இரண்டு நாள்களுக்கு முன்னர் நெல்லையில் மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பேசும்போது "ஒன்றிய அரசிடமிருந்து தமிழ்நாட்டுக்கு நிதியும் இல்லை, நீதியும் இல்லை. தமிழகத்திற்கு நிதி தராமல் மத்திய அரசு வஞ்சிக்கிறது" என்று பேசி இருக்கிறார்.
நாட்டில் நேரடி வரி வசூலில் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடுதான் அதிகமான பங்களிப்பைத் தருகிறது.
தமிழ்நாடு வரியாக ஒரு ரூபாய் கொடுத்தால், திருப்பி ஒன்றிய அரசு 29 காசுகள் மட்டுமே தருகிறது. ஆனால் பா.ஜ.க. ஆளும் உத்தரப் பிரதேசத்திற்கு (ஒரு ரூபாய்க்கு) 2 ரூபாய் 73 காசுகள் கொடுக்கிறது ஒன்றிய அரசு.
தமிழ்நாட்டில் ஏற்பட்ட புயல்வெள்ளப் பேரிடர் நிவாரண நிதியாக ரூபாய் 4700 கோடி வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் கோரிக்கைகளுக்கு வெறும் 450 கோடியை மட்டுமே தந்தது ஒன்றி அரசு.
"ஜிஎஸ்டி வரிமுறையால் தமிழ்நாட்டிற்கு மட்டும் 20 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அவசர அவசரமாக ஜிஎஸ்டி முறையை அமல்படுத்தியதே இதற்குக் காரணம்" என்கிறார் திருச்சி சிவா.
தமிழ்நாடு நிதியைக் கேட்டால், புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள் நிதி தருகிறோம் என்று சொல்கிறது ஒன்றிய அரசு.
ஒன்றிய அரசின் காவிச் சாயத்தை தமிழ்நாடும், தமிழர்களும் முற்றாகப் புறமொதுக்குவதால், கருப்பு நிறத்தை வஞ்சகத்தால் வஞ்சிக்கிறது காவி ஒன்றிய அரசு.
"அல்வான்னா திருநெல்வேலி அல்வா. மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு கொடுப்பதும் அல்வாதான்" என்று தமிழ்நாடு முதல்வர் அவர்கள் 'அல்வா புகழ்' நெல்லை மண்ணில் நின்று கொண்டு இப்படிச் சொல்கிறார் என்றால் அதில் பொருள் இல்லாமல் இல்லை!
தமிழ்நாட்டிற்கு "நிதியும் இல்லை, நீதியும் இல்லை". இருப்பது 'திராவிட மாடல்' ஆட்சி!
- கருஞ்சட்டைத் தமிழர்