திருப்பரங்குன்றத்தில் இன்றைய பிரச்சனை குறித்த வரலாற்றுப் பூர்வமான சான்றுகள் என்ன?

பதில்: திருப்பரங்குன்றம் மலை சங்க இலக்கியத்தில் 'பரங்குன்றம்' என்று அழைக்கப்பட்டது. இம்மலைக்கு மிக முக்கியமான வரலாற்றுச் சிறப்பு உண்டு. பல்வேறு மதங்கள், பண்பாடுகளின் கூட்டுக் கலவையாக, மத நல்லிணக்கத்திற்கு முன்மாதிரியாக ஓர் இடம் உண்டு என்றால் அது திருப்பரங்குன்றம். குறிஞ்சி நிலத் தலைவன் முருகனுக்கு இம்மலையில் கோயில் இருக்கிறது. சைவ சமயக் கடவுள் சிவனுக்குக் கோயில் இருக்கிறது. சமணர் படுகைகள், சிற்பங்கள் உள்ளன. 2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் பிராமி கல்வெட்டுகள் உள்ளன. பரங்குன்றம் என்ற பெயரை ஸ்கந்தர் மலை என்று மாற்றியது ஆரியப் பார்ப்பனியம். முருகனுக்கு ஆடு பலி கொடுத்து வெறியாட்டுதல் நிகழ்வு நடத்தப்படுவது தமிழ் மரபு. அதன்பின் தமிழ்ச் சமயங்களைக் கைப்பற்றிய பார்ப்பனியம் முருகனைச் சுப்பிரமணியன் என்று மாற்றியது. கொற்றவை என்ற தாய் தெய்வத்தை துர்கா தேவி என்று பெயர் மாற்றம் செய்தது.thirupparakundram 700திருப்பரங்குன்றம் மலையில் சிக்கந்தர் என்ற இஸ்லாமியத் துறவி மலைமேல் சென்று வாழ்ந்து அங்கேயே மறைந்த பின்னர், சிக்கந்தர் மலை, சிக்கந்தர் பள்ளிவாசல் என்று மக்கள் அழைத்திருக்கிறார்கள். சிக்கந்தர் மலை என்ற பெயர் அரசு ஆவணங்களில் மிகத் தெளிவாகப் பதியப்பட்டிருக்கிறது. குறிப்பாக, 1815 ஆம் ஆண்டு மதுரை தொடர்பான வருவாய் ஆவணங்களில் சிக்கந்தர் மலை என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. கோயில் நிர்வாகம் தொடர்பான வழக்கில், ராம் அய்யர் என்பவரால் 1923 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பில், இஸ்லாமியர்களுக்குப் பள்ளி வாசல், நெல்லித்தோப்பு உள்ளிட்ட பகுதிகள் இஸ்லாமியர்களுக்குச் சொந்தமானது என்று தெளிவாகத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பிரிவி கவுன்சிலும் இத்தீர்ப்பை உறுதிப்படுத்தியது. கோயிலுக்குச் சொந்தமான இடம் எது, இஸ்லாமியர்களுக்குச் சொந்தமான பகுதி எது என்று தீர்ப்புகளில் தெளிவாக வரைவறை செய்யப்பட்டுள்ளது. அவரவர் பகுதிகளில் அவரவர் வழிபாடுகளைச் செய்ய அந்தந்த மதத்தவருக்கு உரிமை உண்டு.

தற்போது பாஜக எழுப்பியுள்ள பிரச்சினை அக்கட்சியின் நீண்ட காலத் திட்டமா? அவ்வளவு பேர் அங்கு கூட்டப்பட்டது எப்படிச் சாத்தியமானது?

