வட இந்தியாவில் ஜனநாயகம் சாகடிக்கப்பட்டு, மதவெறி தலைவிரித்தாடுகிறது. மனிதர்கள் வாழத் தகுதியற்ற சூழலாக மாறிவரும் அந்த மாநிலங்களை விட்டு, நியாயம் தேடி டாக்டர் கபீல் கான், முகமது ஸுபைர், குணால் காம்ரா போன்றோர் தமிழ்நாட்டை நோக்கி வருகின்றனர்.
தமிழ்நாடு ஏன்? ஏனெனில், இங்கு மட்டுமே ஜனநாயகம் மனிதாபிமானம் வாழ்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில நிகழ்வுகள் இருந்தாலும் அந்த வினைகளுக்கெல்லாம் எதிர்வினைகள் தண்டனைகள் எப்படி இருக்கிறது என்பதில் இருக்கிறது அவர்களது நடுனிலமை.
டாக்டர் கபீல் கான்—கோரக்பூரில் 2017ல் BRD மருத்துவமனையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் 60 குழந்தைகள் உயிரிழந்தபோது, சொந்த செலவில் சிலிண்டர்கள் வாங்கி உயிர்களைக் காப்பாற்றினார்.
எல்லோரும் “ஹீரோ” வாக கொண்டாடினார்கள். ஆனால், ஒரு முஸ்லிம் ஹீரோவா? “இது நமக்கு ஆபத்து” என யோகி அரசு அவரை பலிகடாவாக்கியது.
“எப்படி ஒரு முஸல்மான் இந்து குழந்தைகளைக் காப்பாற்றலாம்?” என பொய் குற்றச்சாட்டுகளால் சிறையில் அடைத்து, NSA சட்டம் போட்டு துன்புறுத்தியது.
2020ல் நீதிமன்றம் விடுவித்தாலும், 2021ல் வேலையைப் பறித்து குடும்பத்தையே நிர்க்கதியாக்கியது. குற்றம் என்ன? முஸ்லிமாகப் பிறந்து மக்களுக்கு உதவியது!
“நீதி இறந்த இடத்தில், தமிழ்நாடு மட்டுமே எனக்கு உயிர் கொடுத்தது,” என்கிறார் கபீல். இங்கு அவரது The Gorakhpur Hospital Tragedy புத்தகம் தமிழில் வெளியாக, மக்கள் அவரை வரவேற்றனர்.
முகமது ஸுபைர்—Alt News மூலம் பாஜகவின் பொய்களை அம்பலப்படுத்திய உண்மையின் போராளி.
யதி நர்சிங்கானந்தின் மதவெறி பேச்சை X-இல் வெளியிட்டபோது, UP அரசு “மதக் கலவரம் தூண்டினாய்” என கைது செய்து 24 நாள் சிறையில் வைத்தது.
பெயில் கிடைத்தாலும் புது வழக்குகள் தொடர்ந்தன. “உண்மையைச் சொல்வது இந்திய ஒற்றுமைக்கு ஆபத்து” என்கிறது பாஜக ஆட்சி.
நீதிமன்றம் ஆதரித்தாலும், 2024ல் கூட புதிய கேஸ்! இப்போது தமிழ்நாட்டில் அமைதி தேடி வந்த ஸுபைர், “இங்கு மக்கள் ஒரு தட்டில் சாப்பிடுகிறார்கள், பாகுபாடு இல்லை—இது அதிசயம்,” என்கிறார்.
குணால் காம்ரா—மும்பையில் அரசியலை கலாய்த்து சிரிக்க வைத்த ஸ்டாண்ட்-அப் காமெடியன்.
ஆனால், அங்கு வழக்குகள், ஸ்டூடியோ தாக்குதல்கள் என அரசியல் அவரைத் துரத்தியது.
இப்போது விழுப்புரத்தில் அமைதியாக ஒரு புது வாழ்க்கை தொடங்கியிருக்கிறார். “தமிழ்நாட்டு மண்ணில் மக்களின் எளிமை என்னை கவர்ந்தது,” என்கிறார் அவர்.
பிரெஞ்சு அரசியல் ஆய்வாளர் Christophe Jaffrelot, சொல்வதைப் பாருங்கள்: “குஜராத் வணிக முறையில் வளர்ந்தாலும், தமிழ்நாடு சமூக நலன், கல்வி, சுகாதாரத்தில் மக்களை உயர்த்துகிறது.”
அவருடைய “Gujarat Under Modi: Laboratory of Today’s India” என்ற புத்தகம் படித்து பாருங்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சியை அரசியல் கலக்காமல் ஒரு மூணாவது பார்வையில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
வடக்கில் புல்டோஸர் கலாச்சாரம், மத வன்முறை, அராஜகம் தலை விரித்தாட, தமிழ்நாடு மட்டுமே பாதுகாப்பு கேடயமாக உயர்ந்து நிற்கிறது.
ஆனால், இங்கே சிலர் “பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, இந்துக்களுக்கு இடமில்லை” என வெற்றுக் கூச்சல் போடுகிறார்கள். அவர்களுக்கு உண்மையான பிரச்சனை என்ன இப்போது இந்தியா என்னவிதமான பிரச்சனைக்களுக்குள் மாட்டிக்கொண்டிருக்கிறது எனத் தெரியவில்லை.
56 இஞ்ன்ச் மார்பு சுருங்கும் அளவுக்கு இந்தியாவுக்கு எதிரான் வெளிநாடுகள் அலட்சியம் காட்ட ஆரம்பிக்கிறது, நமது மண்ணிற்கு அவர்கள் கொடுக்கும் மரியாதை தெரிகிறது கைகளில் விலங்குடன் வந்த இந்திய பிரஜைகள் மூலம்.
தமிழ்நாட்டில் ஏதோ மிகப் பெரிய பிரச்சனை இருப்பதாக கத்துகிறார்கள் வசதியாய் புட்டியை சாய்த்து அமர்ந்து கொண்டு வெளியில் இருப்பவர்கள் தமிழ்நாட்டின் பெருமையை உணர்ந்து, இங்கு நியாயம் தேடி வருகிறார்கள். ஆனால், உள்ளே இருப்பவர்கள் அதன் அதன் மதிப்பு தெரியாமல் புலம்புகிறார்கள்.
அவர்கள் மூச்சுகுழாய் நெறிபடாமல் இருப்பதால்தான் அவர்கள் மூச்சு விடுவதை உணர்கின்றார்கள்
அவர்களது வீடுகள் இன்னும் புல்டோஸரால் இடிக்கப்படவில்லை, அதனால் வலி தெரியவில்லை.
பரமசிவன் கழுத்தில் இருக்கும்
பாம்பு சொன்னது
கருடா சௌக்கியமா
பரமசிவன் கழுத்தில் இருப்பதால்தான் பாம்பு பாதுகாக்கப்படுகிறது; கழுகிடம் கேள்விகளும் கேட்கிறது.. இல்லையெனில் கழுகு பாம்பை கொத்திக்கொண்டுபோய்விடும். கேள்வி கேட்க குரலே இருக்காது…
இதில் யார் கழுகு யார் பாம்பு யார் பரமசிவன் என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்
- ரசிகவ் ஞானியார்