கேரளாவின் சி.பி.ஐ (எம்) கட்சியின் மாநிலச் செயலாளர் அந்த மாநிலத்தின் ஆளுநர் பதவிக்கு எதிராக வெகுமக்களின் போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். அம்மாநிலத்தின் உயர்கல்வியைக் காவிமயமாக்கும் ஆளுநரின் நடவடிக்கையைக் கண்டித்தும், சட்டமன்றத்தின் வரைவுகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பதைக் கண்டித்தும் இந்த அழைப்பினை அவர் விடுத்துள்ளார். இதற்காக சி.பி.ஐ. (எம்) கட்சியானது மாணவர்கள், ஆசிரியர்கள், அறிவுஜீவிகள், பொதுமக்கள் ஆகியவர்களை அணிதிரட்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் கேராளவில் உள்ள ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்திற்கு ஆளுநரால் உயர்பதவிக்கு நியமிக்கப்பட்ட ஒருவர், தான் பதவி ஏற்பதற்கு முன்னர் ஆ.எஸ்.எஸ். முன்னோடி கோல்வால்கருக்கு மரியாதை செலுத்தி விட்டுப் பணியில் சேர்ந்தார் என்பது குறிப்படத்தக்கது.

ஒன்றிய அரசால் நியமிக்கப்படும் ஆளுநர் பதவியானது, மாநிலத்தின் பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஓர் அரசினைச் செயல்பட விடாது தடுப்பது, ஜனநாயகத்திற்கே விரோதமானது. அதிலும் பாஜக அரசால் நியமிக்கப்படும் ஆளுநர்கள் அந்தந்த மாநிலங்களின் நிர்வாகத்தில் குழப்பம் விளைவிப்பதோடு, அம்மாநிலங்களின் கருத்தியல்களுக்கு, சித்தாந்தங்களுக்கு எதிரான வேலைகளையும், ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்திற்கு ஆதரவான செயல்களையும் செய்து வருகிறார்கள். தமிழ்நாட்டு ஆளுநர் திராவிடச் சித்தாந்தத்திற்கு எதிராக, தொடர்ந்து பேசி வருகிறார்.

ஒரு சித்தாந்தத்திற்கு எதிராகப் பேசுவது அவரவர் உரிமை. ஆனால் மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெற்றுக் கொண்டு, பெரும்பான்மை மக்களின் சித்தாந்தத்திற்கு எதிராகப் பேசுவதும், அம்மக்கள் தேர்ந்தெடுத்த அரசை அவமதிப்பதும் மிக மோசமான, ஜனநாயகத்தைக் குழிதோண்டும் செயலாகும். இதைத் தடுப்பதற்கு ஆளுநர் என்ற பதவி தேவையா என்பது குறித்த விவாதத்தை ப் பெரியாரிய இயக்கங்கள் முன்னெடுக்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டம் எழுதி முடிக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள இந்த சூழலில் மக்களுக்கு எதிராக அரசியலமைப்பில் உள்ள பிரிவுகள் நீக்கப்படுவது குறித்த விவாதங்கள் முன்னெடுக்கப்படுவது காலத்தின் கட்டாயம்.

- கருஞ்சட்டைத் தமிழர்