mk stalin 292எதிரிகள் எல்லோரும் ஒதுங்கிக் கொண்டு, ஓர் உதிரியை மட்டுமே களத்தில் நிறுத்தி இருந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், எல்லோரும் எதிர்பார்த்தது போலவே தி.மு. கழகம் மாபெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது!

சட்டமன்ற, நாடாளுமன்றப் பொது தேர்தல்கள், இடைத்தேர்தல்கள் என எல்லாவற்றிலும் தி.மு. கழகம் வெற்றி பெறுவது, 2019 ஆம் ஆண்டு முதல் தொடர் நிகழ்வாகத் தமிழ்நாட்டில் அமைந்துள்ளது! அந்தச் சரித்திரம் ஈரோடு இடைத் தேர்தலிலும் தொடர்ந்து இருக்கிறது!

இந்தத் தேர்தலில், தான் இரண்டாவது இடத்திற்கு வந்திருக்கிறேன் என்று ஒரு கட்சி தம்பட்டம் அடித்துக் கொள்வது வேடிக்கையாக இருக்கிறது!

ஓட்டப் பந்தயத்தில் இரண்டாவது இடத்திற்கு வந்திருக்கிறேன் என்று உற்சாகமாக ஓடி வந்த நண்பனைத் தட்டிக் கொடுத்து, கைகுலுக்கி மொத்தம் எத்தனை பேர் ஓடினீர்கள் என்று கேட்ட போதுதான் அந்த இரண்டாவது இடத்தின் லட்சணம் புரிந்தது! மொத்தம் ஓடியவர்களே இரண்டு பேர்தான் என்ற விடையைக் கேட்டு அப்படியே புல்லரித்துப் போவது போலத்தான், ஈரோடு இடைத் தேர்தலிலும் ஒருவர், இரண்டாவது இடத்திற்கு வந்திருக்கிறார்!

இதுவும் கூட அவர் தனித்துப் பெற்ற வாக்குகள் இல்லை! முழுக்க முழுக்க பாரதிய ஜனதா கட்சி "எல்லா வகையிலும்" பின்னால் இருந்தது. அந்தக் கட்சியின் வாக்குகள் முழுமையாக இந்தக் கட்சிக்கு வந்திருக்கின்றன. அதிமுகவின் வாக்குகளிலும் ஒரு பகுதி இவர்களுக்கு கிடைத்திருக்கக் கூடும்! எல்லாம் சேர்ந்தும் 23,000 வாக்குகளை மட்டுமே அவர்களால் பெற முடிந்திருக்கிறது!

அறிவிக்கப்படாத பல்வேறு கட்சிகள் பின்னணியில் கூட்டணிகளாக நின்றதால், இம்முறை கட்டுத்தொகையை (டெபாசிட்)த் திரும்பப் பெற்று விடுவார்கள் என்றுதான் எல்லோரும் கருதினார்கள். ஆனால் இந்தத் தேர்தலிலும் அவர்களால் கட்டுத்தொகையைக் கூட மீட்டுக் கொள்ள முடியவில்லை!

கழகத்தின் தலைவர், தமிழ்நாட்டின் முதலமைச்சர், தலைவர்களுக்கெல்லாம் தலைவர் பெரியார் என்றார்! ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், திமுகழகம் மட்டும் வெற்றி பெறவில்லை - தலைவர்களுக்கு எல்லாம் தலைவரான தந்தை பெரியாரும் சேர்ந்து வெற்றி பெற்றிருக்கிறார்!

- சுப.வீரபாண்டியன்