தமிழ்நாட்டில் 80 ஆண்டு காலப் பொது வாழ்க்கையை நிறைவு செய்து இன்றும் துடிப்பான இளம் தலைமுறைக்கும் நிகழ்கால சவால்களுக்கும் ஏற்ப தன்னை இற்றைப்படுத்திக்கொண்டு பெரும் சான்றாண்மைக் களஞ்சியமாகத் திகழ்பவர் பகுத்தறிவும் சுயமரியாதையும் சமூக நீதியும் பரப்பி வரும் தந்தை பெரியார் கண்ட திராவிடர் கழகத்தின் இன்றைய  தலைவர் அய்யா வீரமணி!

ki veeramani 432தமிழ்நாடு அரசும், தமிழ்ச் சமூகமும் கண் விழிக்கும் இவர் எழுதும் அறிக்கைகளுக்கு! “விடுதலை” நாளேடு, “உண்மை” மாதமிருமுறை ஏடு, “The Modern Rationalist”, “பெரியார் பிஞ்சு” என பல இதழ்களுக்கு 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியராக இருந்து, “ஆசிரியர் வீரமணி” என தமிழ்ச்சமூகத்தின் ஆசிரியராகவே ஆகிப் போனார் அய்யா வீரமணி அவர்கள். இந்தியாவின் அரசியல் நகர்வுகளை, சமூக அவலங்களை, உலக நடப்புகளை திராவிட, சமூக நீதி மற்றும் சுயமரியாதை கண்ணாடி அணிந்து படித்து, அலசி, தேவையான எதிர்வினையை உடனடியாக ஆற்றி, இன்றைய திராவிட மாடல் ஆட்சி வரை ஆட்சியாளர்களுக்கு உறுதுணையாக இருப்பது அவருடைய எழுத்து! கருத்தியல் வழிகாட்டுதலுக்கு பேரறிஞர் அண்ணா முதல் இன்றைய தளபதி வரை அவருடைய எழுத்துகளை உன்னிப்பாக கவனித்தே கடமை ஆற்றினர். இன்று, அண்டை மாநில அரசுகள் கூட, ஏன் நம் கொள்கை எதிரிகளான மதவாத, சாதியவாத அடிப்படைவாதிகள் வரை அவருடைய எழுத்தைப் படித்தே வரலாற்றுத் தரவுகளை சரிபார்த்துக் கொள்கின்றனர் என்றால் மிகையாகாது.

தன் ஆசிரியர் திராவிட மணி அவர்களால், சாரங்கபாணி எனும் தன் ஆரியப் பெயரை விட்டு விடுதலை ஆகி, வீரமணி என தன் திராவிட அடையாளத்தை அடைந்தவர் தோழர் வீரமணி அவர்கள்.

வரும் டிசம்பர் மாதம் 2ஆம் நாள் தன் 91 அகவையை நிறைவு செய்ய இருக்கிறார் ஆசிரியர்! 1944 இல் தனது பத்து வயதில் நீதிக்கட்சியின் சேலம் மாநாட்டு மேடை ஏறிய அவரது கால்கள், இன்று வரை ஓயவில்லை! தந்தை பெரியாரிடம் அவரைக் கொண்டு வந்து சேர்த்தவர் பேரறிஞர் அண்ணா.  1956 முதல் அய்யாவுடன் இணைந்து பணியாற்றியவரிடம் 1962 இலேயே வந்து சேர்ந்தது “விடுதலை”  ஆசிரியர் பொறுப்பு. 1978இல் அன்னை மணியம்மையாரின் மறைவுக்குப் பிறகு முழுப் பொறுப்பேற்று இன்று வரை 60 ஆண்டுகளுக்கு மேலாக அவர் இதழியலில் மீப்பெரு அரசியல் ஆளுமையாகத் திகழ்கிறார்.

தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் பிறந்த அவர் பத்து வயதிலேயே தன் பேச்சால், செயல்களால், எழுத்துகளால் தமிழ்ச் சமூகத்தின் இதயத்தை வென்றதோடு,  பொருளாதாரத்தில் இளங்கலையில் தங்கப் பதக்கத்தையும் வென்று, சட்டம் பயின்று ஓராண்டுக் காலம் பயிற்சியும் செய்துள்ளார். அவருக்கு 2003இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சிறப்பு முனைவர் பட்டமும் அளித்துள்ளது.  தமிழ் கூறும் நல்லுலகிற்கு வாழ்வியல், அறிவியல், சமூக நீதி, சுயமரியாதை, பகுத்தறிவு, அரசியல், வரலாறு என எல்லாத் தளங்களிலும் அவருடைய 170க்கும் மேற்பட்ட நூல்கள் தேவையான வழிகாட்டுதலை இதுவரை வழங்கிக் கொண்டிருக்கின்றன. அது மட்டுமன்றி, பெரியார் களஞ்சியம் எனும் பெரியார் பற்றிய தொகுப்பு 42 நூல்களைக் கொண்டுள்ளது. 

