அமெரிக்காவின் 47ஆம் அதிபராகப் பதவி ஏற்றுக் கொண்டுள்ள டொனால்ட் ட்ரம்ப்பும், இந்திய ஒன்றியப் பிரதமர் நரேந்திர மோடியும் நெருக்கமான நண்பர்கள் என்று ஊடகங்களும், பத்திரிகைகளும் சொல்லி இருக்கின்றன என்பதை மறப்பதற்கில்லை. அப்படிப்பட்ட நண்பர் தன்பதவி ஏற்பு விழாவுக்குக் கூட மோடியை அழைக்கவில்லை என்பது வேறு விசயம்.
சட்டவிரோதக் குடியேற்றங்களை வெளியேற்றுவேன் என்று சொன்னார் ட்ரம்ப். அமெரிக்க அரசு, இந்திய ஒன்றியத்தைச் சேர்ந்தவர்கள் 104 பேர்களை நாடுகடத்தி பஞ்சாப்புக்கு அனுப்பியுள்ளது. அதுவும் எப்படி?..கைகளில் விலங்கிட்டு, கால்களில் விலங்கிட்டு ராணுவ விமானத்தில் ஏற்றி எவ்வித வசதியுமின்றி அனுப்பி உள்ளது. 40 மணிநேரம் வசதியற்ற சூழலில் சோர்ந்து போன அவர்கள் அமிர்தசரஸ் விமான நிலையம் வந்தடைந்தார்கள். இதற்கு நாடாளுமன்றத்தில் விளக்கம் தந்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் 'சட்டவிரோதக் குடியேற்றக் காரர்களை 2012 ஆம் ஆண்டு முதல் விலங்கிட்டு அனுப்புவது நடைமுறைதான்' என்று கூறுகிறார்.
இந்நாட்டுக் குடிமக்களை அமெரிக்கா இப்படி நாடு கடத்தியிருப்பது அப்பட்டமான மனித உரிமை மீறல். இதற்காக இந்திய ஒன்றியம் கண்டனம் செய்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் டில்லியில் உள்ள அமெரிக்கத் தூதரை அழைத்து இதுகுறித்து விளக்கமாவது கேட்டு இருக்க வேண்டும். 'இனி இதுபோல விலங்கு அணிவிக்க வேண்டாம் என்று அமெரிக்காவிடம் கூறுவோம்' என்று அமைச்சர் ஜெய்சங்கர் பட்டும்படாமலும் கூறியிருக்கிறார்.
மெக்சிகோவை அமெரிக்க வளைகுடாவாக ஆக்குவேன், மெக்சிகோ - கனடா-சீனாவுக்குக் கடுமையாக வரிவிதிப்பேன், கனடாவை அமெரிக்காவின் மாகாணமாக ஆக்குவேன், காசாவைக் கைப்பற்றுவேன் என்று சட்டாம்பிள்ளையைப் போல பேசிய ட்ரம்ப்புக்கு அந்தந்த நாடுகள் எதிர்வினையாற்றிப் பதிலடி கொடுத்துக் கொண்டு இருக்கின்றன.
அப்படியிருக்க இந்தியர்களைத் திருப்பி அனுப்புவேன் என்று ட்ரம்ப் சொன்ன உடனே 'ஏற்றுக்கொள்கிறோம்' என்று சொன்ன மோடி, அவர்களை அழைத்துவர விமானத்தையாவது அனுப்பி இருக்கலாமே!
மணிப்பூரானாலும், அமெரிக்காவானாலும் பிரதமர் மோடி வாயே திறக்கமாட்டார் போலிருக்கிறது.
நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் கடும் வற்புறுத்தலினால் வேறுவழியின்றி விளக்கம் அளித்து உள்ளார் அமைச்சர் ஜெய்சங்கர், அதுவும் பொத்தாம் பொதுவாக.
அதானியின் நிறுவனங்களின் முறைகேடுகள் குறித்து அமெரிக்க நிறுவனம் செய்தி வெளியிட்டதற்குத் துள்ளிக் குதித்த ஒன்றிய அரசு, அமெரிக்காவில் சட்டவிரோதக் குடியேற்றம் என்று திருப்பி அனுப்பப்பட்ட இந்தியக் குடிமக்கள் கைகளில், கால்களில் விலங்கு பூட்டி விமானத்தில் அனுப்பப்பட்ட நிலையில், அந்தக் காட்சிப் படத்தை அமெரிக்க எல்லை பாதுகாப்புப் படையினர் வெளியிட்டிருக்க, அதற்குக் கண்டனம் தெரிவிக்காமல் அமைதியாக இருப்பது இந்திய ஒன்றியத்தின் இறையாண்மைக்கு இழுக்கு!
- எழில்.இளங்கோவன்