திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்றுவோம் என்ற முழக்கத்தோடு சங் பரிவாரங்கள் சதித்திட்டம் தீட்டி வருகின்றன. மதவெறி அமைப்புகளை தமிழ்நாட்டு மக்கள் முழுமையாக புறக்கணிக்க வேண்டும் என்று திமுக, காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டு உள்ளன.
மதுரை மாவட்ட காவல்துறையும் நீதித்துறையும் சங்கிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. திருப்பரங்குன்றம் மலை முழுவதும் முருகனுக்கே சொந்தம் என்று சங்கிகள் கூறுவது வரலாற்று புரட்டு. உண்மையில் நடப்பது என்ன? மதுரையில் திருப்பரங்குன்றம் போல எண்ணற்ற பெருங்குன்றுகள் உள்ளன. இந்தக் குன்றுகள் அனைத்தும் நாட்டார் வழிபாடு, சமண, புத்த சமயங்கள், வைணவ, சைவ மதங்கள், இசுலாமிய, கிறித்தவ சமயங்கள் என அனைத்து வழிபாட்டு தலங்களும் எந்தவித இடர்களும் சிக்கல்களும் இன்றி மக்களால் அமைதியான முறையில் வழிபட்டு வரப்படுகின்றன.
இவ்வாறு தான் இசுலாமிய இறை மார்க்கத் தூதர்களின் வழிபாட்டு இடங்களில் ஒன்றான அவுலியா சிக்கந்தர் பாதூஷா அடக்கம் செய்யப்பட்ட தர்கா வழிபாட்டு இடம் திருப்பரங்குன்றம் மலை மீது இருநூறு ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறது.
”மதுரா கன்டரி மேனுவல்” எனும் நூலில் நெல்சன் அவர்கள் திருப்பரங்குன்றம் மலை மீது இருந்த இசுலாமியர்களின் தர்கா வழிபாட்டை குறிப்பிட்டுள்ளார்.
திருப்பரங்குன்றத்திலுள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவில் கந்தூரி வழிபாடு எனும் ஆடு அறுத்துப் பலியிடும் வழிபாட்டு முறையும் தமிழ்நாட்டின் தென் பகுதிகளில் வாழும் இசுலாமியர்களால் வழக்கமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள சிக்கந்தர் பாதுஷா தர்கா வழிபாட்டு தலமும் தென் கிழக்காக அமைந்துள்ள காசி விசுவநாதர் கோவிலும் அருகருகே அமைந்துள்ளன. அதேபோல மலையடிவாரத்தில் குடைவரை முருகன் கோவிலும் அமைந்துள்ளது.
பிரிட்டிஷ் வருகைக்குப் பிறகு திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா அமைந்துள்ள பகுதியை நில அளவை செய்து அதனை இனாம்தாரி நில வகையினமாக அடையாளப்படுத்தி இனாம் நிலங்களுக்கானப் (1863) பதிவேட்டில் குறிப்பிட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் அருகே தனக்கன்குளம் கிராம நிலங்கள் தர்காவுக்காக இனாமாக வழங்கப்பட்டுள்ளன என்பதை பிரிட்டிஷ் ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. 1920ல் அப்போதைய முருகன் கோவில் தேவசம் போர்டுக்கும் தர்கா பொறுப்பு நிர்வாகிகளுக்கும் இடையே நடந்த சிவில் வழக்குகள் 1923 ஆகஸ்ட் 25ஆம் தேதி தர்கா அமைந்துள்ள பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள நெல்லித் தோப்பு இசுலாமிய அடக்கம், ஆகியவை தர்கா நிர்வாகக் குழுவிற்கு சொந்தம் எனத் தீர்ப்புரைத்தது. இது தொடர்பான மேல்முறையீடு இலண்டன் பிரிவி கவுன்சில் தீர்ப்பிலும் தர்கா அமைந்துள்ள பகுதி தர்காவின் நிர்வாகக் குழுவிற்குச் சொந்தம் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுதந்திரத்துக்கு பின் இந்து அமைப்புகள் எனும் பெயரில் சனாதன சக்திகள் தொடர்ந்த 1978,1996/, 1998, 2011 என அனைத்து வழக்குகளிலும் தர்கா அமைந்துள்ள இடம் தர்கா நிர்வாகக் குழுவிற்கு சொந்தம் எனத் தீர்ப்புரைத்துள்ளன.