அய்யா வீரமணி அவர்கள் இதுவரை தன்னுடைய கொள்கை சார்ந்த போராட்டங்களுக்காக 46 முறை சிறை சென்றுள்ளார். குறிப்பாக 1975இல் இந்திரா அம்மையார் கொண்டு வந்த அவசர காலத்தின் போது, அவர் ஓர் ஆண்டு சிறையில் வைக்கப்பட்டார்.  விடுதலை அடைந்த பின்பும் அன்னை மணியம்மையாரின் உடல் நிலை மோசமான தருவாயில், ஆசிரியரே அவர்களுக்கு உறுதுணையாக நின்று கழகத்தை தொய்வில்லாமல் நடத்தி கட்டிக் காத்தார்.

தொடர்ச்சியாக பகுத்தறிவு மாநாடுகள் நடத்துதல், அறிவியல் சிந்தனைகளைப் பரப்ப தெருமுனைக் கூட்டங்கள், சாதி மறுப்பு திருமணங்கள், மூடப் பழக்க வழக்கங்களை சாடி, அம்பலப்படுத்துதல் என மாபெரும் சமூகவிழிப்புணர்வு நடவடிக்கைகளை சமரசமின்றி எல்லா ஆட்சிக் காலங்களிலும் செய்து வந்தவர் ஆசிரியர்.

தமிழ்நாட்டில், கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் 69% இட ஒதுக்கீட்டை, 1994இல், அம்மையார் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்திலும் தொடர்ச்சியாக பின் தொடர்ந்து, அதற்கு ஒன்பதாவது அட்டவணையில் இடப் பிடித்து சட்டப் பாதுகாப்பைப் பெற்றதும் ஆசிரியரின் அரும் பணிதான் என்றால் மிகையில்லை. அதற்காக அம்மையாருக்கு “சமூக நீதி காத்த வீராங்கனை” எனப் பட்டமளித்து, விமர்சனங்களைச் சுமந்தாலும், அதைச் செய்து முடித்தது இன்றும் பல மாநிலங்கள் வியக்கும் வண்ணம் சிறப்புக்குரியது.

தந்தை பெரியார் விட்டுச் சென்ற மாபெரும் கழகத்தை, அதன் கடமையை, இடையில் ஈழம், தமிழ்த் தேசியம் என பல கொள்கைச் சிதறல்களைச் சந்தித்த போதும், பல ஆளுமைகள் விட்டுப் பிரிந்த நிலையிலும் சிதறாமல் கட்டிக்காத்து, தமிழ் நாட்டில் மட்டுமல்லாது வட இந்தியாவிலும், உலகம் முழுவதிலும் தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகள் பரவ ஆழமான வேலைகளை நிலையாகச் செய்து வருவது அவருடைய தனிப் பெரும் சிறப்பு!

கேரளாவின் வைக்கத்தில், இந்த ஆண்டு தமிழ்நாடும் கேரளமும் இணைந்து நடத்த உள்ள வைக்கம் போராட்ட நூற்றாண்டு கொண்டாட்டங்களை தலைமையேற்று நடத்த உள்ளார் ஆசிரியர் வீரமணி அவர்கள்! திராவிடக் கொள்கைப் பரவலுக்கும் ஏற்புக்கும் இது போன்ற முன்னெடுப்புகளே சான்று!

ஆசிரியரின் முடிவிலும் மேற்பார்வையிலும், பெரியார் அறக்கட்டைளையால், திருச்சி சிறுகனூரில், 300 கோடி ரூபாய் பொருட்செலவில், 27 ஏக்கர் நிலப்பரப்பில் ஓங்குதாங்காக உருவாகிவரும் “பெரியார் உலகம்” பன்னாட்டு பெரியாரிய ஆய்வு மாணவர்களுக்கான ஒரு கூடமாகவும், தந்தை பெரியாரின் சிந்தனைகளை, வரலாற்றை உரைக்கும் கண்கவர் காட்சியகமாகவும் இருக்கும்.  அந்தக் கடமையை ஆசிரியர் செவ்வனே முடிக்கத் துணை நிற்போம்.

அறிவும், நேர்மையும், கொள்கைப்பற்றும், அடக்கமும் கொண்ட ஒரு மாணவனை அடையாளம் கண்ட தந்தை பெரியாருக்குப் பெருமை சேர்த்த அந்த மாணவரின் புகழ் ஓங்குக! தொடர்ந்து வெல்க அவர்தம் பயணம்!