தேசியக் கல்விக் கொள்கையை மாநிலங்கள் மீது ஒன்றிய ஆட்சித் திணிக்கத் தொடங்கி விட்டது. அய்ந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு தேர்வுகளில் மாணவர்கள் தேர்ச்சிப் பெறாவிட்டால், அவர்களை மேல் வகுப்புக்கு அனுப்பக் கூடாது என்பது அந்தக் கல்விக் கொள்கையின் ஒரு திட்டம். தேர்ச்சி பெறாதவர்களுக்கு இரண்டு மாதத்தில் மறு தேர்வு நடத்த வேண்டும் என்றும், அதிலும் தேர்ச்சி பெறாவிட்டால் அவர்கள் தோல்வியடைந்தவர்கள் என்றும் ஒன்றிய ஆட்சி அரசாணை ஒன்றைப் பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் ‘திராவிட மாடல்’ ஆட்சி நடப்பதால், இந்த தண்டனையில் இருந்து தமிழ்நாட்டு மாணவர்கள் தப்பியுள்ளனர். தமிழ்நாடு அரசு – மாநில அரசுக்கு உட்பட்ட பள்ளிகளில் இதைச் செயல்படுத்த முடியாது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் உடனடியாகப் அறிவித்து விட்டார்.
அவசர நிலை காலத்தில் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சியில் கொண்டு வந்த சட்டத்திருத்தத்தில் இடம்பெற்றுள்ள ‘மதச்சார்பின்மை’ என்ற கொள்கையை நீக்க வேண்டும் என்று துடிக்கிறது ஒன்றிய ஆட்சி. அதே காலத்தில் கொண்டு வரப்பட்டது தான் மாநிலத்தின் கல்வி உரிமைப் பறிப்பு. ’மதச்சார்பின்மை’ திணிப்பை எதிர்ப்பவர்கள் ’கல்வி உரிமை’ப் பறிப்பை ஏன் எதிர்க்கவில்லை? மாறாக ஆதரிக்கிறார்கள். தீவிரமாகப் பயன்படுத்துகிறார்க்ள்.
அய்ந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ’கல்வித்தரம்’ பேசுவது சமூக அநீதியின் உச்சம். இட ஒதுக்கீடு கொள்கையை எதிர்த்தப் பார்ப்பனர்கள், தகுதி, திறமையை ஒழித்துவிடும் என்றார்கள். அந்த வாதம் அபத்தமானது என்று வரலாறு நிரூபித்து விட்டது. இட ஒதுக்கீடுப் பிரிவு மாணவர்கள் தான் பல்வேறு துறைகளில் சாதனைகளை குவித்து வருகிறார்கள். பொதுப்பட்டியலில் (Open Category) ‘கல்வித்தரம்’ பேசும் குடும்பத்தில் இருந்து வந்த மாணவர்களைப் பின்னுக்குத் தள்ளி முன் வரிசையில் நிற்கிறார்கள். ’உயர் ஜாதி ஏழைகளுக்கு’ தனி இட ஒதுக்கீடு கொண்டு வந்த போதே இவர்கள் பேசும் தகுதி, திறமை புதை குழிக்குப் போய்விட்டது. இட ஒதுக்கீடு சமூகத்தோடு தகுதி, திறமை சமூகம் போட்டியிட்டு வெற்றி பெற முடியாது என்பதை ஒப்புக் கொண்டுதான் உயர்ஜாதி தனி இட ஒதுக்கீடு வந்துள்ளது.
பள்ளிக்கல்வியில் படிக்கும் மாணவர்களின் தகுதி அவர்கள் தேர்வில் பெறும் ’மதிப்பெண்கள்’ தானா? பள்ளிப் பருவம் என்பது மாணவர்களின் தன்னம்பிக்கை மற்றும் கற்றலை ஊக்குவிப்பதுமே ஆகும் என்று கல்வியாளர்கள், உளவியலாளர்கள் கூறுகிறார்கள். படிப்பின் மீதான அச்சம், மதிப்பெண்கள் பற்றிய கவலை, குடும்பச்சூழல், தாழ்வு மனப்பான்மை உள்ளிட்டப் பிரச்சனைகள் மாணவர்களை சூழ்ந்திருக்கிறது. மாணவர்களை இதில் இருந்து விடுவிக்க ‘மனம்’ என்ற உளவியல் ஆலோசனைத் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
வளர் இளம் பருவத்தினரான இளைஞர்களிடையே “கூட்டுச் செயல்பாட்டு உணர்வை” உருவாக்கி “நேர்மறையான நல வாழ்வு” செயல்பாடுகளை வளர்த்தெடுக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
ஆனால் பார்ப்பனியமோ இந்த சமூகவியல் பார்வையைப் புறந்தள்ளுகிறது. மனப்பாடம், நினைவாற்றல், மதிப்பெண் மட்டுமே மாணவர்களுக்கான தகுதியாகப் பேசுகிறார்கள். வேத காலம் முதல் இதுவே அவர்களின் பார்வை. எழுத்தில் எழுதப்படாத வேதத்தை, மனப்பாடம் செய்து நினைவாற்றல் வழியாக பொருள் புரியாமலேயே ஒப்பித்தல் தான் கல்விக்கான தகுதி என்றார்கள். வேத பாடசாலைகளில் வரையறுக்கப்பட்ட அதே ’தகுதி’யைத்தான் இப்போது இந்துத்துவா ஆட்சியும் தனது கல்விக் கொள்கை என்று அறிவிக்கிறது.
