விளிம்பு நிலை மக்களின் கல்வியை வேத காலம் தொடங்கி பார்ப்பனியம் மறுத்தே வருகிறது. “சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்று கட்டளை இட்டது”. பாடசாலைகள் என்றாலே வேதம் கற்பிப்பதற்கு மட்டும் தான். தமிழ் மன்னர்கள் கோவில்களைக் கட்டினார்களே தவிர பள்ளிக்கூடங்களை நிறுவவில்லை.
வேத பாடசாலைகளைத் தான் அமைத்தார்கள். பிரிட்டிஷ் அதிகாரி மெக்காலே தான்,முதன் முதலாக ஆங்கில வழியில் பொதுப் பள்ளிகளைக் கொண்டு வந்தார்(1835). அந்த கல்வித் திட்டத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டவர்களும் பார்ப்பனர்கள்தான்.
வேதம் படித்தவர்கள் ஆங்கிலம் படித்து பிரிட்டிஷ் ஆட்சியில் உயர் பதவிகளை கைப்பற்றினார்கள். 1916-ம் ஆண்டு பார்ப்பன அல்லாதார் இயக்கம் வரலாற்றுத் தேவையாக வந்த பிறகு பார்ப்பனர் ஆதிக்கம் கேள்விக்கு உள்ளானது.
நீதிக்கட்சியின் முதல் ஆட்சியில் 1921-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வகுப்புவாரி உத்தரவு பார்ப்பனர் அதிகார வர்க்கத்தால் முடக்கப்பட்டது. அதற்கு பிறகு 1928 ஆம் ஆண்டில் தான்,ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு,சுப்பராயன் முதல்வராக இருந்த போது அமைச்சர் முத்தையா முதலியார் அவர்களால் வகுப்புவாரி உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
அதற்கு பிறகு1928-ல் நீடித்து வந்த இந்த வகுப்புவாரி உரிமையை, 1950-ல் நீதிமன்றங்கள் வழியாக பார்ப்பனர்கள் தடுத்து நிறுத்தினார்கள். சென்னை மாகாணத்தில் மட்டும் தொடர்வண்டித் துறை,அஞ்சலகம்,துறைமுக நிர்வாகங்களில் பிற்படுத்தப்பட்டோர்க்கான இட ஒதுக்கீடு சென்னை மாகாணத்தில் மட்டும் அமலில் இருந்தது. சுதந்திரம் அடைந்த ஒரே மாதத்தில் இரத்து செய்தார்கள். 1950-ல் இடஒதுக்கீடு பறிப்போன நிலையில் பெரியார் போர் சங்கு ஊதினார்.
திராவிட முன்னேற்றக் கழகமும் குரல் கொடுத்தது. தமிழ்நாடு போர்க்களம் ஆனது. அதற்குப் பிறகு அரசியல் சட்டம் முதன் முதலாகத் திருத்தப்பட்டு இடஒதுக்கீடு உயிர் பெற்றது. இந்த சட்டத்திருத்தம் வழியாகத் தான் பட்டியலின மக்களுக்கான கல்வி உரிமையும் சட்டம் ஆகியது.
தமிழ்நாட்டில் காமராசர் ஆட்சியானாலும் அஇஅதிமுக ஆட்சியானலும் பெரியார் தொடங்கி வைத்த சமூகநீதிப் பாதையிலே நடைபோட்டன. இடையில் எம்ஜிஆர் ஆட்சியில் ஊடுருவிய பார்ப்பனர்கள் பொருளாதார அளவுகோலைத் திணித்து இட ஒதுக்கீடு நோக்கத்தைத் திசை திருப்பினர். அடுத்து வந்த தேர்தலில் எம். ஜி. ஆர் படுதோல்வி அடைந்தார். தோல்வியைப் பாடமாக்கிக் கொண்டு பொருளாதார அளவுகோலை நீக்கியதோடு, இட ஒதுக்கீடு எண்ணிக்கையையும் 50 விழுக்காடாக உயர்த்தினார்.
தமிழ்நாடு அரசுகளின் சமூகநீதிக் கட்டமைப்பை ஒன்றிய பார்ப்பன ஆட்சி சீர்குலைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. 1953-ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த இராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தைப் போல இப்போது புதியக் கல்விக் கொள்கை ஒன்றைத் திணிக்கிறது. சமூகப் நீதி பார்வையில் முழுமையாக பற்றி நிற்க்கும் திராவிட மாடல் ஆட்சி இதை ஏற்க மறுப்பதால் ஒன்றிய ஆட்சி வழங்க வேண்டிய ரூ2,152 கோடியை நிறுத்தி விட்டது.
அதுமட்டுமல்ல குதிரை கீழே தள்ளி குழியைப் பறிப்பது போல தமிழ்நாட்டுக்கு உரிய இந்த நிதியை குஜராத்,உ. பிக்கு மடை மாற்றம் செய்து உள்ளது. இந்த துரோகத்தைத் தமிழக முதல்வர் அழுத்தமாகக் கண்டித்துள்ளார். இந்த நிலையில் ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் தரம் தாழ்ந்த கருத்து ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
தென் மாநிலங்கள் தாங்கள் செலுத்துகிற வரிக்கு ஏற்ப நிதி கேட்பது அற்பதனம் என்று ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசி இருக்கிறார்.
ஒன்றிய ஆட்சியின் ஆணவத்தையே இது வெளிப்படுத்துகிறது. இந்த உரிமைப் பறிப்புகளையும் ஆணவப் பேச்சுகளையும்,தமிழ்நாட்டு மக்கள் ஒரு போதும் ஏற்க மாட்டார்கள். கட்சி அரசியலை ஒதுக்கிவிட்டு தமிழ்நாட்டின் உரிமை சார்ந்த பிரச்சனைகளில் அனைத்து கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும்
- விடுதலை இராசேந்திரன்