனது நிர்மாணத் திட்டங்களாகிய கீழ்க்கண்ட வேலைகளில் இது வரை எது எதில் வெற்றி பெற்றிருக்கிறது என்பது தயவு செய்து சொல்வீர்களா?

a) கள்ளுக்கடை மறியல்.

b) அன்னியத் துணிக்கடை மறியல்.

c) நீல் சிலை சத்தியாக்கிரகம்.

d) காலேஜ்களை அடைத்து விடுதல்.

e) வக்கீல்கள் கோர்ட்டுக்குப் போவதை நிறுத்துதல்.

f) உப்பு சத்தியாக்கிரகம்.

g) தக்ளியினாலேயே நூல் நூற்றுக் கொண்டிருத்தல்.

h) சட்டசபைகளில் சென்று "சிங்கத்தை அதன் குகையில் எதிர்த்தல்".

i) "ஹரிஜனங்களுக்கு"க் கோவில்களைத் திறந்து விடுதல்.

j) வீட்டுக்கு வீடு ராட்டினத்தில் நூல் நூற்கும்படி செய்தல்.

k) சைமன் கமிஷனைப் பகிஷ்கரித்தல்.

l) "Census" ஜன கணிதம் கொடுக்கக் கூடாது என்று 1931ல் பிரசாரம் செய்தது.

முதலியவைகளில் எதைச் சாதித்தது?.

இப்படிக்கு,

சென்னை அஸெம்ப்ளி ஓட்டர்கள்.

(பகுத்தறிவு கட்டுரை 28.10.1934)

Pin It