இந்தியப் பிரதமர் இந்திராகாந்தியும், இலங்கைப் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவும் கையெழுத்திட்டு 08-07-1974 ஆம் நாள் முதல் நடைமுறைக்கு வந்தது 'கச்சத்தீவு' ஒப்பந்தம். அது கச்சத்தீவு குறித்த ஒப்பந்தமா?

“பாக் நீரிணைக்கும், ஆதம் பாலத்திற்கும் இடையே உள்ள இலங்கை – இந்திய வரலாற்று நீர் எல்லையை வரையறுக்கும் ஒப்பந்தம்” என்று சட்டச் சொற்களில் குறிக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அப்போது நடைமுறையில் இருந்த 1958 ஆம் ஆண்டு ஐ.நா. சட்டவரையறையின்படி இவ்வொப்பந்தம் கையெழுத்தாக வில்லை. 1958 ஐ.நாவின் பன்னாட்டு சட்டவிதியின்படி, இரண்டு நாடுகள் கடல் எல்லையைப் பிரிக்கும்போது அது இரு நாடுகளுக்கும் சமமாக அமைய வேண்டும் என்கிறது.

அது இங்கு பின்பற்றப்பட வில்லை. இராமேஸ்வரத்தில் இருந்து தலைமன்னாருக்குள் (கடல்) தொலைவு 30 மைல். ராமேஸ்வரத்தில் இருந்து கச்சத்தீவுக்குத் தொலைவு 12 மைல். கச்சத்தீவுக்கும் தலைமன்னாருக்கும் இடையே உள்ள தொலைவு 18 மைல். இப்படி இருக்கும்போது 1958 பன்னாட்டுச் சட்டப்படி சரிபாதியாக நீர் எல்லையைப் பிரித்தால் 15/15ஆக வரும், அப்போது இந்திய கடல்15 மைல்களுக்குள் கச்சத்தீவு வந்துவிடும். ஆகவே நீர் எல்லையை வரையறுக்கும் இந்த (கச்சத்தீவு) ஒப்பந்தமே சரியானதல்ல.

அடுத்து கச்சத்தீவு குறித்த இந்த ஒப்பந்தம் சட்ட அங்கீகாரம் பெறவேண்டும் என்றால் இந்திய அரசமைப்புச் சட்டப்பிரிவு 368இன்படி, சட்டப்பிரிவு 1 இல் திருத்தம் செய்ய வேண்டும். அப்படி ஏதும் சட்டத் திருத்தம் செய்யப்படவில்லை. ஆகவே பாக் நீரிணைக்கும், ஆதம் பாலத்திற்கும் இடையே உள்ள நீர் எல்லையை சட்டப்படியும், நேர்மையாகவும் இல்லாமல் போடப்பட்ட இந்த ஒப்பந்தம் மிகப்பலவீனமானது.

கச்சத்தீவு குறித்து அன்றைய இந்திய வெளியுறவுச் செயலாளர் கேவல்சிங் மூலம் அறிந்தார் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் அவர்கள். ஆனால் மாநில அரசுடன் முறையாக இதுகுறித்து மத்திய அரசு பேசவில்லை. எனவே அனைத்துக் கட்சிக் கூட்டத்தை 30-06-1974 அன்று கோட்டையில் கூட்டினார். முதல்வர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அமைச்சர்களும்,

1) பொன்னப்ப நாடார் (காங்கிரஸ்),

2) ஏ.ஆர். மாரிமுத்து (இ. காங்கிரஸ்),

3) திருப்பூர் மொய்தீன் (முஸ்லிம் லீக்)

4)அரங்க நாயகம் (அ. தி. மு. க.),

5) வெங்கடசாமி (சுதந்திரா)

6) ஈ. எஸ். தியாகராசன் (தமிழரசு கழகம்),

7) ஏ. ஆர். பெருமாள் (பார்வர்டு பிளாக்),

8) மணலி கந்தசாமி (தமிழ்நாடு கம்யூனிஸ்டு),

9) ம. பொ. சிவஞானம் (தமிழரசு),

10) ஜி. சாமிநாதன் (சுதந்திரா கட்சி),

11) அப்துல் வகாப் (முஸ்லிம் லீக்),

12) ஆறுமுகசாமி (இ. காங்கிரஸ்),

13) சக்தி மோகன் (பார்வட் பிளாக்).

14) ஏ. ஆர். தாமோதரன் (ஐக்கிய கட்சி), ஆகிய தலைவர்கள் கலந்து கொண்டார்கள். "இந்தியாவுக்குச் சொந்தமான, தமிழ்நாட்டிற்கு நெருக்கமான உரிமை கொண்ட கச்சத்தீவு பிரச்சனையில் மத்திய அரசு எடுத்துள்ள முடிவு ஆழ்ந்த வருத்தத்தைத் தருகிறது. அதனால் ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து, கச்சத்தீவின் மீது இந்திய அரசுக்கு உரிமை இருக்கும் வகையில் செய்து தமிழக மக்களுக்கு மதிப்பு அளிக்க இத்தீர்மானம் வலியுறுத்துகிறது" என்று ஒரு தீர்மானம் போட்டார்கள்.

