கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் நியமனத்திற்கான குறைந்தபட்ச தகுதி மற்றும் தர நிர்ணய அளவீடு குறித்த 2018 ஆம் ஆண்டு விதிமுறைகளை மாற்றியமைத்து 2025 ஆம் ஆண்டு விதிமுறைகளை பல்கலைக்கழக மானியக் குழு (யூ.ஜி.சி) உருவாக்கி உள்ளது. அதன் வரைவு 06.01.2025 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த வரைவு விதிமுறைகள் பற்றி‌ய கருத்துக்களை 05.02.2025 வரை தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.ugc delhiவரைவு விதிமுறைகளில் துணைவேந்தர் நியமனம் தொடர்பாக நடைமுறையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. முன்பு பேராசிரியர், ஆராய்ச்சி அல்லது கல்வி நிர்வாக பணிகளில் 10 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்களே துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும். ஆனால் இப்போது தொழில்துறை, பொது நிர்வாகம், பொதுத்துறை நிறுவனங்களில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் அனுபவமுள்ள எவரும் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் கல்வி முற்றிலும் வணிகமயமாகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இது வரை துணைவேந்தரைத் தேர்ந்தெடுக்க நியமிக்கப்படும் தேடுதல் குழுவில் சிண்டிகேட் உறுப்பினர் ஒருவர், சென்ட் உறுப்பினர் ஒருவர் மற்றும் அரசு பிரதிநிதி ஒருவர் இடம் பெற்றிருப்பர். ஆனால் தற்போது தேடுதல் குழுவில் ஆளுநரின் பிரதிநிதி ஒருவர், யூ.ஜி.சி பிரதிநிதி ஒருவர், சிண்டிகேட் அல்லது செனட் உறுப்பினர் ஒருவர் இருப்பர் என்றும், ஆளுநரின் பிரதிநிதி குழுவின் தலைவராக இருப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் மாநில அரசின் அதிகாரம் பறிபோகும்.

யூ.ஜி.சி வெளியிட்டுள்ள புதிய மாற்றங்களை ஏற்றுக் கொள்ளாவிட்டால் அதன் எந்த திட்டங்களிலும் பல்கலைக் கழகங்கள் பங்கேற்க இயலாது முடியாது என்று வரைவு விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளதால் பல்கலைக்கழகங்களுக்கு ஒன்றிய அரசு நிதி எதுவும் வராது. ஏற்கனவே நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பல்கலைக்கழகங்கள் முடங்கும் நிலை இதன் மூலம் ஏற்படும்.

தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் யூ.ஜி.சியின் புதிய விதிமுறைகளை கடுமையாக எதிர்த்ததுடன் அதை திரும்ப பெற வலியுறுத்தி சட்டப்பேரவையில் தனித் தீர்மானத்தையும் நிறைவேற்றி உள்ளார். யூ.ஜி.சியின் புதிய விதிமுறைகளுக்கு அனைத்து பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் பணியாளர்கள், கல்வியாளர்கள் என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பல்கலைக்கழகங்களுக்கு ஒன்றிய அரசு அளிக்கும் நிதியை ஒதுக்கீடு செய்யும் அதிகாரத்தை மட்டுமே பெற்றுள்ள யூ.ஜி.சி பல்கலைக்கழகங்களை தனது ஆளுகைக்குள் கொண்டு வர நினைப்பது முற்றிலும் தவறானது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் அதிகாரங்களை பறித்து நியமனப் பதவியில் இருக்கும் ஆளுநரிடம் வழங்கும் இந்த எதேச்சதிகாரப் போக்கை தடுத்து நிறுத்தும் கடமையும் பொறுப்பும் நம் அனைவருக்கும் உள்ளது. அப்போது தான் "நாட்டிலேயே உயர்கல்வி கட்டமைப்பில் சிறந்து விளங்கும் மாநிலம் தமிழ்நாடு" என்ற பெருமையை நாம் தக்க வைத்துக் கொள்ள முடியும்.

- வழக்கறிஞர் இராம.வைரமுத்து