1954ஆம் ஆண்டு ராஜகோபாலாச்சாரி முதல்வராக இருந்தபோது கொண்டுவரப்பட்ட புதியக் கல்வித் திட்டமும் தொடக்கப்பள்ளி மாணவர்களைக் குறிவைத்தது. காலையில் படிப்பு, பிற்பகலில் குலத் தொழில் என்பதே அந்தத் திட்டம். பெட்ரோலும் தீப்பந்தமும் தயாராகட்டும் என்று தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தார் பெரியார். ஆச்சாரியார் முதல்வர் பதவியை விட்டே ஓடினார் என்பது வரலாறு.
அதே வழியில் 18 வயது இளைஞர்கள் பரம்பரைத் தொழிலை நோக்கித் திருப்புவதற்கு ஒன்றிய ஆட்சி கொண்டு வந்த திட்டம் தான் ‘விஸ்வகர்மா’. தந்தை செய்த பரம்பரைத் தொழிலுக்கான ‘சான்றிதழ்’ காட்டி இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகையைப் பெற முடியும். ’திராவிட மாடல்’ ஆட்சி எந்த ஜாதியும், எந்தக் கைவினைத் தொழிலையும் செய்யலாம் என்று ‘கலைஞர் கைவினைத் திட்ட’த்தை அறிவித்துள்ளது. இப்போது தமிழ்நாடு பள்ளி மாணவர்களின் கல்வியை சிதைக்கும் திட்டத்தை ஏற்க முடியாது என்று அறிவித்துவிட்டது.
நாட்டில் உள்ள தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி படிக்கச் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விச் செலவை அரசே ஏற்கும் என்று அறிவித்து, அதற்கு நிதி ஒதுக்கீட்டையும் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு, அரசுப்பள்ளிகளை சமூகநீதியின் குறியீடாகக் கருதுகிறது. அங்கு தான் ஒடுக்கப்பட்ட – பொருளியல் வசதியற்ற மாணவர்கள் படிக்க வருகிறார்கள். கட்டணமில்லாக் கல்வி வழங்கப்படுகிறது. அந்தப் பள்ளிகளிலும் ‘மதிப்பெண்’ என்ற தகுதியைப் புகுத்தி சமூகநீதியின் நோக்கத்தை சிதைக்கிறது ஒன்றிய ஆட்சி!
வாக்குப்பதிவு முறைகேடுகளை மறைக்க சதி
வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு நடக்கும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இதை உறுதி செய்கிறது ஒன்றிய ஆட்சி! ஹரியானா தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் வாக்குச்சாவடியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமிராக்களை சமர்பிக்க நீதிமன்றம் கோரியிருந்த நிலையில் அவசர அவசரமாக தேர்தல் ஆனையத்தின் நடத்தை விதிமுறைககளை ஒன்றிய ஆட்சி மாற்றியமைத்துள்ளது. 1961ஆம் ஆண்டு தேர்தல் நடத்தை விதிமுறைகளின் படி தேர்தல் தொடர்பான அனைத்து விவரங்களையும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோருக்கு வழங்க வேண்டும். இப்போது இந்த சட்டத்தை அவசர அவசரமாக நீதிமன்றம் கேட்டால் கூட கண்காணிப்புக் கேமிரா உள்ளிட்ட விவரங்களை தாக்கல் செய்ய தேவையில்லை என்று சட்டத்தை திருத்தி விட்டார்கள். இந்த முறைகேடை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கு தொடர்ந்துள்ளது.
தேர்வுப் படிவங்களுக்கு ஜி.எஸ்.டி.
உ.பி.யில் மருத்துவத்துறை தொடர்பான வேலைகளுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வுக்கு அனுப்ப வேண்டிய விண்ணப்பப் படிவங்களை விலைக் கொடுத்து தான் வாங்க வேண்டும். அது மட்டுமின்றி ஒவ்வொரு தேர்வுப் படிவத்துக்கும் 18 சதவீத ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தி இதைக் கண்டித்து அறிக்கை விட்டுள்ளார்.
- விடுதலை இராசேந்திரன்