சமூகச் செயல்பாட்டாளர் நரேந்திர தபோல்கர் படுகொலை தொடர்பாகப் பத்தாண்டுகளாக நடைபெற்ற வழக்கில், இருவருக்கு (மட்டும்!) ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றம். தீர்ப்பு எழுதிய நீதிபதி பிரபாகர் ஜாதவ், “இந்த இருவர் தங்களுக்கு இடப்பட்ட வேலையைச் செய்து முடித்தவர்கள். ஆனால், அந்தத் திட்டத்தைத் தீட்டியது வேறு யாரோ(வாக இருக்கும்)” என்று குறிப்பிட்டிருந்தார். கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா என்ன?

மூடநம்பிக்கைகளுக்கு எதிரான விழிப்புணர்வைப் பரப்பிவந்தவர் தபோல்கர். மூடநம்பிக்கைகள், கட்டுக்கதைகள் போன்றவற்றில் இருந்தெல்லாம் சமூகம் விடுபட்டுவிடக் கூடாது என்று நினைப்பவர்கள்தானே தபோல்கரைக் குறிவைத்திருக்க வேண்டும்? அந்தச் சூத்ரதாரிகளுக்கு ஏன் தண்டனை கிடைக்கவில்லை?

அடுத்தடுத்துப் படுகொலைகள்: தபோல்கரைத் தனது விரோதி என்று வெளிப்படையாக எச்சரித்தவர், வீரேந்திரசிங் சரத்சந்திர தவாதே. இந்நிலையில்தான் 2013 ஆகஸ்ட் 20 அன்று புணே நகரில் காலை நடைப்பயிற்சியின்போது மிகவும் குறுகிய இடைவெளியில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார் தபோல்கர்.

ஆனால், தவாதே உள்ளிட்ட மூவர் போதுமான சாட்சியங்கள் இல்லை என்று விடுவிக்கப்பட்டுள்ளனர். அப்படியானால், யார் சொல்லி அல்லது யார் தூண்டுதலின்பேரில் அந்த இரண்டு பேர் தபோல்கரைச் சுட்டுக் கொன்றனர் என்ற கேள்விக்கு விடை இல்லையா?

‘தபோல்கருக்கு ஆன அதே கதிதான் உனக்கும்’ என்று அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட பொதுவுடைமைச் சிந்தனையாளர் கோவிந்த் பன்சாரே, பிப்ரவரி 16, 2015இல் அதேபோல் நடைப்பயிற்சியில் இருக்கும்போது, மிக அருகில் இரு சக்கர வாகனத்தில் வந்த கொலையாளிகளால் சுடப்பட்டு, மருத்துவமனை சிகிச்சை பலனின்றி பிப்ரவரி 20 அன்று மரணம் அடைந்தார். இந்தப் படுகொலைகளைக் கண்டித்த எம்.எம்.கல்புர்கி, கௌரி லங்கேஷ் ஆகியோரும் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்தக் குற்றச் செயல்கள் அரங்கேற்றப்பட்ட விதம் மட்டுமல்ல, பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள் உள்ளிட்ட பல அம்சங்கள் ஒன்றுபோல் அமைந்திருப்பது அப்போதே அம்பலமானது. தபோல்கர் வழக்கில் மட்டும் தீர்ப்பு வந்துள்ளது, மற்றவை விசாரணையில் உள்ளன.

யார் குற்றம்? - தபோல்கர் கொலை வழக்கு விசாரணையின் ஒரு கட்டத்தில், தபோல்கர் இந்து மத விரோதி என்று முன்வைக்கப்பட்ட வாதத்தை அதிர்ச்சியோடு குறிப்பிடுகிறது ‘தி இந்து’ தலையங்கம். மூடநம்பிக்கை ஒழிப்பு மசோதா மகாராஷ்டிர சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட அவர் காரணமாக இருந்தார் என்பதுதான் வலதுசாரி இந்துத்துவ வெறிக் கும்பலின் வெஞ்சினம். ‘சனாதன ஸம்ஸ்தான்’ என்கிற தீவிர வலதுசாரி அமைப்புதான் இந்தக் கைவரிசைக்குக் காரணம் என்று அப்போதே அடையாளப்படுத்தப்பட்டது. அப்படியிருக்க, எப்படி குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் மூவர் மீது போதிய சாட்சியங்கள் இல்லாமல் போயின?

சத்ரபதி சிவாஜி இஸ்லாமிய வெறுப்பாளர் அல்ல; மதநல்லிணக்கம் பாராட்டியவர் என்ற விஷயத்தை வரலாற்றுத் தரவுகளோடு புத்தகமாக எழுதி வெளியிட்டவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினராக இருந்த தொழிற்சங்கத் தலைவர் கோவிந்த் பன்சாரே. அது மட்டுமல்ல, கோலாப்பூர் பல்கலைக்கழகக் கூட்டம் ஒன்றில், காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்ஸேவுக்குச் சிலை வைக்கத் துடிக்கும் முயற்சிகளுக்கு எதிராக முழங்கியவர். அவரைத் தீர்த்துக்கட்ட வேண்டும் என்ற குரல் அங்கேயே எழுப்பப்பட்டது.

