திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் b&w tamil youtube சேனலுக்கு அளித்த நேர்காணலில், மேதகு பிரபாகரன் பெரியார் கொள்கைகளையே ஈழத்தில் செயல்படுத்தினார் என்பதை விரிவாக விளக்கினார். கடந்த வார தொடர்ச்சி...
போராட்டத்தில் வீரமரணம் எய்திய விடுதலைப்புலிகளின் இறுதி நிகழ்வில் மதச் சடங்குகள் நடப்பதில்லை. பெற்றோர்கள் கூட எந்த வித மதச் சடங்குகள் இல்லாமல் மலர் வளையம் வைத்துத் தான் மரியாதை செய்வார்கள். துயிலும் இடங்களை மக்கள் வாகனங்களில் கடக்கும் போது தலைகுனிந்து ஒரு மரியாதை செலுத்திவிட்டு தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடந்து செல்வார்கள். விடுதலைப்புலிகள் வைப்பகம் (வங்கி) ஒன்றை நடத்தினார்கள். தமிழேந்தி என்ற போராளி தான் பொறுப்பாளராக இருந்தார். தமிழேந்தி முழுமையான பகுத்தறிவாளர். சித்திரையில் மதவாதிகள் கொண்டாடும் தமிழ்ப் புத்தாண்டு நான் கிளிநொச்சியிஸ் இருந்தேன். சித்திரை மாத தமிழ்ப் புத்தாண்டை விடுதலைப் புலிகள் இயக்கம் ஏற்கவில்லை. தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று ஏற்றுக் கொண்டு அந்த நாள் தான் வங்கிகளில் புதுக்கணக்கு தொடங்கினார்கள். தமிழ்புத்தாண்டு அல்ல தை மாதம் தான் சித்திரையில் அல்ல வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தினர்
நெறியாளர்: தமிழ்ச்சொல் அகராதி இருந்ததா?
பொதுச்செயலாளர்: ஆம். 4000 தமிழ்ச்சொல் கொண்ட தமிழ் அகராதி இருந்தது. தமிழ்ச்சொல்லில் பெயர் வைத்தவர்கள் வங்கியில் கணக்கு வைத்தால் அவர்களுக்கு முதல் மாதம் செலுத்த வேண்டிய தவணைத் தொகையை புலிகளின் வைப்பகமே செலுத்தும் என்ற சலுகைகள் வழங்கப்பட்டன.
நெறியாளர்: விடுதலைப் புலிகள் வாழ்விலும் வாழ்வியல் முறைகளிலும் பகுத்தறிவு, முற்போக்கு சிந்தனை கொண்ட பண்பாட்டுத் தாக்கம் இருந்ததா?
பொதுச்செயலாளர்: பெரியாரியல் தமிழ்ப் பண்பாடு ஆரியத்தை எதிர்த்த, சமஸ்கிருதத்தை எதிர்த்த, பார்ப்பனியத்தை எதிர்த்த பண்பாட்டு வாழ்க்கை முறையே மக்களிடம் பரப்பப்பட்டது. விடுதலைப்புலிகள் திருமணங்களுக்கு மேதகு பிரபாகரன் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார்.
“நீங்கள் திருமணம் செய்தால் போராளிக்கே முன்னுரிமை தர வேண்டும் தாலி கட்டாமல் செய்யும் திருமணத்தை நான் வரவேற்பேன்”. அப்படி தாலி கட்டவேண்டும் என்று விரும்பினால் புலிகளின் அடையாள முத்திரை பதித்த அந்த தாலியை நீங்கள் கட்டலாம். அது எனக்கு மகிழ்ச்சியை தரும்.” என்று சுற்றறிக்கையில் பிரபாகரன் குறிப்பிட்டார்.
விடுதலைப் புலிகள் நீதிமன்றங்கள், சட்டக் கல்லூரிகள் நடத்தினார்கள். பலபேர் சட்டம் படித்து நீதிபதிகளாவே வந்தார்கள். பல நீதிபதிகள் போரில் கை,கால்கள் இழ்நதவர்களாக இருந்தார்கள்.
பெண்கள் உட்பட அனைவரும் நீதிபதி ஆனார்கள். இங்கே வரும் வழக்குகளுக்கு வாதாட வழக்கறிஞர்களுக்கு கட்டணம் நியமிக்கப்பட்டது. சுமார் 50 ரூபாய் ஒரு வழக்குக்கு அதற்கு மேல் வாங்கக் கூடாது. நான் ஒருநாள் முழுக்க நீதிமன்ற நடவடிக்கைக்களை நேரில் சென்று கவனித்தேன்.
