தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் 19ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியில் பிறந்த பொதுவுடைமைச் சிந்தனையாளர் கார்ல் மார்க்சுக்கு சென்னையில் சிலை அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

தி.மு.கழகத்திற்கு வராமல் இருந்திருந்தால் நான் கம்யூனிஸ்ட் ஆகியிருப்பேன் என்று ஒருமுறை குறிப்பிட்டார் கலைஞர்.

பகுத்தறிவாளரான தந்தை பெரியார் சோவியத்திற்குப் பயணம் மேற்கொண்டு சென்னை திரும்பிய பின்னர் திராவிட இயக்கத்தவர்களைத் 'தோழர்' என்று அழைக்குமாறு கேட்டுக் கொண்டார்.

திராவிட இயக்கத்திற்கும், கம்யூனிசத்திற்கும் பெரிய வேறுபாடு ஒன்றும் இல்லை என்றே சொல்லலாம். சில நாள்களுக்கு முன்னர் நாடாளு மன்றத்தில் திருச்சி சிவா பேசும் போது, தி.மு.க. கொடியில் இருக்கும் கருப்பு திராவிடம் என்றும், சிவப்பு கம்யூனிசம் என்று பேசியது குறிப்பிடத்தக்கது.

சமத்துவம், மனிதநேயம், சாதி மதமற்ற சமூகம், பெண்ணுரிமை இவைபோன்ற சமூக-அரசியல் பார்வையில் இரண்டும் ஒன்றாகத்தான் இருக்கிறது.

மதவாத ஆதிக்கத்தை திராவிடம் நேரடியாக எதிர்க்கிறது. மதத்தை அபின் என்றார் மார்க்ஸ்.

"உலகத் தொழிலாளர்களே ஒன்றுசேருங்கள்" என்று முடிக்கிறது 'கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை.'

சமூக விஞ்ஞானத்தைப் பொருளியல் பார்வையில், உழைப்பை, வர்க்கப்போரை மூலதனத்தில் விளக்கியிருக்கும் கார்ல் மார்க்சுக்குச் சிலை என்றால் யாருக்குத்தான் முகம் மலராது.

ஸ்டாலின் என்ற பொதுவுடைமையாளரின் பெயரைத் தன் பெயராக வைத்திருக்கும் திராவிட முதல்வர் ஸ்டாலின், பொதுவுடைமைத் தந்தைக்குச் சிலை வைக்கிறார்.

கருத்து முதல்வாதங்களை வீழ்த்த பொருள்முதல் வாதங்கள் கைகோர்ப்பது, காலத்தின் கட்டாயம்.

முதலமைச்சரின் அறிவிப்பை மகிழ்ச்சியுடன் வரவேற்போம்.

- கருஞ்சட்டைத் தமிழர்