தமிழ்நாட்டின் வளர்ச்சிக் குறித்து சட்ட சபையில் ஆளுநர் உரையில் இடம்பெற்ற முக்கியத் தகவல்களின் தொகுப்பு இது. ஆளுநர் உரையைப் படிக்க மறுத்ததால் பேரவைத் தலைவர் உரையைப் படித்தார்.
பொருளாதாரத்தில் தமிழ்நாடு முன்னோடி
நாட்டின் 2வது மிகப்பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு இன்று திகழ்கிறது. வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது. முந்தைய ஆண்டுகளில் தேசிய ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.4 சதவிகிதமாக இருந்த தமிழ்நாட்டின் பங்கு, கடந்த 4 ஆண்டுகளில் 9.21 சதவிகிதமாக உயர்ந்துள்ளதே திராவிட இயக்க கொள்கைக்குக் கிடைத்த வெற்றி. இதனை முன்னேற்றிடும் வகையில் எதிர்வரும் 2030ம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டினை 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்துவதை தமிழ்நாடு தனது இலக்காக கொண்டுள்ளது. மருத்துவம், கல்வி மற்றும் சமூகநலனையும் மேம்படுத்துவதிலும் நாட்டிற்கே முன்னோடியாகத் தமிழ்நாடு விளங்குகிறது.தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர்களின் வழியில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்கால தலைமுறைகளின் வாழ்வை செம்மையாக வடிவமைத்திடுவதற்காக பல முன்னோடி திட்டங்களை அறிமுகப்படித்தியுள்ளார். சிறந்த திட்டங்களின் ஒன்றான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மூலம் 1.15 கோடி குடும்பங்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கிவருகிறது. மகளிர் விடியல் பயணத் திட்டத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் தமிழ்நாடு நாட்டிற்கே முன்னோடியாக திகழ்கிறது.
கல்விக்கு நிதி மறுக்கும் ஒன்றிய ஆட்சி
தரமான கல்வியை வழங்குவதில் உறுதியுடன் செயல்படும் தமிழ்நாடு அரசுக்கு ஆண்டில் எந்தவொரு நிதியையும் ஒன்றிய அரசு விடுவிக்கவில்லை. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணம், விடுதி மற்றும் போக்குவரத்துக் கட்டணம் உள்ளிட்ட மொத்த கல்விச் செலவினையும் அரசே ஏற்றுக்கொண்டுள்ளது. கல்வியாண்டுகளில், கடந்த 4 ஆண்டுகளில் இத்திட்டத்தின் கீழ் ரூ. 1,165 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 35,530 மாணவர்கள் பயனடைந்துள்ளனர். புதுமைப் பெண் திட்டம் எனும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு அவர்களின் இளங்கலைக் கல்விக் காலம் முழுவதும் மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. அதனைதொடர்ந்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ்வழியில் 6 ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்புவரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் உயர்கல்வி பயிலும் காலத்தில் மாதந்தோறும் 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்குவதற்கான தமிழ்ப் புதல்வன் திட்டத்தையும் கடந்த ஆண்டு தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், நடப்புக் கல்வியாண்டில் மட்டும் 3.52 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
நான் முதல்வன் திட்டமானது மாணவர்களைத் தொழில்சார்ந்த திறன் கொண்டவர்களாக மேம்படுத்தி, இந்தியாவின் திறன்மிக்க இளைஞர்களின் தலைநகரமாக தமிழ்நாட்டை நிலைநிறுத்தியுள்ளது. 2023-24ம் ஆண்டில், இத்திட்டம் பல்தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கும், தொழிற்பயிற்சி நிறுவனங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு, 2,085 கல்வி நிறுவனங்களில் பயிலும் 14.68 லட்சம் மாணவர்கள் தற்போது பயன்பெற்றுள்ளனர்.