அங்கே வழக்குகள் பெரும்பாலும் காணி சம்பந்தப்பட்ட, நிலங்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள் தான் வரும்.முறையாக வழக்குகள் தீர்த்து வைக்கப்பட்டது. இந்த சட்ட கல்லூரி வழியாக தமிழீழ தேசத்துக்காக ஒரு சட்டம் கிரிமினல்,சிவில் பிரிவுகள் சட்டம் வகுக்கப்பட்டது.
புலிகளின் சட்டத்துறை வல்லுநர்கள் எழுதிய சட்டத்தில் தமீழிழக் கொள்கை அறிவிக்கப்பட்ட போது “முதல் கோரிக்கை ஜாதி தடை செய்யப்படுகிறது”என்ற சட்டத்தை அறிவித்தார்கள்.
கடவுள் மறுப்பு,ஆன்மா மறுப்பு,மத மறுப்பு,ஜாதி மறுப்பு,தாலி மறுப்பு,இந்து மத வருடப்பிறப்பு மறுப்பு,சமஸ்கிருத சொற்கள் நீக்கம்,தமிழ் பெயர் சூட்டல் இவைகளொல்லம் பெரியாரியப் பண்பாடு தானே.
நெறியாளர் : இவைகளெல்லாம் நீங்கள் நேரில் பார்த்தீர்களா?
பொதுச்செயலாளர்: ஆம் 2006 ஏப்ரலில் நான் சென்றபோது நடந்த காட்சிகள் தான் இவை. இதை நான் பல முறை ஊடகங்களில் பதிவு செய்து வருகிறேன். ஒரு முறை சிறைச்சாலை சென்று பார்த்தேன்.
பெரிய கட்டிடங்கள் எதுவும் இல்லாமல் சிறிய கூடாரங்கள் போல் தான் இருந்தது.சிறைக்கைதிகள்,சிறை அதிகாரிகள் ஒன்றாக அமர்ந்து பேசுவார்கள்,அனைவருக்கும் ஒரே மாதிரியான உணவு தான்.
சிறைக் கைதிகளின் மனித உரிமைகள் காக்கப்பட்டது. சிறை அதிகாரிகள் சொன்ன ஒரு செய்தி, சிறைக் கைதிகளை வெள்ளிக்கிழமை மாலை வீட்டுக்கு அனுப்பி விடுவோம். சனி,ஞாயிறு கைதிகளுக்கு விடுமுறை.
அவர்கள் வீடுகளுக்குப் போய் குடும்பத்துடன் இரண்டு நாட்களை கழித்து விட்டு திங்கட்கிழமை காலை சிறைக்குத் திரும்புவார்கள். இப்படி வீட்டுக்குப் போன சிறைக்கைதிகள் வராமல் போய் விட்டால் என்ன செய்வது என்று கேட்ட போது அவர்கள் சொன்ன பதில்,
இதுவரை அப்படி எதுவும் நிகழவில்லை. சரியாக திங்கட்கிழமை காலை சிறைக்கு வந்துவிடுவார்கள். விடுதலைப்புலிகள் அறிவு அமுது என்ற நூல் விற்பனை நிலையத்தை நடத்தினார்கள். அந்த விற்பனை நிலையத்துக்கு தமிழ்நாட்டிலிருந்து பெண் ஏன் அடிமையானாள் உட்பட பல பெரியாரிய நூல்கள் அனுப்பபட்டது.
அந்த அறிவு அமுது பொறுப்பாளர் ரமேசு என்றப் போராளி,பின்னாளில் காவல் துறை பொறுப்பாளராக இளங்கோ என்ற பெயரில் செயல்பட்டார். தமிழ்நாட்டில் முக்கிய களப் போராளியாக இருந்த ஒருவர்..ரமேசு பெரியாரிய இயக்கங்களோடு நெருங்கிய தொடர்பில் இருந்தார். ரமேசு ஒரு முழுமையான பெரியாரியவாதி.
அந்த அறிவு அமுது விற்பனை நிலையத்தில் “மூடநம்பிக்கை ஜாதி, வர்ணாசிரம சம்பந்தப்பட்ட நூல்களை விற்பதற்கு தடை” செய்யப்பட்டடுள்ளதாக விடுதலைப்புலிகள் கூறினார்கள். அறிவியல் நூல்கள் ஆயிஷா நடராசன் அவர்கள் எழுதிய நூல்கள்,கோவூர் நூல்கள் இருந்தன.
