பல்கலைக்கழகங்களை தமிழ்நாடு அரசிடம் இருந்து விடுவித்து தனது நேரடிக் கண்காணிப்பில் கொண்டுவரப் போகிறது ஒன்றிய பாஜக ஆட்சி. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, அரசியல்ரீதியாகவும், சட்டரீதியாகவும் எதிர்ப்போம் என்று அறிவித்துள்ளதைப் பாராட்டி வரவேற்கிறோம்.
பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை தேர்வு செய்யும் குழுவில் மாநில அரசின் பிரதிநிதிகளுக்கு இடமில்லை என்று பல்கலைக்கழக மானியக் குழு ஒரு சட்டத்தைக் கொண்டு வரப் போவதாக அறிவித்துள்ளது. ஆளுநரின் பிரதிநிதி, மானியக் குழுவின் பிரதிநிதி, பல்கலைக்கழகப் பிரதிநிதி என்ற மூவர் மட்டுமே துணைவேந்தர்களைத் தேர்ந்தெடுப்பார்களாம். கல்வித்துறை சாராதோரும் துணைவேந்தர்களாகலாம் என்றும் புதிய சட்டம் கூறுகிறது. இதற்கான மசோதா இப்போது வெளியிடப்பட்டுள்ளது.
21 பக்கங்கள் கொண்ட சட்டத்துக்கான வரைவு அறிக்கை ஒன்றை கல்வித்துறை அமைச்சகத்திடம் பல்கலைக்கழக மானியக்குழு அளித்துள்ளது. இந்தப் புதியக் கொள்கையை ஏற்காத பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மாநிலக்குழுவின் வரம்பில் இருந்து நீக்கப்பட்டு நிதி வழங்குவது நிறுத்தப்படும் என்றும் இந்த நிறுவனங்கள் தரும் பட்டங்கள் செல்லாது என்று அறிவிக்கப்படும் என்றும் இந்த வரைவுத் திட்டம் கூறுகிறது.
ஏற்கனவே மும்மொழி கொள்கையை அமல்படுத்தாத காரணத்தால் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ரூ.2152 கோடி நிதியை விடுவிக்காமல் முடக்கி விட்டார்கள்.
கல்விப் பொதுப் பட்டியலில் இருப்பதால் மாநில அரசைக் கலந்தாலோசிக்க வேண்டிய தேவை இல்லை என்ற இறுமாப்போடு ஒன்றிய ஆட்சி மிரட்டுகிறது. தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி வந்த பிறகு பல்கலைக்கழக நிர்வாகத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதில் தீவிரம் காட்டுகிறார், ஏற்கனவே தமிழ்நாட்டில் ஆறு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் இல்லை.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் கிரிமினல் குற்றச்சாட்டுக்கு உள்ளான துணைவேந்தரை அவர் ஆர்.எஸ்.எஸ்.காரர் என்பதால், ஆளுநர் தனது அதிகாரத்தைக் கொண்டு பதவியில் நீடிக்க அனுமதித்து வருகிறார். துணை வேந்தர்களை தேர்வு செய்யும் குழுவில் பல்கலை மானியக் குழுவின் பிரதிநிதி கட்டாயம் இடம்பெற வேண்டும் என்கிறார்.
தமிழ்நாட்டில் இயங்கும் பல்கலைக்கழகங்கள் அவை தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே தன்னாட்சியுடன் செயல்பட்டுவருகின்றன. அதன் காரணமாகவே ஒவ்வொரு பல்கலைக்கழகத்துக்கும் தனித்தனியான விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அதை சீர்குலைக்கிறது ஒன்றிய ஆட்சி. ஒன்றிய ஆட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழக மானியக் குழுவின் பிரதிநிதி, மாநிலப் பல்கலைக்கழகத்துக்கான துணை வேந்தர்களை தேர்வு செய்வதில் ஏன் இடம்பெற வேண்டும்?
