மூன்றாம் முறையாக அரசு அமைத்தவுடன் தங்களுடைய நெடுநாள் திட்டமான வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றி இருக்கிறது பாஜக ஒன்றிய அரசு. 232 பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தும், நிதீஷ் குமார், சந்திரபாபு நாயுடு ஆதரவு உள்ளிட்ட 288 பேரின் வாக்குகளுடன் மக்களவையில் நிறைவேறி இருக்கிறது இந்த மசோதா.
2013-ல் கொண்டு வரப்பட்ட வக்ஃபு வாரிய திருத்தச் சட்டத்திற்குப்பின் 21 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பை வக்ஃபு வாரியம் வாங்கிக் குவித்திருப்பதாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா குதித்திருக்கிறார். இந்திய ரயில்வே துறைக்கும், பாதுகாப்புத் துறைக்கும் அடுத்தபடியாக வக்ஃபு வாரியமே இந்தியாவில் அதிகப்படியான சொத்துகளை வைத்திருப்பதாக அவர் குற்றம் சாட்டுகிறார். ஓ! அப்படியும் இருக்கலாமோ என்று இந்திய
பெரும்பான்மை மக்களை வாய் பிளக்கச் செய்து தங்கள் இஸ்லாமிய வெறுப்பு அரசியலை முன்நகர்த்தி இருக்கிறது ஆளும் பாஜக அரசு.
வக்ஃபு வாரிய சொத்துகளை இனி மாவட்ட ஆட்சியரே கண்காணிக்க முடியும். அதற்கென இருந்த ஆணையரின் அதிகாரங்களை பறித்திருக்கிறது
பாஜக அரசு. இனி வக்ஃபு வாரியங்களில் இஸ்லாமியர் அல்லாதவர்கள் நிர்வாக உறுப்பினர்கள் ஆகமுடியும். வக்ஃபு வாரிய சொத்துக்கள், அவர்களுக்கு சொந்தமானவை என நிரூபிக்க முடியாவிட்டால், அவற்றை வக்ஃபு வாரியம் சொந்தம் கொண்டாட முடியாது. அவை அரசாங்க சொத்துகளாக ஆகிவிடும். எடுத்துக்காட்டாக, தாஜ்மஹால் வக்ஃபு வாரியத்திற்கு சொந்தம் என்று வாரியம் இதுவரை சொல்லி வருகிறது. இப்போது ஷாஜகான் வக்ஃபு வாரியத்திற்கு எழுதிக் கொடுத்த சொத்து பத்திரத்தை கேட்டிருக்கிறது பாஜக ஒன்றிய அரசு. வக்ஃபு வாரியத்தால் அதைக் கொடுத்து நிரூபிக்க முடியாவிட்டால் அந்த சொத்து அரசாங்கத்துக்கு சொந்தம் ஆகிவிடும். எப்படி இருக்கிறது, கதை? வக்ஃபு வாரிய சொத்துத் தகராறுகளில், தீர்ப்பாயத்தின் தீர்ப்பே இறுதியானது எனும் சட்டத்தையும் இந்தத் திருத்தம் திருத்தி அமைக்கிறது. இனி உயர் நீதிமன்றத்திற்கு நேரடியாக மேல் முறையீடு செய்யலாம்.
இஸ்லாமிய மக்களின் உணவு, உடை, பிள்ளைகள், திருமணம் என்று எல்லாவற்றிலும் கை வைத்த ஒன்றிய பாஜக அரசு, இப்போது அவர்களுடைய மத நிறுவனங்களின் அடிமடியிலும் கை வைத்திருக்கிறது. இந்திய அரசமைப்புச் சட்டம் சிறுபான்மையினருக்கு வழங்கி இருக்கக்கூடிய எல்லா பாதுகாப்பு அம்சங்களின் மீதும் கல்எரிந்து கலைத்துப் போடுகிறது பாஜக அரசு. அண்டை நாடுகளான பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், மியான்மர், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில், சிறுபான்மையினர் நடத்தப்படுவதைப் போல இந்தியாவில் நடத்தப்படுவதில்லை என்றும், அங்கிருக்கும் சிறுபான்மையினர் அகதிகளாக இந்தியாவிற்கு ஓடி வருகிறார்கள் என்றும் பெருமை அடித்திருக்கிறார் சிறுபான்மையினர் துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு. அவர் அவ்வாறு சொல்வதின் உட்பொருள் என்னவென்றால், இங்கிருக்கும் சிறுபான்மையினர் விரைவில் அந்த நிலையை எதிர்பார்க்கலாம் என்பதா? அல்லது இந்த நிலைக்கு நன்றியுடன் இருக்க வேண்டும் என்பதா? இந்திய சுதந்திரத்திற்கு முன்னால், இந்தியாவில் மூன்றில் ஒரு பகுதியினராக இருந்தனர் இஸ்லாமியர்கள். ஆனால் இந்திய இங்கு இஸ்லாமியர்கள் என்போர், அந்நிய நாடுகளில் இருந்து வந்தவர்கள் அல்லர். அவர்கள் இந்த மண்ணின் மைந்தர்கள்.
அவர்கள் மீது ஆளும் இந்துத்துவ அரசால் அடுத்தடுத்து தொடுக்கப்படும் அம்புகள், நாடு முழுவதும் ஆறாத ரணங்களை ஏற்படுத்திப் போகிறது.
தமிழ்நாடு அரசு சென்ற வாரமே, வக்ஃபு வாரிய திருத்தச் சட்டத்தை கொண்டுவரக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி இருக்கிறது. இன்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மீண்டும் ஒருமுறை நிறைவேற்றப் பட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்தி கேட்டுள்ளார். மாநிலங்கள் அவையில் பா.ஜ.க அரசின் வலிமை குறைவு. இருப்பினும், அவர்கள் குறுக்கு வழிகளை கண்டிப்பாக நாடுவார்கள். தி.மு.க உச்சநீதிமன்றத்தை நாடும் என அறிவித்திருக்கிறது. ஜனநாயக ஆற்றல்கள், சிறுபான்மையினருக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லாமல் அரசமைப்பு விழுமியங்களை பாதுகாக்க மீண்டும் மீண்டும் ஒன்றிணைவோம்!
- சாரதாதேவி