தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பும் சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வருவதற்கு எதிராகவும், துணைவேந்தர் நியமனம் தொடர்பாக ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுப்பதை எதிர்த்தும் தமிழ்நாடு அரசுத் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் இரண்டு ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், “தமிழ்நாடு அரசு அனுப்பிய 12 மசோதாக்களும் சட்டத்துக்கு புறம்பாக இருக்கிறதா? எதனால் ஒப்புதல் அளிக்கவில்லை” என சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பரிதிவாலா மற்றும் ஆர்.மகாதேவன் இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தது.
தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ராகேஷ் திவேதி, வில்சன் மற்றும் சபரீஸ் சுப்ரமணியன் ஆகியோர் ஆஜராகி, “‘துணைவேந்தர் தேர்வு குழுவில் ஆளுநர் தலையிட்டு அதனை தடுக்கும் விதமாக செயல்படுகிறார்.எனவே வேந்தர் பதவியிலிருந்து ஆளுநரை நீக்கும் வகையில் திருத்த மசோதா இயற்றப்பட்டது.
ஆனால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்து விட்டார்” என்றனர். அப்போது ஆளுநர் தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி, ‘‘பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநரை நீக்குவது என்ற முடிவு என்பது அவரது அதிகாரத்தைப் பறிக்கும் செயல் என்று ஆளுநர் நினைத்ததால்தான் அவர் இந்த விவகாரத்தில் முடிவு எடுக்கவில்லை.
“ஒரு மசோதாவை எந்த நேரத்திலும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளது. அதற்கான காரணத்தை மாநில அரசுக்கு தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று தெரிவித்தார்.அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், உங்களது வாதத்தில் ஒரு முக்கிய சந்தேகம் உள்ளது.குடியரசுத் தலைவருக்கு மசோதாக்களை எப்போது வேண்டுமானாலும் ஆளுநர் அனுப்பி வைக்கலாம் என்று கூறுகிறீர்கள்.
அப்படியென்றால் மசோதாக்களைச் சட்டப் பேரவைக்குத் திருப்பி அனுப்பிய பிறகு, மீண்டும் அது நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு சட்டப்பேரவை அனுப்பினால், அந்த மசோதாவையும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க முடியும் என்பதுதான் ஆளுநர் தரப்பின் வாதமாக உள்ளது என்ற அர்த்தத்தில் -நாங்கள் எடுத்துக் கொள்ளலாமா?
இதில் குறிப்பாக அரசியல் சாசனத்தில் ஆளுநருக்கான அதிகாரம் என்ன என்பதை அம்பேத்கர் தெளிவாக சுட்டிக்காட்டி உள்ளார்.ஆளுநருக்குத் தனியாக எந்தவொரு விருப்ப உரிமையும் இல்லை என்பதையும் அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை மூலம் அனுப்பி வைக்கப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க முடியாது என்று ஆளுநர் தீர்க்கமாக முடிவெடுத்துவிட்டால், அதனை உடனடியாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்திருக்க வேண்டும்.
அப்படி செய்திருந்தால் மட்டுமே அது அரசியல் சாசன பிரிவு 200ன் விளக்கமாக இருக்க முடியும். இதில் ஆளுநர் என்பவர் அரசியல் சாசனத்தில் மிக முக்கியமான பதவியை வகித்து வருபவர் ஆவர்.அப்படி இருக்கும் போது ஆளுநர் தனது நிலைப்பாட்டை மிகவும் தெளிவாக எடுத்து, அதுகுறித்து விவரங்களை அரசுக்குத் தெரிவித்திருக்க வேண்டும். அது தான் அரசியல் சாசனத்தின் நிபந்தனையாகவும் இருக்கிறது என்று தெரிவித்தனர்.
“தமிழ்நாடு சட்டப்பேரவையால் மறுநிறைவேற்றம் செய்யப்பட்ட மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் ஏன் அனுப்பினார்? எப்படி அவ்வாறு அனுப்பி வைக்க முடியும்?”என்று கேள்வியெழுப்பிய நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.எழுவர் விடுதலை வழக்கு, ஆன்லைன் ரம்மி தடை மசோதா வழக்கு என அடுத்து உச்சநீதிமன்றத்தில் கொட்டு வாங்கினாலும் ஆர்.என்.ரவி திருந்துவதாக இல்லை.
- விடுதலை இராசேந்திரன்