பதில்: கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக, திருப்பரங்குன்றம் மலையில் தர்கா அருகில் உள்ள சர்வே கல்லில் நாங்கள் கார்த்திகை தீபத்தை ஏற்றுவோம் என்று இந்து முன்னணி தொடர்ந்து பிரச்சினை செய்து வருகிறது. திருப்பரங்குன்றம் கோயிலைப் பிரச்சினையாக்க வேண்டும் என்பது அவர்களது நீண்டகாலத் திட்டத்தில் ஒன்று. ஆனால் உள்ளூர் மக்கள் எந்த ஆதரவும் தராததால் அத்திட்டம் நிறைவேறவில்லை. தற்போது 2026 தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியை பாஜக குறிவைத்துள்ளது. அதனால்தான் இப்பிரச்சினை திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது. பாஜகவின் தொடர்ச்சியான செயல்பாடு உளவுத்துறைக்குத் தெரிந்தே நடந்திருக்கிறது. மக்கள் திட்டமிட்டு அழைத்து வரப்பட்டிருக்கிறார்கள். பாஜகவின் திட்டத்தினைத் தடுப்பதற்கான எந்தவொரு செயல்திட்டமும் அரசிடமோ காவல்துறையிடமோ இல்லை. முற்போக்கு இயக்கங்களை காவல்துறையும், அரசு நிர்வாகமும் பல்வேறு இடங்களில் தடுக்கிறது. ஆனால் சங் பரிவார் கூட்டத்தை எந்த இடத்திலும் தடுப்பதில்லை. அவர்கள்மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. நேற்று முந்தினம்கூட கோயிலில் நுழைந்து, பாஜக கொடியை ஏந்தி, பாரத் மாதாகி ஜே என்று கோஷமிட்டிருக்கிறார்கள். அவர்களைக்கூட இன்றுவரை காவல்துறை ரிமாண்ட் செய்யவில்லை என்பதுதான் வருத்தத்திற்கு உரியது. அதேநேரம் பழங்காநத்தத்தில் நடைபெற்ற கூட்டத்தில், அயோத்தியைப் போல இதை மாற்றுவோம் என்று ஹெச். ராஜா. இராம.சீனிவாசன் போன்றோர் பேசியிருக்கிறார்கள். ஹெச்.ராஜாவை இதுவரை கைது செய்யவில்லை.

இந்துத்துவம் தொடர்ந்து விதைக்கப்பட்டு வரும் சூழலில், தமிழ்நாடு அரசின் செயல்பாடு என்னவாக இருக்க வேண்டும்?

பதில்: கடந்த பத்தாண்டுகள் நடைபெற்ற அதிமுக ஆட்சியில், காவிச் சிந்தனை உடைய அதிகாரிகள் அனைத்து மட்டங்களிலும் பரவலாகக் கொண்டு வரப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் இப்போது வேலையைக் காட்டுகிறார்கள். திருப்பரங்குன்றத்தில் முதலில் பிரச்சினையைத் தொடங்கியது, திருப்பரங்குன்றம் காவலர்கள்தான். இஸ்லாமியரின் மத வழிபாட்டு உரிமையைத் தடுத்தார்கள். அதனைத் தொடர்ந்து, வட்டார வருவாய் அலுவலரும் பெரும்பான்மையினர் வருத்தமடைவர் என்ற வார்த்தையைப் பேசுகிறார். இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் அங்கு ஆடு, கோழி பலியிடக்கூடாது என்று எதிர்ப்புத் தெரிவிக்கிறார். நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞரும் அசைவம் சாப்பிட்டவர்கள் மீது எஃப்.ஐ. ஆர். போடப்பட்டுள்ளது என்கிறார். அங்கு அசைவம் சாப்பிடும் வழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது, அசைவம் சாப்பிடுவது தவறல்ல என்று சொல்லியிருந்தால் அப்பிரச்சினை முடிந்திருக்கும். ஆனால் அரசு அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் உட்பட பிரச்சினை செய்வோருக்கு உடந்தையாக இருக்கிறார்கள். இன்றுவரை ஹெச். ராஜா கைது செய்யப்படவில்லை என்பதே அதற்குச் சான்று. எனவே தமிழக முதல்வர் இதில் நேரடியாகத் தலையிட்டுத் தீர்வுகாண வேண்டும். திமுக சார்பில் பகுத்தறிவுப் பிரச்சாரங்களை முன்னெடுக்க வேண்டும். மத நல்லிணக்கத்திற்கான குழுக்களை எல்லாப் பகுதிகளிலும் அமைக்க வேண்டும்.

- வழக்கறிஞர் வாஞ்சிநாதன்

நேர்காணல்: வெற்றிச்செல்வன்