ஆனால் தீர்ப்புகளையோ மத நல்லிணக்கத்தையோ ஏற்றுக் கொள்ளாத இந்துத்துவ அமைப்புகள் பாபர் மசூதி் இடிப்பிற்குப் பிறகு இசுலாமிய வழிபாட்டு இடங்களைக் குறிவைத்து பொய்களைப் பரப்பி அவர்களின் வழிபாட்டு உரிமையைப் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றன.
கடந்த திசம்பர் 25 அன்று கந்தூரி கொடுப்பதற்காக வந்த குடும்பத்தைக் காவல்துறை தடுத்து நிறுத்தியதும் சிக்கல் எழத் தொடங்கியது. காலங்காலமாக நடந்த தர்கா வழிபாடு திடீரென தடுத்து நிறுத்தப்பட்டது தான் இன்றைய சிக்கலின் மூலவேர். அதே வேளையில் பல்வேறு பொய்த் தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பியதும் சட்ட ஒழுங்குச் சிக்கலைக் காரணமாக்கி இசுலாமிய வழிபாட்டுரிமையை நிலையாகப் பறிக்க முயற்சித்து வருகின்றன.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள இசுலாமியர்களுக்குச் சொந்தமான இடத்தில் தீபம் ஏற்றுவோம் என பல கட்டப் பரப்புரையை இந்து முன்னணி 1990-களில் இருந்தே மேற்கொண்டு வருகிறது. ஆனால் அவை எதுவும் மக்களிடம் எடுபடவில்லை. தற்போது ஒன்றியத்தில் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள பாஜக ஆட்சியைப் பயன்படுத்திக் கொண்டு காசி, ஜெய்ப்பூர் உள்ளிட்டு நாடு முழுவதும் உள்ள இசுலாமிய வழிபாட்டுத் தலங்களில் ஆய்வு என்ற பெயரில் நீதிமன்றங்களின் மூலம் தலையீடு செய்து வருகின்றன.
1991-இல் இயற்றப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் சட்டம் நடைமுறையில் இருக்கும் போதே அதிகாரத்தைப் பயன்படுத்தி இசுலாமிய வழிபாட்டுத் தலங்களில் இந்து அடையாளங்கள் உள்ளன என பொய்க் கருத்தை நிறுவ முயற்சித்து வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள சிக்கந்தர் தர்காவை இலக்காக வைத்து வெறுப்புப் பரப்புரையை மேற்கொண்டு வருகின்றன. தமிழ்நாட்டு மக்களால் புறக்கணிக்கப்பட்ட பாஜகவை எப்படியாவது வளர்க்க வேண்டும் என்ற திசையில் இந்து வாக்குகளை முசுலீம்களுக்கு எதிராக வெறுப்பு விதைத்து அறுவடை செய்ய பல திட்டங்களைத் தீட்டி வருகின்றன.
ஆனால் திருப்பரங்குன்றம் மக்கள் பாஜகவில் அரசியல் சூழ்ச்சிககளை தெள்ளத்தெளிவாக புரிந்து கொண்டு உள்ளனர். வெளியூரிலிருந்து ஆட்களை இறக்கி ஆர்ப்பாட்டத்தை நடத்தின இந்துத்துவ அமைப்புகள். உள்ளூர் மக்கள் நாங்கள் சமூக நல்லிணக்கத்தோடு வாழ்வோம் என ஊடகங்களில் பேட்டி கொடுத்துள்ளனர்.
தஞ்சையில் பள்ளி சிறுமியின் தற்கொலையை மதமாற்றம் என மடைமாற்றி கலவரம் ஏற்படுத்த முயன்ற பாஜகவின் முயற்சி தோல்வி அடைந்ததைப் போலவே திருப்பரங்குன்றத்தில் செய்த தில்லுமுல்லும் அம்பலமாகி நமத்துப் போயிருக்கிறது ஏனென்றால் இது பெரியார் மண்!
- விடுதலை இராசேந்திரன்