ஏற்கனவே மன்மோகன்சிங் பிரதமராக இருந்த போது 2010இல் மானியக் குழுவின் பிரதிநிதி இடம்பெற வேண்டும் என்று திருத்தம் கொண்டுவரப்பட்டு, அதற்கு எதிர்ப்பு எழுந்ததால் 2013ஆம் ஆண்டில் அதே மன்மோகன்சிங் பிரதமராக இருந்த போதே நீக்கம் செய்யப்பட்டுவிட்டது. 2018இல் மோடி ஆட்சியில் பல்கலைக்கழக விதிமுறைகளை மானியக்குழு மாற்றியமைத்த பிறகும் கூட, தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களில் தனித்தனியான வழிமுறைகளே பின்பற்றப்பட்டு வந்தன. பல்கலைக்கழக மானியக் குழுவின் பிரதிநிதி இடம் பெறவில்லை.
2010ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானியக் குழு துணைவேந்தர்களாக நியமிக்கப்படுவோர், பேராசிரியர்களாக இருக்க வேண்டும் என்று விதியை உருவாக்கினாலும் தமிழ்நாட்டில் அது பின்பற்றப்படவில்லை. மதுரை காமராசர் மற்றும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் அல்லாதவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பல்கலைக்கழக மானியக் குழு நெறிமுறைகளை உருவாக்கினாலும், மாநில அரசின் முடிவே இறுதியானது என்பதற்கு இவை சான்றுகளாகும்.
ஜெயலலிதா முதல்வராக இருந்த போது பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநர்கள் இருக்க வேண்டும் என்ற மரபை மாற்றி முதல்வரை துணைவேந்தராகும் மசோதாவை தாக்கல் செய்தது. 1994இல் ஆளுநராக இருந்த சென்னா ரெட்டியை திருப்பி அனுப்ப வேண்டும் என்று ஆளுநர் உரையைத் தயாரித்து அதே சென்னா ரெட்டியைக் கொண்டு படிக்க வைத்தார். சட்டக் கடமையை ஏற்று சென்னா ரெட்டியும் உரையைப் படித்தார் என்பது வரலாறு.
துணைவேந்தரை தேர்வு செய்யும் குழுவில் மானியக் குழு உருவாக்கிய விதிமுறைகள் (73(2)) தமிழ்நாடு அரசுக்கு பொருந்தாது என்று திராவிட மாடல் ஆட்சியின் சார்பில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்ததோடு அரசாணையும் (எண் 5) வெளியிடப்பட்டது. இப்போது ஒன்றிய ஆட்சி நெறிமுறைகளை கட்டாயப்படுத்தித் திணிக்கிறது.
துணைவேந்தர் நியமனம் தொடர்பான விதிமுறைகளாக இப்பிரச்சனையை சுருக்கிப் பார்க்க முடியாது. உயர்கல்வியில் இந்தியாவுக்கே வழிகாட்டும் மாநிலம் தமிழ்நாடு. மாநிலங்களிடமிருந்து பல்கலைக்கழகங்களை ஒன்றிய ஆட்சி பறித்தெடுக்கும் ஆபத்தான முயற்சி.
காங்கிரஸ் ஆட்சிக் காலங்களில் பல்கலைக்கழக மானியக்குழு, கல்லூரியில் மாணவர், ஆசிரியர் நலனுக்கு ஏராளமான திட்டங்களையும், நிதியுதவிகளையும் வழங்கி வந்தது. இப்போது இத்திட்டங்கள், நிதியுதவிகள் பா.ஜ.க, அரசால் கைவிடப்பட்டுவிட்டன. குறைந்தபட்ச நிதியைக் கூட தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்குத் தரவில்லை. இந்த நிலையில் தமிழ்நாட்டில் சமூகநீதி அடிப்படையில் கட்டி வளர்க்கப்பட்ட பல்கலைக்கழகங்களை ஒன்றிய ஆட்சி தனது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும்.
- விடுதலை இராசேந்திரன்