அனைவரின் வரவேற்பினையும் பெற்ற இத்திட்டத்தின் மூலம் நடத்தப்படும் வளாக வேலைவாய்ப்பு முகாம்கள் வாயிலாக, இதுவரை 2,58,597 வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். மாணவர்களுக்குத் தரமான கல்வியை வழங்குவதில் தமிழ்நாடு அரசு உறுதியுடன் செயல்பட்டு வரும் நிலையில், மாநிலத்தின் முயற்சிகளுக்கு ஒன்றிய அரசு தேவையான ஆதரவினை வழங்கவில்லை. ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டிற்கு உரிய நிதியை விடுவிக்கக் கோரி தொடர்ந்து முறையிட்டும், புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஏற்காததைக் காரணமாகக் கூறி, ஒன்றிய அரசு நடப்பு ஆண்டில் இதுவரை எந்தவொரு நிதியையும் விடுவிக்கவில்லை. ரூ.2,152 கோடி அளவில் உள்ள இந்நிலுவைத் தொகையானது, ஆசிரியர்களின் ஊதியம், பள்ளிக் கட்டடங்களைப் பராமரித்தல் மற்றும் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் கல்விக் கட்டணத்தைத் திருப்பிச் செலுத்துதல் உள்ளிட்ட பள்ளிகளின் பல்வேறு செயல்பாடுகளுக்கு மிகவும் இன்றியமையாததாகும். ஒன்றிய அரசு இந்த நிதியை வழங்காததால், தனது சொந்த நிதி ஆதாரங்களிலிருந்து மாநில அரசே இத்திட்டத்திற்கான ஒட்டுமொத்தச் செலவையும் ஏற்க வேண்டியுள்ளது. இதனால், மாநில அரசின் நிதிநிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
44லட்சம் மாணவர்கள், 2.2 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் 21,276 பணியாளர்களின் எதிர்காலம் இதில் அடங்கியுள்ளது.
தமிழ்நாடு அரசை நிதிக் குழுப் பாராட்டுகிறது.
டாக்டர் அரவிந்த் பனகாரியா தலைமையில் 16வது நிதிக்குழு தமிழ்நாடு வந்தபோது நமது கோரிக்கைகள் அனைத்தும் முன்வைக்கப்பட்டன. அவற்றில் மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வை 50 சதவீமாக அதிகரித்தல், நிதிப் பகிர்வுக்கு முற்போக்கான கணக்கீட்டு முறையை பின்பற்றுதல், மாநிலங்களின் செயல்திறனுக்கு உரிய நிதிப் பகிர்வு அளித்தல் போன்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டன. தமிழ்நாட்டின் அறிக்கை குறித்து ஆணையம் தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது.
சிறுபான்மையினர் நலன்
சிறுபான்மையினர் கல்வி நிறுவனங் களுக்கான நிரந்தரச் சான்றுகளை இணைய வழியில் எளிமையாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் சிறுபான்மை சமூகங்களின் வழிபாட்டுத் தலங்களை புனரமைத்து பாதுகாக்கும் வகையில் கணிசமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கீழடி அருங்காட்சியகம் பெரும் வரவேற்பு பெற்றதையடுத்து, ஆதிச்ச நல்லூர், சிவகளை மற்றும் கொற்கை போன்ற இடங்களில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களைக் கொண்டு திருநெல்வேலியில் உலகத்தரம் வாய்ந்த பொருநை அருங்காட்சியகம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் ராஜேந்திர சோழனின் கடல் கடந்த வெற்றிப் பயணம், அயல்நாட்டு வணிகத் தொடர்புகளை நினைவுகூரும் வகையில், கங்கை கொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு வருகிறது. கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறையையும், திருவள்ளுவர் சிலைையையும் இணைக்கும் வகையில் நாட்டில் முதன் முதலாக அமைக்கப்பட்ட கண்ணாடி இழைப் பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
காலை உணவு திட்டம் விரிவாக்கம்
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் வழியாக தமிழ்நாட்டின் பெயரை வரலாற்றின் பொன்னேடுகளில் பொறிக்கச் செய்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தற்போது கிராமப்புறங்களில் உள்ள 3,995 அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மொத்தமாக, தற்போது மாநிலம் முழுவதும் உள்ள 34,987 தொடக்கப் பள்ளிகளில் 17.53 லட்சம் பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. தனிச் செயலி உருவாக்கப்பட்டு ஆன்லைன் வழியாக திட்டத்தை அன்றாடம் கண்காணித்து, எந்தக் குறையும் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதில் கவனத்துடன் செயல்படுகிறது அரசு.
- விடுதலை இராசேந்திரன்