அதே போல “கடவுளை நிருபித்தால் நான் 1 இலட்சம் தருவேன்” என்று சவால் விட்டவர் உலகம் முழுவதும் போற்றப்படும் பகுத்தறிவாளர் கோவூர் எழுதிய மூடநம்பிக்கைகளுக்கு எதிரான அறிவியல் நூல்களை இந்த அறிவு அமுது விற்பனை நிலையiம் மூலமாக மக்களிடம் பரப்பினார்கள் விடுதலைப் புலிகள்.
ஒருமுறை கூட்டம் கூட்டமாக “சிவராத்திரிக்கு” மக்கள் கூடி இருப்பதை பார்த்தார் பிரபாகரன் அப்போது ”இந்த மக்களை காப்பாற்ற நமது பிள்ளைகள் துப்பாக்கியோடு தூங்காமல் கண்விழித்து இருக்கிறார்கள் இவர்கள் சிவனை நோக்கி ஓடுகிறார்களே”என்று கூறியுள்ளார். இன்னொரு முக்கியமான செய்தி கம்பராமாயணம் பற்றி விடுதலைப்புலிகளின் புரிதல் எப்படி இருந்தது என்பதை சொன்னால். 2006 நான் சென்றிருந்த காலத்தில் புலிகளின் வானொலியில்” இலங்கை மண் “என்ற பெயரில் இராமாயண நாடகம் ஒலிப்பரப்பப்பட்டது. 53 வாரங்கள் இந்த நாடகம் ஒளிப்பரப்பப்பட்டது. இந்த நாடகம் சொன்ன செய்தி இந்த ஆரிய-திராவிட போராட்டத்தில் தமிழ் மன்னன் இராவணன்.
ஒரு இனத்தால் இராவணன் அரக்கனாக சித்தரிக்கப்பட்டான். ஒரு மாவீரனுடைய பிம்பத்தை சீர்குலைத்தார்கள். இராவணன் தமிழர்களின் அடையாளம் இராமன் தமிழர்களுக்கு விரோதமான சக்தி என்று இராமாயணத்தைப் பற்றி பெரியார் என்ன கருத்தை சொன்னாரோ அதே கருத்தை வைத்து அந்த நாடகத்தை ஒலிப்பரப்பினார்கள். அங்கே இருக்கிற பழைய இராமாயண பக்தர்கள் சில பேர் பக்தி இலக்கியத்தைக் குறை சொல்லி விட்டார்களே என்று சில பேரிடம் எதிர்ப்பு வந்தது. இது பிரபாகரனின் கவனத்துக்கு சென்ற போது பிரபாகரன் சொன்னது, 53 வார நாடகங்களையும் இரண்டாவது முறையாக ஒலிப்பரப்புங்கள் என்று அவர் சொன்னார்.
பிரபாகரன் பார்வையில் இராமாயணம்
ஒருவரது அழிவில், இன்னொருவரது வெற்றியிற புதிய வரலாறு எழுதப்பட்டது. உண்மை வரலாற்றைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டு, பொய்களையும், புழுகுகளையும் புகுத்திப் புதிய வரலாறு, வெற்றி பெற்ற மனிதனுக்குச் சார்பாக எழுதப்பட்டது. சூதுகளையும், சூழ்ச்சிகளையும் செய்து, கோழைத்தனமாக, வஞ்சகமாக எதிரியைக் கொன்ற அசிங்கம் அதில் சொல்லப்படவில்லை. உண்மை வரலாறு இறந்தவர்களின் புதைகுழிகளின் இருளுக்குள் அப்படியே அடங்கிப் போனது.
இதே கதிதான் இலங்கை மண்ணை ஆதியில் ஆண்ட தமிழ் மன்னனான இராவணனுக்கும் நிகழ்ந்தது. அன்றைய போர் விதிமுறைகளுக்கு மாறாக, மிகவும் கபடமான வழியில் தமிழ் மன்னனான இராவணனைக் கொன்றுவிட்டு, உண்மைக்குப் புறம்பான முற்றிலும் பொய்யான ஒரு வரலாறு எழுதப்பட்டது. மிகவும் நுட்பமாகச் செய்யப்பட்ட இந்த வரலாற்றுத் திரிபில் தமிழரின் பண்டைய வரலாறு இருட்டடிப்புச் செய்யப்பட்டது.
தலைகீழாகத் திரித்துவிடப்பட்ட இந்த வரலாற்றின் தாக்கம் இருபத்தோராம் நூற்றாண்டிலும் முடிவுறவில்லை என்று பதிவு செய்தார்.
(தொடரும்)
- விடுதலை இராசேந்திரன்