நரேந்திர தபோல்கர் கொலை வழக்கில், சம்பந்தப்பட்ட அனைவரையும் முழுமையாக விசாரணைக்கு உள்படுத்தி, உடனடியாகத் தண்டிக்காததன் விளைவாகவே அடுத்த நான்கு ஆண்டுகளில் நான்கு முக்கிய ஆளுமைகள் கொல்லப்பட்ட அவலம் நேர்ந்தது.

இந்தக் கொலைகளுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் வெறித்தனமான விஷக் கருத்துகள் தொடர்ந்து பதிவுசெய்யப்பட்டு வந்ததும் கவனிக்கத்தக்கது. கல்புர்கிக்கு வலதுசாரி மத வெறியர்களிடமிருந்து மிரட்டல்கள் இருந்துவந்தது வெளிப்படையானது. கௌரி லங்கேஷை எதிர்த்து மத வெறியர்கள் சமூக ஊடகங்களில் மிக மோசமாக எழுதிக்கொண்டிருந்ததும் வெளிப்படையானது.

கௌரி லங்கேஷ் கொல்லப்பட்ட செய்தி வந்த அடுத்த சில நிமிடங்களில் வலதுசாரி மதவெறி ஆள்கள் உற்சாகம் பொங்க வரவேற்றுக் கொண்டாடினர். கொலைகாரனைப் பாராட்டியும், பட்டியல் இன்னும் முடியவில்லை - படுகொலைகள் தொடர வேண்டும் என்றும் சமூக ஊடகங்களில் பதிவிட்டுக் கொண்டாடி மகிழ்ந்தது ஒரு கூட்டம்.

“என்னை மகனே என்று அன்போடு அழைத்த தாயைப் பறிகொடுத்து விட்டேனே” என்று டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் இயக்கத் தலைவராக இருந்த கன்னையா குமார், அப்போது வருத்தத்தோடு செய்திருந்த பதிவுக்கு எதிராக வந்து விழுந்த பதில்களில் ஒன்றைப் பாருங்கள்: “கவலைப்படாதே, உன்னைத் தத்தெடுத்துக்கொண்ட தாய் சென்ற இடத்துக்கே நீயும் கூடிய விரைவில் கொண்டுசேர்க்கப்படுவாய்.”

நம்பிக்கையூட்டும் குரல்கள்: இந்த அராஜகங்களுக்கு மத்தியில், ஜனநாயகம் பற்றிய ஆகப்பெரிய நம்பிக்கை அளிக்கும் நிகழ்ச்சிகளும் நடப்பதுதான் முக்கியமானது. 2015 பிப்ரவரியில் கோவிந்த் பன்சாரேயின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான உழைப்பாளி மக்கள், தூய்மைப் பணியாளர்கள் தங்களது உரிமைக் காவலர் மரித்த வேதனையோடும், மதவெறி சக்திகளுக்கு எதிரான ஆவேசத்தோடும் திரண்டிருந்தனர்.

‘நாங்கள் தபோல்கர்கள், நாங்கள் பன்சாரேக்கள்’ என்று உரத்த முழக்கம் எழுப்பினர். 2017 செப் 12 அன்று பெங்களூருவில் கௌரி லங்கேஷுக்கான இரங்கல் கூட்டம் நடைபெற்றபோது திரண்ட 25 ஆயிரம் பேரும், ‘நான் கௌரி’ என்று முழக்கம் எழுப்பியது இப்போது நினைத்துப் பார்க்கும்போதும் சிலிர்க்க வைப்பது.

தன்னைப் பற்றி இணையத்தில் அவதூறு செய்த இளைஞர் ஒருவருக்கு, கௌரி லங்கேஷ் அனுப்பிய பதில்: “மகனே, நீ தவறான வழிகாட்டுதலை ஏற்றுக்கொண்டிருக்கிறாய். உன் பாதையை எங்கோ தவற விட்டுவிட்டாய்... என்னைக் காண நேரில் வாயேன்... ஒரு கோப்பை காபி அருந்தியபடியே நாம் விவாதிக்கலாம்!” ஆனால், அவரைச் சுட்டுக்கொன்றவர்களின் சிந்தனையோட்டம் எப்படியானது?

இந்தப் படுகொலைகளுக்குக் காரணமாக இருந்தவர்கள் எல்லோரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, உரிய தண்டனைகளுக்கு உள்படுத்தப்பட வேண்டியது இந்தக் காலத்தின் முக்கியமான தேவை. நமது அரசமைப்புச் சட்டம் உயர்த்திப் பிடிக்கும் விழுமியங்களில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள முடியாது என்று விடுக்கும் செய்தியாக அது இருக்கும்!

விடுதலை இராசேந்திரன்

Pin It