அண்மையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவின்கீழ் மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி அம்மாநிலத்தின் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இத்தீர்மானத்தை அவையில் இருந்த காங்கிரஸ் தவிர மற்ற அரசியல் கட்சிகள் ஆதரித்துள்ளன. 2019ஆம் ஆண்டு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு நீக்கியது.

இது குறித்துத் தந்தை பெரியார் கூறியதை நினைவுகூர்வது இங்குப் பொருத்தமாக இருக்கும். “காஷ்மீரைப் பற்றி முடிவு செய்யும் விஷயத்தை காஷ்மீர் மக்களுக்கே விட்டுவிட வேண்டும். காஷ்மீரத்திலே புகுந்திருக்கும் இந்தியாவும் வெளியேற வேண்டும். பாகிஸ்தானும் வெளியேற வேண்டும். இதுதான் காஷ்மீர் மக்களுக்கு நீதி செய்வதாகும்”.

தந்தை பெரியாரின் கருத்தை மேற்கோள் காட்டியே நாடாளுமனறத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம். எம். அப்துல்லா உரையாற்றினார். ஆனால் தந்தை பெரியாரின் மேற்கோளை அவைக்குறிப்பிலிருந்து நீக்கினார் அவைத்தலைவர். பின்னர் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, தந்தை பெரியார் பேசியது இந்தியாவின் தேசிய இனங்களுக்கான சுயநிர்ணய உரிமையே என்று குறிப்பிட்டுப் பேசினார். காங்கிரசைச் சேர்ந்த கே.சி. வேணுகோபாலும் பெரியாரின் கருத்தை மேற்கோள் காட்டியதில் தவறு இல்லை என்று பேசினார்.

பாஜக ஒன்றிய அரசில் பொறுப்பேற்றதில் இருந்தே கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராகவும், மாநிலங்களின் உரிமைகளுக்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறது. ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே தேர்தல் என்று இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு விரோதமாகச் செயல்பட்டு வருகிறது.

இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு ஏற்ற வகையில் அரசியலமைப்பு திருத்தப்பட வேண்டும். இந்தி மட்டுமே அலுவல் மொழி, ஆளுநர்களுக்கான அதிகாரம், பொதுப் பட்டியல் என இந்தியாவில் தேசிய இனங்களின் உரிமைக்கு எதிரான அரசியலமைப்பின் அத்தனை பிரிவுகளும் நீக்கப்பட வேண்டும். அப்போதுதான் இந்தியா இந்தியாவாக இருக்கும். இதனைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்துவதே நமது கோரிக்கைக்கு வலுச்சேர்ப்பதாக இருக்கும்.

- கருஞ்சட்டைத் தமிழர்