கூட்டத்திற்கு வந்திருந்த அனைத்துத் தலைவர்களும் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால், அ.தி.மு.க. பிரதிநிதியாக வந்த அரங்கநாயகம் மட்டும் தீர்மானத்தில் கையெழுத்திட மறுத்து வெளிநடப்பு செய்தார்.

இவர்கள்தான் இன்று கூச்சல் போட்டுக் கத்துகிறார்கள், கலைஞர் கச்சத்தீவை தாரை வார்த்து விட்டார் என்று.

அதுமட்டுமல்ல! கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தம் இல்லை, அது தமிழ்நாட்டுடன் உரிமை கொண்டு, இந்தியாவுக்கு உட்பட்ட தீவு என்பதைப் பல ஆதாரங்களுடன் கலைஞர், இந்திரா காந்திக்குக் கடிதம் எழுதினார். அதில்,

"நெதர்லாந்து நாட்டு மன்னருக்கும், கேன்டி அரசருக்கும் இடையே 14-2-1766-ல் ஏற்பட்ட ஒப்பந்தம், டச்சு நாட்டிடம் இருந்த கடற்கரை பகுதிகள், இங்கிலாந்து அரசுக்கு மாற்றம் செய்யப்பட்ட ஒப்பந்தம், 17-3-1762-ல் ஜான்சுரூடர் என்பவர் எழுதிய நினைவுக் குறிப்புகள், டச்சு, போர்த்துகீசிய மன்னர் காலத்து வரைபடங்கள் ஆகிய எல்லா குறிப்புகளும், கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதை காட்டவில்லை. 1954-ம் ஆண்டு வெளியான இலங்கையின் அதிகாரப்பூர்வ வரைபடத்திலும் (Map) கச்சத்தீவு இலங்கையின் ஒரு பகுதியாக குறிக்கப்படவில்லை..." என்றும், 1622 - 35 காலத்தில் தளவாய் கூத்தப்பத் தேவர் காலச்செப்பேடு, கச்சத்தீவு இராமநாதபுரம் சேதுபதிக்குச் சொந்தமாக இருந்தது உள்ளிட்ட ஆதாரங்களைக் கொடுத்தும் கச்சத்தீவை மீட்கப் போராடினர் கலைஞர். அதுமட்டுமல்ல, இதற்காகக் கண்டனக் கூட்டங்களும் நடைபெற்றன.

இது வரலாறு. அன்று காங்கிரஸ் மத்திய அரசு இதை ஏற்காததால், இன்று மீனவர்களின் துயர்துடைக்க, 02-04-2025 அன்று கச்சத்தீவை மீட்க சட்டமன்றத்தில் தனிநபர் தீர்மானம் நிறைவேற்றினார் முதல்வர் ஸ்டாலின் அவர்கள். அன்று கச்சத்தீவை மத்திய காங்கிரஸ் அரசு இலங்கைக்குத் தாரைவார்க்கும்போது அதை எதிர்த்தது தி.மு.கழகம், எதிர்த்தவர் கலைஞர். இன்று மீனவர்களுக்காக அத்தீவை மீட்கப் போராடுவதும் தி.மு.கழகம், பேராடுகிறார் தலைவர் ஸ்டாலின்.

அது மட்டுமின்றி கச்சத்தீவை இலங்கையிடம் ஒப்படைக்கும் ஒப்பந்தத்திற்கு எதிராக முன்னாள் முதல்வர்கள் கலைஞர் மற்றும் ஜெயலலிதா சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய் குமார், கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வில் வந்தது. அமர்வில் கடந்த மார்ச் கடைசி வாரம் விசாரணைக்கு வந்த போது மனுதாரரான முன்னாள் முதல்வர் கலைஞர் தரப்பில் மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் ஆஜராகி மனுதாரரான முன்னாள் முதல்வர் கலைஞர் மறைந்து விட்டதால் அவருக்கு பதிலாக திமுக பொருளாளர் டி.ஆர். பாலுவை வழக்கில் மனுதாரராக சேர்த்து வழக்கை தொடர்ந்து நடத்த அனுமதி கோரினார். இதற்கு அனுமதி அளித்தனர் நீதிபதிகள். ஜெயலலிதா தரப்பில் வழக்கை நடத்த எந்த முயற்சியும் செய்யவில்லை.

இனி, தமிழ்நாட்டு மீனவர்கள் மீது எந்த அக்கறையும் இல்லாத அ.இ.அ.தி.மு‌.கவுக்கு தி.மு.கவையோ, அதன் தலைவரான தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களையோ குறை சொல்ல எந்த தகுதியும் இல்லை!

- எழில்.இளங்கோவன்